காசி தமிழ் சங்கமம் – தொன்மையான பண்பாட்டு ஒற்றுமையைக் கொண்டாடும் பிரதமரின் கனவுத் திட்டம்

 

காசி நகரத்தின் தொன்மையைப் பற்றிச் சொல்லும் போது அது வரலாற்றை விடவும், பாரம்பரியத்தை விடவும் மிகப் பழமையானது என்று அமெரிக்க இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படும் மார்க் ட்வைன் கூறியுள்ளார். காரணம், காசி உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகிலேயே தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக மக்கள் வசித்து வரும் இடமாகவும் சொல்லப்படுகிறது. நீண்ட நெடிய பாரதப் பண்பாட்டில் காசிக்கு எனப் பல தனிச் சிறப்புகள் உள்ளன. தேசம் முழுவதும் வாழும் மக்களில் காசியைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

தமிழகம் உலகின் தொன்மையான மொழியைக் கொண்டது. பாரத தேசத்தில் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து ஆன்மிகத்துக்கான முக்கிய பகுதியாக விளங்கி, உயர்தரமான இலக்கியங்கள் மற்றும் படைப்புகளின் பிறப்பிடமாக இருந்து வரும் பெருமைக்குரியது. ஆயிரம் ஆண்டுக்கு மேலான பழமை வாய்ந்த பல பிரமாண்டமான கோவில்கள், மாநிலம் முழுவதும் விரிந்து பரவி இருக்கும் ஆன்மிக தலங்கள், உலகின் பல பகுதிகளிலுக்குப் பரவிச் சென்று அளப்பரிய சாதனைகளைச் செய்த பேரரசுகள், மருத்துவம், தொழில் நுட்பம், சர்வதேச வணிகம் உள்ளிட்ட துறைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே முன்னணியில் இருந்து வந்த வரலாறு எனத் தனிச் சிறப்புகளைப் பெற்றது.

பழைய காலந்தொட்டு தமிழகத்துக்கும் காசிக்குமிடையில் இருந்து வரும் தொடர்பு நீண்ட வரலாறு உடையது. இரு பகுதிகளுமே தனித்தன்மைகள் வாய்ந்த ஆன்மிக பாரம்பரியம் கொண்டவை. பின் வந்த காலத்தில் பதினேழாம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து காசி சென்ற குமரகுருபர சுவாமிகள் அங்கேயே தங்கியிருந்து மடத்தை நிறுவி சிறந்த முறையில் ஆன்மிகப் பணியாற்றியுள்ளார். இப்போதும் தமிழகத்தில் காசி விசுவநாதர் கோவில்கள் நானூறுக்கு மேல் இருப்பதாகத் தெரிகிறது. மாநிலத்தில் சிவகாசி, தென்காசி எனப் பல இடங்கள் காசி என்கின்ற பெயரைத் தாங்கி இருந்து வருகின்றன. இன்றும் தமிழக மக்கள் வாழ் நாளில் ஒரு முறையாவது காசிக்குப் போய் வர வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். அதனால் வருடா வருடம் பல்லாயிரக் கணக்கான பேர் காசிக்குச் சென்று இறைவனைத் தரிசித்து வருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட காலனியாதிக்கத் தாக்கங்களின் விளைவாக சுதந்திரத்துக்குப் பின்னரும் நாட்டின் பல பகுதிகளில் பிரிவினைவாத கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. சில இடங்களில் அவற்றை அரசியல் இயக்கங்கள் மற்றும் கட்சிகள் தமது சுய நலத்துக்காக ஆதரித்தும் ஊக்குவித்தும் வருகின்றன. அதனால் 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், நமது தேசம் முழுவதும் பண்டைய காலந்தொட்டு பிணைக்கப்பட்டு இருந்து வருவதைப் புரிய வைக்கும் வகையில் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்றுஒரே பாரதம் உன்னத பாரதம்என்கின்ற திட்டம். அதன் மூலம் எல்லா மாநில மக்களுக்கும் அடுத்த மாநிலங்களைப் பற்றிப் புரிய வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தேசியக் கல்விக் கொள்கை 2020 நமது மாணவர்களுக்கு  தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு குறித்து எடுத்துச் சொல்கிறது. தமிழகமும் காசியும் நமது தேசத்தின் இரண்டு முக்கியமான பண்பாட்டு மையங்களாக விளங்கி வருவதால், அவற்றினிடையே பல நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நிலவி வரும் உறவினை நினைவு கூர்ந்து, தற்போதைய தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லி அதனைக் கொண்டாடும் வகையில் காசி தமிழ் சங்கம் என்னும் சிறப்பான ஒரு நிகழ்ச்சியை பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது.  

அதன்படி காசி தமிழ் சங்கத்தின் முதல் பதிப்பு 2022 நவம்பர் மாதம் தமிழ் கலாசாரம், இலக்கியம், உணவு வகைகள் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டது. அதை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் அவர்கள் நாட்டின் கலாசாரத் தலைநகராக இருந்து வரும் காசி மற்றும் இந்தியாவின் தொன்மைக்கும் பெருமைக்கும் மையமாக விளங்கி வரும் தமிழகம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவுகளைக் கொண்டாடுவதாக சங்கமம் உள்ளது எனக் கூறினார். உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்கள் சங்கமம் மூலம் நாட்டின் இரு முக்கிய பகுதிகளுக்கிடையே நீடித்து நிற்கும் கலாசார பாரம்பரியம் மட்டுமன்றி, பழமை வாய்ந்த கலாசார ஒற்றுமையையும் அறிந்து கொள்ள முடியும் என்றார். தமிழகத்திலிருந்து 1800 கிமீ தூரம் கடந்து சென்று 2500 விருந்தினர்கள் அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நாட்களில் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச அரசின் முழு ஈடுபாட்டோடு நடைபெற்ற முதலாவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்ததாகக் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டினர். மத்திய அரசின் செலவில் இலவசமாக விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சங்கம நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மட்டுமன்றி புகழ்பெற்ற காசி கோவில், பாரதியார் வாழ்ந்த அவரின் மூதாதையர் வீடு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.

தொடர்ந்து 2023 ஆம் வருடம் டிசம்பர் மாதம் காசி தமிழ் சங்கமம் இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகளை இந்நிய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை ஏற்பாடு செய்தன. அந்த நிகழ்ச்சியையும் பிரதமர் துவக்கி வைத்தார். வெவ்வேறு தலைப்புகளில் துறை சார்ந்த நிபுணர்கள் பங்களிப்போடு கருத்தரங்குகள் சிறப்பாக நடைபெற்றன. அவரது பேச்சு முதல் முறையாக புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு APP மூலம் தமிழில் கேட்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் மூன்றாவது முறையாக பிப்ரவரி 2025ல் சித்த மருத்துவம், செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் மற்றும் நாட்டின் கலாசார ஒற்றுமைக்கு அகத்தியரின் பங்களிப்புகள் ஆகிய கருத்துக்களை மையமாக வைத்து நடத்தப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் கலைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் பெண்கள் என ஐந்து பிரிவுகளின் கீழ் ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம் இருநூறு தமிழ் மாணவர்களும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. விருந்தினர்கள் காசி விசுவந்தார் கோவிலைத் தவிர கும்பமேளா, அயோத்தி ராமர் கோவில் ஆகியவற்றுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடந்த மூன்று வருடங்களாகத் தொடர்ந்து நடந்து வரும் இந்த நிகழ்வானது மத்திய அரசு மேற்கொண்டுள்ள மிக நல்ல முயற்சியாகும். அதன் மூலம் நமது நாட்டு மக்கள் தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தாலும் எவ்வாறு தொன்று தொட்டு காலங்காலமாக கலாசாரத்தில் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர் என்கின்ற உண்மையை நேரடியாக உணரப் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.  தனித்துவமான  வரலாற்றைப் பெற்று மிக வேகமாக வளர்ந்து வரும் நமது தேசத்தில் மக்களைப் பிளவுபடுத்த இன்னமும் நாட்டின் பல பகுதிகளிலும் அந்நிய சக்திகள் மற்றும் சித்தாந்தங்கள் முயற்சித்து வருகின்றன. தமிழகத்தில் அவை பல ஆண்டுகளாகப் பரவி ஆட்சியிலும் அதிகாரத்திலும் கூட இருந்து வருகின்றன.

அதனால் தமிழகம் ஏதோ தேசத்திலிருந்து விலகி நிற்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி அதை நிலை நாட்ட சிலர் முயற்சித்து வருகின்றனர். எனவே இந்த சமயத்தில் பரந்துபட்ட நமது தேசத்தில் தமிழகத்தின் பிணைப்பு பல்லாண்டு காலமாக எப்படி இருந்து வருகிறது என்பதை தமிழக  மக்களுக்கு உணர்த்த வேண்டியது அவசியமாகின்றது. அதே சமயம் உத்திரபிரதேச மக்களும் தமிழகத்தின் நீண்ட பாரம்பரியம் மற்றும் பங்களிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.  அந்த வகையில் காசி சங்கமம் நிகழ்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெருகிறது. இந்த நிகழ்ச்சியை உருவாக்கி வருடா வருடம் சிறப்பாக நடத்தி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களையும் மத்திய அரசையும் பாராட்ட வேண்டியது நமது கடமை. சங்கமம் நடைபெற அனைத்து ஒத்துழைப்பையும் நல்கி முழு ஈடுபாட்டோடு நடத்தி வரும் உத்திர பிரதேச அரசையும் நாம் பாராட்டியாக வேண்டும்.

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நமது தேசம் தொன்று தொட்டு தன்னிகரில்லாத நமது கலாசாரத்தாலே பிணைக்கப்பட்டு இருந்து வருகிறது என்பதை நாம் உணர வேண்டும். என்வே பாரத தேசத்தின் வாரிசுகளாகிய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசத்தை முன்னேற்றப் பணியாற்ற வேண்டும்.

( Booklet on Kashi Tamil Sangamam, SPMRF, New Delhi, Mar 2025)