சரக்கு மற்றும் சேவை வரி ( ஜி.எஸ்.டி) சீர்திருத்தம் மோடி அரசின் மிகப் பெரிய சாதனை


கடந்த பல வருடங்களாகத் தீர்வு காணவே முடியாத பிரச்னையாக இருந்த ஒரு மிக முக்கியமான பொருளாதாரச்  சீர்திருத்தம்  மோடி அரசின் பக்குவமான அணுகுமுறையால் தற்போது நடைமுறைக்கு வரவுள்ளது. பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்று சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவைக் கையில் எடுத்துக் கொண்ட பின்னர், அதைத் தடுக்க காங்கிரஸ் கட்சி அத்தனை தந்திரங்களையும்  மேற்கொண்டது. அதற்குச் சில எதிர்க் கட்சிகளும் துணை போயின. ஆனால் மத்திய அரசின் உறுதியான    அணுகுமுறையால் இப்போது அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறி, சட்டமாகும் நிலையில் உள்ளது.

இது சுதந்திரத்துக்கு அப்புறம் மறைமுக வரித் துறையில் நிகழ்ந்துள்ள மிகப் பெரிய சீர்திருத்தமாகும். நமது தேசம் பல மாநிலங்களையும், வெவ்வேறு வகையான இயற்கை வளங்கள் மற்றும் தொழில்களையும் கொண்டது. எனவே பொருள்கள்  மற்றும் சேவைகள் சம்பந்தமான  பரிமாற்றம் என்பது மாநிலங்களிடையே தினந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் வரி விதிப்புகள்  பற்றிய விசயங்களில் இன்னமும் மாநிலங்களுக்கிடையே நிறைய  வித்தியாசங்கள் நிலவி வருகின்றன.

அதனால் நாடு முழுவதும் வரிகள் சீராக இல்லை. எனவே சில துறைகளில் வரிக்கு மேல் வரி எனப் போட்டு, பொருட்களின் விலைகள் அதிகமாகின்றன. மாநிலங்களில் நிலவும் வெவ்வேறு விதமான வரி வித்தியாசங்கள், வரிகளை  ஏய்ப்பவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றன.  மேலும் நாடு முழுவதும் சீரான வரிக் கொள்கை  இல்லாததால் தொழில் செய்பவர்களுக்கு   நிறைய சிரமங்கள் ஏற்படுகின்றன.  

முன்னேறிய நாடுகள் பலவும் சீரான வரிக் கொள்கையைக்  கடைப்பிடித்து வருகின்றன.  எனவே நமது பொருளாதாரம் வளர்ந்து, சந்தைகள் விரிவாகும் இந்தச் சமயத்தில் சரக்கு மற்றும் சேவைகளுக்கான சீர்திருத்தம் அவசியமாகிறது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரித்து, மத்திய மாநில அரசுகள் வரி வசூலிப்பதற்கான அடிப்படை அதிகரிக்கப்படும். வரிக்கு மேல் வரி ஏற்றுவது தடுக்கப்படும். அதனால் வரி ஏய்ப்பது நிறுத்தப்பட்டு, தொழில் செய்வது எளிமையாகும். நாடு முழுவது வரி ஒரே அளவாக அமையும்.

அதனால் மத்திய மாநில அரசுகள் தற்போது விதித்து வரும் வெவ்வேறு வரிகள் இல்லாமல் போகும். மத்திய அரசின் உற்பத்தி வரி, சேவை வரி, சுங்கம் சம்பந்தமான கூடுதல் வரிகள் உள்ளிட்டவை நீக்கப்படும். மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி, நுழைவு வரி, பொழுது போக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி உள்ளிட்ட வரிகள் இனி இருக்காது. அதன் மூலம் தேவையில்லாத சிரமங்கள் நீக்கப்பட்டு, வரிச் சுமைகளும், வரிகள் பற்றிய பிரச்னைகளும் குறையும்.

மேற்படி வரிகள் சம்பந்தமாக மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைக் களைய ஆணையம் அமைக்கப்படும். அது கூட்டாட்சித் தத்துவ  முறையில் செயல்படும்.  இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதால் ஆரம்ப காலங்களில் சில மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளைச் சரி செய்யத் தேவையான  உதவிகள் செய்து தரப்படும் என மத்திய அரசு  உறுதியளித்துள்ளது.


மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க் கட்சிகள் தெரிவித்த நடைமுறைக்குச் சாத்தியமான பல்வேறு கருத்துக்களும் மசோதாவில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் நேரில் சந்தித்து விளக்கமளித்தனர். அதன் பலனாகத் தான் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இறுதியில் ஒரு மனதாக மசோதா நிறைவேறத் தங்களின்  ஆதரவை அளித்துள்ளன. இதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாற்றத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இதன் தாக்கம் எதிர் வரும்  பல காலங்களுக்கு  அடிப்படையான ஒன்றாக  அமையும்.