இந்தியா நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட ஒரு பெரும் பண்பாடு.
இந்தியப் பொருளாதாரமும் மிகப்பெரிய பாரம்பரியத்தையும் பெருமைகளையும் கொண்டது. அந்தப்
பண்பாடு பெரிய வரலாற்றுடன் கம்பீரமாகத் தொடர்ந்து நடை போட்டு வந்ததற்கு அடித்தளமாக அமைந்தது நமது பண்டைய
பொருளாதாரம்.
நமது நாட்டின் விவசாயம் குறித்து சுமார் ஒன்பதாயிரம் ஆண்டுகள்
மற்றும் வணிகம் குறித்து முந்தைய ஐந்தாயிரத்துக்கு
மேற்பட்ட ஆண்டுகள்
சம்பந்தப்பட்ட விபரங்கள் இப்போது நமக்குக் கிடைக்கின்றன. உலகின் முதல் பொருளாதாரப்
புத்தகமான அர்த்தசாஸ்திரம் இங்கு தான் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது. உலகப்
பொருளாதாரம் குறித்து பொது யுகம் தொடங்கி கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான புள்ளி விபரங்கள், பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின்
ஆய்வுகள் மூலம் தற்போது நமக்குக் கிடைக்கிறது.
அதன் மூலம் இன்றிலிருந்து 2018 வருடங்களுக்கு முன்னால் பொது
யுக தொடக்க காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கினை இந்திய தேசம் மட்டுமே
வைத்திருந்தது தெரிய வருகிறது. அதனால் உலகின்
மிகப் பெரிய செல்வந்த நாடாக அப்போது நாம் இருந்தோம். மேலும், பின்னர் தொடர்ந்து வந்த
பதினெட்டு நூற்றாண்டுகளில் மிகப் பெரும்பாலான காலம் நமது நாடுதான் உலகின் தலையாய பொருளாதாரமாக
விளங்கி வந்தது. ஆங்கிலேயர்களின் ஆளுமைக் காலத்தில் தான் அவர்களின் தலையீடுகளால் நமது
பொருளாதாரம் வீழ்ச்சியைக் கண்டது.
உலக வரலாற்றில் மற்ற எல்லா நாடுகளையும் விட இந்தியா ஒரு மிகச் சிறப்பான செழிப்பையும் பெரிய வரலாற்றுப்
பின்னணியையும் கொண்ட நாடாக விளங்கி வந்துள்ளது. அதற்குக் காரணம் பண்பட்ட நமது நடைமுறைகளாகும்.
பொருளாதார செயல்பாடுகளில் விவசாயத்துக்கும், தொழில் துறைக்கும் அடுத்த படியாக முக்கியத்துவம்
வாய்ந்த துறையாக வணிகம் வைக்கப்பட்டது. அதையொட்டி
கொள்கைகள் வகுக்கப்பட்டு, வணிகத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனால் வியாபாரத்துத்துக்கென்று தனியான மையங்கள் ஐயாயிரம்
வருடங்களுக்கு முன்னரே நமது நாட்டில் செயல்பட்டு வந்துள்ளன. மேலும் வணிகத்துக்கென்றே ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ
போன்ற பல பிரத்யேகமான நகரங்கள் அந்தக் காலத்திலேயே
உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளன. அதனால் உள்நாட்டு வணிகம் மட்டுமன்றி, வெளிநாட்டு
வணிகமும் சிறப்பாக நடந்து வந்துள்ளது. அதனால் இந்தியா அப்போதே உலகில் ஒரு பெரிய ஏற்றுமதி
நாடாக இருந்துள்ளது.
ஐயாயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னரே இந்தியர்கள் உலகின் பல நாடுகளுடனும் வியாபாரம் மூலம் இணைந்து இருந்ததாக பிரபல வணிக வரலாற்றாசிரியர்
அகர்வாலா குறிப்பிடுகிறார். அந்தக் காலம் தொடங்கி
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை ஜவுளி உள்ளிட்ட துறைகளில் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து
நமது நாடு முன்னோடியாக இருந்து வந்ததைப் பல விதமான குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.
இப்போதிருந்து சுமார் 1900 வருடங்களுக்கு முன்னால் ரோமப்
பேரரசில் அமைச்சராக இருந்த பிளினி என்பவர், வணிகம் மூலமே அவர்களின் நாடு இந்தியாவை
நெருங்கி வந்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும் அந்த நாட்டுப் பெண்கள் இந்தியப் பொருட்களான
ஜவுளி உள்ளிட்ட பொருட்களை அதிகமாக விரும்பி வாங்குவதால், அவர்களின் நாட்டின் செல்வம்
இந்தியாவை நோக்கி அளவுக்கு அதிகமாகச் செல்வதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
வணிகத்தை மேம்படுத்த
அப்போதைய அரசுகள் தேவையான பல நடவடிக்கைகளை
எடுத்து வந்துள்ளன. வியாபாரத்துக்கென்றே தனியாகச் செயல்படும் அமைச்சகம் குறித்து அர்த்தசாஸ்திரம் சொல்கிறது.
உள்நாட்டு வணிகத்துக்கெனச் சாலை வசதிகள், நீர் வழிகள், பெரு வழிகள் மற்றும் கட்டமைப்புகளை எல்லாம் அரசுகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
வெளியூர்களுக்குச் சென்று வணிகம் செய்வோருக்காகத் தங்கும் வசதிகள் மற்றும் செல்லும் வழி முழுக்க அவர்களின் பொருட்களுக்கான
பாதுகாப்பு ஆகியவற்றை எல்லாம் அப்போதைய இந்திய
அரசுகள் பொறுப்பேற்று நடத்திக் கொடுத்ததாக
குறிப்புகள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட வசதிகள் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து காலூன்றும்
வரை இருந்து வந்துள்ளன.
ஏற்றுமதியின் முக்கியத்துவம் பற்றி அறிந்திருந்த நமது முன்னோர்கள்
அதற்காகத் தனிக் கவனம் கொடுத்துச் செயல்பட்டனர்.
ஏற்றுமதி குறித்துச் சொல்லும் போது “ இலாபத்தை அதிகரித்து நஷ்டத்தைக் குறைக்கும்
வகையில் இருக்க வேண்டும்” எனப் பண்டைய நூல்கள் சொல்கின்றன. ஏற்றுமதி இறக்குமதிக்கான தனியான அமைச்சகம் பற்றி அர்த்த சாஸ்திரம் குறிப்பிட்டுச்
சொல்கிறது.
தொழில்கள் மற்றும்
வியாபாரம் நல்ல முறையில் நடக்க வேண்டுமானால் அந்தத் துறையில் உள்ளவர்கள் விரும்பிய
படி அவர்களுக்கேற்ற தொழில் அமைப்பு முறைகளை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமைகள் வேண்டும்.
அந்த வகையில் பண்டைய காலத்திலேயே நாம் இப்போது காணக்கூடிய வெவ்வேறு தொழில் அமைப்பு
முறைகள் நடைமுறையில் இருந்து வந்துள்ளன. உலகின் முதல் வேதமான ரிக் வேதம் சில பேர் கூட்டாளிகளாக
இணைந்து தொழில் செய்யும் ’பானி’ என்னும் முறை பற்றிக் குறிப்பிடுகிறது.
இப்போது நாம் பார்க்கக் கூடிய கம்பெனி அமைப்பு முறை நாம்
ஏதோ ஐரோப்பாவில் இருந்து வந்ததாகத் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பண்டைய காலங்களிலேயே ‘ஸ்ரீனி’ என்று அழைக்கப்பட்ட கம்பெனி முறை பற்றி
மகாபாரதம் குறிப்பிடுகிறது. இப்போது கிடைத்துள்ள விபரங்களின் படி, மேற்கண்ட வகையிலான
பானிகள் மற்றும் கம்பெனிகள் குறைந்த பட்சம் 2800 வருடங்களுக்கு முன்னர் தொடங்கிப் பல
நூற்றாண்டுகள் இங்கு வெற்றிகரமாகச் செயல்பட்டு
வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவின் பண்டைய கம்பெனி முறைகள் குறித்து அமெரிக்க நாட்டில்
விக்கிரமாதித்யா என்னும் பல்கலைக் கழகப் பேராசிரியர் பல வருடங்களாக ஆய்வுகளைச் செய்து
வருகிறார். அவரது ஆய்வுகளின் படி ஸ்ரீனி கம்பெனி அமைப்பானது நவீன காலத்திய அமெரிக்க
கம்பெனி அமைப்பினை விடச் சிறப்பானதாகவும், வெளிப்படையானதாகவும், முதலீட்டாளர்களுக்கு
நன்மை பயப்பனதாகவும் இருந்து வந்ததாகக் குறிப்பிடுகிறார்.
2700 வருடங்களுக்கு முன்பே கம்பெனிகள் அதிக எண்ணிக்கையில்
இருந்துள்ளன. பின்னர் மௌரியர் ஆட்சிக் காலத்தில் அவை அதிக அளவில் வளர்ச்சி பெற்றதாகக்
குறிப்புகள் தெரிவிக்கின்றன. நமது வரலாற்றில் பொது யுகம் மூன்று முதல் ஆறாம் நூற்றாண்டுக்கு
இடைப்பட்ட குப்தர்கள் ஆட்சிக் காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. அந்தச் சமயத்தில்
குறைந்தது 150 கம்பெனிகளாவது இருந்து வந்ததாக தெரிகிறது.
தமிழ் நாட்டில் சிறப்பாக
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் செயல்பட்டு வந்ததை பலவிதமான குறிப்புகள் மூலம்
நம்மால் அறிய முடிகிறது. மதுரை ஒரு பெரிய வணிக மையமாக அந்தக் காலத்திலேயே விளங்கி வந்துள்ளது.
சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்கள் மதுரை மற்றும் பூம்புகார் உள்ளிட்ட நகரங்களின்
வணிகம் பற்றிய பல விபரங்களை நமக்கு எடுத்துச் சொல்கின்றன. சங்க காலத்திலேயே சர்வதேச
வணிகத்துக்காகத் தனியான சந்தைகள் தமிழகத்தில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டு வந்ததை நம்மால் அறிய
முடிகிறது.
அந்தக் காலங்களில் வணிகத்துக்கான கட்டமைப்புகள் தமிழ் மண்ணில்
இருந்தது பற்றிக் குறிப்புகள் உள்ளன. ரோமாபுரி நாணயங்கள் அதிக அளவில் இங்கு காணக் கிடப்பது
நமது வெளிநாட்டு வணிகம் பற்றிய சிறப்பினை எடுத்துச் சொல்கிறது. கப்பல் மூலமாகக் கடல்
கடந்து சர்வதேச வணிகத்தில் தமிழர்கள் பல நாடுகளுக்குச்
சென்று வியாபாரம் செய்து வந்துள்ளனர். கப்பலை
வடிவமைத்து அந்தத் துறையில் முன்னணி நாடாக பண்டைய காலந் தொட்டு ஆரம்ப முதலே இந்தியா
சிறப்பாகச் செயல் பட்டு வந்ததுள்ளது.
பொருளாதாரம் மற்றும் வணிகம் குறித்துப் பேசும் போது நாம்
முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம்,
வியாபார விசயங்களில் கூட நமது நாட்டினர் கடைப்பிடித்து வந்த நேர்மையான செயல்பாடுகள்.
நமது பண்டைய நூல்கள் அனைத்துமே பொருளாதாரச் செயல்பாடுகளில் தர்மம் கடைப்பிடிக்கப்பட
வேண்டுமென எடுத்துச் சொல்கின்றன. திருவள்ளுவர்
நேர்மையான முறையில் பொருளைச் சேர்க்க வேண்டும்
என்பது குறித்து ‘ பொருள் செயல் வகை’ என்று ஒரு அதிகாரமே எழுதி உள்ளார். அதில் நேர்மையான
முறையில் சேர்க்கப்படும் செல்வமே நிலைக்கும் என வலியுறுத்துகிறார்.
அர்த்த சாஸ்திரம் வியாபாரத்தைச் செய்யும் போது வியாபாரிகள்
கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும், விலை நிர்ணயம் எவ்வாறு முறைப்படி
செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் சொல்கிறது.
அதையொட்டி அப்போதெல்லாம் தொழில் அமைப்புகள்
தமக்கான நியதிகளை அவைகளே வகுத்துக் கொண்டு செயல்பட்டன. அதன் மூலம்
அவை தவறுகளைக் கண்டபோது தண்டனைகளையும் வழங்கின.
ஸ்ரீனி தர்மம் என்பது கம்பெனி அமைப்புகள் அப்போது தமக்கென
வகுத்துக் கொண்ட விதி முறைகள். அதே போல வெவ்வேறு தொழில் அமைப்புகளும் செயல்பட்டன. தவறுகள்
நடந்த போது அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தன. அதனால் சர்வதேச வணிகர்கள் நமது
நாட்டுக்கு வந்து வியாபாரம் செய்வதை விரும்பினார்கள். இது குறித்து இபான் பட்டுடா உள்ளிட்ட
பல வெளிநாட்டவர்கள் இந்திய வணிகர்களின் நேர்மை குறித்து வியந்து எழுதியுள்ளனர்.
பண்டைய காலந் தொட்டு
நமது வணிக சமூகங்கள் தேர்ச்சி வியாபாரத்தில் பெற்றவையாக இருந்து வந்தன. மேலும் நமது நாட்டில் வணிகம் செய்வதற்கான உதவிகளையும்,
அதே சமயத்தில் தவறுகளைக் கட்டுப்படுத்தி தண்டனை வழங்குவதற்கான நடைமுறைகளையும் அரசுகள்
ஏற்படுத்திக் கொடுத்தன. அதனால் வணிகம் நன்கு நடைபெற்றது. சர்வதேச அளவில் இந்தியா தொடர்ந்து
முன்னணியில் இருந்து வந்தது. எனவே நமது நாட்டுக்குப் பெருமளவு வருமானமாக தங்கமும் வெள்ளியும்
கிடைத்து வந்தன.
வணிக வளர்ச்சிக்கு விவசாயமும் தொழில்களும் பேருதவி புரிந்தன. சிறு மற்றும் நுட்பம்
மிக்க பல விதமான தொழில்கள் சிறந்து விளங்கின.
எனவே வணிகத்திலும் ஒட்டு மொத்த பொருளாதாரத்திலும் உலக அளவில் முதல் நிலை நாடாக
இந்தியா தொடர்ந்து இருந்து வந்தது. ஆகையால் நமக்கென்று ஒரு மிகப் பெரிய வணிகப் பாரம்பரியம் உள்ளது.
அதைப் போற்றிப் பாதுகாப்பது நமது கடமை.