சுய சார்பு பாரதமும் திரு தத்தோபந்த் தெங்கடி சிந்தனைகளும்

 


சுய சார்பு பாரதம்என்னும் உயர்ந்த லட்சியத்தை பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சென்ற 2020 ஆம் வருடம் மே மாதம் நாட்டு மக்களின் முன் வைத்தார். அந்த சமயத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகமடைந்து உலக நாடுகளின் பொருளாதாரங்கள் எல்லாம் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருந்தன. நிலைமை கட்டுக்கு மீறித் தங்களின் கைகளை விட்டுப் போவதை உணர்ந்து மேற்கத்திய நாடுகளே தமது அணுகுமுறைகள் முழுவதும் தோற்றுப் போவதைக் கண்முன் கண்டன.

நமது நாட்டைப் பொறுத்த வரை சுய சார்புத் தன்மை என்பது நமக்கு இயற்கையானது. அது பாரதப் பண்பாட்டின் அடி நாதமாக ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக விளங்கி வந்தது. நமது முன்னோர்களுடைய நீண்ட நெடிய அனுபவங்களின் அடிப்படையில், பாரதீய சிந்தனைகளை மையமாக வைத்து உருவானது. அதனால்தான் நமது தேசம் தனித்தன்மைகளுடன் உலக அளவில் பொருளாதாரத்தில் முதன்மை நாடாக விளங்கி வந்தது.

பணக்கார நாடுகளின் அமைப்பானபொருளாதார கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு’ 2001 ஆம் வருடம்உலகப் பொருளாதார வரலாறுஎன்னும் ஆய்வு நூலை வெளியிட்டது. அந்த நூல்  பொது யுகம் தொடங்கி 2000 ஆண்டு வரையிலான இரண்டாயிர வருட காலத்தில் உலக அளவில் பொருளாதாரங்கள் எப்படி இருந்து வந்தன என்று கூறியுள்ளது. பொது யுக தொடக்க காலத்தில், அதாவது இன்றிலிருந்து 2021 வருடங்களுக்கு முன்பு, உலகப் பொருளாதாரத்தில்  மூன்றில் ஒரு பங்கினை நமது தேசம் தன்வசம் வைத்துக் கொண்டிருந்தது என்கின்ற உண்மையை அது எடுத்துச் சொன்னது.

உலகின் மற்ற நாடுகள் எல்லாமே சேர்ந்துதான் மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு பொருளாதார உற்பத்தியைத் தம்மிடம் கொண்டிருந்தன. நமக்கு அடுத்த படியாக சீனா 26 விழுக்காடு பங்களிப்புடன் இரண்டாம் நிலையில் இருந்து வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை உலக அளவில் பாரதமும் சீனாவும் முதலிரண்டு நிலைகளில் இருந்து தொடர்ந்து கோலோச்சி வந்தன. அதிலும் மிகப் பெரும்பாலான காலம் நமது தேசமே முன்னிலையில் இருந்து வந்துள்ளது. ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுடைய திட்டமிட்ட சதிகளால் நமது சுயசார்புத் தன்மை அழிக்கப்பட்டது. அதனால் நமது தேசம் கடும் வீழ்ச்சியைக் கண்டது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய நமது ஆட்சியாளர்கள் தொடர்ந்து மேற்கத்திய கோட்பாடுகளை மட்டுமே தவறாக நம்பி, நடைமுறைப்படுத்தி வந்ததால் நாடு சரியான திசையில் செல்ல முடியவில்லை. அதனால் 1991 ஆம் வருடம் சுதந்திர பாரதத்தின் மிகச் சிறந்த சுதேசி சிந்தனையாளராகவும்,  களப்பணியாளராகவும்  விளங்கி வந்த  மரியாதைக்குரிய திரு.தத்தோபந்த் தெங்கடி அவர்கள் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தை நிறுவினார்.  2004 ஆம் ஆண்டு அவர் அமரராகும் வரை அந்த அமைப்புக்கு வழிகாட்டியாக இருந்தார். அதன் மூலம்  சுதேசி தத்துவம் மற்றும் அணுகுமுறைகளின்  அவசியம் மக்களின் முன்னால் வைக்கப்பட்டது. தெங்கடி ஜி அவர்கள் பரம பூஜனிய ஸ்ரீ குருஜி அவர்களின் ஞான கங்கையில் ஊறித் திளைத்த மகான்.

பதினெட்டுபத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் மேற்கத்திய முதலாளித்துவ மற்றும் கம்யூனிச கோட்பாடுகள் உருவாகின. அவை இரண்டுமே ஐரோப்பாவில் அப்போதைய கால கட்டங்களில் நிலவி வந்த குறுகிய அனுபவங்களை வைத்து புனையப்பட்டவை. ஐரோப்பிய  நாடுகளுக்குப் பெரிய வரலாறோ, சிந்தனை மரபுகளோ கிடையாது. ஆயினும் அவர்கள் உலக நாடுகள் பலவற்றைக் காலனிகளாக்கி ஆட்சி செய்து வந்ததால் அவர்களின் சித்தாந்தங்கள் மக்களின் மேல் திணிக்கப்பட்டன. அவற்றை உலக நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது..

எனவே நாடுகள் பலவுமே இரு பெரும் பொருளாதார சித்தாந்தங்களாக மேற்கத்திய முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் ஆகியவற்றை மட்டுமே நம்பி வந்தன. உலகின் மிக உயர்ந்த பொருளாதார வரலாற்றைப் பெற்றிருந்த நமது நாட்டிலும், அப்போதைய  ஆட்சியாளர்கள் அதை அப்படியே ஏற்றுக் கொண்டனர். மகாத்மா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் தேசிய சிந்தனையாளர்கள் அது குறித்துக் கேள்வி எழுப்பிய போது, அவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  

1960 களில் பாரதிய சிந்தனையாளர்களில் தலை சிறந்தவராகவும்,     ஜன சங்கத்தின் மூத்த  தலைவராகவும்  விளங்கி வந்த திரு தீனதயாள் உபாத்யாயா அவர்கள்ஒருங்கிணைந்த மனித நேயதத்துவத்தை முன் வைத்தார். அதன் மூலம் பாரதப் பாரம்பரியத்தில் பொருளாதாரம் என்பது மனித வாழ்க்கையில் தனியாக பிரித்துப் பார்க்க முடியாத ஒரு அம்சம் எனவும், அது   வாழ்வின் பிற அங்கங்களோடு பின்னிப் பிணைந்தது எனவும் எடுத்துக் கூறினார். அந்த சமயத்தில் அது மிக முக்கியமான கருத்தாகும். ஏனெனில் மேற்கத்திய சித்தாந்தங்கள் இரண்டுமே பொருளாதாரத்தை தனியாக மட்டுமே பார்க்கின்றன. ஆனால் நமது பண்பாட்டில் குடும்பம், கலாசாரம், சமூகம் உள்ளிட்ட பலவும் பொருளாதாரத்தோடு ஒன்றாக இணைந்தது.

தொடர்ந்து திரு தெங்கடி அவர்கள் 1990 களில் முதலாளித்துவ, கம்யூனிச சித்தாந்தங்களுக்கு மாற்றாகமூன்றாவது வழிஎன்கின்ற சிந்தனையை முன் வைத்தார். அது இந்து சனாதன தர்ம சிந்தனைகளின் மேல் உருவான சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கான வழி என எடுத்துச் சொன்னார். மேலும் கம்யூனிசம் தோற்றுப் போய் விட்டது எனவும், முதலாளித்துவம்  கீழ் நோக்கிச் சென்று கொண்டுள்ளது எனவும், அதன் மரணம் தாமதமாகிக் கொண்டு இருப்பதாகவும் அறிவித்தார்.

அவர் அப்போது சொன்னது கடந்த முப்பதாண்டு காலத்தில் உண்மையாகி விட்டது. 2007-08 உலகப் பொருளாதார நெருக்கடி முதலாளித்துவ சித்தாந்தத்தின் அஸ்தமனத்தை உறுதி செய்து விட்டது. எனவே இப்போது மேற்கத்திய சித்தாந்தங்கள் இரண்டுமே தோற்றுப் போய் விட்டதை அந்த நாடுகளே ஏற்றுக் கொண்டு விட்டன. அதனால் ஐக்கிய நாடுகள், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பலவும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான பொருளாதாரக் கோட்பாடுகள் என எதுவும் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்து விட்டன.

இசம்என்பதே அது இரண்டில் எந்த ரகமாக இருந்தாலும், மனிதனின் சிந்தனையை மூட வைத்து விடும் என தீனதயாள்ஜி அவர்கள் சொல்லியிருந்ததை திரு தெங்கடி அவர்கள் சுட்டிக்காட்டி, நமது தேசத்துக்கு அவை இரண்டுமே பொருத்தமில்லாதவை என எடுத்துச் சொன்னார்.  நமக்குப் பொருத்தமான சமூகபொருளாதார முறைகளை மீண்டும் உருவாக்கிக் கொள்ளும் அறிவு நம்மிடத்தில் இருக்கிறது. எனவே அதற்காக மேலை நாட்டு மேதாவிகளின் காலடியில் நாம் உட்கார்ந்து கிடக்க வேண்டிய அவசியமில்லை என அடித்துக் கூறினார்.

மேற்கத்திய சித்தாந்தங்கள் அடிப்படையில் மனிதனை ஒரு பொருளாதார ஜந்துவாக மட்டுமே பார்க்கின்றன; அது இந்துக்களின் ஒருங்கிணைந்த சிந்தனைக்கு எதிரானது என அவர் கூறினார்.  மேலும் தர்மம் என்பது நமது மையப் புள்ளியாக உள்ளது; அதுவே உயிர்களின் நலனை உறுதி செய்வதும் கூட; எனவே நமது ஞானிகள் பொருளாதாரத்தை நான்கு புருஷார்த்தங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகவே கருதினர் என எடுத்துச் சொன்னார்.

நாட்டில் அனைவருக்கும் அடிப்படைத் தேவைகள் அனைத்தும்  கிடைக்க வேண்டும்; ‘ அதிக உற்பத்திசரியான பங்கீடுஎன்பது நமது கொள்கையாக இருக்க வேண்டும்; தேசிய சுய சார்பு என்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமென  திரு தெங்கடி அவர்கள் சுய சார்புத் தன்மை பற்றி விளக்கமளித்தார்.  

சுதேசி என்பது நமது நாட்டின் சாதாரண மக்கள் அனைவரின்  வாழ்க்கையுடனும் ஒன்றிப் போன கருத்து என்றும், ஆனால் அதைப் பெரு நகரங்களில் குளிர் சாதன அறைகளில் உட்கார்ந்து கொண்டுவிசய ஞானம்பெற்றவர்களாகக் கருதிக் கொள்ளும் சிலர்  வித்தியாசமான ஒன்றாகப் பார்க்கின்றனர் என்றும் எடுத்துச் சொன்னார்.

மேலும் சுதேசி என்பதை வெறும் பொருட்கள் மற்றும் சேவைகளோடு மட்டுமே தொடர்புடையதாக கருதுவது தவறு எனக் கூறினார். அது அடிப்படையில் தேசிய சுயசார்பு நிலையை அடைய உறுதி கொண்டுள்ள மனநிலை என்று விளக்கினார். எனவே நமது நாட்டுக்குப் பொறுத்தமான பொருளாதார அணுகு முறைகளை நாமே உருவாக்க வேண்டும் எனக் கூறினார். அதற்கு ஒரு தேசிய உறுதி வேண்டும் என வலியுறுத்தினார்.   

அவர் அப்போது முன் வைத்த கருத்துக்களின் அவசியத்தை இப்போது வரலாறு நமக்கு உறுதிப் படுத்திக் கொண்டுள்ளது. மேற்கத்திய சித்தாந்தங்களும், அணுகுமுறைகளும் தோற்றுப் போய் விட்டன என்பது தெளிவாகி விட்டது. அதே சமயம் நாடுகளுக்குப் பொறுத்தமான வழி முறைகளை அந்தந்த நாடுகளே அமைத்துக் கொள்வது தான் சரி என்கின்ற நிலைமையும் உருவாகி வருகிறது.

ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணியையும், வலுவான அடிப்படைகளையும் பெற்றுள்ள நமது நாட்டுக்கு வெளியிலிருந்து வந்து யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நம்மிடத்திலேயே போதுமான எல்லாமும் இருக்கிறது. நமக்குத் தேவையெல்லாம் நாட்டுக்குப் பொருத்தமான அணுகுமுறைகளை அமைத்து அவற்றையொட்டிச் செயல்படுவது மட்டுமே.  

கடந்த எழுபது வருட கால வரலாற்றை மட்டும் பார்த்தாலே கூட நமது தேசத்தின் அடிப்படைத் தன்மை புரிந்து விடும். சுதந்திரம் பெற்ற போது நாம் பெரிய ஏழை நாடு. சுமார் 45 விழுக்காடு மக்கள்  வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வந்தனர். அப்போது மனிதனின் சராசரி ஆயுள்வெறும் 32 வருடம் மட்டுமே;  கல்வி அறிவு பெற்றவர்கள்வெறும் 18 விழுக்காடு. தொழில் மற்றும் சேவைத் துறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன.  

ஆனால் இப்போது நிலைமை என்ன? நமது நாட்டில்தான் உலகிலேயே அதிகம் பேர் – 8. 5 கோடிஏதாவது ஒரு தொழிலைச் சொந்தமாக செய்து வருகின்றனர். மேலும் உலகின் மிக வேகமாக வளரக் கூடிய பொருளாதாரத்தை நாம் பெற்றிருக்கிறோம். உலகிலுள்ள முன்னணி ஆய்வு நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள் எனப்பலவும் மிகப் பிரகாசமான எதிர்காலம் நிறைந்த நாடாக கணிப்பது நமது நாட்டைத் தான். கூடவே இன்றைக்குச் சர்வதேச அளவில் மிகுந்த மரியாதையைப் பெற்றுள்ள நாடு நமது தான்.

உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும் ஒரு எழுபது வருட காலத்தில் இவ்வளவு பெரிய மாற்றத்தைக் கண்டதில்லை. மிக மோசமான நிலையிலிருந்து மிக வாய்ப்புகள் பெற்ற நாடாக ஒரு குறுகிய காலத்தில் மாறியிருப்பது நமது நாடு மட்டுமே. இத்தனைக்கும் கடந்த காலத்தில் மிகப் பெரும்பான்மையான ஆண்டுகள் நமது ஆட்சியாளர்கள் தேசத்துக்குப் பொருத்தமே இல்லாத அணுகு முறைகளேயே நடைமுறைப் படுத்தி வந்தனர்.

அப்படி இருந்தும் சிரமங்களை எல்லாம் மீறி நமது தேசம் முன்னோக்கி மட்டுமே தமது பயணத்தைச் செலுத்தி வந்துள்ளது. அதற்கு அடிப்படைக் காரணம் நமது வலுவான அடித்தளங்களும், செயல்பாட்டு முறைகளும் தான். அவையெல்லாம் நமது பண்பாட்டுக் கூறுகளால் பல நூறாண்டுகளாகச் செதுக்கப்பட்டவை.

எனவே சுயசார்பு பொருளாதார நிலையை மீண்டும் நம்மால் அடைய முடியும். அது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டுமென்பதை திரு தெங்கடி அவர்கள் வலியுறுத்தி, அதற்கான செயல்பாடுகளையும் மேற்கொண்டு வந்தார். ஆகையால் பிரதமர் மோடி அறிவித்துச் செயல்படுத்தி வரும் சுயசார்பு திட்டங்கள் நமது நாட்டுக்கு  அவசியமானவை. அவை நமது தேசத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்; அதன் மூலம் பாரத நாடு உயர்ந்த நிலையை அடையும்.

ஆனால் அதற்காக நாம் ஒவ்வொருவரும் செயலாற்ற வேண்டும். அப்போது தான் அது எளிதில் சாத்தியமாகும். சுதேசிப் பொருள்களையும் உள்ளூர் தொழில்களையும் முழுமையாக ஆதரிக்க வேண்டும். தேவையற்ற வெளிநாட்டுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் நமது கருத்துக்கள், சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளில் பாரதப் பண்பாடு மிளிர வேண்டும்.

(பி.எம்.எஸ். நியூஸ், ஜுலை, 2021 )