கலாசாரம் என்பது பாரம்பரியம், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்,
விழுமியங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டது. அதனால் சமூகங்களில் காலங்காலமாக தொடர்ந்து மக்களின் வாழ்க்கையுடன்
பின்னிப் பிணைந்து வருவது.
ஆனால் அதற்கும் அறிவியல்
மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட அறிவு சார் துறைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று நமக்குத்
தோன்றும். ஏனெனில் அறிவு சார் துறைகள் என்பவை உலகம் முழுவதும் நாள் தோறும் மாறி வரும் புதிய சிந்தனைகளால் செம்மைப்படுத்தப்படுபவை.
கடந்த இரு நூறு ஆண்டுகளில் அறிவு சார் துறைகளின் மாற்றங்கள்
மிகப் பெருமளவு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்வி, பொருளாதாரம்
என்று தொடங்கி புதிய கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட மருத்துவம், அறிவியல் தொழில் நுட்பம்
வரையில் பலவற்றிலும் அந்த நாடுகளின் தாக்கங்களே அதிகமாக உள்ளன.
அப்படி இருக்கும் போது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பாரம்பரியத்தையும்
பண்டிகைகளையும் விடாமல் இறுகக் கடைப்பிடித்து வரும் இந்திய தேசத்தில், அறிவு சார் துறைகள் எவ்வாறு வெற்றிகரமாகச் செயல்பட
முடியும் என்று கேள்வி எழலாம். ஏனெனில் மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியே பாரம்பரியத்தை
அழித்து நவீன சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்டது என்று தான் பெருமையாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் உலக அளவில் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மனித
வளம், மேலாண்மை மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட துறைகளில் நடந்து வரும் ஆய்வுகள்
அவற்றின் போக்கில் கலாசாரத்தின் பங்கு வெகுவாக இருப்பதை உணர்த்துகின்றன. மேற்கத்திய நாடுகளின் நிர்வாகிகளிடத்தில் தனிநபர் சார்ந்த ஆளுமை
அதிகமாக இருக்கும் போது, ஆசிய நாடுகளின் நிர்வாகிகளிடத்தில் அரவணைக்கும் போக்கு நிறைந்திருப்பதை
அவை சுட்டிக் காட்டுகின்றன.
அமெரிக்கா இங்கிலாந்து
உள்ளிட்ட பல மேற்கு நாடுகளில் சேமிப்புகள்
மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களின் பழக்க வழக்கங்களே காரணம் என்பது அவர்களுக்குப்
புரியத் துவங்கியுள்ளது. அதே போல் இந்தியா சீனா ஆகிய நாடுகளில் மிக அதிகமாக மக்கள்
சேமிப்புகளை மேற்கொள்வதற்கும் கீழை நாடுகளின் கலாசாரத் தாக்கமே அடிப்படையாக உள்ளது
என்பதும் இப்போது தெளிவாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் புகழ் பெற்ற
கெல்லாக் பல்கலைக் கழகத்தின் மேலாண்மைப் பேராசிரியர்கள் நமது நாட்டில் நடைமுறையில் நிலவும் தலைமைப் பண்புகள் பற்றி ஒரு
ஆய்வினை மேற்கொண்டார்கள். அதற்காக இந்தியாவின்
மிகப் பெரிய தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைப் பார்த்துப் பேசி அவர்களின் செயல்பாடுகள் குறித்துப் படித்தனர்.
அந்த ஆய்வுகளின் முடிவில் இந்திய நிர்வாகிகளின் தலைமைப் பண்புகள்
உலக அளவில் மிகவும் தனித் தன்மைகள் பெற்று சிறப்பாக விளங்குவதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட
மேற்கத்திய நாடுகள் அவை குறித்து இந்தியாவிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்
என்றும் அறிவித்தனர். அந்தச் சிறப்புகளுக்கெல்லாம் அடிப்படையாக இந்தியாவின் கலாசார
மற்றும் சமூகப் பண்புகளே விளங்குகின்றன என எடுத்துக் கூறினர்.
ஆகவே தொன்மை வாய்ந்த நாடுகளான இந்தியா, சீனா மற்றும் ஜப்பான்
ஆகியவற்றின் கலாசாரப் பண்புகள் மனித வள மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
அதே சமயம் மேற்கத்திய நாடுகள் அங்கெல்லாம்
நிலவி வந்த பாரம்பரியப் பண்பாடுகளை அழித்து விட்டு, குறுகிய நோக்கின் அடிப்படையில் நவீனத்துவம் என்ற பெயரில் மாற்றங்களை ஏற்படுத்தியது தான் அவர்களின் தற்போதைய
சிரமங்களுக்குக் காரணம் என்பதும் தெளிவாகி வருகிறது.
அதே போல அண்மைக் காலமாக அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில்
நுட்பத் துறைகளிலும் இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள்
உலக அளவில் பெரிய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த வழி வகுத்துள்ளன. ஏனெனில் அந்தத் துறைகளில் எல்லாம் மேற்கத்திய நாடுகளே
இது வரைக்கும் வழிகாட்டிகளாகக் கருதப்பட்டு வருகின்றன. அதனால் அவர்களின் வழிமுறைகளே
உலக நாடுகள் அனைத்துக்கும் முன்மாதிரியாகச் சொல்லப்படுகிறது.
உலக அளவில் மேலாண்மைத் துறையில் மிகவும் முக்கியமாக அமெரிக்கப்
பேராசிரியர் பிரகலாத் விளங்கி வந்தார். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். 2005 ஆம் வருடம்
தமிழகத்தைச் சேர்ந்த அர்விந்த கண் மருத்துவ மனை பற்றி ஆய்வு செய்து அவர் எழுதினார்.
அப்போது ஒரு கண் அறுவை சிகிச்சையை அர்விந்த் மருத்துவ மனை அமெரிக்க மருத்துவ மனைகளை
விட அறுபது முதல் எழுபது மடங்கு குறைவான செலவில்
செய்கிறது என்னும் உண்மையை வெளிக் கொணர்ந்தார்.
அப்படியிருந்தும் அந்த
மருத்துவ மனை கடன்கள் எதுவுமில்லாமல் அமெரிக்க மருத்துவ மனைகளை விடவும் இலாபத்தில் இயங்குகிறது
எனவும் தெரிவித்தார். அதற்குக் காரணம் இந்திய மருத்துவர்கள் இருக்கின்ற உபகரணங்களை
மிகவும் திறமையாகப் பயன்படுத்தி சிறப்பாகச் செயல்படுவதுதான் எனக் கூறினார்.
பெங்களூரில் ஆரம்பிக்கப்பட்ட நாராயண ஹிருதாலாயா மருத்துவ
மனை இதய சிகிச்சையில் இன்று உலக அளவில் திறம்படச் செயல்படும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
அவர்கள் தான் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில்
குழ்ந்தைகளுக்கு இதய சிகிச்சை செய்கிறார்கள்.
உலகின் பல பகுதிகளிலும் இருந்து வரும் எண்பது நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளின் மிகவும் சிக்கலான பிரச்னைகளைச் சரி செய்கின்றனர்.
நாட்டின் பிற பகுதிகளிலும் வளர்ந்து வரும் அந்த நிறுவனம்,
கர்நாடக மாநிலத்தில் முப்பது இலட்சம் விவசாயிகளுக்கு மாதம் பத்து ரூபாய் பிரீமியத்
தொகைக்கு சுகாதாரப் பாதுகாப்பு அளித்து வருகிறது. அந்த மருத்துவ மனை ஒரு இருதய சிகிச்சைக்கு
சராசரியாக 2000 அமெரிக்க டாலர்கள் வாங்குகிறது. அதுவே அமெரிக்க மருத்துவ மனைகளில்
20000 டாலர்களில் தொடங்கி ஒரு இலட்சம் டாலர்கள் வரை ஆகிறது. எனவே சர்வதேச அளவில் அந்த
மருத்துவ மனை ஒரு முன்னுதாரணமாக அமைந்து வருகிறது.
உலக அளவில் இன்று தொழில் துறையில் ஏற்பட்டு வரும் பலவிதமான கண்டுபிடிப்புகள் இந்தியாவில் உருவாகி வருகின்றன
என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். உதாரணமாக குறைந்த விலையில் கார்களை உற்பத்தி
செய்வது, அலை பேசிச் சேவையில் அமெரிக்கா மற்றும் சீனாவை விடவும் இந்தியாவில் செலவு குறைவாக இருப்பது உள்ளிட்டவை முக்கியமாகப் பேசப்படுகின்றன.
பெரிய நிறுவனங்கள் என்ற அளவில் மட்டுமன்றி சாதாரண நிலைகளிலும்
பல விதமான கண்டுபிடிப்புகள் இங்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருவதை நம்மில் பலரும்
உணர்வதில்லை. நமது ஊடகங்களுக்கு அவற்றை வெளிக் கொணர்வதில் ஆர்வம் இருப்பதில்லை.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் உபயோகப்படுத்தும் சானிட்டரி
நாப்கின்களை மேற்கத்திய பன்னாட்டு கம்பெனிகளே தயாரித்து விற்பனை செய்கின்றன. ஏழைக்
குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அவற்றின்
விலை அதிகமாக உள்ளது. எனவே அவர்கள் அந்த சமயங்களில் மிகவும் சிரமப் படுகின்றனர்.
அவற்றை எப்படிக் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என்று
முயற்சி செய்து அதில் பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஒரு சாதாரணத் தொழில் முனைவோர்.
பள்ளிப்படிப்பைக் கூட முடிக்க இயலாத கிராமத்தில் பிறந்த அவர், மிகக் குறைந்த செலவில்
நாப்கின்களை உருவாக்கும் இயந்திரத்தையும் வடிவமைத்துள்ளார். அதனால் ஏழைப் பெண்களில் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை
ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வாறு நாட்டின் சிறிய கிராமங்கள், தொழில் மையங்கள் எனப் பல இடங்களிலும் கண்டுபிடிப்புகள்
நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. குஜராத்தில் மோர்பி என்று ஒரு நகரம் உள்ளது. 1990 களில்
வெள்ளத்தால் அந்த நகரமே பெருமளவு அழிந்து போனது. ஆனால் இன்று அது உலக அளவில் ஒரு தொழில்
மையமாக உருவாகி உள்ளது.
அங்கு நடை பெற்று வரும் தொழில்களில் முக்கியமான ஒன்று கடிகாரம்
தயாரிப்பது. தற்போது உலகில் அதிக அளவில் கடிகாரம் தயாரிக்கப்படும் இடமாக அது உருவாகி
உள்ளது. நாடு முழுவதும் தெரிந்த அஜாந்தா, சமய் போன்ற பிராண்டு சுவர்க் கட்டிகாரங்கள்
அங்குதான் தயாரிக்கப்படுகின்றன.
அந்தத் தொழில் அங்கு உருவாகக் காரணமே ஒரு சாதாரண மனிதர் தான்.
அவர் தன் வீட்டிலிருந்த ஒரு வெளி நாட்டு கடிகாரத்தைக் கழட்டிப் போடுகிறார். பாகங்களை
ஒன்று சேர்த்து மீண்டும் அந்தக் கடிகாரத்தை அப்படியே கொண்டு வருகிறார். அவருக்கு நம்பிக்கை
பிறக்கிறது. அப்படித் தான் அங்கு கடிகாரத் தொழில் உருவாகிறது. இன்று அங்கு இலட்சக்
கணக்கான கடிகாரங்கள் பலவிதங்களில் தயாராகின்றன.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை நமது
நாட்டில் உண்டாகும் புதிய கண்டுபிடிப்புகளில் முப்பது விழுக்காடு அளவு படிப்பறிவு கூட
இல்லாத சாதாரண மக்களின் மூலமே ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது. சாதாரண மக்களின் கண்டு பிடிப்புகளைப் பல தொழில்
மையங்களில் சுலபமாகப் பார்க்க முடிகிறது.
பதினைந்து வருடங்களுக்கு முன் திருப்பூரைச் சேர்ந்த மூன்றாம்
வகுப்பு வரை மட்டுமே படித்த சுந்தரம் என்ற ஒரு இளைஞர், பன்னாட்டுக் கம்பெனிகள் மட்டுமே
நாடு பூராவும் விற்று வந்த விலை அதிகமான ஒரு இயந்திரத்துக்குப் பதிலாக மூன்றில் ஒரு
பங்கு விலையில் புதியதாக ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்புடன்
போட்டி போட முடியாமல் அந்த பன்னாட்டுக் கம்பெனி
நம் நாட்டை விட்டே சென்று விட்டது.
இந்தியர்களின் அசாத்தியமான மூளைக்குக் கிடைத்த அங்கீகாரம்
தான் அண்மையில் நமக்குக் கிடைத்த மங்கள்யான் திட்டத்தின் வெற்றி. உலக அளவில் நான்காவது
நாடாக நாம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வினைத் தொடங்கியுள்ளோம். பிற நாடுகள் எல்லாம் பல
முறை தோல்வி அடைந்த பின்னரே தமது முயற்சியில் வெற்றி பெற்றன. ஆனால் நமது நாட்டுக்கு
முதல் முறையிலேயே வெற்றி கிடைத்துள்ளது.
அதில் முக்கியமான விசயம் மங்கள் யான் திட்டத்துக்காக நாம்
செய்த செலவு மற்றெல்லா நாடுகளை விடவும் மிகக் குறைவு. உலகின் பெரிய தொழில் நுட்ப நாடாகக்
கருதப்படும் அமெரிக்காவை விடவும் ஏறத்தாழ பத்து மடங்கு குறைவு.
இதைத் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு கிலோ
மீட்டர் தூரத்துக்கு ஏழு ரூபாய் என்கின்ற செலவில் அறுபத்தைந்து கோடி கிலோ மீட்டர் தூரத்துக்கு
எங்களது விஞ்ஞானிகள் மங்கள் யானை விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர் எனப் பெருமையுடன் அமெரிக்காவில்
குறிப்பிட்டார். அது ஆமதாபாத்தில் ஆட்டோவில் பிரயாணம் செய்யக் கொடுக்கப்படும் கிலோ
மீட்டருக்குப் பத்து ரூபாய் என்பதை விடவும் குறைவு எனவும் தெளிவு படுத்தினார்.
இத்தனைக்கும் அந்த மகத்தான சாதனையில் ஈடுபட்ட பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள்
வெளி நாடுகளில் படித்தவர்கள் இல்லை. அவர்களில் நாட்டு அளவில் பிரபலமான இந்தியத் தொழில்
நுட்ப நிறுவனங்கள் ( ஐ.ஐ.டி) மற்றும் மண்டல பொறியியல் நிறுவனங்களில் படித்தவர்களே கூட
வெறும் இரண்டு விழுக்காடு பேர்கள் தான். மற்றவர்கள் அனைவரும் நாட்டின் சாதாரணக் கல்லூரிகளில்
படித்தவர்கள்.
பல்வேறு நிலைகளில் நாட்டின் பல பகுதிகளிலும் நடை பெற்று வரும்
புதிய முயற்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எல்லாவற்றுக்குமே ஒரு அடிப்படையான தன்மை
ஆதாரமாக உள்ளது. அது முடிந்த வரைக்கும் மிகக் குறைவான செலவில் கண்டுபிடிப்புகளை உருவாக்குவது
மற்றும் பொருட்களைத் தயாரிப்பது என்பது தான்.
இதை மேனாட்டவர்கள் ’சிக்கனக் கண்டுபிடிப்புகள்’ என்கிறார்கள்.
அவர்களின் கண்டுபிடிப்புகள் எல்லாவும் பெரிய அளவில் அதிகமாகச் செலவு செய்து நடத்தப்படுபவை.
அதனால்தான் அதற்கான விலைகளும் அதிகம். எனவே தான் மருத்துவத்
துறை மிக அதிகமாக வளர்ந்ததாகக் கருதப்படும்
அமெரிக்காவில் சாதாரண மக்களுக்கான சிகிச்சைகளைத் தர முடிவதில்லை. இத்தனைக்கும் மருத்துவத்
துறையில் இது வரைக்கும் நோபெல் பரிசுகளை அதிகம் பெற்றவர்கள் அவர்கள் தான்.
இந்தியர்களின் முயற்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளில் செலவுகள்
குறைவாகவே இருப்பதால் அவை சாதாரண மக்களுக்குக் குறைந்த விலைகளில் கிடைக்கிறது. அதனால்
உலகம் முழுவதுமே அவற்றுக்கான வாய்ப்புகள் பெருகி வருகிறது.
இதற்கெல்லாம் காரணம் ‘ சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்று நமது
முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த தாரக மந்திரம் தான். மேலும் நமது கலாசாரப் பண்புகளான
கடின உழைப்பு, எளிமையான வாழ்க்கை, எதிர்பார்ப்புகள் குறைந்த மனநிலை, பிறருக்காக வாழும் தன்மை ஆகியவை
எல்லாம் நமது மக்களின் பல்வேறு முயற்சிகளுக்குக்
காரணங்களாக அமைகின்றன. கூடவே இந்தியர்களுக்கு இயற்கையாகவே அமைந்த ‘ சொந்த மூளை’யும்
ஒரு காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மங்கள்யான் திட்டம் செவ்வாய் கோளின் சுற்று வட்டப் பாதையில்
வெற்றிகரமாகச் செலுத்தப் பட்ட உடனே பெங்களூர்
ஆய்வு மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் மற்றும்
பொறியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வெற்றிக் களிப்பில் மிதந்தனர். அப்போது அவர்கள்
தங்களின் மகிழ்ச்சியினை சக நண்பர்களிடம் தெரிவித்துக் கொண்டனர்.
அது சம்பந்தமாக வந்த புகைப்படங்களில் ஒன்று உலக முழுவதும்
பல பேரின் மனதைக் கவர்ந்தது. அதில் அந்தத் திட்டத்தில் ஈடுபட்ட பெண் வல்லுநர்கள் பாரம்பரிய
இந்திய உடையான பட்டுச் சேலையை அணிந்து, நெற்றியில் குங்குமமும், தலையில் மல்லிகைப்
பூக்களையும் சூடியவாறு ஆனந்தத்துடன் ஒருவரோடுவர் கை கோர்த்து தங்களின் ஆனந்தத்தை வெளிப்படுத்திக்
கொண்டிருந்தனர்.
அந்தப் புகைப்படம் பாரம்பரிய இந்தியப் பண்பாட்டின் தனித்
தன்மையை அப்படியே வெளிப்படுத்துவதாக அமைந்தது. கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட நமது தேசத்தின்
பல்வேறு முயற்சிகள் மற்றும் முன்னேற்றங்கள் ஆகியவை அனைத்துக்கும் நமது உயர்ந்த கலாசார
விழுமியங்கள் அடிப்படையான காரணமாக தொடர்ந்து விளங்கி வருவது வெளிப்படையாகத் தெரிகிறது.
( ஓம் சக்தி தீபாவளி
மலர், நவ.2014)