தைத்திரீய உபநிடதம் தமிழ் -- வாழ்த்துரை


திருப்பூர் திருக்கோவில் பக்தர் பேரவையின்  தைத்திரீய உபநிடதம் தமிழ் புத்தக வெளியீடு, விஹாரி வருட புத்தாண்டு, அலகுமலை, திருப்பூர், ஏப்.14, 2019 



வாழ்த்துரை



மதிப்புக்குரிய பேராசிரியர் ஞானபூபதி ஐயா அவர்கள் இந்த வருடமும் இன்னொரு உபநிடதத்துக்கு அவருக்கே உரித்தான அற்புதமான பாணியில்  தமிழில் விளக்கவுரை எழுதியுள்ளார். அதற்காக இந்த வருடம் அவர் தேர்ந்தெடுத்துள்ள உபநிடதம் தைத்திரீய உபநிடதம்.  இது மிக முக்கியமான உபநிடதங்களில் ஒன்று.  மிகவும் தொன்மையானது.  பொது யுக காலத்துக்கு முந்தைய ஆறாம் நூற்றாண்டு காலத்தில், அதாவது இப்போதிருந்து  சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்பாக, எழுதப்பட்டதாகக் கூறப்படும் பெருமையுடையது.

இந்த உபநிடதத்துக்கு சங்கரர் முதல் இராமனுஜர், தயானந்த சரஸ்வதி உள்ளிட்ட ஞானிகள், ஆன்மிகவாதிகள், வெளி நாட்டு சிந்தனையாளர்கள் மற்றும் சின்மயா மிஷன்  போன்ற  அமைப்புகள் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக மொழி பெயர்ப்புகளைச் செய்து தந்துள்ளனர்.  அந்த வரிசையில் ஞானபூபதி ஐயா அவர்கள் இப்போது இந்த மொழி பெயர்ப்பை நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

அவரது இந்த மொழி பெயர்ப்பும் வழக்கம் போல எளிமையான தமிழில் தேவையான விளக்கங்கள் மற்றும் பொருத்தமான  மேற்கோள்களுடன் படிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து அவர் செய்து வரும் இந்த சேவைக்கு தமிழ் மக்களாகிய நாம்   பெரும் கடமைப்பட்டுள்ளோம்.  உலகின் மிக உன்னதமான பொக்கிஷமாகக் கருதப்படும்  உபநிடதங்களை, பெருமை மிக்க நமது தாய் மொழியில் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் படைக்கும் அருமையான பணியினை ஐயா அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். அவரின் இந்தப் பணி மேலும் சிறக்க இறைவன் எல்லா நலன்களையும் அவருக்கு அருளப் பிரார்த்திக்கிறேன்.

 தைத்திரீய உபநிடதம் யஜூர் வேதத்தின் மூன்று அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளது.  இந்த உபநிடத்தின் முதல் அத்தியாயம் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒழுக்க நியதிகளின் அவசியம்,  படிக்கச் சேரும் போது அவர்கள் எடுக்க வேண்டிய உறுதி மொழிகள், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தார்மிகப் பொறுப்புகள், படித்த பின் மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் அவர்கள் பின்பற்ற வேண்டிய தார்மிக நெறிகள் ஆகியவை பற்றிச் சொல்கிறது.  மேலும் ஒவ்வொருவரும் வாழ்நாள் பூராவும் அறிவுத் தேடலுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.    

நமது பண்டைய கல்வி அமைப்பு முறை பண்பட்ட ஆசிரியர்கள் மூலம், ஒழுக்கமும் நேர்மையும் நிறைந்த மாணவர்களை உருவாக்கி அதன் மூலம் அவர்களெல்லாம் உயர்தரமான வாழ்க்கையை வாழ்வதற்குத் தயார் செய்து வந்துள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது. மேலும் நமது கல்வி முறை எவ்வளவு உயர் நிலையில் இருந்தது எனவும், அதனால் பொறுப்பான சமுதாயம் எவ்வாறு உருவாக்கப்பட்டு வந்தது எனவும் தெரிகிறது.

தைத்திரீய உபநிடதத்தின் இரண்டாவது பகுதி பிரம்மனைப் பற்றி எடுத்துச் சொல்கிறது. அது “உண்மை எங்கும் நிறைந்திருப்பது, எல்லையில்லாதது” என பிரம்மனை விவரிக்கிறது. பிரம்மனை உணர்ந்து, அதனை அடைவதன் மூலம் ஆனந்த நிலையை அடைய முடியும் என்பதை எடுத்துச் சொல்கிறது.

உபநிடதத்தின் மூன்றாவது பகுதி வருணனின் மகனான பிர்கு அவரது தந்தையின் வழிகாட்டுதலின் மூலம் எப்படி தொடர்ந்து செய்து வந்த தவ வலிமையின் காரணமாக பிரம்மனை அடைந்தார் என்பதை விவரிக்கிறது. வாழ்வின் உயர்ந்த இலக்கு பிரம்மனை உணர்வதுதான்  என்பது உணர்த்தப்படுகிறது.

மேலும் ஒலியியல், உச்சரிப்பு, மனம், ஆன்மா, புத்தி எனப் பல விசயங்களை இந்த உபநிடதம் எடுத்துச் சொல்கிறது. நுணுக்கமான  சில விசயங்கள் இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக பிரியம், மகிழ்ச்சி மற்றும் பெருமகிழ்ச்சி என்னும் சொற்களுக்கிடையே உள்ள  வித்தியாசங்கள் அருமையாகச் சொல்லப்பட்டுள்ளன.  ஓம் சாந்தி என்று நாம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை ஏன் மூன்று முறை சொல்கிறோம் என்பதை ஐயா நல்ல முறையில் விளக்கியுள்ளார்.

இந்த நூலுக்கு அடிப்படையே ஐயாவின் எளிமையான மொழி பெயர்ப்பும் அதையொட்டிய விளக்கங்களும் தான். இதை நூல் முழுவதும் உணர முடிகிறது. உதாரணமாக, ஆன்மாவைப் பற்றிய ஒரு கருத்தை மூல நூல் முன் வைத்துள்ளது.  அதன் சாரம்சம் என்னவெனில் ஆன்மா இல்லை என ஒருவன் சொன்னால் அது அவனே இல்லை என்றாகிறது;  ஆன்மா உண்டு என்பதை ஒருவன் உணர்ந்து அறிந்தால் அவனை மேன் மக்கள்  சான்றோன் எனச் சொல்லி போற்றுவார்கள்; புத்திக்கு ஆன்மா தான்  ஆதாரம் என்பதாகும்.

மேற்சொல்லப்பட்ட கருத்தை அப்படியே பிரதிபலிக்கக் கூடிய வகையில்   அனைவரும் புரிந்து கொள்ளும்படி ஆசிரியர் பாடலாகக்  கீழ்கண்டவாறு  வடிவமைத்துள்ளார்.

“ ஆன்மாவே இல்லையென்பான் அவனும் இல்லை!
       ஆன்மாவை அறிந்துணர்ந்தால் அவனை மேலோர்
சான்றோனென் றுரைப்பார்கள்! புத்திக்குத்தான்
    தக்கதொரு ஆதாரம் ஆனந்தம்காண்!”

தனது சீரிய அர்ப்பணிப்பால் இந்த நூலை நமக்கு அளித்துள்ள ஆசிரியர் அவர்களுக்கு எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வகையான உபநிடத நூல்கள்  தொடர்ந்து வெளிவர எல்லா உதவிகளையும் செய்து ஊக்கப்படுத்தி வரும் திருப்பூர் விவேகானந்தா பள்ளி செயலாளர் அன்புக்குரிய  ‘எக்ஸ்லான்’ திரு. இராமசாமி அண்ணா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த நூலை வெளியிடும் திருக்கோவில் பக்தர் பேரவை மற்றும் புத்தகம் வரக் காரணமாக இருந்து செயல்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.