குறைந்து வரும் வேலைவாய்ப்புகள்

இந்தியா உலகின் மற்ற பெரிய பொருளாதாரங்களை விடவும் வேகமாக முன்னேறிச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ள நாடாகக்  கணிக்கப்படுகிறது.  உலக அளவில் இரண்டாவது அதிகமான மக்கள் தொகையையும் அதிக அளவிலான இளைஞர் பட்டாளத்தையும் நாம் பெற்றிருக்கிறோம். மக்கள் தொகையும் இளைஞர்களின் எண்ணிக்கையும் நமது வலிமையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் மக்களை வைத்துத் தான் ஒரு நாடு அதிக அளவில் முன்னேற்றத்தைக் காண  முடியும்.
மக்களின் திறமைகளையும் வலிமைகளையும் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நாட்டின் அடிப்படையான கடமையாகும். இந்தக் கடமையை எந்த அளவுக்கு ஒரு அரசாங்கம்  முழுமையாகச்  செய்கிறதோ,  அந்த அளவுக்கு  நாடு வெற்றியை நோக்கிச் செல்கிறது என்று சொல்லலாம். தற்போது நாட்டின் வளர்ச்சியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் வளர்ச்சி விகிதங்கள் உண்மையில் மக்களின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை. எனவேதான் தற்போதைய வளர்ச்சி என்பது உலகின் பல பகுதிகளிலும் முழுமையானதாக இல்லை.
தற்போது இந்தியா எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று வேலை வாய்ப்புகளைப் போதிய அளவில் உருவாக்குவதாகும். தேவையான அளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லையெனில் மக்களின் எண்ணிக்கை என்பது பெரும் சுமையாகிப் போகும். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாடும்  சிரமங்களுக்கு உள்ளாகி விடும். மேலும் மக்களின் திறமைகள் பயன்படுத்தப்படாமல் வீணாகி விடும்.
அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய நிதி நிலை அறிக்கை வருடம் ஒன்றுக்குப் புதிதாக பத்து இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும் என அறிவித்துள்ளது. ஆனால் அவை கூட அமைப்பு சார்ந்த பிரிவுகளின் கீழ் அரசு மற்றும் தனியார் துறைகள் மூலமாக ஏற்படும் நிரந்தரப் பணிகளல்ல.  அவற்றில் பெரும்பாலும் அமைப்பு சாராத துறைகள் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களால் உண்டாக்கப்படும் சாதாரண வேலைகளே ஆகும். இந்தியாவைப் போன்ற பெரிய வளர்ந்து வரும் நாட்டுக்குப் புதிதாக பத்து இலட்சம் வேலைகள் உருவாக்கம் என்பதே மிகவும் குறைவு. அது போதுமானதல்ல.   
சென்ற பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் பொருளாதாரக் கணக்கெடுப்பு கடந்த ஆண்டுகளில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் குறித்த புள்ளி விபரங்களை எடுத்து வைக்கிறது.  2004 ஆம் வருடம் தொடங்கி 2011 வரையான கடந்த எட்டு ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த துறைகளில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் கீழுள்ள அட்டவணையில்  கொடுக்கப்பட்டுள்ளன.   
அட்டவணை 1
அமைப்பு சார்ந்த துறைகளில் புதிய வேலைகள் உருவாக்கம்
 (மார்ச் 31, இலட்சங்களில்) 

2004
2005
2006
2007
2008
2009
2010
2011
ஆண்கள்
215.09
214.42
218.72
219.64
220.37
225.92
228.49
230.45
பெண்கள்
49.34
50.16
51.21
53.12
55.12
55.80
58.59
59.54
மொத்தம்
264.43
264.58
269.93
272.76
275.49
281.72
287.08
289.99




ஆதாரம்: வேலை மற்றும் பயிற்சிக்கான இயக்குநர் ஜெனரல், தொழிலாளர் மற்றும் வேலை அமைச்சகம், மத்திய அரசு
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் 2011 ஆம் வருடத்தில் புதியதாக வெறும் 2.9 இலட்சம் வேலைகளே உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. கடந்த எட்டு வருட கால கட்டத்தில் அதிக பட்சமாக 2009 ஆம் வருடத்தில் மட்டும் 6.23 இலட்சம் வேலைகள் உருவாகியுள்ளது. மேற்கண்ட எட்டு வருடங்களிலும் சேர்த்து  மொத்தமாக உருவாக்கப்பட்டுள்ள வேலைகள் 25.56 இலட்சம் மட்டுமே. சராசரியாக ஆண்டொன்றுக்கு எனக் கணக்கிட்டால் புதிய வேலைகள் 3.19 இலட்சம் மட்டும் தான்.
அதில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு எதுவும் இல்லை என்பது மிகவும் முக்கியமானதாகும். கடந்த எட்டு வருட காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படாதது மட்டுமின்றி, இருக்கின்ற வேலகளும் குறைந்து வருவதை  அட்டவணை 2 எடுத்துக் காட்டுகிறது.

         அட்டவணை 2 பொதுத்துறை நிறுவனங்களில் வேலைகள் 
                                                                         
2004 
2005
2006
2007
2008
2009
2010
2011
மத்திய அரசு
30.27
29.38
28.60
28.00
27.39
26.60
25.52
24.63
மாநில அரசுகள்
72.22
72.02
73.00
72.09
71.71
72.38
73.53
72.18
அரசு சார்ந்த அமைப்புகள்
58.22
57.48
59.09
58.61
57.96
58.44
58.68
58.14
உள்ளாட்சி அமைப்புகள்
21.26
21.18
21.18
21.32
19.68
20.73
20.89
20.53
மொத்தம்
181.97
180.07
181.88
180.02
176.74
177.95
178.62
175.48





மேற்கண்ட  அட்டவணை 2011 ஆம் வருடத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் 3.14 இலட்சம் வேலைகள் குறைந்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது. குறிப்பிட்ட எட்டு வருடத்தில் நான்கு வருடங்களில் வேலை உருவாக்கம் என்பதே சுத்தமாக இல்லை. அதனால் மேற்கண்ட எட்டு வருட காலத்தில் மொத்தமாக 6.49 இலட்சம் வேலைகள் குறைந்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாளர்களின்  எண்ணிக்கை குறைவதற்கு பெரும்பாலும் அவற்றின் செயல்பாடுகளே காரணமாகும். அரசியல் தலையீடுகள், நிர்வாகக் குறைபாடுகள், அக்கறையின்மை ஆகியவை காரணமாக பொதுத்துறை செயலிழந்து வருகிறது. கடந்த பல வருடங்களாகவே பொதுத்துறை குறித்த அதிகார வர்க்கத்தினரின் அலட்சியப் போக்கு  அந்நிறுவனங்களின் வீழ்ச்சிக்குக் மற்றொரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.  
இந்திய இரயில்வே நமது நாட்டில் உள்ள முக்கியமான பொது நிறுவனம். இன்றும் அதிக அளவில் வேலை கொடுக்கும் அமைப்பு. அதன் செயல்பாடுகள் வருடாவருடம் அதிகரித்து வருகின்றன. இரயில்களுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் அதில் உள்ள நிரந்தரப் பணியிடங்கள் குறைந்து வருகின்றன. அட்டவணை 3 இதைத் தெளிவாக்குகிறது. 
அட்டவணை 3 இரயில்வே வேலைகள் (இலட்சங்களில்)
வருடம்
வழித்தடங்களின் தூரம்( கி.மீ)
நிரந்தரப் பணியாளர்கள்
2001
81,865
15,49,385
2012
89,801
13,05,701

ஆதாரம்: இந்திய இரயில்வே ஆண்டறிக்கைகள், புள்ளி விபரங்கள்
2001 தொடங்கி 2012 வரையான பதினொரு வருட காலத்தில் ஓடும் வழித்தடங்கள் சுமார் பத்து சதவீதம் அதிகரித்துள்ளன. ஆயினும் நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை 2,43, 684 என்ற அளவில் குறைந்துள்ளதை அட்டவணை எடுத்துக் காட்டுகின்றது. கடந்த மூன்று வருடங்களில் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 25000 என்ற அளவில் பணியாளர்களின் அளவு குறைந்துள்ளது.  தேவைப்படும் பணியாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையிலேயே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
எனவே அமைப்பு சார்ந்த துறையில் உருவாக்கப்படும் வேலைகள் அனைத்தும் தனியார் துறைகள் மூலமே உருவாக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. கடந்த எட்டு வருட காலத்தில் தனியார் துறையில் உருவாகியுள்ள வேலைகள் பற்றிய விபரங்களை அட்டவணை 4 எடுத்துக் காட்டுகிறது.
அட்டவணை 4 தனியார் துறை வேலைகள்
தனியார் துறை
2004 
2005 
2006 
2007 
2008 
2009 
2010 
2011 
ஆண்கள்
62.02
63.57
66.87
69.80
74.03
78.88
81.83
86.69
பெண்கள்
20.44
20.95
21.18
22.94
24.72
24.98
26.63
27.83
மொத்தம்
82.46
84.52
88.05
92.74
98.75
103.77
108.46
114.52


2004 தொடங்கிய கடந்த எட்டு வருட காலத்தில் தனியார் துறையில் மொத்தம் 32.06 இலட்சம் வேலைகள் உருவாகியுள்ளன என்பது தெரிய வருகிறது. அதாவது வருடம் ஒன்றுக்கு நான்கு இலட்சத்துக்கும் சற்று அதிகமான எண்ணிக்கையில் வேலைகள் உருவாகியுள்ளன. 
எனவே நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான வேலைகள் அமைப்பு சாராத் துறைகள் மூலமே உருவாகும் என்பது தெளிவாகிறது. அமைப்பு சாராத் துறை என்பது பெரும்பாலும் அதிகம் படிக்காத சாதாரண மக்களால் சுய முயற்சிகளின் மூலம் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் துறையாகும். பொதுத்துறை உள்ளிட்ட அமைப்பு சார்ந்த துறைகள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் போதும் முடிந்த வரை நிரந்தரமில்லாத ஒப்பந்தப்பணி, தினக்கூலி போன்றவற்றின் மூலமே பணியாளர்களை அமர்த்திக் கொள்கின்றன. அந்த மாதிரி சூழ்நிலைகளில் பல சமயங்களில் வேலை செய்பவர்களுக்குப் பாதுகாப்பும் குறைந்த பட்ச வசதிகளும் கூட கிடைப்பதில்லை என்பது வருத்தத்துக்கு உரிய விசயமாகும்.  
ஆகையால் வேலை வாய்ப்புகள் பெருகுவதற்கு உடனடியாக அவசர நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாக வேண்டும். அதிகம் பேர்  வேலையில் ஈடுபடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ள  விவசாயம், உற்பத்தித் துறை, சிறு வணிகம், குறு மற்றும் சிறு தொழில்கள் போன்றவை  ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆனால் விவசாயம் ஏற்கெனவே நசிந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயத்தை விட்டு வெளியில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்ற வருடத்தில் உற்பத்தித் துறையின் செயல்பாடும் நன்றாக இல்லை. வளருவதற்கு அதிகமான வாய்ப்புள்ள சிறு வணிகத்துறை அந்நிய பன்னாட்டு  நிறுவனங்களுக்குத் திறந்து விடப்பட்டிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் மின்சாரப் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளால் சிறு தொழில்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளன.
எனவே இந்த வருடம பொருளாதார வளர்ச்சி விகிதமும் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் குறைந்துள்ளது. போதாக் குறைக்கு விலைவாசி உயர்வு மக்களைப் பாதித்து வருகிறது. ஆகையால்  தற்போதைய பொருளாதார நிலைமை பல வகைகளிலும் கவலை அளிப்பதாக உள்ளது. அதிலும் வேலை உருவாக்கத்தைப் பொறுத்த வரையில் உண்மை நிலவரம் மோசமாக உள்ளது.
போதிய செயல் திட்டங்கள் எதுவும் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலக மயமாக்கல் சித்தாந்தக் கொள்கைகள் நமது நாட்டின்  அடிப்படையான தொழில்களையும்  தரமான வேலை வாய்ப்புகளையும் பெருமளவு பாதித்து வருகின்றன. பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் சம்பந்தமாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட வேலைகளுக்கான செயல் குழு கடந்த இருபது வருட காலத்தில் வளர்ச்சி விகிதத்தை விட வேலை விகிதம் குறைவாக இருந்து வருவதை எடுத்துச் சொல்லியுள்ளது.  
ஒரு பக்கம் வெளி நாட்டு மூலதனம் மற்றும் பங்குச் சந்தைக்கான திட்டங்களும்,  இன்னொரு பக்கம் அரசியல் சார்ந்து குறிப்பிட்ட பிரிவு மக்களைத் திருப்திப்படுத்த மேற்கொள்ளப்படும்  ஜனரஞ்சக அறிவிப்புகளும் ஊடகங்கள் மற்றும் கருத்து சொல்பவர்களின் கவனத்தை மக்களின் உண்மையான பிரச்னைகளிலிருந்து திருப்பி விடுகின்றன. வளர்ச்சி விகிதம், நிதிப்பற்றாக்குறை போன்ற சில குறியீடுகளைப் பற்றி மட்டுமே அதிமாகப் பேசி முக்கியமான விசயங்கள் ஒதுக்கப்பட்டு விடுகின்றன.
அந்த வகையில் வேலை வாய்ப்பு சம்பந்தமான பிரச்னைக்குப் போதுமான அளவு  கவனம் கொடுக்கப்படவில்லை. வேலை உருவாக்கம் என்பது நமது எதிர்காலம் குறித்த ஒரு அடிப்படையான பிரச்னையாகும். அதற்கு நாம் உடனடியாகக் கவனம் கொடுக்கவில்லையெனில், நாடு எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

http://www.aazham.in/?p=3028 

( ஆழம், ஏப்ரல் 2013)