இந்தியாவின் ஒட்டு மொத்த முன்னேற்றத்துக்கான நிதி நிலை அறிக்கை




ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அனைத்து பிரிவு மக்களும் அதில் பங்கு பெற்றுப் பலனடையும் போதுதான் முழுமையாக இருக்கும். பொதுவாக அடித்தட்டு மக்கள், கிராமப் பகுதிகள் மற்றும்  விவசாயத் துறை வளர்ச்சியில் பங்கு பெறாத சூழ்நிலையே நமது நாட்டின் பல பகுதிகளில் இன்னமும் நிலவி வருகிறது. அதைச் சரி செய்யும் விதமாகவே மோடி அரசு கடந்த மூன்று வருடங்களாகப் வெவ்வேறு விதமான முன்னோடி முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை  அடிப்படை அம்சமாகக் கொண்டு அமைந்துள்ளது.   

நமது நாட்டுக்கு அடிப்படையாக விளங்கி, பெரும்பான்மையோர் சார்ந்து வாழ்வது  கிராமங்களையும் விவசாயத்துறையையும் தான். அவை புத்துயிர் பெற்றால் தான் நாட்டின் வளர்ச்சிக்கு சரியான அர்த்தம் கிடைக்கும். அதற்காக இந்த வருடத்திய நிதி நிலை அறிக்கை அதன் மொத்த ஒதுக்கீடுகளில் சுமார் 55 விழுக்காடு அளவை கிராமங்கள்  மற்றும் விவசாய்த்துறைக்கு மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்த அம்சமாகும்.

நாடு சுதந்திரமடைந்து எழுபது ஆண்டுகள் கடந்த பின்னரும், விவசாயத்துறை பல வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறது. அதற்கு உத்வேகம் கொடுக்க 2014 ஆம் வருடம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய அங்கமாக சென்ற வருடம் விவசாயத் துறைக்குக் கடன் வழங்க பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது இந்த வருடம் பதினோரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் நிதி உதவி பெற முடியும்.

விவசாயிகளின் ஒரு முக்கியமான பிரச்னை அவர்களின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்காமல் இருப்பதாகும். அதைப் போக்கும் வகையில் வரும் கரீப் பருவத்தில் விளைபொருள்களுக்கு அவற்றின் செலவுக்கு மேல் ஒன்றரை மடங்கு குறைந்த பட்ச விலையாக நிர்ணயம் செய்ய மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த பட்ச இலாபம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவசாயத்துறையில் இன்னொரு முக்கியமான பிரச்னை சந்தைப் படுத்துதல். அதனால் விவசாயிகள் தங்களின் பொருட்களை அதிக பட்ச விலைக்கு விற்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. அதைப் போக்குவதற்கு தேசிய விவசாய சந்தை என்னும் திட்டத்தை தொழில் நுட்ப வசதி மூலம் தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. அதன் மூலம் விவசாயிகள் தங்களின் பொருள்களை நாட்டின் எந்தப் பகுதியில் இலாபம் அதிகமாகக் கிடைக்கிறதோ அங்கு விற்க முடியும். அதை மேலும் விரிவு படுத்தியும், 2200 சந்தைகளை தரம் உயர்த்தியும் செயல்பாடுகளை மேற்கொள்ளத் திட்டங்கள் வெளியாகி உள்ளன. மேலும் இயற்கை மற்றும் தொகுப்பு முறை விவசாயத்தை ஊக்குவித்தல், விவசாய ஏற்றுமதிக்கான விதி முறைகள் தளர்வு உள்ளிட்ட திட்டங்களும் அறிவிக்கப் பட்டுள்ளன. 

விவசாயிகளைப் போலவே மீன் வளம் மற்றும் கால்நடைத் துறைகளில் உள்ளவர்களுக்குக் கடன் அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  மேலும், மீன் வளம் மற்றும் கால்நடைத்துறைகளுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் தொகையுடன் நிதியம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்தத் துறைகள் வளர்ச்சி பெற்று வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

விவசாயத்துக்கு அடுத்தபடியாக நமது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களாகும்.  அவற்றில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோருக்கு முக்கியப் பிரச்னையே நிதிப் பற்றாக்குறையாகும்.  அதைப் போக்குவதற்காகத்தான் 2015 ஆம் வருடம் முத்ரா வங்கித் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் இது வரை சுமார் பத்தரை கோடி பேர் பலன் பெற்றுள்ளனர். முத்ரா திட்டத்தின் கீழ் அடுத்த ஒரு வருடத்தில் மட்டும் கடன் வழங்க மூன்று இலட்சம் கோடி ரூபாய் அளவு ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான மாற்றத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தும். மேலும் நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் 250 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்யும் தொழில்களுக்கு வரி விகிதம்  முப்பதிலிருந்து இருபத்தைந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அடித்தட்டு மற்றும் சாதாரண மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் முக்கியமான பல திட்டங்கள் அறிவிக்கபட்டுள்ளன. மாறி வரக்கூடிய இன்றைய சூழ்நிலையில்  மருத்துவச் செலவுகள் அதிகமாகி விட்டன. அதனால் சாதாரண மக்கள் மருத்துவமனை செல்வதைக் கற்பனை கூடச் செய்ய முடிவதில்லை.  அதனால் அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கொடுக்கும் வகையில் மோடி அரசு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சுகாதாரத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் மூலம் அடித்தட்டு நிலையில் உள்ள பத்து கோடி குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு வருடம் பத்து இலட்சம் ரூபாய் அளவு மருத்துவ வசதி பெறும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் நாட்டிலுள்ள ஐம்பது கோடி மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும். இது உலகிலேயே  பெரிய மருத்துவத் திட்டமாகும்.

ஏழை பெண்கள் பலன் பெறும் வகையில் இலவச எரிவாயு திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக  இன்னமும் எட்டு கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளன. மேலும் மோடி அரசு அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து கொடுக்கும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வருவது நமக்குத் தெரியும்.  இந்த வருடத்தில் நான்கு கோடி மின் இணைப்புகள் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது வரை ஆறு கோடி கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2019ஆம் வருடத்துக்குள் மேலும் இரண்டு கோடி கழிவறைகள் கட்டப்பட உள்ளன.

நாட்டின் வளர்ச்சியில் கல்வி முக்கியமான பங்கினை வகிக்கிறது.  கல்வித் துறையில் தற்போது பலவிதமான சிரமங்கள் நிலவி வருகின்றன. அதைச் சரி செய்யும் விதமாக புதியதாக ” ரைஸ்” என்னும் ஒரு நல்ல திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொறியியல் துறைகளில் பட்டம் பெறும் மாணவர்கள் பலரும் ஆராய்ச்சிக்கு வராமல் உள்ள சூழ்நிலை நிலவுகிறது.  இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. எனவே இந்த நிலையை மாற்றி பட்டதாரிகளை ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட வைக்கும் நோக்கில், அவர்களுக்கு மாதம் எண்பதாயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.  

பட்டியலின மற்றும் மலைவாழ் மக்களுக்கு எப்போதுமே மோடி அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் 96,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுபான்மை இன மக்களின் நலனுக்காக இந்த முறை அதிக பட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறையின் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார்.

முதியவர்கள் நமது சொத்துக்கள். அவர்களைப் போற்றிப் பாதுகாப்பது நமது தலையாய கடமை. அந்த வகையில் இந்த வருடம் முதியவர்களுக்காகப் பல சலுகைகளை நிதி நிலை அறிக்கை மூலம் அரசு அறிவித்துள்ளது. உதாரணமாக, இது வரை அவர்களுக்கு வட்டி வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த வருடம் அது ஐம்பதாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இது வரை சுகாதாரக் காப்பீடு முப்பதாயிரம் ரூபாயாக இருந்து வந்தது. அது இப்போது ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  மேலும் அறுபதாயிரம் ரூபாயாக இருந்து வந்த மருத்துவச் செலவு ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.   சம்பளம் வாங்குபவர்களுக்கு வருடா வருடம் வருமானத்திலிருந்து 40,000 ரூபாய் வரை கழித்துக் கொள்ளும் வகையிலான  திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் மேலும் திட்டங்கள்  போடப்பட்டுள்ளன. சாகர் மாலைத் திட்டம் மூலம் ஒன்பதாயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. ஸ்மார்ட் நகரத் திட்டத்துக்காக  மேலும் 99 நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

எனவே இந்த வருட நிதி நிலை அறிக்கையானது சமூகக் கட்டமைப்புகளை மேம்படுத்தியும், சாதாரண மற்றும் நடுத்தர குடும்ப மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியும், அவற்றின் மூலம் நாடு முழுமையான வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான ஒரு செயல் திட்டமாக உள்ளது.

( ஒரே நாடு, சென்னை, பிப்.2018)