கலாசாரமே இந்திய வாழ்க்கை முறையின் ஆதாரம்


ஒரு நாட்டின் நோக்கம், வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் அதன் அடிப்படைத் தன்மையை ஒட்டியே அமைகின்றன. எந்தவொரு நாட்டுக்கும் அஸ்திவாரமாக விளங்குவன அங்குள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களே  ஆகும். அந்த அஸ்திவாரங்களைத் தாங்கிப் பிடித்து உயிர் கொடுப்பது கலாசாரமாகும். நாட்டின் ஒட்டு மொத்த தன்மையும் போக்கும் அதன் குடும்பங்கள்,, சமூகங்கள், மற்றும் கலாசாரத்தைச் சார்ந்தே அமைகிறது. 
இந்திய வாழ்க்கை முறை தொன்மையையும் சிறப்புக்களையும் பெற்றது. இந்தியக் குடும்ப மற்றும் சமூக அமைப்பு முறைகள் தனித்தன்மைகளைப் பெற்றவை. அதற்குக் காரணம் இந்த தேசத்தின் உயர்ந்த கலாசாரமாகும். பல்லாயிரமாண்டுகளாக இந்தியா உலகின் முன்னணி நாடாக விளங்கி வந்ததற்கு அதுவே அடிப்படை. அதனால் தான் சுவாமி விவேகானந்தர் நமது நாட்டின் எல்லா மாற்றங்களும் இந்த மண்ணின் தனித்தன்மையை ஒட்டியே அமைய வேண்டும் என வலியுறுத்தி வந்தார். சுதந்திரத்துக்குப் பிந்தைய நமது அறுபத்தைந்து வருட கால முன்னேற்றங்கள் அனைத்துமே நமது கலாசாரத்தின் தாக்கத்தையே வெளிப்படுத்துகின்றன.
குடும்பங்களின் ஆதாரமாக தர்மம்
குடும்பம் என்பது சமூகம் மற்றும் கலாசாரத்துக்கு மட்டுமன்றி பொருளாதாரத்துக்கும் அடிப்படை அங்கமாக அமைந்துள்ளது. பிறப்பு  முதல் இறப்பு வரை மனித வாழ்க்கை குடும்பத்தைச் சுற்றியே அமைகிறது. குடும்பத்தின் ஆதாரமாக தாய், தந்தை, மனைவி, கணவன், குழந்தைகள், தாத்தா, பாட்டி உள்ளிட்ட உறவுகள் இருக்கின்றன. இந்த உறவுகள்  அனைத்துமே தருமத்தை ஆதாரமாகக் கொண்டவை. அன்பு, பாசம், தியாகம், அர்ப்பணிப்பு, கடமையுணர்வு என்பதெல்லாம் அதன் வெளிப்பாடுகள்.
நமது வீடுகளில் சம்பாதிப்பவர்கள் அது தமக்கு மட்டுமே சொந்தம் என நினைப்பதில்லை. நாட்டு மக்கள் தொகையில் மொத்தம் 28.1 கோடி பேர் மட்டுமே வருமானம் ஈட்டுகின்றனர் என பயன்பாட்டு பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சில் (National Council of Applied Economic Research)  கூறுகிறது. அதாவது ஒவ்வொரு குடும்பத்திலும் 1.4 மட்டுமே வருமானம் ஈட்டுகின்றனர். மேலும் சுமார் 69 விழுக்காடு குடும்பங்களில் ஒருவர் மட்டுமே சம்பாதிக்கின்றனர்.
சம்பாதிப்பவர்கள் தங்களின் வருமானத்தைப் பெரும்பாலும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்குச் செலவு செய்யவே திட்டமிடுகின்றனர். அதில் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தங்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பொருட்படுத்தாமல் குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் மகிழ்ச்சிக்கும் செலவு செய்வது என்பது பரவலாக உள்ள நடைமுறை.  
வருமானத்தை மட்டுமன்றி எதிர்காலத்துக்கான சேமிப்புகளைக்  கூட தங்களுக்கென மேற்கொள்ளாத தன்மை நமது மக்களிடத்தில் மிகுந்துள்ளது. எதிர்காலம் குறித்த மக்களின் சேமிப்புகளுக்கான  காரணங்கள் பற்றிக் கேட்ட போது, தங்களின் முதுமைக் காலத்துக்காகச் சேமிப்பது என்பது மூன்றாவது காரணமாகவே சொல்லப்பட்டதாக  மேற்கண்ட ஆய்வு தெரிவிக்கிறது. குடும்பத்தின் எதிர்பாராத  சூழ்நிலைகளை சமாளித்தல்,   குழந்தைகளின் கல்வி ஆகிய இரண்டுமே  சேமிப்புக்கான முதலிரண்டு காரணங்களாக உள்ளன.
பாதுகாப்பு சார்ந்த முதலீடுகள்
 அதனால் நமது மக்களின் சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் எல்லாம் பாதுகாப்பு சார்ந்தவையாகவே உள்ளன. பங்கு சந்தை முதலீடுகள் போன்றவற்றைப்  பாதுகாப்பு குறைவெனக் கருதி ஒதுக்கி விடுகின்றனர். எனவே தான் வங்கி முதலீடுகள், தங்கம், வீடுகள் போன்ற சொத்துக்கள் வாங்குவதை மேற்கொள்கின்றனர். வங்கிகளில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும் முதலீடுகளைக் குறைப்பதில்லை.
இது ஏதோ படிக்காதவர்கள் மட்டும் செய்வதாக எண்ணக்கூடாது. கல்விக்குப் பேர் போன  தொழில் நகரமான கோவையில், பெண்கள் கல்லூரிகளில் பணி புரியும் நிதித் துறை சார்ந்த பேராசிரியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் கணிசமான பேர் தங்களின் வருமானத்தில் 50 விழுக்காடு வரை சேமிப்பவர்கள். அவர்கள் தான் மாணவர்களுக்கு மேல்நாட்டு நிதிச் சந்தைக் கோட்பாடுகள் மற்றும் பங்குச் சந்தையின் செயல்பாடுகளைப் பற்றி எல்லாம் சொல்லிக் கொடுப்பவர்கள். அந்த விசயங்களில் அறிவு பெற்றவர்கள். அவர்களின் சொந்த முதலீடுகளைப் பொருத்த வரையில் 95 விழுக்காடு பேர் பாதுகாப்பை மட்டுமே முதன்மையாகக் கருதுவதாக தெரிவித்தனர். 65 விழுக்காடு பேர் பங்குச் சந்தையில் எந்தக் காலத்திலும் முதலீடு செய்யப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்தனர்.
சம்பாதிப்பவர்களில் பெரும்பாலனவர்கள் புதியாகச் சொத்துக்கள் வாங்கும் போது தங்களின் பெயர்களின் பதிவு செய்வதில்லை.  அந்தச் சொத்துக்களும் கூட தங்களின் உறவுகளின் பெயரிலேயே இருக்க விரும்புகின்றனர். கோவையில் படித்துப் பணி புரியும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஆகியோரிடம் நடத்தப் பட்ட ஆய்வுகளில் 60 விழுக்காடு பேர் மனைவி, கணவன், குழந்தைகள், பெற்றோர், தாத்தா, பாட்டி என நெருங்கிய உறவுகளின் பேர்களிலேயே சொத்துகளை வாங்கியுள்ளது தெரிய வந்தது. வருமானம், செலவுகள் மற்றும் முதலீடுகள் குறித்து நடத்தப்பட்ட எல்லா ஆய்வுகளிலும் குடும்ப நிறைவு ஒன்றைத்தான் தங்கள் வாழ்க்கையின்  முதன்மையான நோக்கமாகக் கருதுவதாக மக்கள் தெரிவித்தனர்.
உறவுகளே வாழ்வின் உயிர்நாடி
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் கடமைகளே நிறைந்துள்ளன. ஒவ்வொருவரும் உறவுகள் மற்றும் சமூகத்துடன் பின்னிப் பிணைந்து செல்லுமாறு வாழ்க்கை முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது குடும்பத் தலைவன் மற்றும் தலைவியின் கடமையாக உள்ளது. பின்னர் அவர்கள் வயதான பின்னர் அவர்களைப் பாதுகாப்பது குழந்தைகளின் கடமையாகிறது. அது போலவே சகோதரன், சகோதரி, மாமா உள்ளிட்ட உறவுகள் பலவற்றுக்கும் கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன. 
பெண்களைத் தாய்மையின் வடிவமாக, தெய்வீகத்தின் அடையாளமாக மதிக்கும் தன்மை நம் பாரம்பரியத்தில் உள்ளது. அர்த்த நாரீஸ்வர தத்துவம், பெண் கடவுள்கள் நிறைந்திருப்பது, பூமி, கடல், மலை, நதி என இயற்கையின் பரிமாணங்களை அனைத்தையும் தாயாக வணங்கும் பண்பு ஆகியவை நமது கலாசாரத்தின் முக்கியமான அம்சமாக உள்ளது. வாழ்வின் முக்கியமான குடும்ப மற்றும் சமூக நிகழ்வுகளில் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது. முக்கியமான குடும்ப, சமூக நிகழ்வுகளில் மனைவியுடன் இருக்கும்போது மட்டுமே ஆணுக்கு இடம் கொடுக்கப்படுகிறது.
வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் நமது கலாசாரம் கொண்டாடுகின்ற மரபு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் பல நிலைகளும் சிறப்பிக்கப்படுகின்றன. தாயின் வயிற்றுக்குள் கருவாக உருவானது முதல் கடைசி வரைக்கும் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல விதமான வழிபாடுகள் மற்றும்  விழாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை எல்லாம் மக்களை வாழ்வின் அடுத்த கட்டத்துக்குத் தயார் செய்யும் வகையில் உள்ளது.
 நமது பாரம்பரியத்தில் இல்லறம் என்பதே  வாழ்க்கையை மேல் நிலைக்குக் கொண்டு செல்லும் சாதனமாகக் கருதப்படுகிறது.  திருமணம் என்பது நிரந்தர உறவாகவும் பின்னர் வரும் பிறப்புகளுக்கும் தொடர்வதாகவும் கருதும் சிந்தனை புனிதமானது. வாழ்வின் பல உறவுகளையும் பிரிக்க முடியாததாக தத்துவார்த்த ரீதியாகவும் செயல்பாட்டு முறைகளிலும் அமைத்துள்ள தன்மை நமது வாழ்க்கை முறைகளைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
உறவுகளைப் பேணிப் பாதுகாக்கப் பலவிதமான விழாக்கள், சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நிறைந்துள்ளன. இல்லற உறவுகள் நீடித்திருக்க நாடு பூராவும் விரதங்கள் மற்றும் விழாக்கள். பல வட மாநிலங்கள் குஜராத் உள்ளிட்ட பகுதிளில் மனைவியர் விரதமிருந்து குடும்பத்துடன் கொண்டாடும் ‘கர்வா செளத்.’ நன்கு  படித்து பணியில் இருக்கும் நவீன பெண்களும் இதைப் பிரபலமாகக் கொண்டாடுகின்றனர்.
பீகார் மாநிலத்தின் மிகப் பெரிய விழா ‘சாத் பூஜா’ என்பதாகும். அங்கு மட்டுமன்றி மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், தில்லி, வட கிழக்கு மாநிலங்கள், மும்பை என நாட்டின் பல பகுதிகளிலும் அந்த விழா கொண்டாடப்படுகிறது. மனித வாழ்க்கையை பூமியில் நிலைத்திருக்கச் செய்வதற்காக சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தவும், குடும்பத்தினருக்கு நல்லது நடக்க வேண்டி வழிபடவும் அந்த விழா நடத்தப்படுகிறது. அந்த வகையான திருவிழாக்கள் மற்றும் நோன்புகள் தென் மாநிலங்களிலும் உள்ளன. காரடையான் நோன்பு, வரலட்சுமி விரதம் என வெவ்வேறு பெயர்களில் அவை கொண்டாடப் படுகின்றன.
அவ்வாறே சகோதர-சகோதரிகள், பிறந்த வீடு சம்பந்தப்பட்ட உறவுகள்  எனப் பலவற்றையும்  புதுப்பிக்கும் முறை நிலவுகிறது. அது மட்டுமன்றி இயற்கை, விலங்குகள், இயந்திரங்கள் என அனைத்தையுமே மதித்து வழிபடக் கூடிய தன்மை நமக்குள்ளது.
சமூகங்களின் பங்கு
உறவுகளின் விரிந்து செல்லும் கூட்டங்களும், தொடர்புகள் மற்றும் நட்புகளின் பங்கும் இந்திய சமூகங்களில் முக்கியமாக அமைகின்றன. குடும்ப வட்டங்களிலிருந்து இருந்து உலகமே ஒரு குடும்பம் என்னும் அணுகுமுறை வரை நமது கலாசாரத்தின் பரிமாணங்கள் சமூகத்தின் பல மட்டங்களிலும் பரவிக் கிடக்கிறது.   
சமூகம் சார்ந்த உறவுகள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் பெரும் பங்கு வகிக்கின்றன. அதன் மூலம் யாருமே தனி நபரல்ல என்னும் உணர்வு உண்டாகிறது.  திருமணம், சிரமங்கள், விபத்துகள், இறப்பு என ஒருவரின் முக்கிய சமயங்கள் எல்லாவற்றிலும் சமூகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. குடும்பங்களில் இறப்பு ஏற்படும் காலத்தில், சுற்றங்கள் அந்தக் குடும்பத்தின் அத்தனை பொறுப்புகளையும் குறிப்பிட்ட கால முழுதும் எடுத்துக் கொள்வது நாட்டின் பல பகுதிகளிலும் நடை முறையில் உள்ளது.
சமூகங்களுக்குள் உள்ள உறவுகள் முன்னோர்களையும் குல தெய்வங்களையும் வைத்து அமைகின்றன. அனைத்து சமூகங்களுக்கும் தனித்தன்மை வாய்ந்த வரலாறுகள் உள்ளன.  அவை அனைத்துமே தெய்வங்களுடன் இணைக்கப் பெற்று பெரிய வரலாறுகளைக் கொண்டு விளங்கி வருகின்றன.
சமூகங்களின் உறவுகள் சார்ந்த முறைகள் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றன. அதனால் சமூக மூலதனம் பெருகி மக்களின் இணைந்து செயல்படும் தன்மை, வளர்ச்சி ஆகியன அதிகரிக்கும் தன்மை உள்ளது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சமூக மூலதனம் பெரும் பங்கு வகிப்பதை ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன. உலக அரங்கில் ஜவுளித் துறையில் திருப்பூர் முன்னணியில் வருவதற்கு அங்கு நிலவும் உறவுகள்  சார்ந்த நிதி திரட்டும் முறைகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன என உலக வங்கியின் உலக வளர்ச்சி அறிக்கை 2001 தெரிவிக்கிறது. அதே போல குஜராத்தின் படேல் சமூகத்தினர் தங்களது உறவு முறைகளைக் கொண்டே அமெரிக்காவில் மோட்டல் துறை, உலக அளவில் வைர வியாபாரம் ஆகிய தொழில்களில் முன்னணியில் உள்ளது தெரிய வருகிறது.
இந்தியக் கலாசாரத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் வித்தியாசமின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பக்குவமாகும். யாரையுமே எதிரியாகப் பார்க்கக் கூடிய தன்மை நமது பாரம்பரியத்தில் இல்லை. மாறாக வெளியார்களையும் உயர்ந்த மரியாதையுடன் உபசரிக்கும் தன்மையை நாம் பெற்றுள்ளோம். அதுதான் நமது நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் காரணமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் தொழில்களில் பல்வேறு பிரிவு மக்களும் இணைந்து செயல்படும் தன்மை உள்ளது.
 சுய நிர்வாகம்
மேலும் சமூகங்கள் தம்மை சுயமாக நிர்வகித்துக் கொள்ளும் தன்மை உள்ளது. கடலோர மாவட்டங்களில் பட்டினவர் சமூகம் தங்களுக்கேயே நிரந்தரமான நிர்வாக அமைப்பு முறைகளை ஏற்படுத்திக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறான முறைகள் வெவ்வேறு வகைகளில்  நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன. அதனால் குற்றங்கள் தடுக்கப்படுகிறது.  வழக்குகள் மிகவும் குறைவு.
பொதுச்சொத்துக்களை சமூகங்களே சரியான முறையில் பாதுகாக்க முடியும் என நோபெல் பரிசு பெற்ற அமெரிக்க பேராசிரியர் எலினர் ஓஸ்ட்ராம் தனது ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளார். அரசாங்கமோ தனியார் துறையோ அவற்றைப் பொருத்தமாகச் செய்துவிட முடியாது என அவரது ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது நாட்டில் பழைய காலந்தொட்டு சமூகங்களே இவ்விதப் பொறுப்புகளை ஏற்று நடத்தி வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்னமும் பல விசயங்கள் சமூகங்களாகவே நடத்தப்படுகின்றன. அதனால் அரசுக்கும் சுமைகள் இல்லை.
கலாசாரம் சார்ந்த பொருளாதாரம்
பொருளாதாரம் என்பது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. எனவே அது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் கலாசாரம் ஆகியவற்றின் உருவாக்கமே ஆகும். ஆகையால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அதுவே காரணமாக அமைகிறது. நமது தேசம் இன்று இவ்வளவு குழப்பங்கள், தவறுகள் மற்றும் சிரமங்களையும் மீறி முன்னேறி வருவதற்குக் காரணமே கலாசார அடிப்படைகளாகும்.
சேமிப்புகள் நமது நாட்டில் அதிகமாக உள்ளன. கடந்த பல வருடங்களாக அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சுதந்திரம் வாங்கிய பின்னர், ஏறத்தாழ பாதிப்பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாடி வந்தனர். ஆனால் அப்போதே சேமிப்பு சுமார் ஒன்பது விழுக்காடாக இருந்தது. கடந்த சில வருடங்களாக அது முப்பது விழுக்காட்டைத் தாண்டி விட்டது. அதற்குக் காரணம் நமது மக்களின் கடமை உணர்வு ஆகும். அதுதான் ஒவ்வொருவரையும் தங்களால் முடிந்த அளவு சேமிக்கத் தூண்டுகிறது. அதனால் தான் நமது மக்கள் எங்கிருந்தாலும் சேமிப்புகளில் ஈடுபடுகின்றனர். உலக அளவில் வெளி நாடுகளில் வாழும் மக்கள் தங்களின் தாய் நாடுகளுக்கு அனுப்பும் தொகைகளில்  அதிக அளவு இந்தியர்களாலேயே அனுப்பப்படுகிறது.
நமது தொழில்கள் வளருவதற்குக் காரணம் மக்களின் தொழில் முனையும் தன்மையாகும். எவ்வளவோ சிரமங்களுக்கிடையிலும் முன்னேற வேண்டும் என்னும் உந்துதல் மக்களைப் பல வித முயற்சிகளில் ஈடுபட வைக்கிறது. அதற்கு குடும்பங்களே துணை நிற்கின்றன. உறவுகளும் சமூகங்களும் உதவுகின்றன. அதனால் தொழில்கள் வளருகின்றன. ஆகையால் தான் நமது நாட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் இன்னமும் பாதியளவுக்கு மேல் உள்ளனர். அதுவே அமெரிக்கா போன்ற நாடுகளில் வெறும் ஏழு விழுக்காடாகவே உள்ளது.
தொழில்களுக்குத் தேவையான மூலதனங்கள் ஏறத்தாழ அனைத்துமே  தொழில் முனைவோர்களின் சொந்த முயற்சியால் உறவுகள் மற்றும் தொடர்புகளை வைத்து திரட்டப்படுகின்றன. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. சிறு மற்றும் மத்திய தர தொழில்கள் எல்லாவற்றிலுமே சூழ்நிலைகள் இவ்வாறுதான் உள்ளன. பெரிய தொழில்களுக்குத் தேவையான நிதியைக் கொடுப்பதிலும் மக்களின் சேமிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் நாட்டுப் பொருளாதாரம் உள்நாட்டு மூலதனம் சார்ந்ததாக அமைந்துள்ளது. அதனால் வெளி நாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து நாம் வாழ வேண்டிய அவசியமில்லாமல் இருக்கிறது.
 நிதிகளைச் சேர்ப்பதிலும் அவற்றைத் தொழிலுக்காக திரட்டுவதிலும் நமது மக்களின் முறை அலாதியானது. இன்றைக்கு சில்லறை வணிகம் உள்ளிட்ட துறைகளில் முன்னணியிலுள்ள நாடார் சமூகம் ஆரம்ப காலங்களில் தமது தொழில்களுக்கான நிதியை சமூகத்திடமிருந்தே திரட்டியது. அதற்கு அவர்கள் கண்டு பிடித்த முறைதான்  மகமை என்பதாகும். அதனால் இன்று ஒட்டு மொத்த சமூகமும் பல துறைகளில் முன்னேறி உள்ளது. இந்த மாதிரி முறைகள் எல்லாம் உயிப்பான சமூகங்கள் தங்களின் கலாசார வழிகளை ஒட்டி ஏற்படுத்தப்பட்டவை.
பொருளாதாரத்தில் குடும்பங்கள்
இந்தியப் பொருளாதாரம் குடும்பம் சார்ந்ததாகவே சார்ந்துள்ளது. ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் சுமார் 57 விழுக்காடு குடும்பம் சார்ந்த அமைப்புகள் மூலமே வருகிறது. சேமிப்புகள், வேலை வாய்ப்புகள், முதலீடுகள், வியாபாரம் எனப் பலவற்றிலும் இவற்றின் பங்குகள் தான் அதிகமாக உள்ளது. நாட்டிலுள்ள பெரிய கம்பெனிகளை எடுத்துக் கொண்டாலும் 95 விழுக்காட்டுக்கு மேல் குடும்பம் சார்ந்தவையாகவே உள்ளன. எனவே அரசு மற்று அமைப்பு சார்ந்த துறைகளின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் பொருளாதார நெருக்கடிகள் நம்மை வெகுவாகப் பாதிப்பதில்லை.
இந்திய வாழ்வின் அடிநாதம் கலாசாரமே
எனவே நம்மை எல்லா விதத்திலும் வாழ வைத்துக் கொண்டிருப்பது நமது கலாசார அடித்தளங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் நாம் அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது அவசியமாகிறது. அப்போதுதான் நமது குடும்பங்களையும் சமூகங்களையும் பொருளாதாரத்தையும் காப்பாற்ற முடியும். கலாசாரத்தைத் தொலைத்து விட்டு பிறவற்றைக் காப்பாற்ற முடியாது.  
மேலும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார சமூகக் கருத்துகளும் அவர்களின் வழிமுறைகளும் தோல்வியைத் தழுவி வருகின்றன. இந்த சமயத்தில் இந்திய வழிமுறைகள் உலக முழுமைக்கும் முன் மாதிரியாக விளங்கி வருகிறது. நமது பாரம்பரியத்தின் பரந்த சிந்தனை, அரவணைப்பு, ஆன்மிக அணுகுமுறை உள்ளிட்ட குணங்கள் உலக முழுமையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக உள்ளன. உலகின் பிற வாழ்க்கை முறைகளில் இந்த நோக்கு இல்லை.
எனவே நமது கலாசாரம் காப்பாற்றப்பட வேண்டும். ஒவ்வொருவரும் அதை கடமையாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதுவே நாம் சுவாமி விவேகானந்தருக்குச் செய்யும் மரியாதையாக அமையும்.  

     http://vivekanandam150.com/?p=2875
( விவேகானந்தம்150.காம் இணைய தளம், ஏப்ரல் 4, 2013)

No comments: