தலை நகர் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும்
பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி ஆறு பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு
அதன் பின் சில நாட்கள் கழித்து மருத்துவ மனையில் உயிருக்குப் போராடி மரணமடைந்த துயரமான
சம்பவம் நாடு முழுவதும் ஒரு பெரிய அதிர்வலையை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக டெல்லி
மட்டுமன்றி நாட்டின் பல நகரங்களிலும் எதிர்ப்புப் பேரணிகளும் போராட்டங்களும் நடைபெற்றன.
பின்னர் பாலியல் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து ஆலோசனைகளைக் கொடுப்பதற்காக
ஓய்வு பெற்ற நீதியரசர் வர்மா தலைமையில் மத்திய
அரசு ஒரு குழுவை அமைத்தது. விரைவிலேயே குழுவின்
ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் மத்திய அரசிடமும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அதையொட்டி
அரசு ஒரு அவசரச் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில்
அது பற்றி விவதாங்கள் மேற்கொள்ளப் பட்டு முக்கிய
முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
இதையொட்டி
அதிகமாக விவாதிக்கப்படாத சில முக்கியமான கருத்துகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன. மேற்கண்ட
விசயத்தை முதல் முறையாக சமூகமே முன்னெடுத்துச் செயல்பட்டது பாராட்டப்பட வேண்டியதாகும்.
மக்கள் பொதுவாகவே தங்களுடைய வாழ்க்கை, வேலைகள், பொறுப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுதான்
வழக்கம். பொதுவாக பெரும்பாலானவர்கள் வேலையை விட்டு வந்து வீதிகளில் இறங்கிப் போராடுவது
இல்லை. அதுவும் டெல்லி போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் பெரு நகரங்களில் சுத்தமாக இல்லை.
அண்மைக் காலங்களில் முதல் முறையாக சென்ற வருடம் தான் அன்னா ஹசாரே தலைமையில் லோக் பால்
மசோதா வேண்டி அமைதி வழிப் போராட்டம் நடந்த போது மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள்.
அது
டெல்லியில் மட்டுமன்றி நாட்டின் பிற நகரங்களிலும் பரவியது. அவரது உண்ணாவிரதத்தின் போது
மக்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் ஆதரவளித்து வந்தது அப்போதே ஒரு வித மக்களின் எழுச்சியாகத்
தெரிந்தது. ஆனால் லோக்பால் சம்பந்தமான போராட்டங்களுக்கு தலைமை இருந்தது. அன்னா ஹசாரே,
பாபா ராம்தேவ் போன்றவர்கள் முன்னின்று நடத்தினார்கள். அவர்களுக்குத் துணை புரிய வெளியில்
தெரிந்த பொது வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்த முகங்கள் இருந்தன. அதற்காக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு
தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால்
பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் ஏற்பட்ட எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் போராட்டங்கள்
தாமாகவே தோன்றின. அவற்றுக்குப் பின்னால் பிரபலமான முகங்கள் இல்லை. அவற்றை நடத்துவதற்குப்
பெரிய அமைப்புகள் எதுவும் இல்லை. ஆயினும் போராட்டம்
தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்றது. அதில் குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள் அதிக அளவில்
கலந்து கொண்டார்கள். அதுவும் எதிர்ப்பைக் காட்டுவதற்காக சம்பிரதாயத்துக்கு ஒரு நாள்
மட்டும் நடத்தப்படாமல், உண்மையில் மன வேதனையுடன்
மக்களின் ஒன்று பட்ட வேகத்தால் போராட்டம் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டது. அதனால்
அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொண்டு சில அவசியமான நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
அதன் விளைவாக முக்கியமான சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக பாலியல்
வன்முறை குறித்து அதிகார மட்டங்களில் நிலவிய
அக்கறையற்ற தன்மை மாறி வருகிறது.
ஆனால்
அதே சமயம் இன்னமும் தொடர்ந்து கற்பழிப்புகள் உள்ளிட்ட பாலியல் கொடுமைகள் குறித்த செய்திகள்
வந்த வண்ணமே உள்ளன. மக்களின் போராட்டம் மற்றும் அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குப்
பின்னரும் அவை வெகுவாகக் குறைந்ததாகத் தெரியவில்லை. பாலியல் வன்கொடுமைகள் திடீரென அதிகரித்து
விடவில்லை என்றும் ஊடகங்களின் செயல்பாடுகளால் அது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு விட்டதாகவும்
சிலர் வாதிடுகின்றனர். அது உண்மையாகவும் இருக்கக் கூடும். உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்
போது நமது நாட்டில் நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
முன்னேறிய
நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்க, ஐரோப்பிய
நாடுகளில் பாலியல் கொடுமைகள் பல மடங்கு அதிகமாக இருப்பதைப் புள்ளி விபரங்கள் எடுத்துக்
காட்டுகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2010 ஆம் வருடத்துக்கான ஆய்வுகள், சுவீடனில்
ஒரு இலட்சத்துக்கு 63.5 பேரும், அமெரிக்காவில் 27.3 பேரும் பாலியல் பலாத்காரத்தால்
பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறுகிறது. அதே சமயம் இந்தியாவில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்
1.8 பேர் எனத் தெரிவிக்கிறது.
இதை
இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் குற்றங்களை எந்த விதத்திலும் நியாயப் படுத்துவதற்காக
அல்ல. பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றும் நமது கலாசாரத்தில் ஒரு சிறு குற்றமும்
கூட நடக்காமல் இருக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவருடைய விருப்பமும் ஆகும். பெண்களுக்கு
எதிரான ஒரு சிறு தாக்குதல் கூட அந்த சமூகத்தின்
சீரழிவினையே காட்டுகிறது.
ஆனால்
நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது படிப்பு, சம உரிமை, தனி நபர் சுதந்திரம் ஆகியன
அதிகமாக இருக்கும் மேற்கத்திய நாடுகளில் தவறுகள் குறைவாக இல்லை என்பதும், மாறாக மிக
அதிகமாக உள்ளது என்பதுவும் ஆகும். ஆனால் நமது தேசத்தில் அவை குறைவாக இருப்பதற்குக்
காரணம் காரணம் நம்முடைய குடும்ப, சமூக அமைப்பு
முறைகள் மற்றும் நமது கலாசார பாரம்பரியம் ஆகும். நமது சிந்தனை முறைகள் பெண்களை தெய்வமாகவும் தாய்மையின்
வடிவமாகவும் மதிக்கும் தன்மையுடையவை. அதனால் தான் பெண்களை மிக உயர்வாக மதிக்கக் கூடிய தன்மை இன்னமும் நாடு முழுவதும் பரவலாக உள்ளது
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால்
அதே சமயம் இந்த மாதிரி விசயங்களில் நாம் பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து திருப்தியடைந்து
விடுவது மிகவும் தவறானதாகும். ஏனெனில் நமக்கென்று ஒரு பெரிய பொறுப்புள்ளது. நாம் நல்ல
பின் பலத்தைப் பெற்றுள்ளோம். இங்கு ஒவ்வொரு பெண்ணுக்கு ஏற்படும் தாக்குதலும் நமது தனித்
தன்மைக்கும் வாழ்க்கை முறைக்கும் விடப்படும்
சவாலாகும். எனவே இனி மேலும் பாலியல் வன்முறைகளைப் பார்த்து இன்னொரு துரதிர்ஷ்டமான நிகழ்ச்சி எனக் கருதக் கூடாது. அவற்றைத் தடுப்பதற்கு
என்ன முயற்சிகளையெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் கட்டாயமாக உடனே செய்ய வேண்டும்.
இல்லையெனில் நாம் பெரிய பாரம்பரியத்தைப் பெற்றவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு அர்த்தம்
இல்லாமல் போய் விடும்.. நம்மில் ஒரு பாதியாக உள்ள பெண்களுக்கு அடிப்படையான பாதுகாப்பைக்
கூடத் தர முடியவில்லை என்றால், நாம் எந்த விதமான சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம்
?
கடந்த
இரண்டு மாதங்களுக்கு மேலாக இது குறித்துப் பல போராட்டங்கள் மற்றும் விவாதாங்கள் நடந்து
முடியும் சூழ்நிலையில் அதே டெல்லியில் பிப்ரவரி முதல் வாரத்தில் உள்ளே இருப்பவர்கள்
தெரியாத மாதிரி உள்ள கண்ணாடிகளைக் கொண்ட வாகனம் ஒன்று வேகமாகச் செல்லும் போது தடுத்து
நிறுத்தப்படுகிறது. உள்ளே ஒரு பெண் நான்கு ஆண்கள். நான்கு பேரும் சேர்ந்து அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு
ஆட்படுத்தி பின்னர் நகரை விட்டு வெளியில் கடத்திக் கொண்டு போகும் போது வாகனத்தை நிறுத்தாமல்
போன போதுதான் அந்த நிகழ்வு தெரிய வருகிறது. எந்த தலைநகரில் கடந்த இரண்டு மாதங்களாக
பாலியல் வன் கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்களாகவும் விவாதாங்களாகவும் நடந்து அதன்
விளைவாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அங்கேயே இன்னமும் அதே விதமான கொடுமை நிகழ்ந்துள்ளது.
பள்ளி
மாணவியர், சிறுமியர் என வயது வித்தியாசமின்றி பாலியல் கொடுமை நடப்பதாக வரும் செய்திகள்
மனதைத் துளைக்கின்றன. அதிலும் படித்தவர்கள், பொறுப்பில் உள்ளவர்கள் ஆகியோர் இந்த மாதிரி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்னும்
போது நமது கல்வி முறை பற்றியே வருத்தம் ஏற்படுகின்றது.
மேலும் அதிகார மட்டத்தின் உயரத்தில் இருப்பவர்கள் பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவதும்
பின்னர் அவை பெரிதாகும் போது அவற்றில் இருந்து தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிக்க
முயல்வதுமாகத் தெரிகின்றது. எனவே எந்த விதமான பேர்வழிகள் அதிகார மையங்களை அலங்கரித்துக்
கொண்டுள்ளார்கள் என்பது குறித்தும் ஐயங்கள் எழுகின்றன.
பாலியல்
வன்முறைகள் குறித்து பாராளுமன்றம் முழுமையாக விவாதித்து தேவையான சட்டங்களை இயற்ற வேண்டுமென பெரிய எதிர்பார்ப்பு
ஏற்பட்டுள்ளது. அவற்றின் மூலம் தவறு செய்யும் ஒவ்வொருவரும் தப்பிக்க முடியாமல் தக்க
தண்டனைக்கு உள்ளாக்கப்படும் சூழ்நிலை உருவாக
வேண்டும். அதனால் அந்த தவறுகளைச் செய்வதற்கு சம்பந்தப் பட்டவர்கள் அச்சப்பட
வேண்டும். எனவே இது.உடனடியாகச் செய்யப்பட வேண்டிய அவசியமான முயற்சியாகும்.
ஆனால்
பாலியல் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் நாம் இது குறித்துப்
பல கோணங்களிலும் முழுமையாக அணுகுவது நல்லது. ஏனெனில் இது நமது இன்றைய சமூகத்தின் முன்
உள்ள ஒரு முக்கிய பிரச்சனை. சட்டங்கள் என்பவை தண்டனைகளை வைத்து குற்றங்களைத் தடுப்பதற்கான
வழிமுறைகள் ஆகும். குற்றங்களைக் குறைக்க இன்னொரு முக்கியமான வழி அந்தக் குற்றங்களே
நடைபெறாமல் இருக்கச் செய்வது பற்றியது. எனவே அந்தக் குற்றங்கள் நடை பெறுவதற்கான காரணிகளைக்
கண்டறிந்து அவற்றைச் சரி செய்வதும் மிக முக்கியமானதாகும். இன்று நம்முடைய பொது விவாதங்கள்
அனைத்தும் சட்டங்கள் மற்றும் தண்டனைகள் பற்றியே உள்ளன.
எனவே
நாம் அவற்றைத் தவிர பிற வழிகள் குறித்தும் விவாதித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் பலராலும் முக்கியமாகக் கருதப்படுவது இன்று நமது குழந்தைகளுக்கு உயர் நெறிகள், ஒழுக்கம்
மற்றும் மதிப்பீடுகள் குறித்து எந்த வித போதனைகளும் இல்லை என்பது பற்றிய கவலையாகும்.
இவை பற்றி நமது நாடு சுதந்திரம் பெற்ற பின் மத்திய மத்திய அரசால் அமைக்கப் பட்ட உயர்
மட்டக் குழுக்கள் கவலை தெரிவித்து, நமது விழுமியங்கள், உயர் நெறிகள் மற்றும் கலாசாரம்
குறித்த போதனைகள் கல்விக்கூடங்களில் கொண்டு வரப்பட வேண்டும் எனப் பலமுறை வலியுறுத்தியுள்ளன. உச்ச நீதி மன்றமும் இது குறித்துத்
தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
ஆயினும்
இந்த விசயம் குறித்துத் தேவையான நடவடிக்கைகள்
எடுக்கப்படாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய
விசயமாகும். நம்மிடத்தில் மதிப்பிட முடியாத பெரிய சொத்துக்கள் இருக்கின்றன.. இங்கிருப்பது
போல பண்பட்ட இலக்கியங்கள் வேறெங்கும் இல்லை. நாடு முழுவதும் பல மொழிகளிலும் நீதி நூல்கள் பரவிக் கிடக்கின்றன. இன்றைக்கு பகவத்
கீதை பல மேல் நாட்டுக் கல்வி நிறுவனங்களில் போதிக்கப்படுகிறது. இராமாயணமும் மகாபாராதமும்
உலகம் முழுதும் அறியப்பட்ட அற நெறி இலக்கியங்கள். ஆத்திச் சூடியும் கொன்றை வேந்தனும்
அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய உயர் தரமான வழிகாட்டிகள். ஆனால் நாம் அவற்றையெல்லாம்
போதிக்கத் தயங்குகிறோம். உயர் தரமான வாழ்க்கைக் கல்வியைப் போதிக்கக் கூடிய தமிழ் இலக்கியங்கள்
மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை.
ஆட்சியாளர்களின்
போலிச் சித்தாந்தங்கள் மற்றும் நம்பிக்கைகள் அற நெறிக் கல்வியைக் கொடுக்கத் தவறுகின்றன. அதனால் நமது முன்னோர்கள் வகுத்துக்
கொடுத்த வாழ்க்கைச் சூத்திரங்கள் நமது குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. ஒரு மனிதனின்
விழுமியங்கள் சிறு வயது முதற் கொண்டு விதைக்கப் பட வேண்டும். அப்போதுதான் அவன் வளரும்
போது நல்லவனாக தன்னைச் செதுக்கிக் கொள்ள முடியும். இந்திய பாரம்பரியத்துக்கான சர்வதேச
அமைப்பு பத்து வருடங்களுக்கு முன்னதாக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களிடையே
ஒரு ஆய்வை நடத்தியது. அது வழக்கமாக மாணவர்களுக்குத் தேவையானவை பற்றி பெற்றோர்களும்
ஆசிரியர்களும் மற்றவர்களும் கருத்துச் சொல்வதாக இல்லாமல் மாணவர்களே தங்களின் உள்ளக்
கிடக்கைகளைப் பற்றிச் சொல்வதாக அமைந்தது. அதில் முக்கியமான அம்சம் நாடு முழுவமுதுள்ள
மாணவர்களில் மிகப் பெரும்பாலனவர்கள் கலாசாரக் கல்வி தங்களுக்கு அவசியம் ஒருமித்த குரலில்
கூறியிருந்ததுதானாகும்.
எனவே
மாணவர்களே வேண்டுமென்று கேட்கக் கூடிய அத்தியாவசியமான ஒன்றை நாம் கொடுக்கத் தவறி வருகிறோம்.
மகாத்மா காந்தி, தாகூர் உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள் வலியுறுத்திக் கூறிய இந்த விசயத்தை நம்மால் மேலெடுத்துச்
செல்ல முடியவில்லை. ஆகையால் இந்தச் சமயத்தில் கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள், சமூக வல்லுநர்கள்
எனப் பலரும் இது குறித்துப் பேச வேண்டும். அதன் மூலம் கல்விக் கூடங்களில் ஒழுக்க நெறிகள்,
விழுமியங்கள் மற்றும் கலாசாரம் குறித்த அறிவு போதிக்கப்பட வேண்டும். அதற்காக அரசுகள்
கட்டாயப் படுத்தப்பட வேண்டும். கல்வி என்பது
நமது குழந்தைகளைப் பணம் சம்பாதிக்க உதவும் கருவிகளாக மட்டுமே மாற்றி வரும் நிலைமை மாற
வேண்டும்.
மாறி
வரும் உலக மயமாக்கல் சுழ்நிலையால் பொது மதிப்பீடுகளும் விழுமியங்களும் சமூக அளவில்
குறையத் துவங்கியுள்ளன. அதனால் பொருளாதாரமே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டு மற்றவையனைத்தும்
பின்னுக்குத் தள்ளப் படுகின்றன. நுகர்வு கலாசாரம்,
பணமே முக்கியமெனக் கருதும் போக்கு, சுலபமாகச் சம்பாதிக்க வேண்டும் என்னும் எண்ணம்,
அடுத்தவர்களைப் பற்றி அக்கறையில்லாத தன்மை ஆகியவை அதிகரித்து வருகின்றன. எனவே விழுமியங்களைத்
தாங்கிப் பிடிக்க உதவும் சமூகக் கட்டமைப்புகளின் தாக்கம் தளர்ந்து கொண்டுள்ளது. ஊடகங்கள்,
கல்வி முறைகள் எனப் பலவும் நவீனம் என்ற பெயரில் தனி நபர் சித்தாந்தம், குடும்ப மற்றும்
சமூக அமைப்புகளின் சீரழிவுகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது.
எனவே மேற்கண்ட விசயங்கள் குறித்தும் நாம் விரிவாக சிந்தித்து தேவையான நடவடிக்கைகளை
எடுக்க முயற்சிக்க வேண்டும்.
ஆகையால்
சட்டங்கள் மூலமாக பாலியல் வன்முறைகளைத் தடுக்க
நடவடிக்கைகளை எடுக்கும் அதே சமயத்தில், எந்த விதத் தவறுகளும் உருவாகமால் தடுப்பதற்குத்
தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த
விசயத்தில் எல்லாப் பொறுப்புகளையும் அரசாங்கத்திடம் மட்டுமே விட்டு விடாமல், படித்தவர்களும்
சமூகமும் சில அத்தியாவசியமான விசயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உலகின் மற்ற
எந்த நாட்டையும் விட இந்த விசயத்தில் நமக்குப் பெரிய பொறுப்புள்ளது. சர்வதேச அரங்கில்
மிக முக்கியமான நாடாக இந்தியா மேலெழுந்து வரும் இந்த காலகட்டத்தில் அடிப்படையான மாற்றங்கள்
குறித்து சிந்தித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது நமது கடமையாகும். அதற்காக இந்த
வாய்ப்பை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
( ஓம் சக்தி, மார்ச் 2013)
No comments:
Post a Comment