மாமனிதர் அம்பேத்கர் வழியில் மோடி

 

மரியாதை நிமித்தமாகபாபாசாஹிப்என்னும் அடைமொழியுடன்  அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கர் ஒரு மாமனிதர். அந்தக் காலத்திலேயே அமெரிக்கவின் கொலம்பியா பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்என்னும் இரண்டு பெரிய வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் டாக்டர் பட்டம் பெற்றவர். வழக்கறிஞர், பொருளாதார நிபுணர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.  .

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த குழுவுக்குத் தலைவராக இருந்து அவர் ஆற்றிய பணி மகத்தானது.  எளிமையான  பட்டியலினக் குடும்பத்தில் பிறந்து, சொல்ல முடியாத அவமானங்களை எதிர்கொண்டு, வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு அளப்பரிய சாதனைகளைச் செய்தவர்.  நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் கலாசார பாரம்பரியத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவர் என்பதால் அவரது உண்மையான வரலாறு மற்றும் சிந்தனைகள் பொது வெளியில் மறைக்கப்பட்டன. அவர் இருபதாம் நூற்றாண்டின் காலத்தை மீறிய சிந்தனையாளர். ஆனால் அரசியல் தலைவர்கள் அவரை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள்ளே அடைத்து வைத்திருப்பது பெரிய துரதிர்ஷ்டம்.

ஆரம்ப முதலே  காங்கிரஸ் கட்சி அவரது வளர்ச்சியை விரும்பவில்லை. அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக்கி அவரது அறிவை நாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. 1952 பாராளுமன்ற தேர்தலில் வடக்கு பம்பாய் தொகுதியில் அவர் போட்டியிட்ட போது அவரைக் கேவலப்படுத்தும் வகையில் அவரின் கீழ் உதவியாளராக வேலை பார்த்த கஜ்ரோல்கர் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தது. நேரு நேரடியாக களத்தில் இறங்கி பல கூட்டங்களில் பேசினார்.

அவருக்கு எதிராக கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டாங்கே வாக்கினை அம்பேத்கருக்கு அளிப்பதற்குப் பதிலாக வீண் செய்யுங்கள் என்று வெளிப்படையாகப் பிரசாரம் செய்தார். அதனால் அம்பேத்கர் தேர்தலில் தோல்வியுற்றார். பின்னர் 1954ல் நடந்த பந்தரா தொகுதிக்கான இடைத் தேர்தலில் அவர் போட்டியிட்ட போதும், மீண்டும் காங்கிரஸ் கட்சியால் தோற்கடிக்கப்பட்டார்.

கம்யூனிஸ்டுகளுடன் நான் இணைந்து செயல்பட மாட்டேன்; ஏனெனில் நான் கம்யூனிசத்தை நம்பவில்லை எனத் தெளிவாக அறிவித்தார் அம்பேத்கர். மேலும் கம்யூனிசமும் ஜனநாயகமும் இணைந்து பணியாற்றும் என்பது முழுக்க பொருத்தமில்லாதது எனக் கூறினார். எனவே கம்யூனிஸ்டுகள் அவரை பூர்ஷ்வா, பிரிவினை அரசியல் செய்பவர். தலித் மக்களைத் தவறாக வழி நடத்துவபர், சந்தர்ப்பவாதி மற்றும் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி எனப் பலவகைகளில் மோசமாக வர்ணித்தார்கள்.

தேச நலனும் ஒருமைப்பாடுமே மூச்சாக கொண்டு வாழ்ந்த மாபெரும் தலைவர் அம்பேத்கர். பிரதமர் நேரு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும்  தனி உரிமைகள் கொண்ட சட்டப்பிரிவு 370ஐ க் கொண்டு வந்த போது அதைக் கடுமையாக எதிர்த்தார். அது தேசத்துக்குத் துரோகமான செயல்; எனவே தான் சட்ட அமைச்சராக இருக்கும் வரை அதைக் கொண்டு வர அனுமதிக்க மாட்டேன் எனச் சூளுரைத்தார். பின்னர் அதைத் தந்திரமான  வகையில் நேரு சட்டமாக்கினார்.

அதன் விளைவாக அங்கு தீவிரவாதம் பெருகி, ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டு, பல நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியானதை தேசம் கண்டது. நாட்டு மக்கள் அனைவரும் சகோதரர்கள். எனவே அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டுமென அவர் முயற்சித்தார். ஆனால் காங்கிரஸ் அதை அனுமதிக்கவில்லை.

இந்தியக் கலாசார மற்றும் ஆன்மிகத்தின் மேல் ஆழமான பற்றுக் கொண்டவர் அம்பேத்கர். இந்தியாவின் பூகோள ஒற்றுமையை விடவும், கலாசார ஒற்றுமை நாடு முழுவதையும் ஆழமாகப் பிணைக்கிறது எனக் கூறினார். இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்த இந்துக்களை இங்கு திரும்பி வருமாறு அறைகூவல் விடுத்தார். அவர்களைக் கொண்டு வர முயற்சியும் எடுத்தார். இன்று இந்துக்கள் அங்கு படும் கொடுமைகளைப் பார்க்கும் போது அவர் எவ்வளவு தீர்க்கதரிசி என்பது புரியும்.  

1927 ல் பட்டியலின மக்கள் கோவில் நுழைவு பற்றி எழுதும் போது, மற்ற இந்துக்களுக்கு இந்துத்வா எப்படி சொந்தமோ, அதே போல பட்டியலின மக்களுக்கும் சொந்தம் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்துத்வாவின் வளர்ச்சியும் பெருமையும் வசிஷ்டர் போன்ற பிராமணர்கள், கிருஷ்ணர் போன்ற ஷத்திரியர்கள், ஹர்ஷா போன்ற வைசியர்கள் மற்றும் துக்கா ராம் போன்ற சூத்திரகள் என அனைவரது ஒட்டு மொத்த பங்களிப்பாலும் தான் நிகழ்ந்துள்ளது என எடுத்துக் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முழு நேர ஊழியரான அமரர் தத்தோபந்த் தெங்கடி அண்ணல் அம்பேத்கருக்கு மிகவும் நெருக்கமானவர். அம்பேத்கர் ஆரம்பித்து தலைவராக இருந்து நடத்திய பட்டியலின மக்கள் கூட்டமைப்புக்கு, அவரையே பொதுச் செயலாளராக்கினார். 1954 பந்தரா தேர்தலில் தனது தேர்தல் முகவராக தெங்கடியை நியமித்தார். 1930 களில் ஆர். எஸ்.எஸ். தினசரிக் கூடுதலை புனேவில் நேரடியாகச் சென்று பார்த்து பின்னர் அதன் தலைவர் டாக்டர் ஹெட்கேவர் அவர்களைச் சந்தித்தார். 

ஆரம்ப முதலே நேருவுடன் கொண்டிருந்த வேறுபாடுகள் அதிகரிக்கவே 1951ல் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினார். தனது விலகல் கடிதத்தில் நேரு எவ்வாறு தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமலும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான அரசு கமிசன் அமைக்காமலும், தவறான வெளியுறவுக் கொள்கைகளைப் பின்பற்றியும் வருகிறார் என்னும் விசயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் அம்பேத்கர் வாழ்ந்த போது மட்டும் அவரை உதாசீனப்படுத்தவில்லை. அவர் மறைந்த பின்னரும் அவருக்குரிய மரியாதையைக் கொடுக்கத் தவறியது.நேருவுக்கு அவர் பிரதமராக இருந்த போது 1955 ஆம் வருடமே பாரத் ரத்னா கொடுக்கப்பட்டது. இந்திரா காந்தியும் தான் பிரதமராக இருந்த போது 1971ல் பாரத் ரத்னாவைப் பெற்றுக் கொண்டார்.

ஆனால் இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஆட்சியில் பாரத் ரத்னா கொடுக்கப்படவேயில்லை. அவரது மறைவுக்குப் பின் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி 1990ல் பாரதிய ஜனதா ஆதரவளித்த வி.பி.சிங் ஆட்சியில் தான்  அந்த விருது கொடுக்கப்பட்டது. அதே போல பாராளுமன்றத்தின் மத்திய அவையிலும் அவரது படம் 1990ல் தான் வைக்கப்பட்டது.

அதே சமயம் பாரதிய ஜனதா கட்சி அம்பேத்கரை நமது தேசத்தின் மாபெரும் தலைவராகப் போற்றுகிறது. எனவே மோடி அரசு அமைந்த பின்னர் அவரது வாழ்க்கையோடு நெருங்கிய சம்பந்தமுடைய ஐந்து இடங்களில் அவரது நினைவைப் போற்றும் வண்ணம்பஞ்ச தீர்த்தங்கள்அமைக்கப்பட்டுள்ளது. அவை மத்திய பிரதேசத்தில் அவரது பிறந்த இடம், லண்டனில் தங்கிப் படித்த இடம், நாக்பூரில் தீட்சை பெற்ற இடம், டெல்லியில் வாழ்ந்து மறைந்த இடம்  மற்றும் மும்பையில் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஆகியவையாகும். இப்போது அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருவதால் அவை புண்ணிய தலங்களாக மாறியிருக்கின்றன.

ஆரம்ப காலந்தொட்டே மோடி அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் மேல் அளப்பரிய மரியாதை இருந்து வந்துள்ளது. 1987ல் அவர் குஜராத் மாநில பொதுச் செயலாளராக இருந்த போதே பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளை கட்சி சார்பாக நிறுவினார். பின்னர் 2007ல் முதலமைச்சராக இருந்த போது பல இடங்களில் அம்பேத்கர் பவன்களை கட்டினார்.

அவரது முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து கொள்ள ஒரு யானை மேல் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தையும், அம்பேத்கர் படத்தையும் வைத்துக் கொண்டு குஜராத் வீதிகளில் மற்ற தலைவர்களுடன் நடந்து சென்றார். பின்னர் பிரதமரான பின் 2015 ஆண்டு அண்ணலைக் கௌரவிக்கும் விதமாக நவ 26 ஆம் நாளை அரசியலமைப்புச் சட்ட நாளாக அறிவித்தார். அது இப்போது வருடா வருடம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பட்டியலின, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்க்கையில் முன்னேற கல்வி, வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்களில் வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும். மேலும் ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் வெவ்வேறு பொறுப்புகளில் அதிகமான பட்டியலின, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை மோடி அரசு அமர்த்தி வருகிறது.

தற்போதைய பாராளுமன்றத்தில் பட்டியலின, மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 131 தொகுதிகளில் 97 பேர் பாரதிய ;ஜனதாவைச் சேர்ந்தவர்கள். 113 உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். தேசத்தின் முதல் குடிமகள் மலைவாழ் புதல்வி. மேலும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கமிசனுக்கு 2019ல் மோடி அரசு சட்ட பூர்வ அங்கீகாரத்தை அளித்துள்ளது.

கடைநிலை மக்கள் முன்னேற்றத்துக்காக கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக மோடி அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சுமார் 12 கோடி கழிவறைகள், சுமார் பத்து கோடி இலவச எரிவாயு இணைப்புகள், 48 கோடிக்கு மேற்பட்ட புதிய வங்கி கணக்குகள், முத்ரா கடனுதவித் திட்டம் எனப் பல திட்டங்களும் பெரிய பலன்களைத் தந்து வருகின்றன.

ஜனதன திட்டத்தின் மூலம் இன்று ஏழைக் குடும்பங்கள் தங்கள் கணக்குகளில் 1,99,000 கோடி ரூபாயை வைப்புத் தொகையாக கொண்டுள்ளனர்.   ஜன திட்ட  பயனாளிகளில் அதிகபட்சமாக 27 கோடிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். முத்ரா திட்டத்தைப் பொறுத்தவரையில் 2021-22 ல் முடிந்த ஏழு ஆண்டுகளில்  18.91 லட்சம் கோடி ரூபாய் அளவு கடன் சுமார் 35 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளுக்கு கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கடன் பெற்ற அமைப்புகளில் 68 விழுக்காடு பெண்களால் நடத்தப்படுபவை. 51 விழுக்காடு பட்டியலின, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களால் நடத்தப்படுபவை.

பட்டியலின சமூக குழந்தைகள் பள்ளிக் கல்வி மட்டுமன்றி, நாட்டின் மிகச் சிறந்த நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அளவில் பிரபலமாகவுள்ள  உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பெற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பட்டியலின இளைஞர்கள் அரசுப் பணிகளில் எளிதாகப் போட்டியிட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ஆதர்ஷ் கிராம திட்டம் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளின் ஒட்டு மொத்த கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. பெண்கள்,   பட்டியலின மற்றும் மலை வாழ் மக்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில்ஸ்டேண்ட் அப் இந்தியாசிறப்புத் திட்டம் கடந்த ஏழு வருடமாக செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் இது வரை 40,700 கோடி ரூபாய் கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

நமது நாடு முன்னேறுவதற்கு விவசாயம் மற்றும் தொழில் துறைகள் முன்னேறுவது அவசியம் என்பதை அம்பேத்கர் வலியுறுத்தினார். அதற்காக மோடி அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பிரதமரின் சுய சார்பு திட்டம் என்பது இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்கும்.

எனவே மோடி அரசு அம்பேத்கரின் கனவான சமூக ரீதியாக கீழ் நிலையில் இருப்பவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றும் வகையில் முழு மூச்சாகப் பணியாற்றி வருகிறது. அவர்களுக்குத் தரமான கல்வி கொடுப்பது, வேலை வாய்ப்பு அளிப்பது, அவர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்குவது, மற்றும் அதிகாரத்தில் அமர்த்துவது எனப் பல தளங்களிலும் மாற்றங்கள் நடந்து வருகின்றன.

எனவே அரசியலுக்காக அல்லாமல் உண்மையான சமூக நீதிக் காவலான மோடி விளங்கி வருகிறார். அதனால் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மோடி அரசு அம்பேத்கர் என்னும் மகத்தான ஆளுமையைக் கொண்டாடியும், அவரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டும் வருகிறது.

( ஒரே நாடு, சென்னை, ஏப். 2023)

தேசப் பணியில் பாரதிய ஜனதா பேரியக்கம்

 

பாரதிய ஜனதா கட்சி 1980 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த மாதம் தனது நாற்பத்தி நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த நாற்பத்தி மூன்று ஆண்டுகளில் தனது பணிகளால் நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்று ஒரு பேரியக்கமாக மாறி, தற்போது உலகின் மிகப் பெரிய ஜனநாயக கட்சியாகச் செயல்பட்டு வருகிறது.   

இந்திய நாடு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. வெவ்வேறு துறைகளிலும் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி உலகின் முதன்மை நாடாக விளங்கி வந்த பெருமைக்குரியது. அந்நியப் படையெடுப்புகள் மற்றும் காலனியாட்சி சிதைவுகள் நாட்டுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. அதனால் நாடு ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டது.    

சுதந்திரத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டிய  நேரு அரசின் அணுகுமுறை மற்றும் நேரு-லியாகத் அலிகான் ஒப்பந்த விசயத்தில் பிரதமரின் போக்கு ஆகியன காங்கிரஸ் கட்சி தேசிய உணர்வோடு மக்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்படவில்லை என்பதை உணர்த்தின.

அவற்றைச் சரி செய்ய முயன்று தோற்றுப் போன மத்திய அமைச்சர் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி தனது பதவியிலிருந்து  விலகினார். அதனால் தேச நலனை மையப்படுத்திச் செயல்படக்கூடிய ஒரு கட்சி நாட்டுக்கு அவசியம் என முக்கியமான தேசியவாதிகள் முடிவு செய்தனர். அதனடிப்படையில் பாரதிய ஜனசங்கம் 1951 ஆம் ஆண்டு  முகர்ஜி அவர்களைத் தலைவராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியும் அதன் முந்தைய அவதாரமான ஜன சங்கமும் அன்று முதல் அதே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. தேச ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைக் காப்பாற்றுவது, மண்ணின் கலாசாரத்தைப் பேணிக் காத்தல், கடைநிலை மனிதனை முன்னேற்றும் செயல்பாடுகள், வெவ்வேறு துறைகளிலும் வளர்ச்சி, சுதேசி அணுகு முறைகள், உலக அளவில் தேசத்தை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்வது உள்ளிட்டவை அதன் முக்கிய அம்சங்கள்.    

1952 ஆம் வருடம் பிரதமர் நேரு, ஜம்முகாஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவுடன் போட்ட ஒப்பந்தம் அந்த மாநிலத்துக்கென தனியான   சட்டம், கொடி மற்றும் பிரதமர் பதவி ஆகியவற்றைக் கொடுத்தது.  மேலும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து அங்கு நுழைய அனுமதி வாங்கும் முறையைக் கொண்டு வந்தது.  

அதை எதிர்த்து 1953 ல் முகர்ஜி அவர்கள் அந்த மாநிலத்தில்  நுழைந்த போது கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இரண்டு  மாதங்கள் முடியும் முன்னரே மர்மமான முறையில் காலமானார். தேசத்தின் முழுமையான  ஒருங்கிணைப்புக்காக  தனது 52 வயதில் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டார்.

1947 ல் நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும், கோவாடையூடாமன் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகள் போர்ச்சுகீஸ் மற்றும் பிரெஞ்சு அரசுகளின் கீழ் நீடித்து வந்தன. அவற்றுக்கான விடுதலைகளுக்காக ஜன சங்கம் தீவிரமாகப் போராடி, உயிர்ப்பலி கொடுத்து வெற்றி கண்டது. 

ஆரம்ப முதலே பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான நேருவின் தேவையற்ற சமாதானப் போக்கை ஜனசங்கம் எச்சரித்து வந்தது. சீனாவின் ஊடுருவல்களை எதிர்த்து 1959-60 ஆண்டுகளில் தீவிரமாக குரல் கொடுத்தது. 1965 ல் பாகிஸ்தான் குஜராத்தில் ஒரு இடத்தைப் பிடித்த பின்னரும் அவர்களுடன் சமாதானமாகப் போக நேரு விரும்பினார். அதை எதிர்த்து கட்சி நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கூட்டங்கள் நடத்தியது. அதே சமயம் பாகிஸ்தானுடன் போர் வரும் சமயங்களில் மத்திய அரசுக்கு முழு ஆதரவை  அளித்தது.

1967 முதல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகப் பல மாநிலங்களில்  கூட்டணி அரசுகளை அமைத்து ஆட்சியில் பங்கு கொண்டது. 1975ல் இந்திரா காந்தி அவசர நிலையைக் கொண்டு வந்த போது அதை எதிர்த்துப் போராடிச் சிறை சென்றவர்களில் அதிகம் பேர் ஜனசங்கம் மற்றும் அதன் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான். பின்னர்  காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஒரு பெரிய கட்சியை உருவாக்க வேண்டி ஜன சங்கம்  ஜனதா கட்சியின் ஒரு அங்கமானது.

1977ல் ஜனதா கட்சியின் ஆட்சி மத்தியில் அமைவதற்கு   ஜனசங்க அமைப்பினர் பெரிய பங்கு வகித்தனர். அந்த ஆட்சியில் திரு வாஜ்பாய் மற்றும் திரு அத்வானி உள்ளிட்டவர்கள் முக்கிய பொறுப்புகளை வகித்தனர். பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜனதா கட்சி உடைந்த போது, பாரதிய ஜனதா உருவானது.

அடுத்த கட்டமாக 1998 ஆம் வருடம் பாரதிய ஜனதா கட்சி தலைமை வகித்த கூட்டணி ஆட்சியை  அமைத்தது.  அப்போது   பிரதமர் வாஜ்பாய் வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையை நடத்தி இந்தியாவின் வலிமையை உலகுக்கு உணர்த்தினார். பின்னர் 1999 தேர்தலிலும் பாரதிய ஜனதா அதிக இடங்களை வென்று கூட்டணி ஆட்சியை அமைத்தது. எனவே 2004 வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது.

அதன் பின் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திரு மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசுகள் நாட்டைச் சீரழித்தன. பின்னர் 2014 தேர்தலில் தனிப் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா கட்சியிலான கூட்டணி அரசு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் அமைந்தது. அப்போது தான் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றது. 

அப்போது முதல் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அதிகபட்சமான கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக கட்டமைப்புகள் வலிமைப்படுத்தப்பட்டும், நவீன மயமாக்கப்பட்டும் வருகின்றன. எல்லைகளில் அத்து மீறுவோருக்குக்  கடுமையான பதிலடி கொடுக்கப்படுகிறது. அதனால் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா அடங்கிக் கிடக்கின்றன.

சிறப்பு சலுகையினால் ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறினார்கள். பெண்கள், பட்டியலின மக்கள் ஆகியோருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. எனவே 2019 ஆம் வருடம் மோடி அரசு 370 பிரிவை நீக்கி தேச ஒருங்கிணைப்பை உறுதிப் படுத்தியது. அதனால் அங்கு தீவிரவாதம் குறைந்து வளர்ச்சியை நோக்கிய பயணம் தொடங்கியுள்ளது.

மேலும் வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வந்த பிரிவினைவாத நடவடிக்கைகள் கட்டுக்குள் வந்துள்ளன. வட கிழக்கு மாநிலங்களுக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டு, அவை தேசிய நீரோட்டத்தில் இணைந்து வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. மேலும் இடது சாரி தீவிரவாதம் வேகமாக குறைந்து வருகிறது.

இந்தியா பாரம்பரியமான பொருளாதார வழிமுறைகளைக் கொண்டு உலகின் செல்வந்த நாடாக விளங்கி வந்த பெருமைக்குரியது.  ஆனால் சுதந்திரம் பெற்றதும் நேருவின் அரசு அந்நிய சித்தாந்தை அடிப்படைக் கொள்கையாக நடைமுறைப் படுத்தியது. அதனால் நாட்டின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

அதே சமயம் 1954 ஆம் வருடமே ஜன சங்கம் சுதேசிக் கொள்கை அவசியமென அறைகூவல் விடுத்தது. பின்னர் 1965 ஆம் வருடம் ஒருங்கிணைந்த மனித நேய தத்துவத்தை ஜன சங்கத்தை உருவாக்கிய சிற்பியும் சிந்தனையாளருமான தீனதயாள் உபாத்யாயா அவர்கள் முன் வைத்தார். அது கட்சியின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது மோடி அரசின் வழிகாட்டு நெறியாக விளங்கி வருகிறது..

ஏழை மக்கள், பெண்கள், பட்டியலின மற்றும் பழங்குடி வகுப்பினர் உள்ளிட்ட நலிவடைந்த பிரிவினருக்கு சிறப்புத் திட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  அதனால் அவர்கள் பெரும் பலன்களைப் பெற்று வாழ்க்கையில் புதிய வெளிச்சத்தைக் கண்டு  வருகின்றனர். இளைஞர்கள், விவசாயிகள், உழைப்பாளிகள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மோடி ஆட்சியில் மட்டும் சாதாரண மக்களுக்காக சுமார் பன்னிரெண்டு கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் பத்து கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழை மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்கின்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தில் இதுவரை 48 கோடிக்கு மேற்பட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.

முன்னர் இருந்த அரசுகள் செய்யத் தயங்கிய பல விசயங்களையும் மோடி அரசு தைரியமாகச் செயல்படுத்தி  வருகிறது. சுதந்திரமடைந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் தாய் மொழியையும், தொழில் கல்வியையும் அடிப்படையாக கொண்ட தேசிய கல்விக் கொள்கை நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கட்டமைப்புகள் புதியதாக உருவாக்கப்பட்டும், மேம்படுத்தப்பட்டும்  வருகின்றன. நாட்டுக்கு ஆதரமாக விளங்கும் விவசாயம் மற்றும்  குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு அவை வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. அதனால் சென்ற நிதியாண்டில் ஏழு விழுக்காடு வளர்ச்சி விகிதத்துடன் உலகிலேயே வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது.

 நாடு நீடித்த தன்மையுடன் சிறந்து விளங்க வேண்டுமெனில் சுயசார்பு  அவசியம். அந்த வகையில்இந்தியாவில் தயாரிப்போம்திட்டத்தில் தொடங்கி, சுய சார்பு பொருளாதார திட்டத்தை முன்னிறுத்தி மோடி அரசு கொள்கைகளை வகுத்து வருகிறது. அதனால் உள்நாட்டு தயாரிப்புகள் அதிகமாகி, சீனா போன்ற நாடுகளிடமிருந்து வரும் இறக்குமதிகள் குறைந்து வருகின்றன.

கொரோனா சமயத்தில் குறுகிய காலத்திலேயே உள் நாட்டில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் அதிகமாக 221 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு நாம் தடுப்பூசிகளை அனுப்பி உதவி புரிந்துள்ளோம். அதன் மூலம் உலகில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளது.

அதனால் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நாடு மிகப் பெரும் மாற்றங்களைக் கண்டு வருகின்றது. உலகப் பொருளாதாரத்தில் 2014-ஆம் வருடம் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது ஐந்தாவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. மேலும்  இந்தியர்களின் தனி நபர் வருமானம் இரண்டு மடங்கு உயர்ந்து தற்போது 1.97 லட்சம் ரூபாயாக உள்ளது. எனவே ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இருண்டு கிடக்கும் உலக பொருளாதார சூழலில் ஒளி வீசும் நட்சத்திரமாக இந்தியா விளங்கி வருகிறது எனக் குறிப்பிடுகின்றன.

இந்திய தேசத்தின் அடிநாதமாக விளங்குவது தனித்துவம் வாய்ந்த நமது பண்பாடு. அதனடிப்படையில் நமது மண்ணுக்கே உரித்தான கலாசார முறைகளைப் பேணிக் காப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக நாட்டு மக்கள் காண விரும்பிய இராமபிரான் ஆலயம் அவருடைய பிறப்பிடத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. புனிதமான காசி விஸ்வநாதர் ஆலயம் புதுப்பிக்கப்படுள்ளது.

சுதந்திரம் பெற்றது முதல் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆட்சியில் வாக்கு வங்கி அரசியல் பிரதானமாக இருந்து வந்தது. அதற்கு மாற்றாக அனைவருக்குமான வளர்ச்சி என்பது பாரதிய ஜனதா ஆட்சியின்  அடிப்படை அம்சமாக இருந்து வருகிறது. அண்மைக் காலமாக சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிடமும் நட்புறவு அதிகரித்துள்ளது.

2014 முதல் வெவ்வேறு துறைகளிலும் நாடு நல்ல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி, தேச பக்தி மிக்க அர்ப்பணிப்புள்ள தலைவர்கள், கடுமையான உழைப்பு ஆகியன நாட்டை உயர்த்திக் கொண்டு வருகின்றன. அதனால் நாட்டில் பதினேழு மாநில மற்றும் யூனியன் பிரதேச பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது.

எனவே தற்போது இந்தியா உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது. சுதந்திரத்துக்குப் பின் குடும்ப மற்றும் வாக்கு வங்கி  அரசியலிலிருந்து நாட்டைக் காப்பாற்றி, புதிய இந்தியாவை உருவாக்குவதில் பாரதிய ஜனதா முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனால் பல தரப்பட்ட பிரிவினரின் ஆதரவையும் பெற்று  மக்களுக்கு நம்பிக்கை தரும் கட்சியாக மென்மேலும் வளர்ந்து வருகிறது. .

( ஏப்ரல் 6 பாரதிய ஜனதா கட்சி நிறுவன நாள்)

( தினமலர், சென்னை, ஏப்ரல் 6, 2023)