சுவாமி விவேகானந்தருடைய பொருளாதாரக் கருத்துக்களின் இன்றைய அவசியம்


சுவாமி விவேகானந்தர் பன்முகத் திறமைகள் கொண்டவர் என்பது அவரைப் பற்றி நன்றாக அறிந்த அனைவருக்கும் தெரியும். ஒரு புனிதமான  துறவியாக, மகத்தான தேச பக்தராக, மிகச் சிறந்த சிந்தனையாளராக, உயர்ந்த கலாசாரத் தூதுவராக, ஏழைகளுக்கும், நலிவடைந்தவர்களுக்கும் ஓயாது குரல் கொடுத்த சமதர்ம வாதியாக, தலை சிறந்த நிறுவன அமைப்பாளராக, நிர்வாகத் திறமைகள் மிகுந்த தலைவனாக, மனித அவலங்களுக்கு எதிராய் அறைகூவல்  கொடுத்த  சீர்திருத்த வாதியாக,  தீர்க்க தரிசியாக வாழ்ந்து காட்டியவர் அவர்.

அதே சமயம் அவரைப் பற்றி விபரமாகத் தெரிந்தவர்கள் கூட முழுமையாக உணர்ந்து கொள்ளாத சில அம்சங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமானது பொருளாதாரம் குறித்த அவரது கருத்துகளாகும். அவரது பொருளாதாரக் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் தனித் தன்மை வாய்ந்ந்தவை. காலத்தை மீறிய தாக்கத்தைக் கொண்டவை. மக்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் அமையப் பெற்றவை.  

சுவாமி விவேகானந்தர் அக்காலத்திய பிரபலமான சர்வதேச பொருளாதர நிபுணர்கள் பலரின் கோட்பாடுகளை நன்கு படித்திருந்தார். நவீனப் பொருளாதாரத்தில் நுணுக்கமான விசயங்களைப் பற்றி நிபுணர்களிடத்தில் எடுத்துச் சொல்லும் அளவுக்கு அவருக்கென்று தனிப்பட்ட சிந்தனைகள் இருந்தன. 1893 ஆம் வருடத்திலேயே அமெரிக்காவில் அறிஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வெள்ளி நாணய முறை பற்றித் தன்னுடைய கருத்துகளை எடுத்து வைத்தார்.

ஆனால் அவர் பெரும்பாலான பொருளாதார வாதிகளைப் போல வசதியான அறைகளில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு கருத்துக்களை உதிர்த்தவர் அல்ல. அவரது காலத்தில் இந்திய நாடு காலனி ஆட்சியின் கீழ் ஒரு அடிமை நாடாக மிகவும் மோசமான கால கட்டத்தில் இருந்தது. இந்திய வரலாற்றின் மிக வேதனையான காலம் என்று அதைச் சொல்ல முடியும். பாரம்பரியமாகச் சிறந்து விளங்கி வந்த  தொழில்களும் வாழ்வாதாரங்களும் ஆங்கில ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டிருந்தன. நாட்டின் பல பகுதிகளில் பசியும் பட்டினியும் மக்களை வாட்டிக் கொண்டிருந்தன. 1875 முதல் 1900 வரை மட்டும்  நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட பெரும் பஞ்சங்கள் ஏற்பட்டிருந்தன. 
 
அந்த சமயத்தில்தான் சுவாமிகள் நாடு முழுவதும்  பயணம் மேற்கொண்டார். அப்போது விவசாயி, தொழிலாளி, அரச குடும்பத்தவர், சாமானியர் எனப் பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை நேரில்  கேட்டறிகிறார். பின் வந்த காலங்களில் பல வெளிநாடுகளுக்குச் சென்ற போது அங்கு நிலவிய  சமூக, பொருளாதாரத் தன்மைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்கிறார். பரவலான அந்த நேரடி அனுபவங்கள் மூலம் தனது புத்தி கூர்மையைக் கொண்டு பொருளாதாரம் குறித்த பார்வையை விசாலமாக்கிக் கொள்கிறார். .

மேலும் இந்தியா மற்றும் பிற நாடுகளின் கலாசார, பண்பாட்டு வாழ்க்கை முறைகள் மற்றும் வரலாறுகள் குறித்த அவரின் ஆழ்ந்த அறிவின் மூலம்   பொருளாதாரம் குறித்து ஒரு மிகத் தெளிவான பார்வையை வகுத்துக் கொள்கிறார். எனவே அவரது பொருளாதார சிந்தனைகள் ஒட்டு மொத்த முன்னேற்றம்,  தேச நோக்கில் வளர்ச்சி, அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் நோக்கு, உயர் நெறிகள் ஆகியவற்றை மையமாக வைத்து அமைந்துள்ளன. அதனால் அவை இன்றைக்கும் பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் உள்ளன.

பொதுவாக ஆன்மிகத் தலைவர்கள் பொருளாதாரம் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால் சுவாமி விவேகானந்தர் பொருளாதார முன்னேற்றமே வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளுக்கும் அடிப்படையானது என எடுத்துச் சொன்னார். மேலும் பொருளாதாரத்தின் வெவ்வேறு துறைகளைப் பற்றியும் தெளிவான கருத்துக்களை முன் வைத்தார்.

பசிப்பிணி ஒழிய வேண்டும்; உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளான கல்வி, முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஆகியன  அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; அவற்றைப் பூர்த்தி செய்வது தான் மற்ற எல்லாவற்றையும் விட தேசத்துக்கு அத்தியாவசியாமான குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்திச் சொன்னார். அவர் அன்று சொன்ன வார்த்தைகள் என்றைக்கும் பொருந்தக் கூடியவையாகும்.

ஏனெனில் வறுமையைப் போக்கி அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத எந்தப் பொருளாதார சிந்தனை முறையும் அறம் சார்ந்ததல்ல.  அறமில்லாத எந்தவொரு முறையும் நிரந்தரமாக இருக்க முடியாது என்பதை  உலக வரலாறு எடுத்துக் காட்டுகிறது. 1980 களின் இறுதியில் சோவியத் ரஷ்யாவில் கம்யூனிச சித்தாந்தம் தோல்வியடைந்தது அதன் பின்னர் சந்தைப் பொருளாதாரக் கருத்துக்களே உலக முழுமைக்கும் பொருத்தமானது என அமெரிக்கா மற்றும் அதே வித  சிந்தனையைக் கொண்ட  நாடுகள் அறிவித்தன. 

 ஆனால் அண்மைக் காலமாக மேற்கத்திய சந்தைப் பொருளாதார முறைகள் அவர்களின் நாடுகளிலேயே பெரும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. மேலும் உலகின் பிற பகுதிகளிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பு, முறையில்லாத வளர்ச்சி, பெரும்பான்மை மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் செயல்பாடுகள், சுற்றுச் சூழல் சீரழிவு என்பதெல்லாம் அவர்கள் சித்தாந்தத்தின் வெளிப்பாடு என்பது தெளிவாகி வருகிறது.

மேற்கு நாடுகளின் பொருளாதாரத்துக்கு சரியான ஆதாரமில்லை எனவும் அதனால் அவர்களின் வளர்ச்சி நிலைத்த தன்மையுடையது அல்ல எனவும் சுவாமி விவேகானந்தர் அப்போதே அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அவர்களின் வாழ்க்கை முறையில் ஆன்மிகமும் உயர் நெறிகளும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். நூறு வருடங்களுக்கு மேலான பின்னர் அந்தக் கருத்துகளின் ஆழத்தை இப்போது தான் அவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். அவற்றை அந்நாட்டு சிந்தனையாளர்கள் நினைவு படுத்துகின்றனர்.  
 
மேலும் பொருளாதார முன்னேற்றம் என்பது ஏழைகளின் குடிசைகளிலிருந்தும் நலிவடைந்தவர்களின் வாழ்விலிருந்தும் வர வேண்டும் என அவர் எடுத்துச் சொன்னார். ஏனெனில் குறிப்பிட்ட சில பிரிவினர் மட்டுமே வசதியைப் பெருக்கும் முறை அனைவருக்கும் பயனளிப்பதாக அமையாது. அது சமூகத்துக்கும் கெடுதலாக அமையும். எனவே வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும்.  அதைத் தான் இப்போது பொருளாதார நிபுணர்கள்  ’உள்ளடிக்கிய வளர்ச்சி’ ( inclusive growth)  என்று சொல்கின்றனர்.

இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் அவர் சரியான கருத்துக்களைக் கொண்டிருந்தார். இந்திய நாடு தொன்மைக் காலம் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலகில் சிறப்பாக விளங்கி வந்ததையும் அந்நிய ஆட்சியாளர்களால் சிதைக்கப்பட்டதையும் அவர் தெளிவாக அறிந்திருந்தார். எனவே இந்தியப் பொருளாதாரத்தைச் சொந்த முயற்சிகள் மூலமே சீரமைக்க வேண்டும் என விரும்பினார்.

அதற்காகப் பல விசயங்கள் குறித்தும் சிந்தித்துத் தனது கருத்துகளை எடுத்து வைத்தார். விவசாயத் துறையைப் பொருத்த வரையில் இந்தியா பல அனுகூலங்களைப் பெற்ற நாடு. பாரம்பரியாகவே விவசாயத்தில் மிகச் செழிப்பாக விளங்கி வந்த பகுதி. இயற்கை அமைப்பு, தட்ப வெட்பம், உழைக்கும் மக்கள், பாரம்பரியம் ஆகியன எல்லாம் நமக்கான சிறப்புகள். ஆனால் ஆங்கிலேயர்கள் விவசாயத்தைப் பெருமளவு சீரழித்திருந்தனர்.

எனவே பொருளாதாரத்தில் நமது நாட்டுக்கென உள்ள விவசாயம் சார்ந்த தனித்தன்மைகள் குறித்து கூச்சப்பட வேண்டியதில்லை என்பதை எடுத்துச் சொன்னார். பொருளாதாரம் என்றாலே விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தொழில் துறை மற்றும் சேவைத் துறைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதே சரியான அணுகுமுறை என்பது போன்ற எண்ணம் நவீன பொருளியல் வாதிகளால் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் பல வருடங்களாவே நமது நாட்டில் விவசாயத்துறைக்குப் போதுமான கவனம் கொடுக்கப்படுவதில்லை. எனவே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தங்களின் தொழிலை விட்டு வெளியேறுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

விவசாயத் துறையை ஒதுக்குவதால் ஏற்படப் போகும்  விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் போட்டிகள் நிறைந்த இந்தக் காலத்தில் உணவுத் தேவைகளுக்காக அடுத்த நாடுகளைச் சார்ந்திருப்பது ஆபத்தில் போய் முடியும். மேலும் உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள நமக்குப் போதிய அளவு உணவு தயாரிக்க எந்த நாடும் இல்லை.

தொழில் துறையில் இந்தியா வளர வேண்டும் எனவும்,  அதற்காகக் கல்விக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர்களுக்குத் தொழிற்கல்வி அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் விரும்பினார். மேலை நாட்டுத் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், பல நாடுகளுக்கு ஏற்றுமதிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் பல சமயங்களில் எடுத்துக் கூறினார். கடந்த அறுபது ஆண்டுகளில் இந்தியா முன்னேறி வருவதற்கான காரணம் நமது மக்கள்  தங்களின் கடுமையான உழைப்பினால்  தொழில்களைப் பரவலாக்கியது தான். இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தொழில் மையங்கள் நமது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் நமது கிராமிய மற்றும் கலைத் திறன் நிறைந்த பொருட்கள் மேலை நாடுகளில் விற்கப்பட வேண்டும்; அதன் மூலம் இந்திய கிராமங்களும் சிறு தொழில்களும் வளர வேண்டும் என அவர் விரும்பினார். எனவே நகரத்து இளைஞர்களை அவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். வாரணாசி சேலைகளும் மூங்கில் பொருட்களும் வெளிநாட்டுத் தெருக்களில் விற்க வேண்டும் எனக் கனவு கண்டார்.

அந்தக் கருத்தின் ஆழத்தை  இந்தியக் கலை மற்றும் கிராமியப் பொருட்களுக்கு உலக முழுவதும் இன்றைக்கும் இருக்கும் வரவேற்பைப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும்.  இன்று வெளிநாடுகளின் பல நகரங்களில் நமது துணிகளும், கிராமியப் பொருட்களும் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. ஆனால் இன்னமும் கூட நமது கலை நயமிக்க பல பொருட்களின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளாமலும், அவற்றை முறையாக உற்பத்தி செய்து நமது நகரங்களிலும் வெளி நாடுகளிலும் விற்கப் போதுமான முயற்சிகளை எடுக்காமலும் நாம் இருக்கின்றோம். மேலும் அவற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.  இது உடனடியாகக் கவனம் எடுக்கப்பட வேண்டிய விசயமாகும்.

பிற நாடுகளைச் சாராமல் நாடு முன்னேற்றமடையத் தேவையான  நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும் என சுவாமிகள் வலியுறுத்தினார். 1893 ஆம் வருடம் கப்பலில் அமெரிக்கா செல்லும் போது தொழிலதிபர்  ஜாம்ஜெட்ஷி டாடாவுடன் நடந்த உரையாடலில்  இறக்குமதியைத் தவிர்த்து உள்நாட்டில் உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் நாட்டுக்கு விளையக் கூடிய நன்மைகளை விளக்கியது அவரது கருத்துகளின் ஆழத்தை மட்டுமல்லாமல், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள வேகத்தையும் காண்பிக்கின்றது.

சென்ற வருடத்துக்கு முந்தைய பத்து வருட காலத்தில்  இந்தியப் பொருளாதாரம் அதிக அளவில் வளர்ச்சியைக் கண்டது. அதனால் சராசரி வளர்ச்சி எட்டு விழுக்காடு அளவு இருந்தது. ஆனால் அது சென்ற வருடம் குறைந்து ஐந்து விழுக்காட்டைத் தொட்டது. நடப்பு வருடமும் குறைந்த அளவு வளர்ச்சிதான் இருக்குமெனக் கணிக்கப்படுகிறது. வளர்ச்சி குறைந்ததற்கான முக்கிய காரணமே அளவுக்கதிகமான இறக்குமதியாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இறக்குமதியைக் கட்டுப்படுத்தாமல் உள்நாட்டு உற்பத்தியைத் தவிக்க விட்டதனால் வேகமாக வளர்ந்து வந்த பொருளாதாரம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. 

நமது நாடு தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என நாம் அடிமையாக இருந்த காலத்திலேயே சுவாமி விவேகானந்தர் எடுத்துச் சொன்னார். மேற்கத்திய நாடுகள் கடந்த இருநூறு வருடங்களாக தங்களின் சுய லாபத்திற்காக பிற நாடுகளை மையமாக வைத்தே பொருளாதாரக் கருத்துக்களை அமைத்துக் கொண்டு வருகின்றன. அதற்கேற்றவாறு கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.

அந்த வகையில் 1980 களில் உலக மயமாக்கல் கோட்பாட்டை மையமாக வைத்து உலக முழுவதும்  ஒரே சந்தை எனச் சொன்னார்கள். அதனால் சுலபமாகத் தங்களின் பொருட்களை பிற நாடுகளுக்கு விற்க வழி செய்தனர்.  தொடர்ந்து பிற நாடுகளும்  தமது பொருட்களையும் சேவைகளையும் குறைந்த செலவில் கொடுக்க ஆரம்பித்த பின்னர் அவர்களுக்கே பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே இப்போது உள்நாடு சார்ந்த வளர்ச்சி பற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர்.

பொருளாதாரக்  கோட்பாடுகள், செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் என்றாலே அவை எல்லாம் மேற்கத்திய நாடுகள் சம்பந்தப்பட்டவை என்கின்ற எண்ணம்  பரவலாக எல்லோர் மனத்திலும் ஆழமாக உள்ளது. ஆனால் உண்மை என்ன? இந்தியாவுக்கெனப் பல்லாயிரம் ஆண்டு காலப் பொருளாதார வரலாறு உள்ளது.

கடந்த இரண்டாயிரத்துப் பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு, பொது யுக தொடக்க காலத்தில், உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கினைத் தன் வசம் வைத்து இந்தியா மிகப் பெரிய வல்லரசாக விளங்கி வந்தது. அப்போது முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்கும் உலகின் இரு பெரும் செல்வந்த நாடுகளாக இந்தியாவும் சீனாவும் விளங்கி வந்துள்ளன. இந்த உண்மைகளை எல்லாம் ஆங்கஸ் மாடிசன் உள்ளிட்ட வரலாற்றாசிரியர்கள் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளனர்.  

இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைக் காலனிகளாக்கி அவற்றைச் சுரண்டித் தங்களின் பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டன. அவையெல்லாம் உலகப் பொருளாதார வரைபடத்திலேயே பதினாறாம் நூற்றாண்டில் தான் எட்டிப் பார்க்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் மேலெழுந்து வந்த போது உலகின் பிற பொருளாதார முறைகளை அழித்தனர். அதனால் தொன்மையான பொருளாதாரமான இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் இயற்கையான செயல்முறைகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தொடர்ந்து அவர்கள் தங்களை முதன்மைப் படுத்தி வரலாற்றைத் திரித்து எழுதினர்.

அதனால் அவர்களின் பொருளாதாரச் சிந்தனைகளும் செயல் முறைகளுமே உலக முழுமைக்கும் பொதுவானதாக ஆக்கப்பட்டது. எனவே அங்கு நிலவிய சூழ்நிலையை வைத்து அவர்களால் உருவாக்கப்பட்ட முதலாளித்துவமும் சோசலிமுமே உலகின் இரு பெரும் பொருளாதார சித்தாந்தங்களாக உருவாகின. பின்னர் இருபதாம் நூற்றாண்டில் உலகின் முதல் நிலைப்  பொருளாதாரமாக அமெரிக்கா தலையெடுத்த பின்னர், அவர்களின் கருத்துக்களும்  கோட்பாடுகளும் முக்கியத்துவம் பெற்றன.

எனவே நமது நாட்டிலும் பெரும்பான்மையான அறிவு ஜீவிகள் மற்றும் மெத்தப் படித்த மேதாவிகள் வெளிநாட்டுக் கருத்துக்களையும் வழிமுறைகளையுமே சரியென நம்புகின்றனர். இந்தியாவின் பொருளாதார வரலாறு மற்றும் சிறப்பான செயல்பாடுகள் பற்றி அவர்களுக்குத்  தெரிவதில்லை. ஆகையால் சுதந்தரத்துக்குப் பின்னரும் மேற்கத்திய சித்தாந்தங்களை ஒட்டியே தொடர்ந்து பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

1950 கள் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு மேல் சோசலிச சித்தாந்தமே அரசின் கொள்கைகளுக்கு ஆதாரமாக இருந்தது. பின்னர் அந்தக் கோட்பாடு உலக அளவில் பெரும் தோல்வியைத் தழுவியது. நமது நாட்டுப் பொருளாதாரத்திலும் சிக்கல்கள் எழுந்தன. அதன் பின்னர் உலக மயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரக் கருத்துக்களை ஒட்டிக் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதனால் கடுமையான விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. அடிப்படைத் தொழில்களான விவசாயம், சிறு தொழில்கள் ஆகியன பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளன. ஒரு பக்கம் நுகர்வுக் கலாசாரம் அதிகரித்து இன்னொரு பக்கம்  வேலையின்மையும்  வறுமையும் நிலவி வருகிறது.

2008 ஆம் வருடத்தில் உலகப் பொருளாதாரத்தில் பெரிய  நெருக்கடி ஏற்பட்டது. அதனால் மேற்கத்திய மற்றும் பணக்கார நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இன்னமும் முழுமையாக மீண்டு வர முடியவில்லை. மீள்வதற்கான சரியான வழிகளும் அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே அவர்களின் பொருளாதாரச் சிந்தனைகள் தோல்வியடைந்து விட்டதாக அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

ஆனால் இந்த சமயத்திலும் இந்தியப் பொருளாதாரம் உலக அளவில்  வலுவான அடிப்படைகளுடன் உள்ளது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி அரசின் அணுகுமுறைகளை மீறியதாக உள்ளது என நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். தவறான கொள்கைகள், மேல் மட்டத்தில் குழப்பங்கள் எனப் பல பிரச்னைகளையும் மீறி பொருளாதாரம் செயல்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் நமது மக்களின் கடின உழைப்பு, அதிக சேமிப்புகள், குடும்ப அமைப்பு முறை, வளர்ச்சிக்கு ஏதுவான பழக்க வழக்கங்கள் மற்றும் அவற்றையெல்லாம் தாங்கிப் பிடிக்கும் நாட்டின் சமூக கலாசார அடிப்படைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாடு அதிக வளர்ச்சியடைந்து போதிய  முன்னேற்றம் பெறுவதற்குத் தேவையான வளங்களும் வாய்ப்புகளும் நம்மிடமே நிறைந்துள்ளன. அப்படியிருந்தும் நாம் முக்கிய பிரச்னைகளைக் கூடத் தீர்க்க இயலாமல் இருப்பதற்குக் காரணம் நாட்டுக்குப் பொருத்தமான கொள்கைகளை தேசத்தின் அடிப்படையில் வகுத்துக் கொள்ள முனையாமல் இருப்பது தான். அதைத் தான் சுவாமி விவேகானந்தர், “ எனது இலட்சியம் தேச நோக்கில் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் முன்னேற்றம்” என்று சொன்னார்.

சுவாமி அவர்களின் கருத்தை அண்மைக் காலமாக உலக முழுவதும் நிகழ்ந்து வரும்  மாற்றங்கள் உறுதிப்படுத்துகின்றன. நமது நாட்டுக்குள்ள வளங்களையும் அடிப்படைகளையும் கொண்டு நம்மால்  அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பெரிய வளர்ச்சியைக் காண முடியும். மேலும் உலகின் பிற நாடுகளுக்கும் சரியான வழிமுறைகளைக் காட்ட இயலும்.

எனவே சுவாமிகளின் கருத்துகள் முன்பை விடவும் இப்போது அவசியமாகின்றன. அதன்படி தேச நோக்கில் நமக்குத் தேவையான கொள்கைகளையும் செயல்பாடுகளையும் வகுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும் போது சுவாமி விவேகானந்தர் விரும்பிய படி பாரத தேவி  அரியாசனத்தில் அமர்ந்து உலகுக்கு வழி காட்டும் நிலையை நம்மால் உருவாக்க இயலும்.

( ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் சிறப்பிதழ், ஸ்ரீ இராமகிருஷ்ணா மடம், சென்னை, டிச.2013 )