டாக்டர்
மன்மோகன் சிங் 2004 ஆம் வருடத்தில் பிரதமராகப் பதவியேற்ற போது, நாடு முழுவதும் ஒரு
பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பொருளாதார நிபுணர், பல்கலைக் கழகப் பேராசிரியர், நிதியமைச்சர்
உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை மத்திய அரசில் வகித்தவர், சர்வதேசப் பொருளாதார அமைப்புகளில்
பணியாற்றி அனுபவம் பெற்றவர், அரசியலில் எந்தக் குழுவையும் திருப்திப்படுத்த வேண்டிய
அவசியம் இல்லாதவர் என அவருக்குச் சாதகமான அம்சங்கள் நிறைய இருந்தன. எனவே நியாயமான முறையில்
திறமையாகச் செயல்பட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார் என்கின்ற எண்ணம் பொதுவாக இருந்தது.
அந்த
சமயத்தில் நாடு நல்ல வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது. 1999 முதல் 2004 வரையான
ஐந்து வருட காலத்தில் இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
சாலைகளை மேம்படுத்துவதற்காக அதுவரை இல்லாத அளவு தங்க நாற்கரம் உள்ளிட்ட திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டிருந்தன. மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையேற்று நடத்திய ஜனதா கட்சி
ஆட்சிக்கு அப்புறம், முதன் முறையாக, அடல் பிகாரி வாஜ்பாய் அரசின் கடைசி இரண்டு நிதி
ஆண்டுகளில் தான் நாட்டின் நடப்புக்கணக்கில் உபரித் தொகை ஏற்பட்டிருந்தது. வழக்கமான
எல்லா வருடங்களிலும் நிதிக் கணக்கில் பற்றாக்குறை இருப்பதுதான் வாடிக்கையாகும்.
எனவே
அந்தக் காலகட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்
நமது நாடு குறித்த ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. 1998ல் பொக்ரானில் அணுகுண்டு
வெடிக்கப்பட்ட பின்னர், சர்வதேச அளவில் பல வித தடைகளையும் மீறி வெளி நாடு வாழ் இந்தியர்கள்,
நமது நாட்டில் அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டனர்.
அதன் மூலம் தாய் நாட்டின் மீது தங்களுக்கு உண்டான நம்பிக்கையை உலகுக்கு வெளிப்படுத்தினர்.
அதனால் நம்மை சாதாரணமான ஒரு மூன்றாம் உலக நாடாகப் பார்த்து வந்த உலக நாடுகளின் பார்வையே
பெருமளவு மாறத் தொடங்கியது. அந்த சமயத்தில் நாடு காணத் துவங்கிய வேகமான பொருளாதார வளர்ச்சி மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை உணர்வை
ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது.
எனவே
மன்மோகன் சிங் அவர்களிடம் ஒரு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. அவர் நேர்மையானவர் மற்றும் ஊழல் கறை படியாதவர் என்பது அவரைப் பற்றிய எண்ணத்தை
மக்களிடம் மேலும் அதிகரித்தது. ஆனால் பிரதமராக இருந்த அவரது முதல் ஐந்தாண்டுக் காலத்திலேயே
அவர் மேல் ஒரு வித அவநம்பிக்கை ஏற்படத் தொடங்கியது. அவர் முனைந்து செயல்பட்டுத்திய
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமும், அதைத் தொடர்ந்து தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக்
கொள்வதற்காக பாரளுமன்றத்தில் ஓட்டுக்காக உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்ததும் ஆட்சிக்குக்
களங்கமாக அமைந்தன. அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியினரின் ஊழல்கள்
அப்போதே அதிகரித்துக் கொண்டிருந்தன. அதிகம்
சம்பாதிக்க வாய்ப்புள்ள துறைகளைக் கூட்டணிக்
கட்சிகள் கேட்டுப் பெற்றுக் கொள்ளை அடித்து வந்ததை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆனாலும்
கூட தனிப்பட்ட முறையில் அவர் ஊழல்வாதியல்ல; எனவே மற்ற பல அரசியல்வாதிகளை விட அவர் மேலானவர்
என்கின்ற எண்ணம் பெரும்பாலான மக்கள் மனதில் இருந்தது. அதனால்தான் அவரை பாரதிய ஜனதா
கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஒரு உறுதியில்லாத பிரதமர் என்று ஒருமுறை சொன்ன போது
அந்தக் கருத்தின் ஆழத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை.
முதல்
முறையாக அவருக்குப் பிரதமர் பதவி கிடைத்ததே ஒரு தற்செயலான நிகழ்வுதான். அவர் எப்போதுமே தேர்தலில்
போட்டியிட்டு மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவி
சோனியா காந்தி தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு
அதற்கான கடிதத்துடன் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைப் பார்க்கச் சென்றார். அவரைச்
சந்தித்து விட்டு வெளியில் வந்த பின்னர் தான் பிரதமர் பதவிக்கான மாற்று வேட்பாளர் குறித்த
கருத்தையே வெளியிட்டார்.
பிரதமர்
பதவியை சோனியா காந்தி ஏற்பதில் சட்டப் பிரச்சனைகள்
இருந்ததால்தான் கடைசி நேரத்தில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகத்
தெரிய வந்தது. அப்போது கட்சியில் அனுபவம் வாய்ந்த பல தலைவர்கள் இருந்தனர். ஆனால் தனிப்பட்ட
முறையில் மக்கள் செல்வாக்கு இல்லாத ஒருவரையே சோனியா காந்தி தேர்ந்தெடுக்க விரும்பினார்.
அதன் அடிப்படையில்தான் மக்களவையில் உறுப்பினராகக் கூட இல்லாதவரும், எந்தவித அரசியல்
பின்னணியும் இல்லாதவருமான மன்மோகன் சிங்குக்குப் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது.
தனது
கட்சித் தலைமைக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அனுசரணையாக நடந்து கொண்டதாலும், தனிப்பட்ட
முறையில் ஊழல் புகார்கள் எதிலும் சிக்கிக் கொள்ளாததாலும் 2009ம் வருடத்தில் மக்களவைத்
தேர்தல் வந்த போது மன்மோகன் சிங்கே ஆளும் கூட்டணியின்
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எனவே
காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவரே மீண்டும் இரண்டாவது முறையாகப்
பிரதமர் பதவியை ஏற்றார்.
அப்போது
மந்திரி சபையில் கூட்டணிக் கட்சிகள் தமக்கு வேண்டிய அதிக வருமானம் தரக்கூடிய துறைகளைப்
பெறுவதற்கு நடத்திய பேரங்கள் அவரின் இயலாமையை முதன்முறையாக வெளியுலகுக்கு வெளிச்சம்
போட்டுக் காட்டியது. பின்னர் வெளிவந்த நீரா ராடியா ஒலி நாடாக்கள் மன்மோகன் சிங் அமைச்சரவை
கேவலமான முறையில் எப்படி அமைக்கப்பட்டது என்பது பற்றியும், அதற்குத் தலைவராக விளங்கும் பிரதமர் எவ்வாறு துச்சமாக
மதிக்கப்படுகிறார் என்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து
வந்த காலங்களில் வெளி வந்த ஊழல்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. இரண்டு ஜி எனப்
பிரபலமாக அறியப்படும் அலைக்கற்றை ஊழல், சுதந்திர இந்திய வரலாற்றில் ஊழலுக்கான ஒரு புதிய
வரலாற்றையே படைத்தது. அது 1,76,000 கோடி ரூபாய்
அளவிலான மக்களின் பணம் சம்பந்தப்பட்ட விசயம்
என்பது அதுவரை யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தொகையாகும். தொடர்ந்து
வெளிப்பட்ட நிலக்கரி ஊழலில் அதை விடவும் அதிக தொகை சம்பந்தப்பட்டிருந்தது.
நாட்டு
மக்கள் அனைவருக்கும் பொதுவான தேசத்தின் இயற்கை வளங்களை மன்மோகன் சிங்
அரசு பெரிய நிறுவங்களின் சொந்த நலனுக்காகவும் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கவும்
துணை போனது மன்னிக்க முடியாத குற்றமாகும். நாட்டின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்புக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே நேரடியாக அவற்றைச் சூறையாடியிருந்தார்கள். இவற்றுக்கெல்லாம்
முன்னரே வெளிப்பட்டிருந்த காமன்வெல்த் விளையாட்டு ஊழல், பிற நாடுகளின் மத்தியில் நமக்கு
அவப்பேரை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான
சுரேஷ் கல்மாடியும் டில்லியில் ஆட்சியிலிருந்த
காங்கிரஸ் கட்சியும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றங்கள் சாட்டப்பட்டன.
தொடர்ந்து
வந்த காலங்களில் வேறு பல துறைகளிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன.
நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காகத் தாங்கள் கொண்டு வந்ததாகப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலேயே
அதிக அளவில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக மத்திய அரசின் தணிக்கை துறை எடுத்துக் காட்டியுள்ளது.
எனவே சுதந்திரத்துக்கப்புறம் நாட்டிலேயே மிகவும்
ஊழல் நிறைந்த ஆட்சியாக மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஆட்சிக்காலம் அமைந்து விட்டது.
ஊழல்கள்
எங்கும் பரவியிருப்பதால் நிர்வாகம் பெருமளவு சீர்கெட்டு விட்டது. அதனால் நாட்டின் பொருளாதார
செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு வளர்ச்சி தடைப்பட்டு விட்டது. பத்தாண்டுகளுக்கு மேலாக
நல்ல வளர்ச்சியைக் கண்டு வந்த பொருளாதாரம், சென்ற ஆண்டில் வெறும் 4.5 விழுக்காடு அளவே
வளர்ந்துள்ளது. இந்த ஆண்டும் வளர்ச்சி விகிதம் ஐந்து விழுக்காட்டுக்கும் கீழாக இருக்குமென்று
அரசின் புள்ளி விபரங்களே தெரிவிக்கின்றன.
வாய்ப்புக்கள்
அதிகமாக இருந்தும் நாட்டில் தொழில்கள் செய்வதற்குப் போதுமான கட்டமைப்புகளை மேற்கொள்வதில்
பெரிய சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தேவையான அளவுக்கு நிலக்கரி நம்மிடத்தில் இருப்பு
உள்ளது. ஆனால் ஊழல் பிரச்சனைகளால் சிக்கிக் கொண்டு சரியான கொள்கைகளை வகுத்து நிலக்கரியை
முறையாகப் பயன்படுத்த அரசாங்கத்திடம் திட்டமில்லை. எனவே தொழில்கள் மின்சாரமின்றித்
தவிக்கின்றன.
மக்களுக்கு
அதிக அளவில் வாழ்வழிக்கும் விவசாயம், சிறுதொழில்கள் ஆகியவை மிகுந்த சிரமத்தில் உள்ளன.
விவசாயிகள் தற்கொலை செய்வதும் விளை நிலங்களை விட்டுப் போவதும் நாம் அன்றாடம் பேசும்
தினசரி நிகழ்வுகளாக மாறி விட்டன. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திப் பன்னாட்டு நிறுவனங்கள்
இந்திய விவசாய மற்றும் உணவுத் துறைகளில் நுழையக் கங்கணம் கட்டிக் கொட்டு வேலை செய்து
வருகின்றன.
அரசின்
தவறான இறக்குமதிக் கொள்கைகளால் இந்தியத் தொழில்கள் பெருத்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன.
நம் நாட்டு சிறு தொழில் முனைவோர்களால் சுலபமாகச் செய்யப்படக்கூடிய பொருட்கள் எல்லாம்
எந்த விதக் கட்டுப்பாடுமின்றி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிகளாக வந்து கொண்டுள்ளன.
2012-13 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 65000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சீனாவிலிருந்து இறக்குமதிகள்
அனுமதிக்கப்பட்டுள்ளன.
சென்ற
ஆண்டு ஹோலிப் பண்டிகையில் உபயோகப்படுத்தப்பட்ட வண்ணப் பொடிகளும், வர்ணம் கலந்த தண்ணீரைப்
பீய்ச்சி அடிக்கும் சிறு குழாய்களும் 90 விழுக்காட்டுக்கு மேல் சீனாவில் இருந்து இறக்குமதி
செய்யப்பட்டவை எனச் செய்திகள் வந்துள்ளன. அதனால் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்பட்டு வந்த பல நூற்றுக்கணக்கான
சிறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான பேரின் வேலை வாய்ப்பு பறி போயுள்ளது.
பல துறைகளிலும் தொழில்களை நடத்தி வருபவர்கள் அவற்றை நடத்த முடியாமல்
சிரமப்பட்டு வருகின்றனர். புதிய தொழில் முனைவோர் இருக்கின்ற சூழ்நிலையில் மூலதனம் போட்டு
தொழில் துவங்க பயப்படுகின்றனர். எனவே நாட்டின் உற்பத்தித் துறையில் போதுமான வளர்ச்சி
இல்லை. அதே சமயம் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஒரு
பொருளாதார நிபுணர் பிரதமராகப் பொறுப்பேற்று வழி நடத்தும் நாட்டில் பத்து வருடங்கள்
கழித்து நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டே செல்கிறது. மத்திய அரசின் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை அதிகமாகி வருகிறது. 2013-14 ஆம் வருடத்துக்கான
திட்டமிட்ட பற்றாக்குறையில் 95 விழுக்காடு, சென்ற டிசம்பர் 2013ல் நிறைவுற்ற ஒன்பது
மாத காலத்திலேயே முடிந்து விட்டதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த நிதியாண்டு
முடிவில் பற்றாக்குறை திட்டமிட்டதை விட மேலும் அதிகரித்து ஒரு புதிய இலக்கை எட்டுமெனத்
தெரிகிறது.
எந்த
நாட்டுக்குமே அதன் அடிப்படையான அமைப்புகள் மிகவும் முக்கியமானவை ஆகும். ஏனெனில் ஆட்சியாளர்கள் யார் வந்து போனாலும், அங்குள்ள அமைப்புகளின் வலிமையை
ஒட்டியே அந்த நாட்டின் பலம் அமைந்திருக்கும்.
அந்த வகையில் இந்தியா உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு. நமக்கான கட்டமைப்புகள் பல வருடங்களாக
ஏற்பட்ட அனுபவத்தில் உருவாக்கப்பட்டவை. அவற்றை முறைப்படி காப்பாற்றி நம்பிக்கை கெடாமல் கொண்டு செல்வது பொறுப்பிலுள்ள ஒவ்வொரு அரசும் செய்ய
வேண்டிய பணியாகும்.
துரதிர்ஷ்டவசமாக
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் முக்கிய அமைப்புகளான புலனாய்வுத் துறை,
கண்காணிப்புக் குழு உள்ளிட்ட பலவற்றிலும் அரசின் தலையீடு மிகவும் அதிகரித்துப் போய்
விட்டது. நாட்டின் முக்கிய ஊழல் குற்றங்களை விசாரிக்கும் மத்திய கண்காணிப்புக் குழுவின்
தலைமைப் பொறுப்புக்கு அரசால் நியமிக்கப்பட்டவரை பின்னர் உச்சநீதி மன்றம் நீக்குகிறது. ஏனெனில் அதற்கான தகுதியில்லாதவரை பிரதமர்
தலைமையிலான குழு எதிர்ப்புகளுக்கிடையிலும் தெரிந்தே நியமனம் செய்திருந்தது. மத்திய
புலனாய்வுத் துறை எந்த வித சுதந்திரமுன்றி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூண்டுக்கிளி
என நீதி மன்றத்தால் வர்ணிக்கப்படுகிறது.
உச்ச
நீதிமன்றத்தின் கண்காப்பில் இயங்கும் வழக்கு
விசாரணையில் பிரதமருக்கு மிகவும் வேண்டியவரான மத்திய சட்ட அமைச்சர் தலையிடுகிறார்.
அலைக்கற்றை ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்றக் குழு விதிமுறைகளுக்கு மாறாகச்
செயல்படுகிறது. அந்தக் குழுவின் முன் சென்று நிதியமைச்சரும் பிரதமரும் பதிலளிக்க வேண்டுமென
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைக்கின்றனர். அவை அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன. அதனால் பாராளுமன்றக்
குழுவுக்கான மரியாதை குறைந்து போகிறது. மத்திய அரசின் தணிக்கை அமைப்பான சிஏஜி, அரசின் செயல்பாடுகளில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டிய
போது மத்திய அமைச்சர்களாலேயே சிறுமைப் படுத்தப்படுகிறார்.
எனவே
மன்மோகன் சிங் அரசு தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அரசு அமைப்புகளின் செயல்பாடுகளைக்
குலைப்பதற்கும் அவற்றை கேவலப்படுத்துவதற்கும் பலவிதமான நடவடிக்கைககளை
மேற்கொண்டு வருகின்றன. இது நமது நாட்டின்
ஜனநாயக மாண்புகளுக்கு ஒரு அரசாங்கம் செய்யும்
மிகப்பெரிய துரோகமாகும். மேலும் நிலக்கரித் துறையில் பெரும் ஊழல்கள் பிரதமர் அந்தத்
துறைக்குப் பொறுப்பு வகித்த காலகட்டத்தில் தான் நடைபெற்றுள்ளன. எனவே அவர் நேரடியாக
அவற்றில் பலன் பெறாமல் விட்டிருந்தாலும், ஊழல்களுக்குத் துணை போயிருப்பதாகவே கருத வாய்ப்பிருக்கிறது.
எனவே
அவரின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அவர் திருவாளர் பரிசுத்தம் என்கின்ற நம்பிக்கை மக்களில்
பெரும்பாலானவர்களுக்குப் போய் விட்டது. மேலும்
சுதந்தர இந்தியாவின் பெரும் ஊழல்கள் அதிகம் மிக்க அரசுக்கு அவர்தான் தலைமை தாங்கி நடத்திக்
கொண்டிருக்கிறார் என்கின்ற எண்ணம் வலுப்பெற்று விட்டது.
மன்மோகன்
சிங் ஆட்சிக் காலத்தில் நாட்டுக்குப் பல தளங்களிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அவர் தலைமையில் பொருளாதாரம் நல்ல நிலையை எட்டும் என்கின்ற கருத்து முற்றிலும் தவறாகப்
போய்விட்டது. 2004 ஆம் வருடத்தில் அவர் பொறுப்பேற்ற போது நாட்டில் நிலவிய அபரிமிதமான
நம்பிக்கையை இப்போது அவநம்பிக்கையாக மாற்றி
விட்டார். அதனால் நமது தேசத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றம் வழியறியாமல் தடைப்பட்டு நிற்கிறது.
அவரது
ஆட்சிக்கால ஊழல்கள் சர்வதேச அளவில் நமது நாட்டுக்கு ஒரு பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளன.
அதனால் நாட்டு மக்களுக்கு அரசியல் அமைப்புகளின்
மேல் நம்பிக்கை குலைந்து வருகிறது. மேலும் அரசு அமைப்புகளின் செயல்பாடுகளில் இந்த அரசாங்கத்தின் தலையீடுகள், அவற்றின் சுதந்தரத்தைக் கெடுத்து அவற்றுக்குண்டான
மரியாதையைக் கெடுத்து விட்டன.
மேலும்
மன்மோகன் சிங் அவரது அண்மைக் கால செயல்பாடுகள் மூலம் அவருக்கிருந்த தனிப்பட்ட மதிப்பையும்
கெடுத்துக் கொண்டு வருகிறார். அவரின் அமைச்சரவை ஒரு அவசரச் சட்ட ஆணையை பிறப்பிக்கிறது.
அதை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாக அவமதித்துக் கிழித்துக்
குப்பைக் கூடையில் போட வேண்டும் என்கிறார். அவ்வாறு அவர் அமைச்சரவையின் முடிவை அவமதித்தற்குப்
பிரதமர் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை.
பிரதமர்
என்பவர் மக்களிடத்தில் அவ்வப்போது ஊடகம் மூலமாகப் பேச வேண்டும். முக்கியமான சமயங்களிலாவது
மக்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் இவர் கடந்த பத்து வருட காலத்தில்
மூன்று முறை மட்டுமே பேசியுள்ளார். நமது எல்லைகளில் பணி புரியும் இராணுவ வீரர்கள் அநியாயமாகக்
கொல்லப்படும்போதும், அண்டை நாடுகள் நமது எல்லைக்குள் ஊடுருவும்போது கூட அவர் எதுவும்
கருத்து சொல்வதில்லை.
சுமார்
ஆறு வருடம் கழித்து அண்மையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். அதில் எதிர்க்கட்சி
பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவரை ஒரு சாதாரண
அரசியல் வாதியாக வெளிப்படுத்தின. மூன்று முறை மக்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
அவர் பிரதமராக வந்தால் நாட்டுக்கு விபத்தாக முடியும் என மன்மோகன் சிங் அறிவித்தார்.
மேலும் குஜராத் கலவரம் பற்றி உச்ச நீதி மன்றக் குழுவும் நீதிமன்றமும் அளித்த தீர்ப்புக்கு
மாற்றான கருத்தை வெளியிட்டார். நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒரு பிரதமர் அவ்வாறு
பேசியது அவரது பொறுப்புக்கும் தனி மனித நாகரிகப் பண்புகளுக்கும் முரணாக அமைந்திருந்தது.
எனவே
மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐந்து வருட ஆட்சி என்பது நமது நாடு சுதந்தரம் அடைந்த பின்
ஏற்பட்ட துரதிஷ்டவசமான காலமாகவே அமைந்துள்ளது.
அதற்குத் தலைமை தாங்கி நடத்தி வரும் அவர் மக்களின்
நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்டவராக உள்ளார்.
( ஓம் சக்தி, மார்ச் 2014)
No comments:
Post a Comment