அதிகரிக்கும் பொருளாதார சிரமங்கள்: வலுவான அடிப்படைகளும் தவறான செயல்பாடுகளும்


இந்திய தேசத்தைப் போலவே இந்தியப் பொருளாதாரமும் விசாலமானது. தொன்மையானதும் ஆழமானதும் கூட. அதனாலேயே நவீனக் கல்வி கற்றவர்களுக்கு அது பிடிபடுவதில்லை. அதன் சரியான வரலாறு மற்றும் தன்மைகள்  புத்தகங்களில் எடுத்துச் சொல்லப்படுவதில்லை. எனவே படித்தவர்களால் அதைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள முடிவதில்லை.  மேற்கத்திய கோட்பாடுகள் மற்றும் அணுகு முறைகளை மட்டுமே சரியென நம்பும் நிபுணர்களுக்கு  இங்கு நிலவும் அடிப்படை விசயங்களின் உண்மைகள்  தெரிவதில்லை. 

இந்த மண்ணை, இங்கு வாழும் சாமானிய மனிதனை, சாதாரண  விவசாயியை, கிராமங்களை, சிறு தொழில்களைப் புரிந்து கொள்ளாத எவராலும் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இந்தியப் பொருளாதாரம் பரந்து விரிந்து கிடக்கின்ற இந்த தேசத்தின் பல கோடிக்கணக்கான குடும்பங்களில், அவை சார்ந்த சமூகங்களில் உயிர் வாழ்கிறது. அதன் அடிநாதம் பல ஆயிரக்கணக்கான கிராமங்களிலும் நூற்றுக்கணக்கான சிறு நகரங்களிலும் வேரூன்றியிருக்கிறது. அதைப் பல்கலைக்கழகப் புத்தகங்கள் மூலம் புரிந்து கொள்ள முடியாது.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உருவான கோட்பாடுகளை வைத்து இந்தியப் பொருளாதார நடைமுறைகளை அணுகுவது என்பது மிகவும் தவறான காரியம். பொருளாதார சிந்தனைகள் மற்றும் அணுகு முறைகள் எல்லாமே குடும்பம், சமூகம், மக்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசாரம் சார்ந்து நிற்பவை. ஆனால் பொருளாதாரத்தை மக்களிடமிருந்து பிரித்து அதைத் தனியாகப் பார்ப்பது என்பது மேற்கத்திய பொருளாதார சிந்தனைகளின் அடிப்படையாக உள்ளது.

அதனால்தான் அவர்களின் வழிமுறைகள் அங்கேயே தோல்வியடைந்து வருகின்றன. அதனால் மக்கள் கடுமையான சோதனைகளைச் சந்தித்து வருகின்றனர். உலகின் பல பகுதிகளிலும் அவர்களின் கோட்பாடுகள் தீமை பயப்பனவாகவே அமைந்துள்ளன. இந்தியாவிலும் அந்தக் கோட்பாடுகளின் தாக்கங்கள் தொடர்ந்து மக்களின் முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக அமைந்து வருகின்றன. ஏனெனில் மக்களைச் சார்ந்து அமையாத  எதுவும் நீடித்து நிற்க முடியாது.

நமது நாட்டில் சுதந்தரத்துக்குப் பின்னர் பெருமளவு பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொடர்ந்து வந்த அரசுகளின் அணுகுமுறைகள் மற்றும் கொள்கைகள் பெரும்பாலும் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குப் பொருத்தமில்லாதவையாகவே அமைந்து வருகின்றன. ஆயினும்  அவற்றையெல்லாம் மீறி நாடு பல துறைகளில் வளர்ச்சியைக் கண்டு  வருகின்றது. அதற்குக் காரணம் இங்கு வாழும் மக்களின் இயற்கையான பொருளாதார நோக்கு, வாழ்க்கை முறைகள் மற்றும் அடுத்த தலைமுறைகளுக்காக வாழும் எண்ணம் ஆகியன.

சிக்கனமும் சேமிப்பும் இங்கு இயற்கையாகவே உள்ளது. அவற்றைப் பாடப் புத்தகங்கள் மூலம் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. எதுவுமே படிக்காத கடைக்கோடியில் வாழும் சாதாரண மனிதனுக்குக் கூட அவற்றின் முக்கியத்துவம் தெரியும். குடும்பத்துக்காக வாழக் கூடிய பண்பு, அதற்கான உழைப்பு, தேவையான முயற்சிகள், பிறருக்கான அர்ப்பணிப்பு, தியாக மனப்பான்மை  ஆகியன இங்கு காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பண்புகள். அவையெல்லாம்தான் இந்தியப்  பொருளாதாரத்துக்கு ஆதாரமாக விளங்கி வருகின்றன.

 அதனால்தான்  எத்தனையோ சிரமங்களையும் மீறி நாடு தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. எனவே பல துறைகளில் முன்னேற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.   இப்போது உலக அளவில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. தொடர்ந்து சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் வேகமாக வளரக் கூடிய பொருளாதாரமாக விளங்கி வருகிறது. தொழில்கள், வியாபாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் சர்வதேச அளவில் தன்னுடைய முத்திரையைப் பதித்து வருகிறது.

அதே சமயம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் 2008 ஆம் வருடத்தில் வெளிப்பட்ட பொருளாதார நெருக்கடி அவர்களைப் பெருமளவு பாதித்தது. அதனால் ஏற்பட்ட  சிக்கல்களிலிருந்து அந்த நாடுகள் இன்னமும் முழுமையாக மீண்டு வரமுடியாத நிலையில் உள்ளன. மேலும் அந்த நாடுகள் சரியென நம்பி வந்த கோட்பாடுகளும் அவர்களின் பொருளாதார அணுகுமுறைகளும் பெருமளவு தோற்றுப் போய்விட்டன.  

எனவே உலக அளவில் மேற்கத்திய முறைகளுக்கு ஒரு மாற்றாக இந்திய முறைகள் அங்கீகாரம் பெற்று வருகின்றன. மேற்கு நாடுகளின் பல பிரபலமான பல்கலைக் கழகங்கள், மேலாண்மை நிறுவனங்கள், ஆய்வு மையங்கள்  ஆகியன இந்திய முறைகளைப் பற்றி அறிந்து கொள்ள இங்கு அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டுள்ளன. நமது பொருளாதாரம், வியாபாரம் மற்றும் மேலாண்மை முறைகளைப் பற்றி மட்டுமன்றி, ஆன்மீகம், சமூகம், கலாசாரம் மற்றும் நிர்வாக முறைகளைப் பற்றியும் கூட அவர்கள் இங்கு வந்து ஆய்வு செய்து கொண்டுள்ளனர்.  அண்மையில் நடந்த கும்பமேளாவைப் பற்றிப் படிப்பதற்காகப் பெயர் பெற்ற அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக் கழகம் பேராசிரியர்களையும் ஆய்வாளர்களையும் அனுப்பியது.

ஆகையால் இந்தக் கால கட்டம் இந்திய நாட்டுக்கு ஒரு அரிய வாய்ப்பைக் கொடுத்துள்ளது. உலகில் சக்தி வாய்ந்தவையாக விளங்கும் பல நாடுகளும் இந்திய அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகள் குறித்து அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளன.  எத்தனையோ நெருக்கடிகளுக்கு இடையிலும் மேலெழுந்து வரும் நமது நாட்டின் பொருளாதார முறைகள் பிற  நாடுகளில் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மேலும் எதிர்காலம் குறித்த சர்வதேச கணிப்புகள் எல்லாமே இந்தியா மேலும் முன்னேறிச் செல்லும் என ஒருமித்த குரலில் உறுதியாகக் கூறுகின்றன. 
.
அதே சமயம் நமது நாட்டில் அண்மைக் காலமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகள் மிகவும் கவலை அளிப்பவையாக உள்ளன. 2003-04 ஆம் வருடம் தொடங்கி நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகமாக இருந்து வந்தது. 2011-12 வரையான ஒன்பது ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள் ஒன்பது விழுக்காட்டுக்கு மேலாக வளர்ச்சி விகிதம் இருந்தது. அதனால் கடந்த ஒன்பது வருடங்களில்  சராசரி வளர்ச்சி விகிதம் 8.25 விழுக்காடு என இருந்தது.

நடுவண் அரசின் மத்திய புள்ளியியல் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள உத்தேச புள்ளி விபரங்கள் பொருளாதாரத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த அதிக வளர்ச்சி தடைப்பட்டு விட்டதைத் தெரிவிக்கிறது. 2012-13 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் வெறும் ஐந்து விழுக்காடாக மட்டுமே இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. இதுதான்  கடந்த பத்து வருடங்களில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான வளர்ச்சி விகிதமாகும்.

அதுவும் ஏற்கெனவே நலிந்து கிடக்கும் விவசாயத் துறையில் வளர்ச்சி  பாதியாகக் குறைந்து 1.8 விழுக்காடு மட்டுமே இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் பலவற்றிலும் வளர்ச்சி விகிதங்கள் குறைவாக சென்று விட்டது தெரிய வருகிறது. சென்ற 2011-12 ஆம் ஆண்டிலேயே வளர்ச்சி 6.2 விழுக்காடாகக் குறைந்து போயிருந்தது.  தொடர்ந்து அடுத்த வருடம் அது மேலும் குறைந்துள்ளது அதனால் சுதந்தர இந்தியாவில் இருந்து வந்த  வேகமான பொருளாதார வளர்ச்சிக் காலம், ஒரு மாற்றத்தைக் கண்டுள்ளது.  

வளர்ச்சி விகிதம் குறைந்தது மட்டுமன்றி பொருளாதாரத்தின் பல முக்கிய தளங்களில்  செயல்பாடுகள் வருத்தம் அளிப்பவையாக உள்ளன. நாட்டுக்கு அடிப்படையான விவசாயத் துறையில் மென்மேலும் சிரமங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. ஒரு புறம் சரியான கொள்கைகளும் திட்டங்களும் இல்லை. இன்னொரு புறம் தவறான கொள்கைகள் மூலம் விவசாயம் நசுக்கப்படுகிறது.

முறையான சிந்தனை எதுவுமில்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்ட மத்திய அரசின் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் கோடிக் கணக்கான ரூபாய்களை வருடா வருடம் வீணடிப்பது மட்டுமன்றி, விவசாயத்தைப் பெருமளவு பாதிப்புக்குள்ளாக்கி விட்டது. ஆகையால்  இன்னமும் சுமார் அறுபது விழுக்காடு மக்கள் சார்ந்து வாழும்  விவசாயத் தொழில் இலாபகரமானதாக இல்லை. மேலும் பெரும்பாலான மக்களுக்குக் குறைந்த அளவு வருமானம் கூடக் கிடைக்காத நிலை உள்ளது. சமுதாயத்திலும் அதற்கான அங்கீகாரம் குறைந்து வருகிறது. அதனால் அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

நமது நாட்டின் சிறப்பே சுய தொழில் சார்ந்த அதன் தன்மையாகும். பாரம்பரியமாகவே இந்திய சிந்தனை  சொந்தத் தொழில் செய்வதையே முக்கியமான வாழ்வியல் முறையாகச் சொல்லி வந்துள்ளது. சொந்தத் தொழில் என்பது மட்டுமே ஒரு மனிதனுக்கு சிறப்பான அங்கீகாரம் என விதுரர் குறிப்பிட்டுள்ளார். எனவே பெரும்பான்மையான மக்கள் ஏதாவது ஒரு தொழிலைச் சொந்தமாகச் செய்வதையே பெருமையாகக் கருதி வந்துள்ளனர். சொந்தத் தொழில் என்பது முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் என்னும் இரண்டு சித்தாந்தங்களுக்கும் மாற்றான முறையாகும். அதில் முதலாளித்துவத்தின் கொடூரமும், சோசலிசத்தின் அடக்குமுறைகளும் இல்லை. சிறிய தொழில்களே அழகானவை என்று சொன்ன ஸ்கூமேக்கரும்  அதையே வற்புறுத்தினார்.

அதனால் இன்றுவரை நமது பொருளாதாரத்தில் சுயதொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களால் அரசுகளுக்கு எந்த வித சுமைகளும் இல்லை. மாறாக அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தங்களின் உழைப்பை மட்டுமே நம்பி பொருளாதாரத்துக்கு வளம் சேர்க்கின்றனர். சுய தொழில்கள்  மட்டும் நாட்டின் மொத்த வருமானத்தில் சுமார் 35 விழுக்காடு அளவு பங்களிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சுய தொழில்களின் பங்கு மிகவும் குறைவு. ஆனால் கடந்த சில வருடங்களாக நமது நாட்டில் சுய தொழில்கள் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கிராமப் பகுதிகளில் மட்டுமன்றி நகர்ப்புறங்களிலும் அந்தப் போக்கு நிலவுகிறது. 2004-05 முதல் 2009-10 வரையான ஐந்து வருட காலத்தில் மட்டும் கிராமப் புறங்களில் சுய தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை  56. 5 விழுக்காட்டிலிருந்து 51.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. நகர்ப் புறங்களில் அது 43.3 விழுக்காட்டிலிருந்து 40.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

சுய தொழில்கள் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவது ஒரு நாட்டுக்கு நல்லதல்ல. அதனால் குடும்பங்கள் பிறரைச் சார்ந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றன. சுய தொழில்கள் பாதிக்கப்படும் போது அதைச் சார்ந்தவர்கள் வேறு வேலைகளைத் தேடிச் செல்கின்றனர். அது பல சமயங்களில் நகரங்களை நோக்கிய பயணமாகவே இருக்கிறது.  அங்கும் நிரந்தரமான வேலைகள் கிடைப்பதில்லை. அதனால் நாட்டில் தற்காலிக வேலைகளைச் செய்து வாழ்க்கை நடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

மக்களின் வாழ்க்கைக்கு ஏதாவது வாழ்வாதாரம் அவசியமாக இருக்க வேண்டும். சொந்தமாக எதுவும் செய்யாதவர்கள் வேலைகளைச் சார்ந்தே  இருக்கின்றனர். ஆனால் பொருளாதாரத்தில் வேலை உருவாக்கம் என்பது கடந்த பல  வருடங்களாகவே குறைந்து வருகிறது. தற்போதைய அரசுகள் கடைப்பிடிக்கும் சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள் மிகப் பெரிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பட்டுக் கம்பளம் விரிப்பதாகவும், உள் நாட்டில்  வேலை வாய்ப்புகளைக் குறைப்பதாகவுமே அமைந்துள்ளன. மத்திய அரசின்  புள்ளி விபரங்களே இந்த உண்மைகளைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. 

2007 முதல் 2011 வரையான ஐந்து வருட காலத்தில் அமைப்பு சார்ந்த துறைகளில் வெறும் 17.23 இலட்சம் புதிய வேலைகளே உருவாக்கப் பட்டுள்ளன என மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை அமைச்சகம் தெரிவிக்கின்றது. நாட்டின் மக்கள் தொகை வருடத்துக்கு சுமார் ஒன்றரை கோடி அதிகரித்து வரும் போது புதிய வேலை வாய்ப்புகள் வருடத்துக்கு சுமார் 3.5 இலட்சம் அதிகரிப்பு என்பது மிகவும் குறைவானதாகும். அவ்வாறு உருவாக்கப்படும் குறைந்த வேலைகளே கூட தனியார் துறைகளில்தான்   ஏற்படுத்தப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த ஐந்து வருடங்களில் புதிய வேலை வாய்ப்புகள் எதையும் உருவாக்கவில்லை. மாறாக அங்கு 4.54 இலட்சம் வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

எனவே அண்மைக் கால பொருளாதார வளர்ச்சி என்பதே வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக இல்லாமல் உள்ளது. இந்தச் சூழ்நிலை நீடிப்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. ஒரு பக்கம் வளர்ச்சி அதிகரித்து வருமானம் பெருகும் போது, மறு பக்கம் வேலை வாய்ப்புகள் குறைவது சமூகத்தில் மக்களிடையே பெரும் ஏற்றத் தாழ்வுகளை அதிகரிக்கும். அந்த நிலை மேலும் பெருகுவது தவறு. நாட்டை எதிர்காலத்தில் அது மோசமான  விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்.  

நமக்கு வலுவான அடித்தளங்கள் உள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் போதுமான அளவில் உள்ளன. தற்போது நமது மக்கள் தொகையில் பாதிப்பேர் இருபத்து ஐந்து வயதுக்குக் கீழானவர்களாக உள்ளனர். எனவே அதிக எண்ணிக்கையிலான  இளைஞர்கள் பட்டாளத்தை நாம் பெற்றுள்ளோம். மக்கள் தொகையைப் பொருத்த வரையில் வேலை செய்யக் கூடிய நிலையில் உள்ளவர்கள் எதிர்காலத்திலும் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனவே நாட்டின் வளர்ச்சிக்குச் சாதகமாக வளங்களும், வலுவான அடித்தளங்களும் உள்ளன. கடுமையாக உழைப்பதற்கும்,  முயற்சிகளை மேற்கொள்வதற்கும்  அதிக எண்ணிக்கையிலான மக்கள் தயாராக உள்ளனர். நாட்டின் குடும்ப, சமூக மற்றும் கலாசார அமைப்பு முறைகள்  முன்னேற்றத்தையும் இணக்கமான வாழ்க்கையையும் மக்கள் மேற்கொள்வதற்குப் பொருத்தமாக அமைந்துள்ளன.

இவ்வளவு இருந்தும் நாடு போதிய அளவு முன்னேற முடியாமல் இருப்பதற்குக் காரணம் சரியான கொள்கைகளும் திட்டங்களும் இல்லாமல் இருப்பது தான். நமக்கு இருக்கின்ற வளங்களையும் அடித்தளங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குத் திட்டமிட்டு செயலாற்றும் சிந்தனையும் செயல் திறனும்  நமது ஆட்சியாளர்களிடத்தில்  இல்லை. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு நம்மிடத்தில் இளைஞர்கள் உள்ள போதும், அவர்களின் திறமைகளை நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பது குறித்து இன்று வரை அவர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

எனவே கொள்கை வகுப்பவர்களும் ஆட்சியாளர்களும் நாட்டின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தக்குப் பொருத்தமில்லாத வகையிலேயே  திட்டங்களை வகுத்து வருகிறார்கள். அதுதான் நமது முக்கியமான குறைபாடாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே மேல் மட்டங்களில் அதிகரித்து வரும் தவறுகளும், நாட்டு நலன் கருதாமல் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளும் பொருளாதார முன்னேற்றத்தை வெகுவாகப் பாதித்து வருகின்றன. அதனால் பல தரப்பட்ட மக்களும்  சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமை தொடராமல் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதுதான் நமது இப்போதைய தலையாய கடமையாகத் தெரிகிறது.

( ஓம் சக்தி, ஜூன் 2013)

No comments: