ஈஸ்வரம் - முன்னுரை

 

பேரா..கனகசபாபதி

இயக்குநர், இந்திய கலாசார பொருளாதார மையம், கோவை

உறுப்பினர், இந்திய சமூக அறிவியல் ஆய்வு மையம், புது டெல்லி

 

முன்னுரை

 

ஈஸ்வரம் என்னும் இந்தப் புத்தகம் கொங்கு மண்ணில்  நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஒரு லட்சியவாதியின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் வரலாற்றுப் பெட்டகம். ஈஸ்வரன் என்னும் பெயர் கொண்ட அந்த மாமனிதர் ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர்; நம் அனைவராலும் போற்றி வணங்கப்பட வேண்டியவர்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து தன் வாழ்க்கை முழுவதையும் தேச விடுதலைக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும், ஏழைஎளிய மக்களுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டவர். படிப்பில் திறமைசாலியாக விளங்கிய போதும், ஆங்கிலேயரின் அந்நியக் கல்வியை மறுத்து கல்லூரியை விட்டு உறுதியுடன் வெளியேறிவர்.

சுதந்திரத்துக்காகப் பாடுபட தனது திருமண வாழ்க்கையைத் துறந்தவர்; இந்த தேசத்தின் மண்ணை நான் உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் எனச் சொல்லி செருப்பு போடுவதை நிறுத்தியவர். தமது சொந்தச் செலவுகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் இருந்த சொத்துக்களை எல்லாம் விற்று வாழ்க்கை நடத்தியவர். அவர் வறுமையில் வாடியது கண்டு அப்போதைய முதல்வர் காமராஜர்  தமிழ்நாடு கதர் வாரியத் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள வற்புறுத்திய போது, அதையும் வேண்டாமென மறுத்தவர்.

அவர்தான் பவானிசாகர் அணை உருவாக முழுமுதற் காரணமாக இருந்த ஈரோட்டைச் சேர்ந்த திரு எம்.. ஈஸ்வரன் அவர்கள். அதனால் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் நீர் பெற்றன. ஆனால் அவருக்கென ஒரு காணி நிலம் கூட இல்லை.

அவரது வாழ்க்கை முழுவதிலும் தியாகமும்  சேவைகளும் மட்டுமே நிறைந்திருந்தது.  படிக்கும் காலத்திலேயே அவர் காந்திஜி மற்றும் பாரதியாரின் கருத்துக்களால் உந்தப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். பின்னர் அவர்களுடன் நேரடியாகப் பழகி, இருவராலும் நன்கு பாராட்டப்பட்டார்.

பல முறை நாக்பூர், அலிப்பூர் உள்ளிட்ட வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தால் சொல்ல முடியாத கொடுமைகளை எல்லாம் எதிர் கொண்டு, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிப் பிழைத்தார்.  பின்னாட்களில் தமக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்து ஒரு எளிய மனிதராக வாடகை வீட்டில் வாழ்ந்து மறைந்தார்.

அப்படிப்பட்ட உத்தமர் நம் அனைவராலும் கொண்டாடப்பட  வேண்டியவர். ஆனால் அவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பது என்பது மிகவும் வருத்தமளிப்பதாகும். அந்த வகையில் இந்தப் புத்தகம் ஒரு பெரிய குறைபாட்டை இப்போது நிறைவு செய்கிறது.

சிறு வயது முதலே தமது பகுதியில் நிலங்கள் தண்ணீரில்லாமல் காய்ந்து போவது கண்டு வருந்தி, அதற்காக அணை கட்ட வேண்டுமென அவர் கனவு காண்கிறார். பின்னர் தேச விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்.

1946ஆம் ஆண்டில் சென்னை  மாகாண சட்ட மன்றத்துக்கு ஈரோடு தொகுதி சார்பாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், கீழ் பவானி பாசன திட்டத்தை வலியுறுத்தி அப்போதைய முதல்வருக்கு நிபந்தனையுடன் ஆதரவு கொடுக்கிறார். பின்னர் தனது வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனத் தெரிந்ததும் தமது பதவியையே ராஜினாமா செய்கிறார். அதனால் வேறு வழியின்றி அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அப்படி வந்ததுதான் கீழ்பவானி திட்டம். அது அந்த உயர்ந்த மனிதரின் தீர்க்கமான முயற்சியால் உருவானது. 1921 ஆம் ஆண்டு பாரதியார் தான் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சிக்காக கருங்கல்பாளையம் வந்த போது அவரைப் பார்த்துஇந்த மண்ணின் வரமடா நீஎன்று சொன்னது எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள்.

திரு ஈஸ்வரன் ஐயா அவர்களைப் பற்றி கடந்த இரண்டு மாத காலமாகவே சக்ரா திரு ராஜசேகர் அவர்கள் எனக்கு நிறைய விசயங்களைச் சொல்லி வந்தார். கேட்கவே பிரமிப்பாக இருந்தது. அந்த விசயங்களை எல்லாம் தொகுத்து இப்போது எளிமையாக புத்தக வடிவில் அருமையான படங்களுடன் வெளிக் கொணர்ந்துள்ளார். அதற்காக ஐயாவின் உறவுகள், நண்பர்கள் எனப் பலரையும் சந்தித்தும், பல ஆவணங்களைத் திரட்டியும் புத்தகத்தை அமைத்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இந்தப் புத்தகம் அனைவராலும் படிக்கப்பட வேண்டும். கீழ்பவானி பாசனம் சார்ந்த விவசாய குடும்பங்கள் தங்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த ஐயாவின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவரது சீரிய முயற்சியால் தான்  இன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னேற்றம் கண்டு, அதனால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் பொது வாழ்வில் எப்படிப்பட்ட உயர்ந்த மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்துள்ளனர் என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

திரு ஈஸ்வரன் ஐயா அவர்கள் நமக்குக் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். மறைந்தும் நமக்கு உதவிக் கொண்டே இருக்கும் ஒரு அரும் பிறவி.

( ஈஸ்வரம் புத்தகம் முன்னுரை, டிசம்பர் 2020)