வறுமைக்கோடு: விவாதங்கள், விளக்கங்கள்


சென்ற  ஜூலை மாதம் 23 ஆம் தேதி மத்திய திட்டக்குழு நாட்டின் வறுமை விகிதம் பற்றிய ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 2004-05 ஆம் வருடத்தில் 37.2 விழுக்காடாக இருந்த நாட்டின் வறுமை விகிதம், 2011-12 ஆம் வருடத்தில் 21.9 விழுக்காடாகக் குறைந்து விட்டது என அறிவித்தது. அதனால் 2004-05 ஆம் வருடத்தில் 41 கோடியாக இருந்த வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை,  2011-12 ஆம் வருடத்தில் 27 கோடியாகக் குறைந்து விட்டது எனத் தெரிவித்தது.

மேலும் வறுமைக்கோட்டைக் கணக்கிடுவதற்கான அளவு கிராமப்புறங்களில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு ஒரு மாதத்துக்கு ரூபாய் 4080 எனவும், நகர்ப்புறங்களில் ரூபாய் 5000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது. அதைத் தனிநபருக்கு எனக் கணக்குப் போடும் போது மாதம் ஒன்றுக்கு கிராமத்தில் உள்ளவர்களுக்கு ரூபாய் 816 ஆகவும், நகர்ப்புற வாசிகளுக்கு ரூபாய் 1000 ஆகவும் வருகிறது.

அதையே தனி நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு என்று எடுத்துக் கொண்டால் கிராமப்புற மக்களுக்கு ரூபாய் 27.20 ஆகவும் நகர்ப் புறங்களில் ரூ.33.33 ஆகவும் உள்ளது.. அதன்படி, கிராமங்களில் 27 ரூபாய்க்கும், நகரங்களில் 33 ரூபாய்க்கும் மேலாக சம்பாதிப்பவர்கள் அனைவரும் வறுமை நிலையைத் தாண்டியவர்கள் என அர்த்தமாகிறது.

எனவே அந்தப் புள்ளி விபரங்களை ஒட்டி நாட்டின் வறுமை மற்றும் வறுமைக்கோடு குறித்து ஒரு காரசாரமான விவாதம் நடந்த முடிந்தது. மேற்சொன்ன மிகக் குறைவான தொகைகளை வைத்துக் கொண்டு மக்களை வறுமைக் கோட்டைத் தாண்டியவர்கள் என எவ்வாறு குறிப்பிட முடியும் என்கின்ற நியாயமான கேள்வி பலரால் எழுப்பப்பட்டது. அதன் மூலம் திட்டக்குழு மற்றும் பொருளாதார நிபுணர்கள் உண்மையாகவே மக்களின் சிரமங்களையும் நாட்டு நிலவரத்தையும் சரியாகத் தான்   புரிந்துள்ளார்களா என்றும் சந்தேகங்கள்  ஏற்பட்டன.

உடனே மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் இருவர் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஒரு மூத்த மத்திய அமைச்சர் ஆகியோர் ஆளும் கூட்டணிக்கு எதுவும் கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்ற நோக்கில் அபத்தமான அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் ஒருவர் பன்னிரெண்டு ரூபாய்க்கு மும்பையில் போதுமான மதிய உணவு கிடைக்கும் எனச் சொல்லி, அதற்கு எதிர்ப்புகள் வந்ததும் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

இன்னொருவர் ஐந்து ரூபாய்க்கு டெல்லியில் மதிய உணவு கிடைப்பதாகக் கூறினார். அமைச்சரோ அதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று ஒரு ரூபாய்க்குக் கூட நாட்டில் உணவு கிடைக்கிறது என்றார். அது மக்கள் எங்கே மற்றும் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று சொல்லி அதற்கு ஒரு விளக்கத்தையும் அளித்தார்.

நமது நாட்டில் சாதாரண மக்களின் பிரச்னை என்று வரும் போது அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற அளவில் அவர்களின் பேச்சுகள் அமைந்தன. மக்களின் வறுமை சம்பந்தப்பட்ட விசயத்தில் தங்களின் ஆட்சியை நியாயப்படுத்துவதற்கு சற்றும்   பொருத்தமில்லாத விளக்கங்களை எந்தவிதமான வெட்கமும் இல்லாமல் அவர்கள் அளித்தது  மிகவும் வேதனைக்குரிய செயலாகும்.

வறுமைக் கோடு சம்பந்தப்பட்ட தற்போதைய வரையறைகள் 2011 ஆம் வருடம் டெண்டுல்கர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.  மறைந்த பேராசிரியர் சுரேஷ் டெண்டுல்கர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில்  தலைவராக இருந்தவர். நமது நாட்டில் முன்பு வறுமைக்கோடு என்பது குறிப்பிடப்பட்ட கலோரி உணவு வாங்குவதற்குத் தேவையான செலவு என்கின்ற அடிப்படையில் அமைந்திருந்தது.

அந்த முறையில் உள்ள குறைகளைக் களையும் பொருட்டு டெண்டுல்கர் குழு 2004-05 ஆம் வருடத்துக்கான வறுமைக்கோடுகளைப் புதிதாகக் கணக்கிட்டது. அப்போது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வறுமைக்கோடு கணக்கின்படி ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு வாங்கும் சக்தியின் அடிப்படையில் ஒரு டாலர் அளவுக்கு நிகரான இந்திய நாணய மதிப்பில் வறுமை கணக்கிடப்பட்டது.

நமது நாட்டில் வறுமைக் கோடு மாதாந்திர நுகர்வு செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அந்த செலவில் உணவு மட்டுமன்றி, கல்வி, மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பிற செலவுகள் எல்லாம் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. அதற்காக திட்டக்குழு மத்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின்  செலவு பற்றிய புள்ளி விபரங்களை உபயோகப் படுத்திக்கொள்கிறது. பொதுவாக ஐந்து வருடத்துக்கு ஒரு முறை அந்தப் புள்ளி விபரங்கள் மக்களிடமிருந்து பெறப்படுகின்றன.

அதற்காக அந்த அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் குறிப்பிட்ட அளவு மக்களை நேரடியாகச் சந்தித்து தேவையான விபரங்களைக் கேட்டறிகிறது. மக்கள் முந்தைய மாதங்களில் தாம் செய்த செலவுகளை நினைவுபடுத்திக் கூறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் 2009-10 ஆம் வருடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அந்த வருடம் கடுமையான வறட்சி என்பதால் மீண்டும் 2010-11 ஆம் வருடம் இன்னொரு முறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போதைய வறுமைக்கோடு கணிப்புக்குத் தேவையான புள்ளி விபரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பது  உலக வங்கி நிர்ணயித்துள்ள அடிமட்ட நிலையான வறுமைக்கோடு கணக்கு ஆகும்.  அது உயிரைத் தக்க வைக்கத்துக் கொள்வதற்குப் போதுமான நிலை மட்டுமே. கடுமையான வறுமை என்பதே 1.25 டாலர் வருமானத்துக்கும் பெருபவர்கள் உள்ள நிலை.

உலகின் பிற நாடுகளில் வறுமைக் கோடு கணிப்பு பற்றிய அடிப்படைகள் மற்றும் கணக்குகள் வெவ்வேறாக உள்ளன. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் நாட்டு மக்களின் மொத்த சராசரி வருமானத்தில் அறுபது விழுக்காட்டுக்கும் குறைவாக வருமானம் உடையவர்கள் ஏழைகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். அங்கெல்லாம் வறுமைக் கோடு என்பது நாட்டு சராசரி வருமானத்துடன் ஒப்பீட்டு முறையில் கணக்கிடப்படுகிறது. அதனால் வறுமைக்கோடு என்பது நாட்டு மக்களுக்கிடையே நிலவும்  இடைவெளியையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்த வரையில் குடும்பத்துக்குத் தேவையான உணவுச் செலவு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அது மூன்றால் பெருக்கப்படுகிறது. தொடர்ந்து வருடா வருடம் விலைவாசி ஏற்றத்தை ஒட்டி அது சரி செய்யப்படுகிறது. ஒரு குடும்பத்தின் வரிக்கு முந்தைய வருமானம் மேற்கூறிய அளவுக்குக் குறைவாக இருந்தால், அது ஏழ்மையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த அடிப்படையில் 2011 வருட கணக்குப்படி சுமார் 15 விழுக்காடு மக்கள் ஏழ்மை நிலையில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நம்மைப் போன்ற நாடுகளில் எல்லாவற்றையும் அந்த நாடுகளைப் போல பணத்தில் முழுமையாகக் கணக்கிடுவதில்லை.  மேலும் அங்கெல்லாம் பெரும்பாலான உற்பத்திச் செலவுகள் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே நம்மை விட அவர்களுக்கு வாழ்வதற்கு அதிக தொகை தேவைப்படும்.

இந்த மாதிரி வித்தியாசங்கள் பெரும்பாலான ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பொருந்தும். ஏனெனில் அங்கெல்லாம் உறவுகள் சார்ந்த வாழ்க்கை முறை, எளிமையான செயல்பாட்டு முறைகள், பணம் சாராத வாழ்க்கை முறைகள் ஆகியன வாழ்க்கையின் அங்கமாக உள்ளன. தனிநபர் சார்ந்த மேற்கத்திய சந்தைப் பொருளாதார நாடுகளில் அதற்கான சூழ்நிலைகள் இல்லை. எனவே உலக வங்கியின் சர்வதேச கணக்குகள் எல்லாம் உலகின் பல நாட்டு சூழ்நிலைகளையும் சரியாக பிரதிபலிப்பதாக அமைவதில்லை. ஆனால் உலகமயமாக்கலின் ஒரு முக்கிய அம்சமாக அந்த வரையறைகள் எல்லா நாடுகளுக்கும் பொதுவாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 

ஆகையால் மத்திய அரசின் டெண்டுல்கர் குழு வரையறை என்பது முழுமையானது இல்லை. அதில் பல குறைபாடுகள் உள்ளன. அடிப்படையாக தேசிய மாதிரி கணக்கெடுப்பிலேயே நிறைய சிரமங்கள் உள்ளன. கணக்கெடுக்கும் விதம், கணக்கெடுப்பவர்களின் தரம் என்பவற்றில் தொடங்கி அதில் பல விசயங்கள் உள்ளன. உதாரணமாக  மக்களுக்கு வாடகை என்ற வகையில் ஆகும் செலவு வருடத்துக்கு எழுபத்து ஐந்து ரூபாய் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. ஆனால் உண்மையில் இந்தத் தொகை நடைமுறைக்குப் பொருத்தமில்லாதது. அதே போல கிராமப்பகுதிகளில் மக்கள் தங்களின் பயன்பாட்டுக்காக வாங்கும் குறிப்பிட்ட பொருட்களின் செலவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அவை எல்லாம் உண்மை நிலையைப் பிரதிபலிப்பதாக இல்லை.

சந்தைப் பொருளாதார முறை நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான கட்டமைப்புகளுக்கு செலவு செய்வதில் அரசுகளுக்குப் போதுமான அக்கறை இல்லை. மேலும் பொதுவாகவே ஊழல்கள் பெருத்து நிர்வாகம் சீரழிந்து வருகிறது. எனவே சாதாரண மக்கள் பல மாநிலங்களில் போதுமான மருத்துவ, கல்வி, சுகாதார வசதிகள் இன்றி சிரமப்படுகின்றனர். மிகச் சாதாராண நிலையில் உள்ள பெற்றோர்களும் கூட தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளை நாடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

எனவே திட்டக்குழுவின் வறுமைக் கோடு பற்றிய கணக்கு உண்மை நடைமுறையைப் பிரதிபலிப்பதாக இல்லை. மத்திய அரசாங்கத்தின் பன்னிரெண்டாவது திட்டத்திலேயே மக்கள் அனைவரும் வறுமைக் கோட்டுக் கீழே சென்று விட்ட பின்னரும் கூட வறுமையை முழுவதும் ஒழிப்பது சவாலாக இருக்கும் எனக் கூறியுள்ளது. ஏனெனில் பாதுகாக்கப் பட்ட குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை அனைவருக்கும் கொடுக்கும் போது தான் மக்கள் முழுமையாக ஏழ்மையிலிருந்து மீண்டு வருவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.

திட்டக் குழுவின் வறுமைக்கோடு வரையறை பற்றிய குற்றச்சாட்டுகளை ஒட்டி, பொருளாதார நிபுணர் ரங்கராஜன் தலைமையில் ஏற்கெனவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு வறுமைக்கோட்டை வரையறை செய்வதற்கான சரியான வழிமுறைகள் உள்ளிட்ட விசயங்களை ஆராய்ந்து சொல்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் அறிக்கை அடுத்த வருடத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதன்பின் இந்த விசயங்கள் பற்றி ஒரு தெளிவு பிறக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆயினும் சுதந்திரம் வாங்கி அறுபத்து ஏழு வருடங்கள் கழித்து இன்னமும் அரசு மட்டத்தில் வறுமைக் கோடு வரையறை பற்றிய ஒரு தெளிவான கருத்து கூட இல்லாதது மிகவும் வருத்தத்துக்குரியது. இவ்வளவு வருடம் கழித்தும் அரசுகளின் திட்டங்களால் வறுமையை இன்னமும் முழுமையாக ஒழித்து விடவில்லை என்பது கண்டிக்கத் தக்க விசயமாகும்.

இந்த விசயம் சம்பந்தமாக உயர் மட்டத்தில் இருக்கும் பொருளாதார நிபுணர்களின் அணுகுமுறைகள் நம்பிக்கை ஊட்டுவனதாக இல்லை. திட்டக்குழுவின் தலைவரான பிரதமர் ஒரு பொருளாதார நிபுணர். அதன் துணைத் தலைவர் அரசாங்கத்தின் பொருளாதாரத் துறைகள் பலவற்றில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பல பதவிகளை தொடர்ந்து வகித்து வருபவர். ஆனால் திட்டக்குழுவிடம் நாட்டின் வறுமை பற்றிய சரியான கணிப்புகள் இல்லை.

பொருளாதாரத் துறையில் நாம் மிகப்பெரிய தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.


 ( ஆழம், அக்.2013)

No comments: