நிமிர்ந்து பறக்கும் இந்தியக் கொடி


அமெரிக்காவில் நிதி நெருக்கடி பெரிதாக உருவெடுத்து ஒரு வருட காலம் முடிந்து விட்டது. ஆரம்பத்தில் பிரபலமான முதலீட்டு நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க பெரிய காப்பீடு மற்றும் வங்கி நிறுவனங்கள் மீள முடியாத சிக்கல்களில் இருப்பதாக அறிவித்தன. நிதி சார்ந்த துறைகளைத் தொடர்ந்து, உற்பத்தி உள்ளிட்ட பிற துறைகளையும் அந்த நெருக்கடி பாதித்தது. வேகமாகப் பரவிய நெருக்கடி ஐரோப்பிய நாடுகளைத் தாக்கி, பின், உலகின் பல பாகங்களுக்கும் சென்றது. அதனால், அமெரிக்க நிதி நெருக்கடி உலகின் பொருளாதார நெருக்கடியாக மாறியது.நிறுவனங்களை அழிவிலிருந்து தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு நிவாரணம் அளிக்கவும் அமெரிக்க அரசு பெரும் தொகைகளை ஒதுக்கியது. சிக்கலில் இருந்த பெரிய கம்பெனிகளில் அரசே பங்குகளை வாங்கி, அவற்றைத் தத்தெடுத்துக் கொண்டது. பாதிப்புக்குள்ளான நாடுகள் பலவற்றிலும், அவர்களுக்குப் பொருத்தமான வகைகளில் திட்டங்கள் தீட்டப்பட்டு உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆயினும், நெருக்கடியின் தாக்கம் மேற்கத்திய நாடுகளை வெகுவாகப் பாதித்துள்ளன. அதனால், வளர்ச்சி விகிதங்கள் மிகவும் குறைந்தும், எதிர்மறையாகவும் உள்ளன. காலாண்டு வளர்ச்சி விகிதங்களை கணக்கிட்டுப் பார்த்தால், நெருக்கடிக்குப் பிந்தைய கடந்த ஒரு வருட காலத்தில், பெரும்பாலான நாடுகளில் குறைந்தது ஒரு காலாண்டிலாவது பூஜ்யத்துக்கும் கீழே வளர்ச்சி சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.



வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்பு, அந்த நாடுகளை பல வகைகளில் சிரமப்படுத்தி வருகிறது. வேலை இழப்புகளும், நிறுவனங்கள் மூடப்படுதலும் இன்னமும் குறைந்தபாடில்லை. அமெரிக்க நாட்டில் வேலையில்லாதோர் சதவீதம் 10ஐ நெருங்கியுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரையிலும் 90க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு விட்டன. அதனால், மக்களின் வாழ்க்கை இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது.அதே சமயம், இந்த நாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்த விவரங்கள் மற்றும் கணக்கெடுப்புகள், சில உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன. முக்கியமாக பொருளாதார நெருக்கடி அவர்களையும் பாதித்திருந்தாலும், அதனால் அவர்கள் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளவில்லை. சிக்கனமான நடைமுறைகளும், குடும்ப அமைப்பு முறையும், திட்டமிட்ட வாழ்க்கையும் அவர்களை ஆபத்திலிருந்து காத்துள்ளன. அங்கு தொழில் செய்யும் சில இந்தியர்கள் தற்போது, தங்களது தொழில்களை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த பல வருடங்களாகவே அதிக அளவில் பணத்தை தாய்நாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். நெருக்கடிக்கும் பின்னரும் அது குறையவில்லை. மாறாக அதிகரித்துள்ளது.



கடந்த 2008 - 09ல் மட்டும் வெளிநாடுகளிலிருந்து இங்கு அனுப்பப்பட்ட தொகை, 46 பில்லியன் டாலருக்கு மேல் உள்ளது. (இந்திய நாணய மதிப்பில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்) இது, அதற்கு முந்தைய ஆண்டில் அனுப்பப்பட்ட தொகையை விட, 15 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம். அதனால், வெளிநாட்டு வாழ் மக்கள் தமது தாய் நாடுகளுக்கு அனுப்பும் தொகைகளில் இந்தியர்கள் அனுப்புவது தான் உலகிலேயே அதிகமான தொகை.மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு சிக்கல்களில் உழலும் போது, அங்கு வாழ்வதற்காகச் சென்ற இந்தியர்கள் பெரிய பிரச்னைகளின்றி தொடர்ந்து முன்னேறுவதற்கான காரணம் என்ன? நிதி நெருக்கடிக்குப் பின், கடந்த ஒரு வருட காலத்தில் முக்கியமான நாடுகள் பலவற்றில் வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாகவும், பூஜ்யத்துக்கு கீழேயும் சென்று விட்டபோது, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு காலாண்டிலும் சராசரி வளர்ச்சி விகிதம் 6 சதவீதமும் அதற்கு மேலும் இருக்கக் காரணம் என்ன?




இதற்கான விடை தற்கால பொருளாதாரக் கோட்பாடுகளில் இல்லை. மாறாக, அது மக்களின் வாழ்க்கை முறைகளில் தான் உள்ளது. நவீன பொருளாதார கோட்பாடுகள் கடந்த 250 வருட காலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவானவை. அவை அவர்களது குறுகிய கால அனுபவங்களையும், தனிநபர் வாழ்க்கை முறைகளையும், எண்ணங்களையும் ஒட்டி ஏற்படுத்தப்பட்டவை.காலனி ஆதிக்க காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் நிலவி வந்த இயற்கையான வழிமுறைகளை ஐரோப்பியர்கள் அழித்தனர். பின்னர், அவர்களது முறைகளை காலனி நாட்டு மக்கள் மேல் திணித்து, அவையே உயர்ந்தது என்ற எண்ணத்தையும் பரப்பினர். ஐரோப்பிய முறைகளே எல்லாவிதத்திலும் மேலானவை என்றும், அவையே உலக முழுமைக்கும் சரியானதாக இருக்கும் என்றும் கருத்துக்களை உருவாக்கினர். உலகின் பெரும்பகுதி, அப்போது அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அது பெருமளவு சாத்தியமானது.பின்னர், ஐரோப்பிய பொருளாதாரம் சரிந்து அமெரிக்கா, உலகின் முதன்மையான பொருளாதாரமாக உருவெடுத்த போது, அமெரிக்க கருத்துக்களே உயர்வானவை என்ற கருத்து ஏற்படுத்தப்பட்டது. அதனால், கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக அமெரிக்க கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது.ஆனால், சென்ற வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அந்த எண்ணங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்து விட்டது.




ஐரோப்பாவின் முக்கிய நாடுகளான ஜெர்மனி, பிரான்சு ஆகியவையே கூட அமெரிக்க முறைகள், தங்களது நாடுகளுக்குப் பொருத்தமாக அமையாது எனச் சொல்கின்றன. அமெரிக்க கோட்பாடுகள், உலகின் பல பகுதிகளிலும் கடந்த சில வருடங்களாகவே பெருமளவு தோல்வியைத் தழுவி வருகின்றன.அதேசமயம் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் செயல்பாடுகளும், வேகமான வளர்ச்சியும் உலகைத் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன. இனி, உலகப் பொருளாதாரம் மீண்டெழுவதே கூட இவ்விரு நாடுகளின் தலைமையில் தான் நடக்கும் என, சர்வதேச நிபுணர்கள் கணித்து சொல்கின்றனர்.வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், கடந்த இரண்டாயிர வருட காலத்தில், உலகின் முதல் நிலை பொருளாதாரமாக இந்தியா விளங்கி வந்ததை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பின்னர், ஆங்கிலேயர்களின் சுரண்டல்களாலும், சுயநலக் கொள்கைகளாலுமே இந்தியாவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அப்படியானால், நாட்டின் பொருளாதாரத்தை உயர்ந்த நிலையில் வைத்திருக்கக் கூடிய அணுகுமுறைகள் நம்மிடம் பல நூற்றாண்டு காலமாகவே இருந்து வந்துள்ளது புலனாகிறது.



சுதந்திரம் வாங்கும் போது, இந்தியா ஒரு ஏழை நாடாக, கல்வியறிவு குறைந்த, தொழில் வளமில்லாத நாடாகவே இருந்தது. அதனால், உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதை இல்லை. ஆனால், ஒரு 60 வருட காலத்தில் எத்தனையோ சிரமங்கள் மற்றும் பிரச்னைகளுக்கிடையிலும், உலகிலேயே இரண்டாவது வேகமாக வளரக்கூடிய நாடாக உருவாகி உள்ளது.மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடிகளைக் கூட எதிர்கொண்டு, முன்னேறும் அளவுக்கு வலுவான தன்மையை கொண்டுள்ளது. அதனால் பொருளாதாரம், வளர்ச்சி என்பது பற்றியெல்லாம் தங்களுக்குத் தான் முழுவதும் தெரியும் என்று இதுவரை மார்தட்டிக் கொண்டிருந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகள், இந்தியாவின் பொருளாதார நிலைமை நன்றாக உள்ளது என இப்போது சான்றிதழ்களை கொடுக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்?அது, நமது மக்களின் வாழ்க்கை முறைகளில் பின்னிப் பிணைந்து அவர்களை வழி நடத்துகிறது. ஆம்... அது தான் இந்திய கலாசாரம். கடின உழைப்பு, எளிய வாழக்கை, அதிக சேமிப்பு, குடும்பமும், சமூகமும் சார்ந்த வாழ்வியல் முறைகள், பாசம், அர்ப்பணிப்பு, தொழில் முனையும் தன்மை இவையெல்லாம் அதன் வெளிப்பாடுகள்.



அன்னிய சக்திகள் நம்மை சிதைத்த போதும், அரசுகளும், கொள்கைகளும் மாறி மாறிப் போகும் போதும், இந்தியப் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடித்து அதை வழிநடத்தி செல்வது நமது நாட்டின் அடிப்படையான கலாசாரமே.சமூக நல விரும்பிகள், அறிஞர் கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், உற்பத்தி யாளர்கள், அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள் ஆகியோர் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்து தமது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. ஞாயிறு தோறும் வெளிவரும்.

- ப.கனகசபாபதி -கட்டுரையாளர், மேலாண்மை பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

DINAMALAR 13.12.2009

வாசகர் கருத்து

இந்திய தேசத்தைப் பற்றியும், பொருளாதாரத்தைப் பற்றியும் கட்டுரையாசிரியர் புதிய கண்ணோட்டத்தையும், நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ளார். இது போன்ற கட்டுரைகளை தினமலர் தொடர்ந்து வெளியிட வேண்டும்.
by V.S. Bharathanban,kovai,India 12/14/2009 6:42:46 PM IST

வணக்கம் மேலும் நன்றி ஐயா இந்த கருதுத்களுக்கு
by கணேஷ் ,maldives,Maldives 12/13/2009 3:18:34 PM IST

முற்றிலும் உண்மை. ஒன்று அதிகமான மனித ஆற்றல், இரண்டு கூட்டு குடும்பமுறை, மூன்று எதிலும் சிக்கனம் பார்த்து செயல்படும் குணம், நான்கு எல்லாவிதமான வளங்களும் தன்னகத்தே கொண்டுள்ளது, அரசு என்ற இயந்திரம் சரியானவர்களின் கையில் இருந்தால் உலகமே மூக்கில் கைவைத்து இந்தியாவை பார்த்து வியக்க வைக்கலாம். சுயநல அரசியல் வாதிகள் உள்ளவரை அது நடக்காது. ஆதங்கத்துடன் அப்துல் ரஹ்மான், சவுதி அரேபியா
by G. அப்துல் ரஹ்மான் ,Alkhobar, Saudi Arabia ,Saudi Arabia 12/13/2009 12:01:08 PM IST

1 comment:

SAVE HINDU said...

வாசகர் கருத்து

இந்திய தேசத்தைப் பற்றியும், பொருளாதாரத்தைப் பற்றியும் கட்டுரையாசிரியர் புதிய கண்ணோட்டத்தையும், நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ளார். இது போன்ற கட்டுரைகளை தினமலர் தொடர்ந்து வெளியிட வேண்டும்.
by V.S. Bharathanban,kovai,India 12/14/2009 6:42:46 PM IST

வணக்கம் மேலும் நன்றி ஐயா இந்த கருதுத்களுக்கு
by கணேஷ் ,maldives,Maldives 12/13/2009 3:18:34 PM IST

முற்றிலும் உண்மை. ஒன்று அதிகமான மனித ஆற்றல், இரண்டு கூட்டு குடும்பமுறை, மூன்று எதிலும் சிக்கனம் பார்த்து செயல்படும் குணம், நான்கு எல்லாவிதமான வளங்களும் தன்னகத்தே கொண்டுள்ளது, அரசு என்ற இயந்திரம் சரியானவர்களின் கையில் இருந்தால் உலகமே மூக்கில் கைவைத்து இந்தியாவை பார்த்து வியக்க வைக்கலாம். சுயநல அரசியல் வாதிகள் உள்ளவரை அது நடக்காது. ஆதங்கத்துடன் அப்துல் ரஹ்மான், சவுதி அரேபியா
by G. அப்துல் ரஹ்மான் ,Alkhobar, Saudi Arabia ,Saudi Arabia 12/13/2009 12:01:08 PM IST