உலகிற்கு வழிகாட்டுவோம்


கடந்த முப்பது வருடத்திய பெரும்பாலான மேற்கத்திய கோட்பாடுகள், மிகவும் உபயோகமில்லாதவையாகவோ அல்லது பெரும் தீங்கு விளைவிப்பனவாகவோ அமைந்து விட்டன!' - இதைச் சொல்லியுள்ளது யார் தெரியுமா? பொருளாதாரத் துறையில், 2008ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றவரும், அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பிரபலமான பேராசிரியருமான பால் கிரக்மேன்.
நவீன பொருளாதாரத்தில், உலக அளவில் நிபுணத்துவம் பெற்றுள்ள அவரே இப்படிச் சொல்லியுள்ளார் என்றால், அதற்குக் காரணம் இருக்க வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல், உலகப் பொருளாதார அரங்கில், ஐரோப்பிய நாடுகள் முக்கியத்துவம் பெற்றன. அதன் தொடர்ச்சியாக, அவர்களது வழிமுறைகளும், கோட்பாடுகளுமே சரியானவை என, உலகம் முழுவதும் போதிக்கப்பட்டன. காலனி ஆதிக்கமும், ஆங்கிலேயக் கல்வி முறையும், அவர்களின் வேலையை எளிதாக்கின. பின், இருபதாம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் செல்வாக்கு குறைந்து, அமெரிக்கா உலகின் முக்கியமான பொருளாதார சக்தியாக உருவெடுத்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும் முக்கியத்துவம் பெறத் துவங்கின. உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் மூலமாகவும், ஆலோசனைகள் என்ற பெயரிலும், அவர்களது சிந்தனைகள் மற்றும் வழிமுறைகள், பிற நாடுகளில் புகுத்தப்பட்டன.

கடந்த 1980ம் ஆண்டு இறுதியில், சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட நிகழ்வுகளால், அந்நாடு சிதறுண்டு போன பின், சந்தைப் பொருளாதார முறைதான் உலகுக்கு ஒரே வழியென, அந்தச் சிந்தனை சார்ந்த மேற்கத்திய நிபுணர்கள் மார்தட்டிக் கொண்டனர். அவர்களது பல்கலைக்கழகங்கள், சந்தைப் பொருளாதாரம் குறித்த பல புதிய கோட்பாடுகளை உருவாக்கின. அவைகளில் பலவற்றுக்கு நோபல் பரிசுகளும், உலகளவில் அங்கீகாரங்களும், பாடப்புத்தகங்களில் முக்கிய இடங்களும் கிடைத்தன. உலக நாடுகள் எதுவாயினும் அவற்றின் முன்னேற்றத்துக்கு, மேற்கத்திய சந்தை பொருளாதாரக் கோட்பாடுகளைக் கடைபிடிப்பது ஒன்றுதான் வழியென உறுதியாகச் சொல்லப்பட்டது. எனவே, உலகிலுள்ள பிற நாடுகள், தங்களின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் மேற்கத்திய கோட்பாடுகளையொட்டி மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டன.

மேற்கத்திய கோட்பாடுகளை அதிகமாகக் கடைப்பிடித்ததன் விளைவாக, உலகின் பல நாடுகள், கடந்த காலங்களிலேயே பெரும் சிரமங்களைச் சந்திக்க வேண்டி வந்தது. உதாரணமாக, 1997 - 98ல் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 2002ல், அர்ஜென்டினாவில் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டன. இவ்வாறு உலகின் வெவ்வேறு பகுதிகளிலும், தொடர்ந்து பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டுக் கொண்டு வந்த போதும், தங்களது கோட்பாடுகளே சரியென, மேற்கத்திய நாடுகள் மக்களை நம்பவைத்து வந்தன. ஆனால், 2008ம் ஆண்டிற்குப் பின் பகுதிகளில் அமெரிக்காவில் தொடங்கிய நிதி நெருக்கடி, வெகு சீக்கிரமே உலகப் பொருளாதார நெருக்கடியாக மாறியது. அது மேற்கத்திய நாடுகளை அதிகமாகப் பாதித்தது. அதன் விளைவாக, உலகளவில் மிகப் பெரிதாக விளங்கி வந்த பல நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த கம்பெனிகள், மிகுந்த பாதிப்புக்குள்ளாயின.

பெரிய பெரிய கம்பெனிகள் திவாலாவதைத் தடுக்கவும், வேலை இழந்தவர்களுக்கு உதவிகள் செய்யவும், அரசாங்கங்கள் அதிகளவு தொகையை செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயின. ஆயிரக்கணக்கான மக்கள், வேலைகளைப் பறிகொடுத்து, வீடுகளை இழந்து பரிதவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தங்களின் பொருளாதாரக் கோட்பாடுகளும், அணுகுமுறைகளும் மட்டுமே சரியானவை எனவும், அவற்றின் மூலமே உலகில் முன்னேற்றம் ஏற்பட முடியுமெனவும் உறுதியாகச் சொல்லி வந்த பல மேற்கத்திய நாடுகளுக்கு, இந்தப் பொருளாதார நெருக்கடி ஒரு பேரிடியாக அமைந்து விட்டது. உலகின் பிற பகுதிகளில், தங்கள் கொள்கைகள் தோல்வியைத் தழுவிய போது, பலவித காரணங்களைக் கூறி வந்த அவர்கள், தங்கள் மண்ணிலேயே சிக்கல்களைச் சந்தித்து வரும்போது, சரியான பதிலைக் கூற முடியாமல் வாயடைத்துப் போய் நிற்கின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்குப் பின் ஏற்பட்ட விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள், அவர்களது பொருளாதார சிந்தனைகள் குறித்த பல உண்மைகளை உலகிற்கு உணர்த்தியுள்ளன. ஆலன் கிரீன்ஸ்பேன் என்பவர், அமெரிக்க மத்திய வங்கியின் கவர்னராக பதினாறு வருடங்களுக்கு மேல் இருந்து ஓய்வு பெற்றவர். உலகின் பெரிய பொருளாதார நிர்வாகிகளில் ஒருவராக கருதப்பட்டு, அந்நாட்டின் உயர்ந்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்களைப் பெற்றவர். அவருடைய பதவிக் காலத்தில் தான், வங்கிகளின் வட்டி விகிதங்கள் மிகவும் குறைக்கப்பட்டன. "நாட்டு மக்கள் சேமிக்க வேண்டிய அவசியமேயில்லை' என, அவர் பல ஆண்டுகளாக சொல்லி வந்தார். அதனால், அங்கு ஏற்பட்ட நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு, அவரது அணுகுமுறைகளும் ஒரு முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. எனவே, நெருக்கடி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட செனட் கமிட்டி முன்னால் அழைக்கப்பட்டு அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அவர், பொருளாதார சிந்தனை குறித்த தனது கருத்துக்களில் தவறுகள் ஏற்பட்டு விட்டன எனவும், சந்தைப் பொருளாதார முறைகளில் குறைபாடுகள் உள்ளன எனவும், முதன்முறையாக தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 10 சதவீதமாக உள்ளது. நடுத்தர மற்றும் சிறு வங்கிகள் தொடர்ந்து திவாலாகி வருகின்றன. 2010ம் வருடத்தில் மட்டும், இதுவரை சராசரியாக ஒரு மாதத்திற்கு பத்துக்கும் மேல் என்ற அளவில் திவாலாகி உள்ளன. நிறுவனங்கள் மூடப்படுவதும் அதிக எண்ணிக்கையில் நடந்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களில், கிரீஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள், கடன் நெருக்கடியை சந்தித்தன. தற்போது, அயர்லாந்து நாட்டுக்கு பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்தும், பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்வதாகத் தெரியவில்லை. நவீன பொருளாதார முறை, மக்களை, தங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்யும் தனி நபர்களாக பாவிக்கிறது. இயற்கையான உறவுகளுக்கும், சமூகங்களுக்கும் அதில் முக்கியத்துவம் இல்லை. அவர்களது கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளெல்லாமே, தனி நபர் சித்தாந்தத்தை மையப்படுத்தியே அமைந்துள்ளன. அதன் விளைவாக, குடும்பங்களும், சமூகங்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. நுகர்வு கலாசாரம் பெருகி, சேமிப்புகள் குறைந்தன. சந்தைப் பொருளாதாரம் ஆசைகளையும், தேவைகளையும் மிகைப்படுத்தியது. அதனால், கடன் வாங்கி செலவு செய்யுமாறு மக்கள் தூண்டப்பட்டனர். அதிகப்படியான மக்கள் சேமிப்பின்றி கடன் வாங்கியதால், உள்நாட்டு சேமிப்பு மிகவும் கீழே சென்றது. ஆனால், செலவுகள் மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றன. எனவே, நிதி நெருக்கடியும், பொருளாதார நெருக்கடியும் உருவாயின.

பால் சாமுவேல்சன் என்பவர், புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார பேராசிரியராக விளங்கியவர்; நோபல் பரிசு பெற்றவர். அவரது பொருளாதார புத்தகம், பல லட்சம் பிரதிகள் விற்கப்பட்டு, உலக அளவில் சாதனை படைத்தது. நிதிக் கோட்பாடுகளில், "டெரிவேட்டிவ்'களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர். அவர் சில மாதங்களுக்கு முன்பு காலமானார். தன் மறைவுக்கு முன்பு, 2008ல், அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடியைப் பார்த்து, தன் பங்களிப்புகள் மூலம், தானும் ஒரு விதத்தில் நெருக்கடிக்கு பொறுப்பாகி விட்டதாக கூறினார். எனவே, மேற்கத்திய பொருளாதார நெருக்கடி, அவர்களது நவீன கோட்பாடுகளின் தோல்வியையே காட்டுகிறது. நெருக்கடி முடிந்து இரண்டு வருடம் கழிந்த பின்னரும், நிலையைச் சரி செய்து, உறுதியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க இயலாத அவர்களின் நிலைமை, மேற்கண்ட தோல்வியை உறுதி செய்கிறது.

உலக அளவில், அதிக எண்ணிக்கையில் நோபல் பரிசு பெற்ற நிபுணர்களைப் பெற்றிருந்தும், அமெரிக்கா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் வலுவிழந்து, நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கே வழி தெரியாமல் சிரமப்படுவதற்கு அடிப்படைக் காரணம், அவர்களது சித்தாந்தங்களின் வறட்சியே. இந்த சமயத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், நமது பொருளாதாரத்தின் அடிப்படை தன்மையை பற்றியது. எவ்வளவோ சிரமங்களுக்கு இடையிலும் நமது பொருளாதாரம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருகிறது. அதன் மூலம் உலக அளவில் ஒரு பொருளாதார சக்தியாகவும் உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் நமது கலாசாரமும், அது சார்ந்த தன்மைகளும் தான். நமது கலாசாரம், பண்பாடு மட்டுமல்ல, நமது பொருளாதார கொள்கைகளும் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டி தான். email: pkspathi@gmail.com

ப.கனகசபாபதி, பேராசிரியர்

No comments: