இந்தியா சுதந்திரம் பெற்று எழுபத்தைந்து வருடங்கள் ஆகின்றன. இந்தக் கால கட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் மற்றும் சிரமங்களுக்கிடையிலும் நாடு முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. நாம் அடைய வேண்டிய இலக்குகள் நிறைய இருப்பினும், பல கட்டங்களைத் தாண்டி வளர்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் இப்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும், இந்த வருடம் அதிக அளவு வளர்ச்சியைக் கொண்ட நாடாகவும் உருவாகி உள்ளோம்.
2047 ஆம் வருடம் சுதந்திரம் பெற்று நூறாண்டு ஆகப் போகிறது. அந்த சமயத்தில் நாடு உயர்ந்த நிலையில்
இருக்க வேண்டுமென்ற தனது தொலை நோக்குப்
பார்வையை பிரதமர் சென்ற சுதந்திர உரையில் சுட்டிக் காட்டியிருந்தார். அதற்கு அடுத்து வரும் இருபத்தைந்து வருடங்கள் முக்கியமானவை. அந்தக் காலகட்டத்தை நாட்டுக்கான ’அமிர்த காலம்’ என்று
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை 2022-23 குறிப்பிடுகிறது. ஆகையால் சுதந்திர
இந்தியாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் போது நாடு காண வேண்டிய முன்னேற்றங்களுக்கான அஸ்திவாரத்தை
அமைத்து, அதற்கான நடைமுறை வடிவத்தை அளிக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
அமிர்த கால
கட்டத்திற்கான இலக்குகளைக் குறிப்பிட்டு அறிக்கை துவங்குகிறது. அதில் மொத்த பொருளாதார வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொள்ளக்கூடாது. அதனுடன் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையும் மேம்படும்
வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கீழ் மட்டத்திலான நலத் திட்டங்களுக்கும் சமமான
கவனம் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஏனெனில், வளர்ச்சி விகிதம் என்ற
ஒன்றை மட்டுமே நோக்கமாக வைக்கும் போது, அதில் ஏழை மற்றும் சாமானிய
மக்களின் நலன்கள் விடுபட்டுப் போவதை உலக அளவில் நாம் பார்த்து வருகிறோம். வரும் ஆண்டுகளில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய விசயங்களாக போக்குவரத்து
கட்டமைப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம், உற்பத்தித் திறன் அதிகரிப்பு, மூலதனம் அதிகரிப்பு,
எரிசக்தி மற்றும் பருவநிலை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை முக்கியமான ஐந்து மாநில தேர்தலுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட போதும், மக்களுக்கு ஆசை காட்டும் சலுகைகள் எதுவும்
இல்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்புகள் மூலம் அதிக நிதியிழப்புகள், நல உதவிகள் மற்றும் இலவச தடுப்பூசிகள் ஆகிய வகைகளில் செலவுகள் அதிகமாக இருந்த போதும், மக்களின் மேல் புதிய வரிச்சுமைகள் எதுவும் இல்லை.
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக விளங்குவது கட்டமைப்பு வசதிகளாகும். மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஏழு வருடங்களாகவே நாடு முழுவதும் கட்டமைப்புகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் வரும் ஆண்டில் 25000 கிமீ அளவு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் அடுத்த மூன்றாண்டுகளில் நவீன மயமான 400 ’வந்தே பாரத்’ ரயில்கள் இங்கு தயாரிக்கப்படும். உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் ’ஒரு ரயில் நிலையம் – ஒரு பொருள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும் பயணங்களை எளிதாக்க நகரங்களில் மக்கள் அதிகமாகப் பயணம் செய்யும் போக்குவரத்து மையங்களை ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும்.
விவசாயத் துறையில் அதிக அளவில் தொழில் நுட்பம் மூலம் சேவைகள் அளிக்கப்பட உள்ளன. ரசாயன மருந்தில்லாத இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் முதல் கட்டமாக கங்கை நதியை ஒட்டி இரு புறமும் உள்ள விவசாயிகளின் நிலங்களில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சிறு தானிய உற்பத்தி, நுகர்வு மற்றும் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயம் மற்றும் கிராமங்கள் சார்ந்த ‘ஸ்டார்ட் அப்.’ நிறுவனங்களுக்கு உதவியளிக்கும் வகையில் நிதியை உருவாக்க நாபார்டு ஏற்பாடு செய்யும்.
நில ஆவணங்களை கணினி மயமாக்குவது, பயிர்களைக் கணக்கெடுப்பது, மருந்து மற்றும் சத்துணவுகளைத் தெளிப்பது ஆகிய செயல்பாடுகளைச் சரியாகச் செய்வதற்கு பறக்கும் இயந்திரமான ‘ட்ரோன்கள்’ விவசாயத்துறைக்காக தனியாக ஊக்குவிக்கப்படும். இயற்கை விவசாயம், ’ஜீரோ பட்ஜெட்’ விவசாயம், நவீன வேளாண்மை மற்றும் மதிப்புக் கூட்டுதல் ஆகியவை பற்றித் தெரிந்து கொள்ள வேளாண் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களைத் திருத்தியமைக்க மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.
கொரோனா காலத்தில் பாதிப்புள்ளான குறு மற்றும் சிறு தொழில் துறைக்கு உதவும் வகையில் மத்திய அரசு அவசர காலக் கடன் உத்தரவாத திட்டத்தை நடைமுறைப்படுத்தி வந்தது. உணவு மற்றும் தங்கும் விடுதிகள் ஆகிய துறை சார்ந்த சிறு நிறுவனங்கள் இன்னமும் பாதிப்பில் இருந்து முற்றிலும் மீண்டு வரவில்லை. அவற்றுக்கு உதவும் வகையில் அந்த திட்டம் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும் மேற்சொன்ன துறைக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்படுகிறது.
வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் திறன் வளர்ச்சித் திட்டங்கள் தொழில் துறையுடன் இணைந்து செயல்படுவதும் மாற்றி அமைக்கப்படும். நாட்டிலுள்ள அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் வகையில் ஒரு வகுப்புக்கு ஒரு தொலைக்காட்சி அலைவரிசை என்னும் திட்டப்படி இருநூறு அலைவரிசைகள் தொடங்கப்படும்.
நமது மாநிலத்துக்குப் பயனளிக்கும் வகையில் நதிநீர் இணைப்புத் திட்டம் பற்றிய முக்கியமான
அறிவிப்பு வெளியாகி உள்ளது. கோதாவாரி- கிருஷ்ணா, கிருஷ்ணா –பெண்ணாறு, பெண்ணாறு- காவேரி உள்ளிட்ட ஐந்து நதியிணைப்பு திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், பயன் பெறும் மாநில அரசுகளிடம் கருத்தொருத்தொற்றுமை ஏற்பட்டதும், அவற்றை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆதரவளிக்கும்
எனவும் சொல்லப்பட்டுள்ளது.
தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் பல்கலைக் கழகம்
அமைக்கப்படும். மேலும் நமது நாட்டில்
சுகாதாரத் துறையில் மருத்துவ வசதிகள் குறைவான செலவில் தரமானதாக அனைவருக்கும் கிடைக்கும்
நோக்கில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு நன்கு செயல்பட்டு வருகிறது.
தற்போது அடுத்த கட்டமாக மருத்துவ வசதிகள், மருத்துவர்கள்
உள்ளிட்ட பல விபரங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதற்கு
வகை செய்யுமாறு ஒரு திறந்த வெளி தளம் உருவாக்கப்பட உள்ளது. அதன்
மூலம் மக்கள் நல்ல பலனடைய முடியும்.
சுதந்திரமடைந்து பல காலமாகியும் முன்னேற்றம் அடையாமல் இருந்து வந்த 112 மாவட்டங்களைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்த
சிறப்புத் திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்
மூலம் அந்த மாவட்டங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதே சமயம்
அந்த மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் இன்னமும் முழுமையாக முன்னேறவில்லை. எனவே அவற்றுக்காக சிறப்புக் கவனம் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு இப்போது
அறிவித்துள்ளது.
இலக்குகளை வைத்து செயல்பட்டு வரும் மத்திய அரசு வரும் 2022-23 நிதியாண்டில் 3.8 கோடி வீடுகளுக்கு சுத்தமான தண்ணீர் கொடுக்கவும், பிரதமரின்
வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எண்பது லட்சம் வீடுகள் கட்டித் தரவும் திட்டமிட்டுள்ளது.
மோடி அரசைப் போல எந்தவொரு அரசும் மாநில அரசுகளுக்கு வித்தியாசம் பார்க்காமல் உதவிக்
கரம் நீட்டியதில்லை. அந்த வகையில்
மாநில அரசுகள் முதலீடுகளை மேற்கொள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதை வட்டியில்லாமல் ஐம்பது ஆண்டுகளுக்கு மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொழில் முனைவோர்களின் சிரமங்களை நீக்கித் தொழில் செய்வதை எளிமையாக்கும் வகையில்
அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொலைதூரப்பகுதிகளில் உள்ள கிராமப்புற
மக்களுக்குச் சேவை புரிந்து வரும் தபால் நிலையங்கள் வங்கி நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட
உள்ளன. எனவே சாமானியர்கள் பலன் பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்த நிதி நிலை நாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சொல்லும் தொலை
நோக்குப் பார்வை கொண்டது. அதன் மூலம்
நாடு உயர்ந்த நிலையை அடையும். எனவே இது அனைவராலும் வரவேற்கப்பட
வேண்டியது.
(
ஒரே நாடு, சென்னை, மார்ச் 2022)