Showing posts with label ஓம் சக்தி. Show all posts
Showing posts with label ஓம் சக்தி. Show all posts

புதிய கல்விக் கொள்கையின் அவசியம்


மத்திய அரசு தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக ”வரைவு தேசியக் கொள்கை 2016- சில உள்ளீடுகள்” என்ற தலைப்பில் முக்கிய விபரங்களை மக்கள் மன்றத்தின் முன் வைத்துள்ளது. அவை குறித்து மக்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே கடந்த சில மாதங்களாக புதிய கல்விக் கொள்கை குறித்து  நாட்டின் பல பகுதிகளிலும் கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது நல ஈடுபாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும்  தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாகத் தமிழகத்தில் அரசியல் மற்றும் பொது வெளியில் சூடான விவாதங்கள் நடந்தேறியுள்ளன.  

ஆனால் அவை பெரும்பாலும்  அரசியல் சார்பினை மையப்படுத்தியே அமைந்துள்ளன. மாணவர்களின் நலன்களை  முன் வைப்பதாக இல்லை.  கல்வி என்பது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அடிப்படையான விசயமாகும். கல்விக் கொள்கையை சொந்த  லாபங்களுக்காக அரசியலாக்குவது என்பது  நமது மாநிலத்தின் துரதிர்ஷ்டமான சூழ்நிலையாக உள்ளது.  

இதற்கு முந்தைய தேசிய கல்விக் கொள்கையானது 1986 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. பின்னர் அது 1992 ஆம் வருடம் திருத்தியமைக்கப்பட்டது. இடைப்பட்ட கால் நூற்றாண்டு காலத்தில் உலக அளவில் பெரிய மாறுதல்கள் நடந்துள்ளன. உதாரணமாக தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பல வகைகளில் நமது வாழ்க்கை முறையையே புரட்டிப் போட்டுள்ளது. இப்போது அது கல்வித் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியா இன்று உலக அளவில் ஒரு பெரிய சக்தியாக உருவாகி வருகிறது. வெவ்வேறு விதமான சவால்கள் இருந்த போதும் இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அதனால் முந்தைய தலைமுறையினரை விட  இன்றைய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் ஒரு சுதந்திர நாடாக எழுபது ஆண்டுகளையும்,   தேசிய கல்விக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தத்   தொடங்கி சுமார் ஐம்பது ஆண்டுகளையும் கடந்து வந்துள்ளதால் நிறைய அனுவங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

கல்வி என்பது காலத்துக்கேற்ப மாற்றங்களையும் புதிய சிந்தனைகளையும்  உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உலக நிகழ்வுகளின் பிரதிபலிப்புகள் அதில் இடம் பெற வேண்டும். அந்த வகையில் தற்போதைய கல்விக் கொள்கையே கூட சில ஆண்டுகளுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை என்பது நாடு முழுவதிலுமுள்ள   மாணவர்களின் அறிவு, ஆளுமை, திறன்கள் மற்றும் வாய்ப்புகளைப் பெருக்குவதற்கு வழி வகுப்பதாக அமைய வேண்டும். அதன் மூலம் ஒவ்வொருவரும் முழுமையான மனிதராக உருவாகி,  அதனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் பலன் பெற்று, அதன் மூலம்   நாடும்   முன்னேற்றம் அடைய வேண்டும்.

கடந்த காலங்களில் நமது கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், நாம் இன்னமும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. உதாரணமாக அனைவருக்கும் கல்வி என்பது என்பது இன்னமும் அடைய முடியாத இலக்காகவே உள்ளன.

மேலும் கல்வி முறைகளில் பல விதமான அடிப்படைக் குறைபாடுகள் நிலவுகின்றன. உதாரணமாக, பொறியியல் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்களுக்கு வேலை செய்வதற்குப் போதுமான  திறமைகள் இல்லை என்பது பல ஆய்வுகள் வெளிப்படுத்தும்  முடிவாகும்.

எனவே புதிய கல்விக் கொள்கை மேற்குறிப்பிட்ட வகையில் உள்ள குறைபாடுகள் பலவற்றையும் களைந்து, அனைவருக்கும் தரமான கல்வியைக் கொடுப்பதாக அமைய வேண்டும். அந்த வகையில் மனித வள மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் வரைவு, முதன் முறையாகப் பல விசயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் நோக்கங்களாக மூன்று விசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் முதலாவது கல்வி முறையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது;  இரண்டாவது மாணவர்களின் வேலை வாய்ப்புத் தன்மையை அதிகரிப்பது; மூன்றாவது அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்குச் சம வாய்ப்பினை அளிப்பது. இவை மூன்றும் நாட்டின் கல்வி முறைக்கு அடிப்படை என்பதில் எந்த வித  சந்தேகமும் இருக்க முடியாது. 

நமது கல்வித் துறை பல வகைகளில் நம்பிக்கையற்ற தன்மையைக் கொண்டதாக உள்ளது.  தற்போதைய கல்வி முழுமையானதாக இல்லை. ஒரு மாணவனை எல்லா வகைகளிலும் மேம்படுத்தக் கூடிய அம்சங்கள் அதில் இல்லை. கல்வித் துறை நிர்வாகம் பல இடங்களில் சீரழிந்து கிடக்கிறது.

உதாரணமாக தமிழகத்தில் துணை வேந்தர் நியமனம் திறமையின் அடிப்படையில் இல்லாமல் முற்றிலும் வேறு விதமான காரணிகளால் அமைந்துள்ளது நமக்கு அனைவருக்கும் தெரியும். பின்னர் அப்படிப்பட்டவர்கள் நியமனம் செய்யும் பேராசிரியர் உள்ளிட்ட அனைத்து பணி நியமனங்களும் நியாயமானதாக இருப்பதில்லை.  எனவே ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரைக்கும் தேசம் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து சுமார் எழுபது ஆண்டுகள் கழித்து இன்னமும் கல்வி அனைத்து பிரிவினருக்கும் கிடைப்பதில்லை.  பள்ளியில் சேர்பவர்கள் அனைவரும் இறுதி வகுப்பு வரை முழுமையாகப் படிக்க முடிவதில்லை. பள்ளிக் கல்வி முடித்தவர்கள்  அனைவருக்கும் கல்லூரிகளில் சேர்வதற்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. எனவே அனைவருக்கும் கல்வி என்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய குறிக்கோளாக முன் வைக்கிறது.

கல்வி என்பது தேவைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். அப்போது தான் அது இளைஞர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாக அமையும். தற்போதைய கல்வி முறையில் உள்ள ஒரு முக்கியக் குறைபாடு, அது வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைப் போதிப்பதில்லை என்பதாகும்.

இன்று நமது நாட்டில் பல துறைகளுக்குத் திறன் வாய்ந்த தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாகக் கல்வி திறன்களைச் சொல்லிக் கொடுக்காமல் வெறும் ஏடுகளைச் சார்ந்தே உள்ளது. எனவே திறன்களை ஊக்குவிக்கின்ற முறையை இந்தக் கல்விக் கொள்கை மையப்படுத்துகிறது.

மேலும் பாடத்திட்டம் நடை முறை நிலவரங்களைப் பிரதிபலிப்பதாக இல்லை.  தொழில், வியாபாரம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த படிப்புகளில் கூட நாட்டில் நிலவும் நடைமுறைகள் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. அனைத்துப் பாடங்களும் நமது நாட்டுக்குச் சம்பந்தமில்லாத ஐரோப்பிய மற்றும் அமெரிக்கக் கோட்பாடுகளை ஒட்டியே அமைந்துள்ளன. அவை பெரும்பாலும் அவர்களின் நாடுகளிலேயே தோல்வி அடைந்து விட்டன; எனவே நமது நாட்டுக்குப் பொருந்துவதாக இல்லை.

இந்தியா உலக அளவில் இரண்டாவது அதிகமான மக்களைக் கொண்ட நாடு. இங்கு புதிய தொழில்களுக்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. எனவே தொழில் முனைவோர்கள் அதிக அளவில் ஊக்குவிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தொழில் முனையும் தன்மையை ஊக்குவிக்கும் வகையில் கல்வி கொடுக்கப்படும் எனப் புதிய கல்விக் கொள்கை கூறுவது வரவேற்கத்தக்கது.

முறையான கல்வித் திட்டத்துக்குள் வர வாய்ப்பில்லாத பல கோடிப் பேர் இன்னமும் நமது நாட்டில் உள்ளனர். அவர்களும் கல்வி பெறும் வகையில் புதிய கல்விக் கொள்கை திட்டங்களை வகுக்க இருப்பது மிகவும் ஆறுதலான விசயமாகும்.

மேலும் நமது நாட்டின் உண்மையான வரலாறு, பாரம்பரியம், கலாசாரம் ஆகியவை இன்னமும் முறையாகப் போதிக்கப்படுவதில்லை. அதனால் சரியான நாட்டுப் பற்றில்லாத இளைஞர்களை நமது கல்வி நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. மேலும் நீதி போதனை, நற் பண்புகள், இலக்கிய மரபுகள்  ஆகியன போதுமான அளவு பாடத்திட்டங்களில் இல்லை; அதனால் அவை பற்றிய சிந்தனை இல்லாதவர்களையே நாம் தயாரித்து வருகிறோம்.

இன்று உலக முழுவதும் தொழில் நுட்பம் எல்லாத் துறைகளிலும் பரவியுள்ளது. அதன் தாக்கம் கல்வித் துறையில் மிக அதிகமாகவே உள்ளது. உதாரணமாக ஒரு பள்ளி மாணவன் வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டே உலக நடப்புகளைச்  சில நிமிடங்களில் சேகரிக்க முடியும். எனவே தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும் போது நாம் பல வழிகளில் பலன் பெற முடியும். அந்த வகையில் தொழில் நுட்ப வளர்ச்சியை  கல்வித் துறை அதிக அளவில் உபயோகப்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சிக்குத் தேவையான ஆசிரியர் பயிற்சி, தலைமைப் பொறுப்புகளுக்குத் தயார் செய்யும் முறைகள், கல்வி நிர்வாகம்,  திட்டமிடல் மற்றும் நிதி திரட்டுதல்  உள்ளிட்ட பலவும் கல்விக் கொள்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் கல்விக் கொள்கை அமையும் எனச் சொல்லப்பட்டுள்ளது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

புதிய கல்விக் கொள்கையானது பல வகைகளில் முந்தைய கொள்கைகளை விட வித்தியாசமாக உள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். முதலாவதாக  இதுவரை எல்லா விதமான அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில் கல்விக் கொள்கை என்பது உருவாக்கப்படவில்லை.

இரண்டாவதாக தற்போதைய அளவுக்கு இதுவரை எந்தக் கல்விக் கொள்கையை வகுக்கும் போதும் ஆலோசனைகளும், கருத்துப் பரிமாற்றங்களும் பரவலாக நடை பெற்றதில்லை. இப்போது முதன் முறையாக வரைவுக் கொள்கை மக்கள் மன்றத்தில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே  நாட்டின் பல பகுதிகளில் மனித வளத் துறை வல்லுநர்களிடம் கலந்துரையாடல்களை நடத்திக் கருத்துக்களைக் கேட்டுள்ளது. தொடர்ந்து மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்தி, அதன் மூலம் இலட்சக் கணக்கான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

மூன்றாவதாக புதிய கல்விக் கொள்கையை வகுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிய பங்கு அளிக்கப்பட்டுள்ளது.  கல்வித் துறையின் செயல்பாட்டுக்கான ஒரு திட்டம் ஒன்று வகுக்கப்பட உள்ளது. அதற்காக மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் தங்களின் உத்திகளையும், செயல் திட்டங்களையும் வகுத்துக் கொள்வதை புதிய கொள்கை ஊக்குவிக்கிறது.

தமிழகத்தில் பொது வெளியில் பரவலாகச் சொல்லப் படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது வரைவு கல்விக் கொள்கையை முழுமையாகப் படித்தவர்களுக்குத் தெரியும். உதாரணமாக பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் எனச் சொல்லப் படுவது மிகவும் அபத்தமானதாகும். வரைவுக் கொள்கையின் ஒரு முக்கிய நோக்கமே பிற்படுத்தப்பட்ட,   பட்டியலின மக்கள் மற்றும் மலை வாழ் மக்கள் ஆகியோரின் குழந்தைகளுக்குக் கல்வியை அவசியமாகக்  கொடுப்பதாகும்.

அதே போல சமஸ்கிருதத் திணிப்பு என்பது புதிய கல்விக் கொள்கையில் உள்ளது என்பது நகைப்புக்குரிய விசயமாகும். இப்படிச் சொல்லியே ஐம்பது ஆண்டு காலமாக தமிழைப் புறந்தள்ளி ஆங்கிலத்தை அரியணை ஏறச் செய்து விட்ட பெருமைக்குரியவர்கள் நமது போராளிகள். சமஸ்கிருதம் நமது நாட்டின் தொன்மையான மொழி. முந்தைய கல்விக் கொள்கைகளில் அதற்குக் கொடுக்கப்பட்டிருந்த அதே  இடம் தான் தற்போதும் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே புதிய கல்விக் கொள்கையின் விளைவாகத்  தமிழ் நாட்டுக்குப் பலன்கள் இல்லை; சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள்;  சமஸ்கிருதத் திணிப்பு ஏற்பட்டுத் தமிழ் அழிந்து போகும் என்பதெல்லாம் குறுகிய அரசியல் தன்மை மட்டுமே கொண்ட பேச்சுக்கள்.

நூற்று முப்பது கோடி மக்களைப் பெற்ற பன்முகத் தன்மை கொண்ட நமது தேசத்தில் அனைவருக்கும் ஏற்ற வகையில் கல்விக் கொள்கையை வகுப்பது என்பது இயலாத காரியம். நாடு சுதந்திரம் பெற்ற பின் முதன் முறையாக, அதிக அளவில் கலந்து ஆலோசிக்கப்பட்டு ஒரு வரைவுக் கொள்கை தயாரிக்கப்பட்டு அதுவும் பரவலான விவாதத்துக்குப் பல மாத காலமாக ஆட்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பல சிறப்பான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்து தரப்பினருக்கும், தரமான மற்றும் முழுமையான கல்வி என்பது  மையக் கருவாக அமைந்துள்ளது.  வேலை வாய்ப்புகளுக்குத் தயார் செய்யும் வகையிலும், தொழில்களை ஊக்குவிக்கும் வகையிலுமான கல்வி என்கின்ற முறையில்  திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் தங்களின் தனி மனித வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புக்கள் அதிகரித்து, அதனால் ஒட்டு மொத்த தேசமும்  வளர்ச்சிப் பாதையில் செல்ல வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகவே தெரிகிறது. எனவே இந்த புதிய கல்விக் கொள்கையானது அவசியமான ஒன்றாக உள்ளது.

( ஓம் சக்தி, பிப்.2017)

கண்டுபிடிப்புகளும் கலாசார விழுமியங்களும்



கலாசாரம் என்பது பாரம்பரியம், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், விழுமியங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டது. அதனால்  சமூகங்களில் காலங்காலமாக தொடர்ந்து மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து வருவது.

ஆனால் அதற்கும்  அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட அறிவு சார் துறைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று நமக்குத் தோன்றும். ஏனெனில் அறிவு சார் துறைகள்   என்பவை உலகம் முழுவதும் நாள் தோறும் மாறி வரும்   புதிய சிந்தனைகளால் செம்மைப்படுத்தப்படுபவை.

கடந்த இரு நூறு ஆண்டுகளில் அறிவு சார் துறைகளின் மாற்றங்கள் மிகப் பெருமளவு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்வி, பொருளாதாரம் என்று தொடங்கி புதிய கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட மருத்துவம், அறிவியல் தொழில் நுட்பம் வரையில் பலவற்றிலும் அந்த நாடுகளின் தாக்கங்களே அதிகமாக உள்ளன.

அப்படி இருக்கும் போது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பாரம்பரியத்தையும் பண்டிகைகளையும் விடாமல் இறுகக் கடைப்பிடித்து வரும் இந்திய தேசத்தில்,  அறிவு சார் துறைகள் எவ்வாறு வெற்றிகரமாகச் செயல்பட முடியும் என்று கேள்வி எழலாம். ஏனெனில் மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியே பாரம்பரியத்தை அழித்து நவீன சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்டது என்று  தான் பெருமையாகச் சொல்லப்படுகிறது.  

ஆனால் உலக அளவில் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மனித வளம், மேலாண்மை மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட துறைகளில் நடந்து வரும் ஆய்வுகள் அவற்றின் போக்கில் கலாசாரத்தின் பங்கு வெகுவாக இருப்பதை உணர்த்துகின்றன. மேற்கத்திய  நாடுகளின் நிர்வாகிகளிடத்தில் தனிநபர் சார்ந்த ஆளுமை அதிகமாக இருக்கும் போது, ஆசிய நாடுகளின் நிர்வாகிகளிடத்தில் அரவணைக்கும் போக்கு நிறைந்திருப்பதை அவை சுட்டிக் காட்டுகின்றன.

அமெரிக்கா  இங்கிலாந்து   உள்ளிட்ட பல மேற்கு நாடுகளில் சேமிப்புகள் மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களின் பழக்க வழக்கங்களே காரணம் என்பது அவர்களுக்குப் புரியத் துவங்கியுள்ளது. அதே போல் இந்தியா சீனா ஆகிய நாடுகளில் மிக அதிகமாக மக்கள் சேமிப்புகளை மேற்கொள்வதற்கும் கீழை நாடுகளின் கலாசாரத் தாக்கமே அடிப்படையாக உள்ளது என்பதும் இப்போது தெளிவாகி  வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் புகழ் பெற்ற கெல்லாக் பல்கலைக் கழகத்தின் மேலாண்மைப் பேராசிரியர்கள் நமது நாட்டில்  நடைமுறையில் நிலவும் தலைமைப் பண்புகள் பற்றி ஒரு ஆய்வினை  மேற்கொண்டார்கள். அதற்காக இந்தியாவின் மிகப் பெரிய  தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின்  தலைமை நிர்வாக அதிகாரிகளைப் பார்த்துப் பேசி அவர்களின்  செயல்பாடுகள் குறித்துப் படித்தனர்.

அந்த ஆய்வுகளின் முடிவில் இந்திய நிர்வாகிகளின் தலைமைப் பண்புகள் உலக அளவில் மிகவும் தனித் தன்மைகள் பெற்று சிறப்பாக விளங்குவதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அவை குறித்து இந்தியாவிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தனர். அந்தச் சிறப்புகளுக்கெல்லாம் அடிப்படையாக இந்தியாவின் கலாசார மற்றும் சமூகப் பண்புகளே விளங்குகின்றன என எடுத்துக் கூறினர்.

ஆகவே தொன்மை வாய்ந்த நாடுகளான இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் கலாசாரப் பண்புகள் மனித வள மற்றும் பொருளாதார வளர்ச்சியில்  பெரும் பங்கு வகிப்பது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் மேற்கத்திய நாடுகள் அங்கெல்லாம்  நிலவி வந்த பாரம்பரியப் பண்பாடுகளை அழித்து விட்டு, குறுகிய நோக்கின்  அடிப்படையில் நவீனத்துவம் என்ற பெயரில்  மாற்றங்களை ஏற்படுத்தியது தான் அவர்களின் தற்போதைய சிரமங்களுக்குக் காரணம் என்பதும் தெளிவாகி வருகிறது.

அதே போல அண்மைக் காலமாக அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில் நுட்பத் துறைகளிலும் இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் உலக அளவில் பெரிய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த வழி வகுத்துள்ளன.  ஏனெனில் அந்தத் துறைகளில் எல்லாம் மேற்கத்திய நாடுகளே இது வரைக்கும் வழிகாட்டிகளாகக் கருதப்பட்டு வருகின்றன. அதனால் அவர்களின் வழிமுறைகளே உலக நாடுகள் அனைத்துக்கும் முன்மாதிரியாகச் சொல்லப்படுகிறது. 

உலக அளவில் மேலாண்மைத் துறையில் மிகவும் முக்கியமாக அமெரிக்கப் பேராசிரியர் பிரகலாத் விளங்கி வந்தார். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். 2005 ஆம் வருடம் தமிழகத்தைச் சேர்ந்த அர்விந்த கண் மருத்துவ மனை பற்றி ஆய்வு செய்து அவர் எழுதினார். அப்போது ஒரு கண் அறுவை சிகிச்சையை அர்விந்த் மருத்துவ மனை அமெரிக்க மருத்துவ மனைகளை விட அறுபது முதல் எழுபது மடங்கு  குறைவான செலவில் செய்கிறது என்னும் உண்மையை வெளிக் கொணர்ந்தார். 

அப்படியிருந்தும் அந்த  மருத்துவ மனை கடன்கள்  எதுவுமில்லாமல்  அமெரிக்க மருத்துவ மனைகளை விடவும் இலாபத்தில் இயங்குகிறது எனவும் தெரிவித்தார். அதற்குக் காரணம் இந்திய மருத்துவர்கள் இருக்கின்ற உபகரணங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்தி சிறப்பாகச் செயல்படுவதுதான் எனக் கூறினார்.

பெங்களூரில் ஆரம்பிக்கப்பட்ட நாராயண ஹிருதாலாயா மருத்துவ மனை இதய சிகிச்சையில் இன்று உலக அளவில் திறம்படச் செயல்படும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.  அவர்கள் தான் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் குழ்ந்தைகளுக்கு இதய சிகிச்சை செய்கிறார்கள்.  உலகின் பல பகுதிகளிலும் இருந்து வரும் எண்பது நாடுகளைச் சேர்ந்த  நோயாளிகளின் மிகவும் சிக்கலான  பிரச்னைகளைச்  சரி செய்கின்றனர்.

நாட்டின் பிற பகுதிகளிலும் வளர்ந்து வரும் அந்த நிறுவனம், கர்நாடக மாநிலத்தில் முப்பது இலட்சம் விவசாயிகளுக்கு மாதம் பத்து ரூபாய் பிரீமியத் தொகைக்கு சுகாதாரப் பாதுகாப்பு அளித்து வருகிறது. அந்த மருத்துவ மனை ஒரு இருதய சிகிச்சைக்கு சராசரியாக 2000 அமெரிக்க டாலர்கள் வாங்குகிறது. அதுவே அமெரிக்க மருத்துவ மனைகளில் 20000 டாலர்களில் தொடங்கி ஒரு இலட்சம் டாலர்கள் வரை ஆகிறது. எனவே சர்வதேச அளவில் அந்த மருத்துவ மனை ஒரு முன்னுதாரணமாக அமைந்து வருகிறது.

உலக அளவில் இன்று தொழில் துறையில் ஏற்பட்டு வரும் பலவிதமான  கண்டுபிடிப்புகள் இந்தியாவில் உருவாகி வருகின்றன என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். உதாரணமாக குறைந்த விலையில் கார்களை உற்பத்தி செய்வது,  அலை பேசிச் சேவையில்  அமெரிக்கா மற்றும்  சீனாவை விடவும்  இந்தியாவில் செலவு குறைவாக இருப்பது உள்ளிட்டவை  முக்கியமாகப் பேசப்படுகின்றன.

பெரிய நிறுவனங்கள் என்ற அளவில் மட்டுமன்றி சாதாரண நிலைகளிலும் பல விதமான கண்டுபிடிப்புகள் இங்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருவதை நம்மில் பலரும் உணர்வதில்லை. நமது ஊடகங்களுக்கு அவற்றை வெளிக் கொணர்வதில் ஆர்வம் இருப்பதில்லை.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் உபயோகப்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை மேற்கத்திய பன்னாட்டு கம்பெனிகளே தயாரித்து விற்பனை செய்கின்றன. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த  பெண்களுக்கு அவற்றின் விலை அதிகமாக உள்ளது. எனவே அவர்கள் அந்த சமயங்களில் மிகவும் சிரமப் படுகின்றனர்.

அவற்றை எப்படிக் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என்று முயற்சி செய்து அதில் பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஒரு சாதாரணத் தொழில் முனைவோர். பள்ளிப்படிப்பைக் கூட முடிக்க இயலாத கிராமத்தில் பிறந்த அவர், மிகக் குறைந்த செலவில் நாப்கின்களை உருவாக்கும் இயந்திரத்தையும் வடிவமைத்துள்ளார்.  அதனால் ஏழைப் பெண்களில் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இவ்வாறு நாட்டின் சிறிய கிராமங்கள்,  தொழில் மையங்கள் எனப் பல இடங்களிலும் கண்டுபிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. குஜராத்தில் மோர்பி என்று ஒரு நகரம் உள்ளது. 1990 களில் வெள்ளத்தால் அந்த நகரமே பெருமளவு அழிந்து போனது. ஆனால் இன்று அது உலக அளவில் ஒரு தொழில் மையமாக உருவாகி உள்ளது.

அங்கு நடை பெற்று வரும் தொழில்களில் முக்கியமான ஒன்று கடிகாரம் தயாரிப்பது. தற்போது உலகில் அதிக அளவில் கடிகாரம் தயாரிக்கப்படும் இடமாக அது உருவாகி உள்ளது. நாடு முழுவதும் தெரிந்த அஜாந்தா, சமய் போன்ற பிராண்டு சுவர்க் கட்டிகாரங்கள் அங்குதான் தயாரிக்கப்படுகின்றன.

அந்தத் தொழில் அங்கு உருவாகக் காரணமே ஒரு சாதாரண மனிதர் தான். அவர் தன் வீட்டிலிருந்த ஒரு வெளி நாட்டு கடிகாரத்தைக் கழட்டிப் போடுகிறார். பாகங்களை ஒன்று சேர்த்து மீண்டும் அந்தக் கடிகாரத்தை அப்படியே கொண்டு வருகிறார். அவருக்கு நம்பிக்கை பிறக்கிறது. அப்படித் தான் அங்கு கடிகாரத் தொழில் உருவாகிறது. இன்று அங்கு இலட்சக் கணக்கான கடிகாரங்கள் பலவிதங்களில் தயாராகின்றன.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை நமது நாட்டில் உண்டாகும் புதிய கண்டுபிடிப்புகளில் முப்பது விழுக்காடு அளவு படிப்பறிவு கூட இல்லாத சாதாரண மக்களின் மூலமே ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது.  சாதாரண மக்களின் கண்டு பிடிப்புகளைப் பல தொழில் மையங்களில் சுலபமாகப் பார்க்க முடிகிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன் திருப்பூரைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சுந்தரம் என்ற ஒரு இளைஞர், பன்னாட்டுக் கம்பெனிகள் மட்டுமே நாடு பூராவும் விற்று வந்த விலை அதிகமான ஒரு இயந்திரத்துக்குப் பதிலாக மூன்றில் ஒரு பங்கு விலையில் புதியதாக ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்புடன் போட்டி போட முடியாமல்  அந்த பன்னாட்டுக் கம்பெனி நம் நாட்டை விட்டே சென்று விட்டது. 

இந்தியர்களின் அசாத்தியமான மூளைக்குக் கிடைத்த அங்கீகாரம் தான் அண்மையில் நமக்குக் கிடைத்த மங்கள்யான் திட்டத்தின் வெற்றி. உலக அளவில் நான்காவது நாடாக நாம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வினைத் தொடங்கியுள்ளோம். பிற நாடுகள் எல்லாம் பல முறை தோல்வி அடைந்த பின்னரே தமது முயற்சியில் வெற்றி பெற்றன. ஆனால் நமது நாட்டுக்கு முதல் முறையிலேயே வெற்றி கிடைத்துள்ளது.

அதில் முக்கியமான விசயம் மங்கள் யான் திட்டத்துக்காக நாம் செய்த செலவு மற்றெல்லா நாடுகளை விடவும் மிகக் குறைவு. உலகின் பெரிய தொழில் நுட்ப நாடாகக் கருதப்படும் அமெரிக்காவை விடவும் ஏறத்தாழ பத்து மடங்கு குறைவு.

இதைத் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏழு ரூபாய் என்கின்ற செலவில் அறுபத்தைந்து கோடி கிலோ மீட்டர் தூரத்துக்கு எங்களது விஞ்ஞானிகள் மங்கள் யானை விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர் எனப் பெருமையுடன் அமெரிக்காவில் குறிப்பிட்டார். அது ஆமதாபாத்தில் ஆட்டோவில் பிரயாணம் செய்யக் கொடுக்கப்படும் கிலோ மீட்டருக்குப் பத்து ரூபாய் என்பதை விடவும் குறைவு எனவும் தெளிவு படுத்தினார்.  

இத்தனைக்கும் அந்த மகத்தான  சாதனையில் ஈடுபட்ட பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வெளி நாடுகளில் படித்தவர்கள் இல்லை. அவர்களில் நாட்டு அளவில் பிரபலமான இந்தியத் தொழில் நுட்ப நிறுவனங்கள் ( ஐ.ஐ.டி) மற்றும் மண்டல பொறியியல் நிறுவனங்களில் படித்தவர்களே கூட வெறும் இரண்டு விழுக்காடு பேர்கள் தான். மற்றவர்கள் அனைவரும் நாட்டின் சாதாரணக் கல்லூரிகளில் படித்தவர்கள்.

பல்வேறு நிலைகளில் நாட்டின் பல பகுதிகளிலும் நடை பெற்று வரும் புதிய முயற்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எல்லாவற்றுக்குமே ஒரு அடிப்படையான தன்மை ஆதாரமாக உள்ளது. அது முடிந்த வரைக்கும் மிகக் குறைவான செலவில் கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மற்றும் பொருட்களைத் தயாரிப்பது  என்பது தான்.

இதை மேனாட்டவர்கள் ’சிக்கனக் கண்டுபிடிப்புகள்’ என்கிறார்கள். அவர்களின் கண்டுபிடிப்புகள் எல்லாவும் பெரிய அளவில் அதிகமாகச் செலவு செய்து நடத்தப்படுபவை.  அதனால்தான்  அதற்கான விலைகளும் அதிகம். எனவே தான் மருத்துவத் துறை  மிக அதிகமாக வளர்ந்ததாகக் கருதப்படும் அமெரிக்காவில் சாதாரண மக்களுக்கான சிகிச்சைகளைத் தர முடிவதில்லை. இத்தனைக்கும் மருத்துவத் துறையில் இது வரைக்கும் நோபெல் பரிசுகளை அதிகம் பெற்றவர்கள் அவர்கள் தான்.

இந்தியர்களின் முயற்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளில் செலவுகள் குறைவாகவே இருப்பதால் அவை சாதாரண மக்களுக்குக் குறைந்த விலைகளில் கிடைக்கிறது. அதனால் உலகம் முழுவதுமே அவற்றுக்கான வாய்ப்புகள் பெருகி வருகிறது.

இதற்கெல்லாம் காரணம் ‘ சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்று நமது முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த தாரக மந்திரம் தான். மேலும் நமது கலாசாரப் பண்புகளான கடின உழைப்பு, எளிமையான வாழ்க்கை, எதிர்பார்ப்புகள்  குறைந்த மனநிலை, பிறருக்காக வாழும் தன்மை ஆகியவை எல்லாம் நமது மக்களின் பல்வேறு  முயற்சிகளுக்குக் காரணங்களாக அமைகின்றன. கூடவே இந்தியர்களுக்கு இயற்கையாகவே அமைந்த ‘ சொந்த மூளை’யும் ஒரு காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மங்கள்யான் திட்டம் செவ்வாய் கோளின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தப் பட்ட உடனே  பெங்களூர் ஆய்வு மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் மற்றும்  பொறியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வெற்றிக் களிப்பில் மிதந்தனர். அப்போது அவர்கள் தங்களின் மகிழ்ச்சியினை சக நண்பர்களிடம் தெரிவித்துக் கொண்டனர்.

அது சம்பந்தமாக வந்த புகைப்படங்களில் ஒன்று உலக முழுவதும் பல பேரின் மனதைக் கவர்ந்தது. அதில் அந்தத் திட்டத்தில் ஈடுபட்ட பெண் வல்லுநர்கள் பாரம்பரிய இந்திய உடையான பட்டுச் சேலையை அணிந்து, நெற்றியில் குங்குமமும், தலையில் மல்லிகைப் பூக்களையும் சூடியவாறு ஆனந்தத்துடன் ஒருவரோடுவர் கை கோர்த்து தங்களின் ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

அந்தப் புகைப்படம் பாரம்பரிய இந்தியப் பண்பாட்டின் தனித் தன்மையை அப்படியே வெளிப்படுத்துவதாக அமைந்தது. கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட நமது தேசத்தின் பல்வேறு முயற்சிகள் மற்றும் முன்னேற்றங்கள் ஆகியவை அனைத்துக்கும் நமது உயர்ந்த கலாசார விழுமியங்கள் அடிப்படையான காரணமாக தொடர்ந்து விளங்கி வருவது  வெளிப்படையாகத் தெரிகிறது.


( ஓம் சக்தி தீபாவளி மலர், நவ.2014)

மன்மோகன் சிங் அரசின் வீழ்ச்சி


டாக்டர் மன்மோகன் சிங் 2004 ஆம் வருடத்தில் பிரதமராகப் பதவியேற்ற போது, நாடு முழுவதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பொருளாதார நிபுணர், பல்கலைக் கழகப் பேராசிரியர், நிதியமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை மத்திய அரசில் வகித்தவர், சர்வதேசப் பொருளாதார அமைப்புகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர், அரசியலில் எந்தக் குழுவையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாதவர் என அவருக்குச் சாதகமான அம்சங்கள் நிறைய இருந்தன. எனவே நியாயமான முறையில் திறமையாகச் செயல்பட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்  என்கின்ற எண்ணம் பொதுவாக  இருந்தது.

அந்த சமயத்தில் நாடு நல்ல வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது. 1999 முதல் 2004 வரையான ஐந்து வருட காலத்தில் இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருந்தன. சாலைகளை மேம்படுத்துவதற்காக அதுவரை இல்லாத அளவு தங்க நாற்கரம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தன. மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையேற்று நடத்திய ஜனதா கட்சி ஆட்சிக்கு அப்புறம், முதன் முறையாக, அடல் பிகாரி வாஜ்பாய் அரசின் கடைசி இரண்டு நிதி ஆண்டுகளில் தான் நாட்டின் நடப்புக்கணக்கில் உபரித் தொகை ஏற்பட்டிருந்தது. வழக்கமான எல்லா வருடங்களிலும் நிதிக் கணக்கில் பற்றாக்குறை இருப்பதுதான் வாடிக்கையாகும்.

எனவே அந்தக் காலகட்டத்தில்  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நமது நாடு குறித்த ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. 1998ல் பொக்ரானில் அணுகுண்டு வெடிக்கப்பட்ட பின்னர், சர்வதேச  அளவில்  பல வித தடைகளையும் மீறி வெளி நாடு வாழ் இந்தியர்கள், நமது நாட்டில் அதிகமாக முதலீடுகளை  மேற்கொண்டனர். அதன் மூலம் தாய் நாட்டின் மீது தங்களுக்கு உண்டான நம்பிக்கையை உலகுக்கு வெளிப்படுத்தினர். அதனால் நம்மை சாதாரணமான ஒரு மூன்றாம் உலக நாடாகப் பார்த்து வந்த உலக நாடுகளின் பார்வையே பெருமளவு மாறத் தொடங்கியது. அந்த சமயத்தில் நாடு காணத் துவங்கிய வேகமான பொருளாதார  வளர்ச்சி மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது.

எனவே மன்மோகன் சிங் அவர்களிடம் ஒரு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. அவர் நேர்மையானவர் மற்றும்  ஊழல் கறை படியாதவர் என்பது அவரைப் பற்றிய எண்ணத்தை மக்களிடம் மேலும் அதிகரித்தது. ஆனால் பிரதமராக இருந்த அவரது முதல் ஐந்தாண்டுக் காலத்திலேயே அவர் மேல் ஒரு வித அவநம்பிக்கை ஏற்படத் தொடங்கியது. அவர் முனைந்து செயல்பட்டுத்திய அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமும், அதைத் தொடர்ந்து தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பாரளுமன்றத்தில் ஓட்டுக்காக உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்ததும் ஆட்சிக்குக் களங்கமாக அமைந்தன. அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியினரின் ஊழல்கள் அப்போதே அதிகரித்துக் கொண்டிருந்தன.  அதிகம் சம்பாதிக்க வாய்ப்புள்ள  துறைகளைக் கூட்டணிக் கட்சிகள் கேட்டுப் பெற்றுக் கொள்ளை அடித்து வந்ததை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனாலும் கூட தனிப்பட்ட முறையில் அவர் ஊழல்வாதியல்ல; எனவே மற்ற பல அரசியல்வாதிகளை விட அவர் மேலானவர் என்கின்ற எண்ணம் பெரும்பாலான மக்கள் மனதில் இருந்தது. அதனால்தான் அவரை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஒரு உறுதியில்லாத பிரதமர் என்று ஒருமுறை சொன்ன போது அந்தக் கருத்தின் ஆழத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை.

முதல் முறையாக அவருக்குப்  பிரதமர் பதவி கிடைத்ததே  ஒரு தற்செயலான நிகழ்வுதான். அவர் எப்போதுமே தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான கடிதத்துடன் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைப் பார்க்கச் சென்றார். அவரைச் சந்தித்து விட்டு வெளியில் வந்த பின்னர் தான் பிரதமர் பதவிக்கான மாற்று வேட்பாளர் குறித்த கருத்தையே வெளியிட்டார்.

பிரதமர் பதவியை  சோனியா காந்தி ஏற்பதில் சட்டப் பிரச்சனைகள் இருந்ததால்தான் கடைசி நேரத்தில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிய வந்தது. அப்போது கட்சியில் அனுபவம் வாய்ந்த பல தலைவர்கள் இருந்தனர். ஆனால் தனிப்பட்ட முறையில் மக்கள் செல்வாக்கு இல்லாத ஒருவரையே சோனியா காந்தி தேர்ந்தெடுக்க விரும்பினார். அதன் அடிப்படையில்தான் மக்களவையில் உறுப்பினராகக் கூட இல்லாதவரும், எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாதவருமான மன்மோகன் சிங்குக்குப் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது.

தனது கட்சித் தலைமைக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அனுசரணையாக நடந்து கொண்டதாலும், தனிப்பட்ட முறையில் ஊழல் புகார்கள் எதிலும் சிக்கிக் கொள்ளாததாலும் 2009ம் வருடத்தில் மக்களவைத் தேர்தல் வந்த போது மன்மோகன் சிங்கே ஆளும்  கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  எனவே காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவரே மீண்டும் இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்றார்.

அப்போது மந்திரி சபையில் கூட்டணிக் கட்சிகள் தமக்கு வேண்டிய அதிக வருமானம் தரக்கூடிய துறைகளைப் பெறுவதற்கு நடத்திய பேரங்கள் அவரின் இயலாமையை முதன்முறையாக வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. பின்னர் வெளிவந்த நீரா ராடியா ஒலி நாடாக்கள் மன்மோகன் சிங் அமைச்சரவை கேவலமான முறையில் எப்படி அமைக்கப்பட்டது என்பது பற்றியும்,  அதற்குத் தலைவராக விளங்கும் பிரதமர் எவ்வாறு துச்சமாக மதிக்கப்படுகிறார் என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து வந்த காலங்களில் வெளி வந்த ஊழல்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. இரண்டு ஜி எனப் பிரபலமாக அறியப்படும் அலைக்கற்றை ஊழல், சுதந்திர இந்திய வரலாற்றில் ஊழலுக்கான ஒரு புதிய வரலாற்றையே படைத்தது.  அது 1,76,000 கோடி ரூபாய் அளவிலான மக்களின் பணம் சம்பந்தப்பட்ட விசயம்  என்பது அதுவரை யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தொகையாகும். தொடர்ந்து வெளிப்பட்ட நிலக்கரி ஊழலில் அதை விடவும் அதிக தொகை சம்பந்தப்பட்டிருந்தது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான தேசத்தின் இயற்கை வளங்களை  மன்மோகன் சிங்  அரசு பெரிய நிறுவங்களின் சொந்த நலனுக்காகவும் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கவும் துணை போனது மன்னிக்க முடியாத குற்றமாகும். நாட்டின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே நேரடியாக அவற்றைச் சூறையாடியிருந்தார்கள். இவற்றுக்கெல்லாம் முன்னரே வெளிப்பட்டிருந்த காமன்வெல்த் விளையாட்டு ஊழல், பிற நாடுகளின் மத்தியில் நமக்கு அவப்பேரை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சுரேஷ் கல்மாடியும்  டில்லியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றங்கள் சாட்டப்பட்டன.

தொடர்ந்து வந்த காலங்களில் வேறு பல துறைகளிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன. நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காகத் தாங்கள் கொண்டு வந்ததாகப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும்  மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலேயே அதிக அளவில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக மத்திய அரசின் தணிக்கை துறை எடுத்துக் காட்டியுள்ளது. எனவே சுதந்திரத்துக்கப்புறம்  நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சியாக மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஆட்சிக்காலம் அமைந்து விட்டது. 

ஊழல்கள் எங்கும் பரவியிருப்பதால் நிர்வாகம் பெருமளவு சீர்கெட்டு விட்டது. அதனால் நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு வளர்ச்சி தடைப்பட்டு விட்டது. பத்தாண்டுகளுக்கு மேலாக நல்ல வளர்ச்சியைக் கண்டு வந்த பொருளாதாரம், சென்ற ஆண்டில் வெறும் 4.5 விழுக்காடு அளவே வளர்ந்துள்ளது. இந்த ஆண்டும் வளர்ச்சி விகிதம் ஐந்து விழுக்காட்டுக்கும் கீழாக இருக்குமென்று அரசின் புள்ளி விபரங்களே தெரிவிக்கின்றன.

வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தும் நாட்டில் தொழில்கள் செய்வதற்குப் போதுமான கட்டமைப்புகளை மேற்கொள்வதில் பெரிய சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தேவையான அளவுக்கு நிலக்கரி நம்மிடத்தில் இருப்பு உள்ளது. ஆனால் ஊழல் பிரச்சனைகளால் சிக்கிக் கொண்டு சரியான கொள்கைகளை வகுத்து நிலக்கரியை முறையாகப் பயன்படுத்த அரசாங்கத்திடம் திட்டமில்லை. எனவே தொழில்கள் மின்சாரமின்றித் தவிக்கின்றன.

மக்களுக்கு அதிக அளவில் வாழ்வழிக்கும் விவசாயம், சிறுதொழில்கள் ஆகியவை மிகுந்த சிரமத்தில் உள்ளன. விவசாயிகள் தற்கொலை செய்வதும் விளை நிலங்களை விட்டுப் போவதும் நாம் அன்றாடம் பேசும் தினசரி நிகழ்வுகளாக மாறி விட்டன. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திப் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய விவசாய மற்றும் உணவுத் துறைகளில் நுழையக் கங்கணம் கட்டிக் கொட்டு வேலை செய்து வருகின்றன.

அரசின் தவறான இறக்குமதிக் கொள்கைகளால் இந்தியத் தொழில்கள் பெருத்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன. நம் நாட்டு சிறு தொழில் முனைவோர்களால் சுலபமாகச் செய்யப்படக்கூடிய பொருட்கள் எல்லாம் எந்த விதக் கட்டுப்பாடுமின்றி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிகளாக வந்து கொண்டுள்ளன. 2012-13 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 65000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சீனாவிலிருந்து இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டு ஹோலிப் பண்டிகையில் உபயோகப்படுத்தப்பட்ட வண்ணப் பொடிகளும், வர்ணம் கலந்த தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் சிறு குழாய்களும் 90 விழுக்காட்டுக்கு மேல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எனச் செய்திகள் வந்துள்ளன. அதனால் மும்பை  உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்பட்டு வந்த பல நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான பேரின் வேலை வாய்ப்பு பறி போயுள்ளது. 

பல துறைகளிலும்  தொழில்களை நடத்தி வருபவர்கள் அவற்றை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். புதிய தொழில் முனைவோர் இருக்கின்ற சூழ்நிலையில் மூலதனம் போட்டு தொழில் துவங்க பயப்படுகின்றனர். எனவே நாட்டின் உற்பத்தித் துறையில் போதுமான வளர்ச்சி இல்லை. அதே சமயம் விலைவாசி  தொடர்ந்து  அதிகரித்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஒரு பொருளாதார நிபுணர் பிரதமராகப் பொறுப்பேற்று வழி நடத்தும் நாட்டில் பத்து வருடங்கள் கழித்து நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டே செல்கிறது.  மத்திய அரசின் நடப்புக் கணக்கில்   பற்றாக்குறை அதிகமாகி வருகிறது. 2013-14 ஆம் வருடத்துக்கான திட்டமிட்ட பற்றாக்குறையில் 95 விழுக்காடு, சென்ற டிசம்பர் 2013ல் நிறைவுற்ற ஒன்பது மாத காலத்திலேயே முடிந்து விட்டதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த நிதியாண்டு முடிவில் பற்றாக்குறை திட்டமிட்டதை விட மேலும் அதிகரித்து ஒரு புதிய இலக்கை எட்டுமெனத் தெரிகிறது. 

எந்த நாட்டுக்குமே அதன் அடிப்படையான அமைப்புகள் மிகவும் முக்கியமானவை ஆகும். ஏனெனில் ஆட்சியாளர்கள்  யார் வந்து போனாலும், அங்குள்ள அமைப்புகளின் வலிமையை ஒட்டியே அந்த  நாட்டின் பலம் அமைந்திருக்கும். அந்த வகையில் இந்தியா உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு. நமக்கான கட்டமைப்புகள் பல வருடங்களாக ஏற்பட்ட அனுபவத்தில் உருவாக்கப்பட்டவை. அவற்றை முறைப்படி  காப்பாற்றி நம்பிக்கை கெடாமல்  கொண்டு செல்வது பொறுப்பிலுள்ள ஒவ்வொரு அரசும் செய்ய வேண்டிய  பணியாகும்.

துரதிர்ஷ்டவசமாக மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் முக்கிய அமைப்புகளான புலனாய்வுத் துறை, கண்காணிப்புக் குழு உள்ளிட்ட பலவற்றிலும் அரசின் தலையீடு மிகவும் அதிகரித்துப் போய் விட்டது. நாட்டின் முக்கிய ஊழல் குற்றங்களை விசாரிக்கும் மத்திய கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பொறுப்புக்கு அரசால் நியமிக்கப்பட்டவரை பின்னர் உச்சநீதி மன்றம்  நீக்குகிறது. ஏனெனில் அதற்கான தகுதியில்லாதவரை பிரதமர் தலைமையிலான குழு எதிர்ப்புகளுக்கிடையிலும் தெரிந்தே நியமனம் செய்திருந்தது. மத்திய புலனாய்வுத் துறை எந்த வித சுதந்திரமுன்றி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூண்டுக்கிளி என நீதி மன்றத்தால் வர்ணிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் கண்காப்பில் இயங்கும்  வழக்கு விசாரணையில் பிரதமருக்கு மிகவும் வேண்டியவரான மத்திய சட்ட அமைச்சர் தலையிடுகிறார். அலைக்கற்றை ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்றக் குழு விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்படுகிறது. அந்தக் குழுவின் முன் சென்று நிதியமைச்சரும் பிரதமரும் பதிலளிக்க வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைக்கின்றனர்.  அவை அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன. அதனால் பாராளுமன்றக் குழுவுக்கான மரியாதை குறைந்து போகிறது. மத்திய அரசின் தணிக்கை அமைப்பான சிஏஜி,  அரசின் செயல்பாடுகளில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டிய போது மத்திய அமைச்சர்களாலேயே சிறுமைப் படுத்தப்படுகிறார்.

எனவே மன்மோகன் சிங் அரசு தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அரசு அமைப்புகளின் செயல்பாடுகளைக் குலைப்பதற்கும் அவற்றை கேவலப்படுத்துவதற்கும் பலவிதமான  நடவடிக்கைககளை  மேற்கொண்டு வருகின்றன.  இது நமது நாட்டின் ஜனநாயக மாண்புகளுக்கு ஒரு அரசாங்கம்  செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். மேலும் நிலக்கரித் துறையில் பெரும் ஊழல்கள் பிரதமர் அந்தத் துறைக்குப் பொறுப்பு வகித்த காலகட்டத்தில் தான் நடைபெற்றுள்ளன. எனவே அவர் நேரடியாக அவற்றில் பலன் பெறாமல் விட்டிருந்தாலும், ஊழல்களுக்குத் துணை போயிருப்பதாகவே கருத வாய்ப்பிருக்கிறது.

எனவே அவரின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அவர் திருவாளர் பரிசுத்தம் என்கின்ற நம்பிக்கை மக்களில் பெரும்பாலானவர்களுக்குப் போய் விட்டது.  மேலும் சுதந்தர இந்தியாவின் பெரும் ஊழல்கள் அதிகம் மிக்க அரசுக்கு அவர்தான் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறார் என்கின்ற எண்ணம் வலுப்பெற்று விட்டது.

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நாட்டுக்குப் பல தளங்களிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் தலைமையில் பொருளாதாரம் நல்ல நிலையை எட்டும் என்கின்ற கருத்து முற்றிலும் தவறாகப் போய்விட்டது. 2004 ஆம் வருடத்தில் அவர் பொறுப்பேற்ற போது நாட்டில் நிலவிய அபரிமிதமான நம்பிக்கையை  இப்போது அவநம்பிக்கையாக மாற்றி விட்டார். அதனால் நமது தேசத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றம் வழியறியாமல் தடைப்பட்டு நிற்கிறது.

அவரது ஆட்சிக்கால ஊழல்கள் சர்வதேச அளவில் நமது நாட்டுக்கு ஒரு பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளன. அதனால்  நாட்டு மக்களுக்கு அரசியல் அமைப்புகளின் மேல் நம்பிக்கை குலைந்து வருகிறது. மேலும் அரசு அமைப்புகளின் செயல்பாடுகளில்  இந்த அரசாங்கத்தின்  தலையீடுகள், அவற்றின் சுதந்தரத்தைக் கெடுத்து அவற்றுக்குண்டான மரியாதையைக் கெடுத்து விட்டன.

மேலும் மன்மோகன் சிங் அவரது அண்மைக் கால செயல்பாடுகள் மூலம் அவருக்கிருந்த தனிப்பட்ட மதிப்பையும் கெடுத்துக் கொண்டு வருகிறார். அவரின் அமைச்சரவை ஒரு அவசரச் சட்ட ஆணையை பிறப்பிக்கிறது. அதை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாக அவமதித்துக் கிழித்துக் குப்பைக் கூடையில் போட வேண்டும் என்கிறார். அவ்வாறு அவர் அமைச்சரவையின் முடிவை அவமதித்தற்குப் பிரதமர் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை.

பிரதமர் என்பவர் மக்களிடத்தில் அவ்வப்போது ஊடகம் மூலமாகப் பேச வேண்டும். முக்கியமான சமயங்களிலாவது மக்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் இவர் கடந்த பத்து வருட காலத்தில் மூன்று முறை மட்டுமே பேசியுள்ளார். நமது எல்லைகளில் பணி புரியும் இராணுவ வீரர்கள் அநியாயமாகக் கொல்லப்படும்போதும், அண்டை நாடுகள் நமது எல்லைக்குள் ஊடுருவும்போது கூட அவர் எதுவும் கருத்து சொல்வதில்லை.

சுமார் ஆறு வருடம் கழித்து அண்மையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். அதில் எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவரை ஒரு சாதாரண அரசியல் வாதியாக வெளிப்படுத்தின. மூன்று முறை மக்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பிரதமராக வந்தால் நாட்டுக்கு விபத்தாக முடியும் என மன்மோகன் சிங் அறிவித்தார். மேலும் குஜராத் கலவரம் பற்றி உச்ச நீதி மன்றக் குழுவும் நீதிமன்றமும் அளித்த தீர்ப்புக்கு மாற்றான கருத்தை வெளியிட்டார். நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒரு பிரதமர் அவ்வாறு பேசியது அவரது பொறுப்புக்கும் தனி மனித நாகரிகப் பண்புகளுக்கும் முரணாக அமைந்திருந்தது.

எனவே மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐந்து வருட ஆட்சி என்பது நமது நாடு சுதந்தரம் அடைந்த பின் ஏற்பட்ட  துரதிஷ்டவசமான காலமாகவே அமைந்துள்ளது. அதற்குத் தலைமை தாங்கி  நடத்தி வரும் அவர் மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்டவராக உள்ளார்.


( ஓம் சக்தி, மார்ச் 2014)

இந்தியக் கலாசாரமே பொருளாதாரத்தின் அடிப்படை


”பாரத நாடு பழம் பெரும் நாடு” என்று மார் தட்டினான் மகாகவி பாரதி. இந்தியா உலகின் தொன்மையான நாடுகளில் மிகவும் முக்கியமானது; அதிக சிறப்புகளைப் பெற்றதும் கூட. ஒரு நாடு தொடர்ந்து பல்லாயிரம் வருடங்களாக நடை போட்டு வர வேண்டுமெனில், அதற்குப் பொருளாதார சக்தியும் சரியான அடித்தளங்களும் அவசியமாகும். அவை இல்லையெனில் பெரிய நாகரிகங்களும்  கூட சீக்கிரமே அழிந்து போகும் என வரலாறு சொல்கிறது.

மகாத்மா காந்தியின் பிரதான சீடராக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜே.சி.குமரப்பா. காந்தியின் பொருளாதார சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்த பெரிய நிபுணர். அவர் தனது ‘நிரந்தரப் பொருளாதாரம்’ என்ற புத்தகத்தில், முந்தைய காலங்களில் செல்வாக்கோடு விளங்கிய எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க, ரோமன் நாகரிகங்கள் எல்லாம் ஏன் தற்போது அவற்றின் கதைகளைச் சொல்வதற்கு இல்லை?;  அவை ஏன் சில நூற்றாண்டுகள் மட்டுமே கவர்ச்சிகரமான ஒளியோடு விளங்கி விட்டு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டன? என்ற கேள்வியை  எழுப்புகிறார்.

அதற்குக் காரணம் அந்த நாகரிகங்களின் அடிப்படைகள் சுய நலம் மட்டுமே சார்ந்து நிலையற்ற தன்மைகளைக் கொண்டதாக அமைந்திருந்தன என அவரே பதிலும் சொல்லுகிறார். அவற்றுக்கு மாற்றாக இந்திய மற்றும் சீன நாகரிகங்களைச் சுட்டிக் காட்டுகிறார். அவை மட்டும் உயிர்ப்போடு எவ்வாறு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்பதற்கு அவை உயர்ந்த மதிப்பீடுகளின் மேல் சமைக்கப்பட்டு, நீடித்த தன்மைக்கான பண்புகளை இன்னமும் தம்மகத்தே கொண்டு விளங்கி வருகின்றன என்று விளக்கம் அளிக்கிறார்.  

சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு சிந்து- சரஸ்வதி நாகரிக காலத்திலேயே நமது நாடு பொருளாதார மற்றும் வணிக தளங்களில் மிகவும் முன்னணியில் இருந்ததை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் முதல் அரசியல் பொருளாதார புத்தகமே இங்குதான் எழுதப்பட்டுள்ளது. இரண்டாயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னால் அதை எழுதிய கௌடில்யர் தனக்கு முன்பு இருந்த நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தனது அர்த்த சாஸ்திரத்தில் மேற்கோள் காட்டுகிறார். எனவே பொருளாதாரம் என்பது ஒரு பாடமாக ஏறத்தாழ இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னமே இங்கு தொடங்கியிருக்க வேண்டுமென்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

தமிழில் திருவள்ளுவர் காலம் கடந்து நிற்கும் பொருளாதாரக் கருத்துகளை இரண்டாயிரத்து நூறு வருடங்களுக்கு முன்னரே அற்புதமாகச் சொல்லியுள்ளார். பொருளை ஈட்டுவதில்  நேர்மையும் நாணயமும் இருக்க வேண்டும் என்பதை  வலியுறுத்தும் வகையில் ‘பொருள் செயல் வகை’ என ஒரு தனி அதிகாரமே படைத்துள்ளார்.

பொருளாதாரம் என்றாலே அது மேற்கு நாடுகளுடன் அதிகம் சம்பந்தப்பட்டது என்பது போலவும் பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்பதெல்லாம் அவர்களுக்கே உரித்தானது எனவும் ஒரு எண்ணம் பரவலாகப் பலரது மனங்களிலும் நிலவி வருகிறது. அதற்குக் காரணம் ஐரோப்பிய நாடுகள் பிற நாடுகளைக் காலனிகளாக்கி உலக அரங்கில் தலையெடுக்க ஆரம்பித்த பின்னர், உலகப் பொருளாதார வரலாற்றை அவர்களுக்கு ஏற்றவாறு எழுதின. பிற நாடுகளின் உண்மையான வரலாறுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளின. தொடர்ந்து வந்த காலங்களில் அவர்களின் கருத்துகளே பிற நாடுகளிலும் திணிக்கப்பட்டன.

பின்னர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா உலக அரங்கில் முதன்மையான பொருளாதாரமாக உருவெடுத்தது. அதன் விளைவாக பல்கலைக் கழகங்களிலும் கல்விக் கூடங்களிலும் அவர்களின் கருத்துகளும் வழிமுறைகளும் முன்னிலைப் படுத்தப்பட்டன.  எனவே பொருளாதாரம் குறித்த இந்திய சிந்தனைகள் மேற்கத்திய கருத்துருவாக்கங்களை ஒட்டியே சுதந்திரக்குப் பின்னரும் அமைந்தன. 

ஆனால் கடந்த முப்பது வருடங்களாக மேற்கத்திய நாடுகளில் சில நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் உலகப் பொருளாதார வரலாறு குறித்த சிந்தனைகளை முற்றிலும் மாற்றியுள்ளன. அவை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலக அளவில் முதல் இடங்களில் இருந்து வந்ததையும், மேற்கத்திய நாடுகள் பொருளாதார அளவில் முன்னணியில் வருவதற்கு காலனி ஆதிக்கம் மூலம் கிடைத்த செல்வங்களும் வாய்ப்புகளுமே காரணம் என்பதையும் எடுத்து வைத்தன. அவற்றின் மூலம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு என சிறப்பான ஒரு பெரிய வரலாறு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

பணக்கார நாடுகளின் அமைப்பாக ’பொருளாதார முன்னேற்றம் மற்றும் கூட்டுறவுக்கான அமைப்பு’ பிரான்சு நாட்டின் பாரீஸ் நகரில் இருந்து இயங்கி வருகிறது. அதன் மூலம் வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் தலைமையில் நடத்திய ஆய்வுகள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பெரும்பான்மையான காலம் இந்தியா உலக அளவில் மிகவும் செல்வந்த நாடாக இருந்து வந்ததை எடுத்து வைக்கிறது. மேலும் 2013 ஆண்டுகளுக்கு முன்னர் பொது யுகம் தொடங்கும் காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை தன் வசம் வைத்திருந்த நாடாக இந்தியா இருந்துள்ளது. இந்தியப்  பொருளாதாரத்தின் வீழ்ச்சி ஆங்கிலேயர்களின் ஆளுமையால் ஏற்பட்ட சிதைவுகளின் காரணமாகவே நடந்துள்ளது.

எனவே உலக வரலாற்றில் அதிக பட்சமாக தொடர்ந்து பல நூறாண்டுகளாக பொருளாதாரச் செழிப்புடன் விளங்கி வந்த தேசமாக இந்தியா இருந்துள்ளது. மேலும் உயர் தரமான கண்டுபிடிப்புகள், அதிகபட்ச சாதனைகள், பல்வேறு துறைகளில் வளர்ச்சி, நெறி முறைகள் சார்ந்த வாழ்க்கை முறை என தனித்தன்மைகளுடன் உலகமே போற்றக் கூடிய வகையிலும் விளங்கி வந்துள்ளது.  

ஆனால் ஐரோப்பியர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியா சொல்ல முடியாத சிரமங்களுக்கு ஆட்பட்டது. இந்தியாவின் வளங்கள் சூறையாடப்பட்டன; தொழில்கள் நசுக்கப்பட்டன; பாரம்பரியமான கட்டுமானங்கள் தகர்க்கப்பட்டன. அதன் விளைவாக சுதந்திரம் பெற்ற போது இந்தியா மிகவும் ஏழை நாடாக, தொழில் வளம் இல்லாத நாடாக, கல்வி அறிவு இல்லாதவர்கள் அதிகம் பேரைக் கொண்ட நாடாக இருந்தது.  அதனால் உலக அரங்கில் நமது நாட்டுக்கு எந்த வித மரியாதையும் இல்லை.

சுதந்திர இந்தியாவுக்கான பொருளாதாரக் கொள்கைகள் சம்பந்தப்பட்ட விசயத்தில் மகாத்மா காந்தி தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்தார். எனவே ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த போதே நாடு சுதந்திரம் பெற்ற பின்னால் கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதாரக் கொள்கைகள் குறித்து விரிவாக விவாதம் நடத்த வேண்டுமென  மகாத்மா காந்தி முயற்சி எடுத்தார். அது குறித்து நேருவுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் நேரு அதற்கு மறுத்து விட்டார். எனவே அந்த முயற்சி தோல்வியுற்றது.

எனவே நாடு சுதந்திரம் பெற்ற போது நம்முடைய தலைமையிடம் பொருளாதாரம் குறித்த சரியான சிந்தனைகள் எதுவுமில்லை. ஆகையால் 1950 களில் நாட்டுக்குக் கொள்கை வகுக்கும் சூழ்நிலை ஏற்பட்ட போது மேற்கத்திய சோசலிச சித்தாந்தம் சார்ந்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் விளைவாக முதல் முப்பது ஆண்டுகளில் பெரிய வளர்ச்சி ஏற்படவில்லை. அதனால் 1990களின் ஆரம்பத்தில் பொருளாதாரம் நாட்டின் தங்கத்தை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அப்போதைய நெருக்கடிகளுக்குக் காரணம் முந்தைய காலத்திய பொருளாதாரக் கொள்கைகளே எனவும், அதற்கு மாற்றாக உலக மயமாக்கல் சார்ந்த கொள்கைகளை  நடைமுறைக்குக் கொண்டு  வருவதாகவும் ஆட்சியாளர்கள் முடிவெடுத்தனர். அதன் விளைவாக தொடர்ந்து வந்த காலங்களில் அமெரிக்க சிந்தனைகள் சார்ந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே சுதந்திரம் பெற்ற பின்னர் தொடர்ந்து மேற்கத்திய சித்தாந்தங்களே நமது பொருளாதரக் கொள்கைகளை வழி நடத்தி வருகின்றன.

முக்கியமான கொள்கை முடிவுகள் எடுக்கும் சமயங்களில் மக்களிடையே கொள்கைகள் குறித்து ஆட்சியாளர்கள் பரவலான விவாதங்களை மேற்கொள்வதில்லை. மேல் நாட்டுக் கருத்துகளையும் செயல் திட்டங்களையும் மையமாக வைத்தே கொள்கை வகுப்பவர்கள் செயலாற்றி வருகின்றனர். அதனால் நாட்டின் வளங்களும் திறமைகளும் இன்று வரைக்கும் முழுமையான அளவில் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. மேலும் நாட்டுக்குப் பொருந்தாத கொள்கைகளை நடைமுறைப் படுத்தியதன் காரணமாகப்  பல துறைகளில் சீரழிவுகளும் அதனால் மக்களுக்கு சிரமங்களும் ஏற்பட்டு வருகின்றன. எனவே அறுபத்தி ஏழு ஆண்டுகள் கழித்து இன்னமும் வறுமை, வேலையின்மை, விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் நசிவு ஆகியவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன.

அதே சமயம் மேல் மட்டத்தில் நிலவும் பல்வேறு விதமான குழப்பங்கள் மற்றும் தவறுகள் ஆகியவற்றுக்கிடையிலும், நாடு வெகுவாக முன்னேறி வருகிறது. அதனால் இந்தியாவின் பொருளாதார பலம் உயர்ந்து வருகிறது. அண்மையில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகி விட்டதாகப் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. கடந்து பத்து வருடங்களுக்கு மேலாகவே உலக அளவில் வேகமாக வளரும் நாடுகளில் சீனாவுக்கு அப்புறம்  இந்தியா  இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன்னால் லண்டன் மேலாண்மை நிறுவனம் இந்தியாவில் எட்டரை கோடி தொழில் முனைவோர்கள் வெவ்வேறு நிலைகளில் தொழில்களை செய்து வருவதாக தெரிவித்தது. உலக அளவில் இது மிக அதிகமான எண்ணிக்கையாகும். இந்தியத் தொழில்கள் இன்று உலக முழுவதும் விரிவடைந்துள்ளன. பெரிய கம்பெனிகள் மட்டுமன்றி உள்ளூர் நிறுவனங்களும் கூட இன்று பல நாடுகளில் கால் பதித்து வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 2500 தொழில் மையங்கள் இருப்பதாக அரசின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அவையெல்லாம பெரும்பாலும் அதிகம் படிக்காத சாதாரண மக்களால் நடத்தப்படும் தொழில்களைக் கொண்டவை.

இன்று நாட்டின் பொருளாதரத்துக்கு அவை ஆற்றும் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. சூரத், ஆக்ரா, திருப்பூர், கரூர் என அவற்றில் பல உலக அளவில் வியாபாரம் செய்து நாட்டுக்குப் பெயர் கொடுத்து வருகின்றன. வைர வியாபாரம் போன்ற தொழில்களில் இன்று சர்வதேச சந்தையில் இந்தியர்கள் தான் முக்கியமாக உள்ளனர். மேலும் கல்வி, மருத்துவம், பொறியியல், கணினி, நிர்வாகம் எனப் பல துறைகளிலும் இந்தியர்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் உட்பட்ட உலகின் பல பகுதிகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர். அதனால் பணக்கார மேற்கத்திய நாடுகளில்  இந்தியர்களின் திறமை வெளிப்பட்டு வருகிறது.

மனிதனின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் அவசியமானது நிதியாகும். தனி மனித, சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிதியே ஆதாரம். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய நாடு ஒரு குறுகிய காலத்தில் இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது என்றால், அதற்கு முக்கியக் காரணம் மக்களின் அதிகப் படியான சேமிப்புகளும், அவர்களின் அபரிமிதமான தொழில் முனையும் தன்மைகளுமாகும். சுதந்திரம் பெற்ற பின்னர் மத்திய அரசு முதன் முறையாக 1950-51 ஆவது வருடம் தொடங்கி புள்ளி விபரங்களை வெளியிடத் தொடங்கியது. அப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே ஏறத்தாழ 45 விழுக்காடு பேர் வாழ்ந்து வந்தனர். ஆனால் அந்த சமயத்திலேயே சேமிப்பு 8.6 விழுக்காடு இருந்தது. இன்றைக்கு உலகின் பல பணக்கார நாடுகள் கூட அந்த அளவு சேமிப்பை எட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.

நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் சாதாரண மக்களில் தொடங்கி எல்லா நிலைகளிலும் சேமிப்புகள் உள்ளதைத் தெரிவிக்கின்றன. மேலும் தொடர்ந்து சேமிப்புகள் அதிகரித்து வந்துள்ளன. சென்ற வருடம் அதிகார பூர்வ சேமிப்பு மொத்த பொருளாதார உற்பத்தியில் 31 விழுக்காடு அளவாக இருந்தது. அதைத் தவிர மக்கள் தங்களுக்குள்ளேயும் உள்ளூர் முறைகளின் படியும் தங்கம் உள்ளிட்ட முதலீடுகளில் சேமிப்பதும் அதிகமாக உள்ளது. உலக அளவில் தங்க உற்பத்தியில் சுமார் இருபத்தி ஐந்து முதல் முப்பத்தி மூன்று விழுக்காடு வரையிலும் இந்தியர்களே வாங்குகின்றனர். எனவே அவற்றையெல்லாம் கூட்டிப்பார்த்தால் மொத்த சேமிப்புகள் மிக அதிகமாக இருக்கும்.

நாட்டின் மொத்த சேமிப்புகளில் சராசரியாக மூன்றில் இரண்டு பாகத்துக்கு மேல் குடும்பம் மற்றும் அவை சார்ந்த அமைப்புகள் மூலமே ஏற்படுகின்றன. நம் மக்களின் சேமிக்கும் பழக்கம் வெளி நாடு சென்றாலும் அவர்கள் கூடவே செல்கிறது. எனவே தம்மைச் சுற்றியுள்ளவர்கள் அதிகமாகச் செலவு செய்யும் போதும் அவர்கள் தங்களின் குடும்பங்களுக்காகச் சேமிக்கிறார்கள். அதனால் அங்கு முதலீடுகளை மேற்கொள்கின்றனர். தாய் நாட்டில் உள்ள தங்களின் குடும்பங்களுக்குப் பணம் அனுப்புகின்றனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் தாய் நாடுகளுக்கு அனுப்பும் தொகைகளில் வெளி நாடு வாழ் இந்தியர்களே தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்றனர். சென்ற வருடம் மட்டும் அவ்வாறு நமது நாட்டுக்கு வந்துள்ள பணம் 71 பில்லியன் டாலர்கள்.

மக்களின் அதிகப்படியான சேமிப்புகள் மூலமே வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற அமைப்புகளில் தொகைகள் பெருகுகின்றன. அதன் மூலமே தனியார் துறை சார்ந்த தொழில்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மூலதனம் ஏற்படுகிறது. மேலும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஆரம்பித்து நடத்துபவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் மூலதனத்தில் பெரும்பகுதி நிதியை தாங்களே திரட்டிக் கொள்கின்றனர். மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப்பு 2005 அமைப்பு சாராத துறையில் நாட்டில் சுமார் 4.2 கோடி தொழில்கள் உள்ளதாகக் கூறுகிறது. அவற்றுக்குத் தேவையான முதலீடுகளில் 95 விழுக்காட்டுக்கு மேல் அதை நடத்துபவர்கள் தங்களின் சொந்த முயற்சிகளாலும், தொடர்புகளாலுமே திரட்டிக் கொள்கின்றனர். வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அவற்றுக்குக் கொடுக்கும் உதவிகள் நான்கு விழுக்காட்டுக்குச் சற்று அதிகமாக மட்டுமே உள்ளது.

எனவே நமது மக்களின் மூலதனம் திரட்டும் தன்மை அசாத்தியமானதாக உள்ளது. சொந்த சேமிப்புகள், உறவுகள் மற்றும் நட்புகளின் உதவி எனத் தொடர்பு வட்டத்துக்குள்ளேயே பெரும்பாலான மூலதனங்கள்  திரட்டப் படுகின்றன. அதற்குக் காரணம் இந்திய மக்களிடையே உள்ள வலுவான சமூக உறவுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சர்வதேச அளவில் தொழிலில் வெற்றி பெறுவதற்கு ஒரு முக்கிய காரணம் அங்கு நிலவும் சமூக முறைகளே என உலக வங்கியின் 2001 ஆம் வருடத்துக்கான வளர்ச்சி அறிக்கை கூறுகிறது. தென் தமிழகத்தில் அதிகமாக வாழும் நாடார் சமூகம் தங்களின்  தொழில்களுக்குத் தேவைப்படும் மூலதனங்களைத் தங்கள் மக்களின் மூலமே திரட்டிக் கொள்ள தாங்களே உருவாக்கிய முறைதான் மகமை என்பதாகும். அதனால் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியால் இன்று சில்லறை வணிகம், தீப்பெட்டி, பட்டாசு, வங்கி எனப் பல துறைகளில் அவர்கள் தேசிய அளவில் முன்னோடியாக உள்ளனர்.

தன்னை விடத் தனது குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என ஒவ்வோரு இந்தியத் தாயும் தந்தையும் கனவு காண்கின்றனர். அதற்காக அவர்களை நல்ல கல்விக் கூடங்களில் சேர்க்கின்றனர். மிகச் சிறிய அளவிலாவது தொழில்களை ஆரம்பிக்கின்றனர். அப்படி சிறிய அளவில் ஆரம்பிக்கப் பட்ட தொழில்கள் தான் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளன. நமது நாட்டில் இன்னமும் ஏறத்தாழ  பாதியளவு மக்கள் சுய தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர். அதுவே அமெரிக்காவில் வெறும் 7.5 விழுக்காடு தான். அங்கெல்லாம் சம்பளத்துக்கு செல்பவர்களே மிகவும் அதிகம்.

எனவே கடந்த அறுபத்தைந்து ஆண்டு கால வளர்ச்சி நமது மக்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்பட்டு வந்துள்ளது. அவர்களின் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்னும் எண்ணம் தான் நமது நாட்டை சுய சார்புத் தன்மை கொண்டதாக வைத்துள்ளது. அதனால் வெளி நாட்டினைச் சாராமல் சுயமாக செயல்படக் கூடிய தன்மை கொண்ட பொருளாதாரமாக இருப்பதாக நம்மைப் பலரும் பாராட்டுகின்றனர்.  அரசுகள் தொடர்ந்து தவறான கொள்கைகளை வகுத்துக் கொண்டு வந்த போதும், நாடு முன்னேறி வருவதற்குக்.காரணம் நமது மக்களின் அடிப்படையான குணங்களாகும்.

குடும்பங்களே நமது மக்களின் ஆதாரம். அவை வெறும் சமூக, கலாசார மையங்கள் மட்டுமல்ல. பொருளாதாரத்துக்கும் அவையேதான் அடிப்படையாக உள்ளன. சமூகங்கள் குடும்பங்களின் நீட்சியே ஆகும். குடும்ப மற்றும் சமூக உறவுகள் ஒரு நாட்டின் அமைதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்கினை வகிக்கின்றன. எவ்வளவோ சிரமங்களுக்கிடையிலும் நமது நாடு பெருமளவு பொது அமைதியினைக் காத்து வருவதற்கும் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வருவதற்கும் நமது குடும்பங்களும் சமூகங்களுமே காரணம்.

நமது குடும்பங்களும் சமூகங்களும் தனித் தன்மையுடன் விளங்கி உலகிலேயே ஒரு முன் மாதிரியாக இன்னமும் விளங்கி வருவதற்குக் காரணம், நமது தேசத்தின் உயர்ந்த கலாசார பண்பாட்டு நெறிகளாகும். அந்த நெறிகள் தான் ஐரோப்பியர்கள் இங்கு வரும் வரை நமது நாட்டை ஒரு பொருளாதார வல்லரசாகவும், பல துறைகளிலும் வளர்ச்சி பெற்ற ஒரு உயர்ந்த நாடாகவும்  வைத்திருந்தன. அதே மதிப்பீடுகள் தான் பல நூறாண்டுகள் அடிமைப்பட்டு இன்று சுதந்திரக்குப் பின்னர் தடுமாறும் கொள்கைகளை அரசுகள் கடைப்பிடிக்கும் போதும், தேசத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றன.

மேற்கத்திய கோட்பாடுகள் தோற்றுப் போய் அந்த நாடுகள் பொருளாதாரச் சிக்கல்களில் தவித்துக் கொண்டிருக்கும் போது, இன்றைக்கு உலக முழுமைக்கும் ஒரு மாற்றாக இந்திய வழிமுறைகள் தெரிய வந்து கொண்டிருக்கின்றன. எத்தனையோ சிரமங்களையும் தாண்டி, உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்குச் சிக்காமல் எப்படி இந்த தேசம் நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்று பலரும் வியக்கின்றனர். அதனால் அண்மைக் காலமாக மேற்கத்திய பல்கலைக்கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் இங்கு வந்து ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டுள்ளன. அவை அனைத்துமே இந்தியப் பொருளாதார மற்றும் வியாபார முறைகளில் தனித்தன்மைகள் உள்ளதாகவும் அவற்றுக் காரணமாக நமது நாட்டின் சமூக மற்றும் கலாசார முறைகள் எனவும் அறுதியிட்டுக் கூறுகின்றன.

பொருளாதார நிபுணர் குமரப்பா கூறிய வார்த்தைகளின் உண்மையை நாம் மீண்டும் ஒரு முறை உணர வேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய வீழ்ச்சிக்கு அவர்களின் வலுவற்ற அடிப்படையே காரணம் என்பது உறுதியாகிறது. தனி நபர் கலாசாரம் என்ற பெயரில் அவர்கள் குடும்பம், சமூகம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை அழிக்கத் துணிந்து விட்டது பெரும் சிக்கல்களை உண்டாக்கி உள்ளது.  அதனால் உறவுகள் சிதைந்து சமூகத்தில் நுகர்வுக் கலாசாரம் பெருகி சேமிப்புகள் குறைந்து பொருளாதாரனகளே  தள்ளாடிக் கொண்டுள்ளன.

இந்தியா குடும்பங்களையும் சமூகங்களையும் இன்றளவும் பெரிதும் மையப்படுத்தி வாழ்ந்து வருகிறது. அதனால் பல்வேறு தாக்கங்களையும் தாண்டி பெரியவர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதையும், சமூகங்களில் பொது நியதிகளும் இருந்து வருகின்றன. எனவே குடும்ப அளவில் உறவுகள் நிலவி முன்னேற்றங்கள் ஏற்பட்டு, அவை தேச அளவில் வளர்ச்சியாக உருவெடுத்து வருகின்றன. அதனால் நமது பொருளாதாரமும் உலக அளவில் முன்னேறி வருகின்றது. எனவே  நமது பொருளாதாரத்தின் அடிப்படையாக  இந்தியாவின் உயர்தரக் கலாசார நெறிகளே இன்றளவும் இருந்து வருகின்றன. அதை உணர்ந்து காப்பாற்றிச் சிறப்பிக்க வேண்டியது நமது அவசியமான பணியாகும். 

( ஓம் சக்தி தீபாவளி சிறப்பிதழ், நவ.2013 )