சுதந்திரத்துக்குப் பின்னர் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக கல்வித்துறை மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குக் கீழ் தான் இருந்து வந்தது. 1976 ஆம் வருடம் அவசர நிலை கால கட்டத்தில் இந்திரா காந்தி அம்மையார் 42 ஆவது திருத்தச் சட்டம் மூலம் கல்வி உள்ளிட்ட ஐந்து துறைகளை மாநிலப் பட்டியலில் இருந்து எடுத்து பொதுப்பட்டியலில் சேர்த்தார்.
மத்தியில் கல்வித்துறையில் அரசியல் தலையீடு 1950 களில் ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போதே ஆரம்பித்தது. பின்னர் 1970களில் இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த போது தலையீடு வலுப்பெறத் துவங்கியது. அந்த சமயத்தில் அரசியல் பிரச்னைகளைச் சமாளிப்பதற்காக அவர் இடதுசாரி கருத்துடையவர்கள் கல்வித்துறையில் நுழைவதற்கு வழிவகை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார். அப்போது தொடங்கி கல்வித் துறையையும், உயர்கல்வி நிறுவனங்களையும் இடதுசாரி பேராசிரியர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.
டெல்லியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி கருத்துடையவர்கள் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்படும் சூழ்நிலை தொடங்கியது. பின்னர் தொடர்ந்து வந்த காலங்களில் மத்திய அரசின் பிற பல்கலைக் கழகங்களிலும், குறிப்பாக சமூக அறிவியல் சம்பந்தப்பட்ட துறைகளில் ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தைக் கொண்டவர்களே ஆசிரியர்களாகவும், மேல் பொறுப்புகளிலும் வரமுடியும் என்கின்ற நிலைமை உருவானது. அவர்களே பாடத்திட்டங்கள் வகுப்பது, பள்ளிப்பாடப் புத்தகங்கள் எழுதும் குழுக்களில் முக்கிய பங்கு வகிப்பது, பல்கலைக்கழக பாடத்திட்டம் உருவாக்கம் மற்றும் ஆய்வுகள் என எல்லாத் துறைகளையும் ஆக்கிரமித்தனர். அவர்களுக்கு மாறான கருத்துக் கொண்ட நடுநிலை மற்றும் தேசியவாத கருத்துக் கொண்டவர்கள் திறமையானவர்களாக இருந்தும் புறந்தள்ளப்பட்டனர்.
என்சிஆர்டி என்னும் அமைப்பு பள்ளிப் பாடப்புத்தகங்களை தயாரித்து அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. அவை முழுக்க ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் போன்ற சில மத்திய பல்கலைக் கழகங்களின் இடதுசாரிப் பேராசியர்கள் வசமே இருந்தன. மேலும் உயர்கல்விக்கான மத்திய அரசின் அனைத்து உயர் நிறுவனங்களையும் அவர்களே கையகப்படுத்தினர்.
மத்திய அரசு கல்வித்துறையின் கீழ் வரும் உயர்கல்வி அமைப்புகளான இந்திய சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆய்வு சம்பந்தமான திட்டங்கள் மற்றும் நிதி அளிப்பு ஆகியவற்றைச் செய்கிறது. மேலும் அந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் சுமார் இருபத்தைந்து நிறுவனங்கள் மாநிலம் தழுவிய சமூக அறிவியல் ஆய்வுகளுக்காக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம் தேசத்தின் வரலாறு பற்றிய ஆய்வுகள் செய்வது மற்றும் ஆய்வுகளுக்கான நிதி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நமது நாட்டின் தத்துவங்கள் பற்றிய ஆய்வுகளுக்காக இந்திய தத்துவ ஆய்வு நிறுவனம் டெல்லியிலிருந்து செயல்பட்டு வருகிறது. அவை அனைத்துமே ஒரே சித்தாந்தம் கொண்ட பேராசிரியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக மாற்று சிந்தனை கொண்ட மற்றவர்கள் செயல்படமுடியாத நிலையில் பல காலம் இருந்து வந்தது.
எனவே பள்ளிகளில் தொடங்கி கல்லூரி, பல்கலைக் கழகங்கள் வரை அவர்களின் எண்ணப்படியே பாடத்திட்டங்கள் மற்றும் ஆய்வுகள் இருந்தன; அவர்கள் எழுதிய புத்தகங்களே பல துறைகளிலும் பாடமாக வைக்கப்பட்டன. அவர்கள் சொல்வது மட்டுமே வரலாறாகவும், சமூக அறிவியலாகவும் பல ஆண்டு காலமாக தொடர்ந்து இருந்து வந்தது. எனவே சுவாமி விவேகானந்தரும், மகரிஷி அரவிந்தரும், ரவீந்தரநாத் தாகூரும், மகாத்மா காந்தியும் விரும்பிய தேசியம் சார்ந்த கல்வி என்பது மறுக்கப்பட்டது.
ஆகையால் காலனி ஆதிக்க காலத்தில் ஐரோப்பியர்களால் திணிக்கப்பட்ட சிந்தனா முறை கல்வி நிறுவங்களில் தொடர்ந்து இருந்து வந்தது. பாரம்பரியம் மிக்க நமது தேசத்தின் உண்மையான வரலாறும், நிஜமான நிகழ்கால நடைமுறைகளும் பள்ளிக்கூடம் தொடங்கி பல்கலைக் கழகம் வரை கற்றுக் கொடுக்கப்படவில்லை. எனவே நமது பின்னணி, பெருமைகள், சரியான நிகழ்கால நடப்புகள் என எவை பற்றிய சரியான புரிதலும் இல்லாத தலைமுறைகளை நாடு உருவாக்கி வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அதனால் பல பல்கலைக்கழகங்களில் நாட்டு நலன்களுக்கு விரோதமாகச் செயல்படும் சக்திகளின் தாக்கம் பெருகியது. தேசத்துக்கு விரோதமாகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கும், நக்சல்பாரிகளுக்கும் ஆதரவாக வளாகங்களுக்குள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. அதே சமயம் தேசத்துக்காகப் போராடும் இராணுவத்துக்கும், காவல்துறைக்கும் எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பப்படுகின்றன. எனவே இந்திரா அம்மையார் ஏற்படுத்திய மாற்றங்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் பெரும் நெருக்கடிகளை உருவாக்கி அவற்றின் போக்கை மாற்றி வந்துள்ளன. மேலும் பாடத்திட்டங்களையும் ஒரு சார்பான நிலைக்கு கொண்டு சேர்த்து மாணவர்களின் முழு வளர்ச்சியைத் தடுத்து வந்துள்ளன.
ஆனால் கடந்த பத்தாண்டுகளில் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் உயர்கல்வி அமைப்புகளில் மாற்றங்கள் வரத்தொடங்கியுள்ளன. தொடர்ந்து 2020 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்வித் திட்டம் இந்திய கல்வித் துறையின் போக்கில் ஒரு அவசியமான மாற்றத்தை முன் வைத்துள்ளது. அதன் பலனாக இன்று பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரையில் திறமையான பண்பட்ட மாணவர்களை அவர்கள் விரும்பும் துறையில் உருவாக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநிலங்களில் தமிழகத்தைப் பொறுத்த வரையில் திமுக ஆட்சிக் காலத்தில் அரசியல் நுழைந்தது. ஆரம்பத்தில் பள்ளிப்பாடத்திட்டத்தில் சிறு மாற்றங்களைத் தொடங்கினர். பாடப்புத்தகங்களில் ஆன்மிகம் சார்ந்த விசயங்கள் குறைக்கப்பட்டன. உயர்கல்வித் துறையில் முக்கிய பொறுப்புகளுக்கு வேண்டியவர்களை அமர்த்தும் போக்கு மெதுவாக நுழைந்தது.
நாடு முழுவதும் ஏறத்தாழ எல்லா மாநிலங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் மற்றும் ஆய்வுகள் - குறிப்பாக சமூக அறிவியல் துறைகளில்- ஒரே மாதிரியாக இடதுசாரி கருத்துகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. அவை மேற்கத்திய ஐரோப்பிய சிந்தனைகளை முன்வைக்கும் வகையில் உள்ளன. அதே சமயம் 1990 களுக்குப் பின்னர் உலக மயமாக்கல் கருத்துக்கள் பரவியிருந்த காலத்தில், மேலாண்மை மற்றும் வணிகப்படிப்பு சம்பந்தப்பட்ட துறைகளில், அமெரிக்க கோட்பாடுகள் மற்றும் அவர்களின் புத்தகங்கள் கல்லூரி –பல்கலைக் கழகங்களில் பிரபலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. ஆனால் எந்த விதத்திலும் நமது தேசிய மற்றும் மற்றும் மாநிலங்கள் சார்ந்த அடிப்படையில் பாடங்கள் இல்லை.
2001 ஆம் வருடம் புகழ்பெற்ற மேலை நாட்டுப் பொருளாதார வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் கடந்த இரண்டாயிரம் வருட உலகப் பொருளாதார வரலாறு குறித்து தீர்க்கமான ஆய்வுகளைச் செய்து புத்தகம் வெளியிட்டார். அதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியப் பொருளாதாரம் உலகில் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி செய்து மிகச் செல்வந்த நாடாக முதலிடத்தில் இருந்ததையும், கடந்த இரண்டாயிரம் வருடங்களில் மிகப்பெரும்பான்மையான காலம் இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் முன்னணியில் இருந்து வந்தையும் எடுத்துச் சொல்லியுள்ளார். ஆனால் அவையெல்லாம் நமது உயர்கல்வித்துறை பாடப்புத்தகங்களில் இன்னமும் கூட முழுமையாக வரவில்லை. ஏனெனில் நமது நாட்டின் உண்மைத் தன்மையை வெளிநாட்டு ஆய்வுகள் எடுத்துச் சொல்லியும், அவற்றை ஏற்பதற்குக் கூட ஒரு தயக்கம் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளது.
தமிழக பாடத்திட்டங்களில் துரதிர்ஷ்டவசமாக பெருமைகள் நிறைந்த நமது மாநிலத்தின் உண்மையான வரலாறு கூட இல்லை என்பது மிக வருத்ததுக்குரிய விசயமாகும். தொன்மையான கோவில்கள், கல்லணை என்பவையெல்லாம் பண்டைய தமிழர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவினைப் பறை சாற்றுகின்றன. கொடுமணல், சோழப் பேரரசின் உயர்தரக் கப்பல்கள் போன்றவை சர்வதேச வணிகத்தில் நமது முன்னோர்களின் திறமைகளை எடுத்துச் சொல்கின்றன. இன்றைக்கும் நமது மாநிலம் தேச அளவில் பொருளாதாரத்தில் முன்னணியில் இருப்பதற்கு உழைப்பும், கலாசாரமும் ஒரு சேரப்பெற்ற நமது மக்களின் பின்னணி காரணமாக உள்ளது. ஆனால் அவையெல்லாம் பற்றி எதுவும் கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை.
சங்க காலத்திலேயே உயர்தர இலக்கியங்களை உருவாக்கிய தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் வந்துதான் படிக்கச் சொல்லி கொடுத்தார்கள் என இன்னமும் சொல்லும் ஆட்சியாளர்கள் இருந்து வருகின்றனர். உலக முழுவதும் ஆரிய- திராவிடக் கோட்பாடு பொய் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுப் பல வருடங்கள் ஆகிய பின்னரும், ஆரியர் –திராவிடர் என மக்களைப் பிரித்துப் பேசி வரும் நிலைமை இங்குள்ளது.
மேலும் ஆட்சியாளர்களின் நம்பிக்கைகளுக்குத் தகுந்த மாதிரி உண்மைகள் மறைக்கப்படும் சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது. தமிழின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது ஆன்மிகம். அதை மறைக்க செம்மொழித் தமிழ் ஆய்வு மையத்தில் பக்தி இலக்கிய காலம் மற்றும் இலக்கியங்கள் அந்த நிறுவனத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. ஆன்மிகத்தின் பங்கை மறைத்து விட்டு தமிழின் வளர்ச்சியை எப்படி செம்மொழியாகப் புரிந்து கொள்ள முடியும்?
கடந்த இருபது வருட காலமாக மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்கள் தகுதி அடிப்படையில் இல்லாமல் அமைந்துள்ளது என்பதை முன்னாள் துணைவேந்தர் டாக்டர் அனந்த கிருஷ்ணன் போன்றவர்கள் எச்சரித்து வந்தனர். அதனால் உயர்கல்வித்துறை ஊழல் மயமாகி இன்று இந்தியாவில் அதிக அளவில் குற்றம் சாட்டப்பட்டும், நீதிமன்ற வழக்கில் சிக்கியும் உள்ள முன்னாள் துணைவேந்தர்களை அதிகமாக கொண்ட மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
எனவே தேசிய அளவில் அதிக கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிகம் பேர் உயர் கல்வி கற்கும் மாநிலமாக தமிழகம் இருந்தாலும், கல்வியின் தரம் இங்கு குறைவாக உள்ளது. இந்திய அளவில் படிப்பறிவு பெற்றவர்கள் விகிதம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பத்தாம் இடத்துக்கு கீழே உள்ளது. பள்ளி மாணவர்களின் தரம் தேசிய அளவில் குறைவாக இருப்பதை ஆசெர் அறிக்கைகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் பல பேர் தகுதி அடிப்படையில் இல்லாமல் தேர்வு பெற்று இன்னமும் வழக்குகளைச் சந்தித்துக் கொண்டு வருகின்றனர். அண்மையில் மாநிலத்தின் முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் மாநில அரசு துணைவேந்தர் நியமனங்களைத் தொடங்கியுள்ளதற்கான அறிவிப்பிலேயே அரசியல் தன்மை தென்படுகிறது.
நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் மாநில அரசு அதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது மாணவர்களுக்குச் செய்யும் துரோகம். பிற மாநிலங்களில் தாய்மொழி மூலம் உயர்கல்வி கொடுக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி பாடத்திட்டங்களில் தொழில் சார்ந்த கல்வி, நெகிழ்வுத் தன்மை, ஆசிரியர் நியமனங்களில் துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு, காலத்துக்கேற்றபடி புதிய பாடங்கள், ஆய்வுக்கான அதிக வாய்ப்புகள் எனப் பல மாற்றங்கள் வந்துள்ள போது, தமிழக மாணவர்களுக்கு அவை கிடைக்காமல் உள்ளது.
எனவே திமுக அரசு தமிழகத்தில் கடைப்பிடித்து வரும் கல்விக்கொள்கை முழுக்க அரசியலே மையமாக வைத்தே உள்ளது. கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் போதே இந்த சூழ்நிலை என்னும்போது, மாநிலப்பட்டியலில் இருந்தால் கல்வித்துறையில் பெரிய தவறுகள் நடக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கல்வித்துறை பொதுப்பட்டியலில் இருப்பதே தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நல்லது.
(கல்வி மலர், தினமணி, மே 22, 2025)
No comments:
Post a Comment