நம்மில் பலர் சிறுவர்களாக இருந்த போது ஆடி மாதம் அதிகமாக
வீசும் காற்றில் பட்டம் விட்டு விளையாடி இருந்திருப்போம்.
பட்டம் வானத்தில் உயரமாகப் பறக்கும் போது அதைப் பார்த்து நண்பர்கள் மற்றும் உறவுகளுடன்
கை கொட்டிச் சிரித்து மகிழ்ந்திருப்போம். நமது தமிழ் நாட்டை விடவும் வேறு சில மாநிலங்களில் பட்டம் விடும் பழக்கம் அதிகமாக
உள்ளது.
குஜராத் மாநிலத்தைப் பொறுத்த வரையில் குறிப்பிட்ட விழாக்
காலங்களில் மக்கள் பட்டம் விட்டுக் கொண்டாடுவதென்பது பரவலாக நடைமுறையில் உள்ளது. அவற்றில்
முக்கியமானது சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் ’உத்தராயண்’ காலத்தின் தொடக்கமாகும். அது வருடா வருடம் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டு
மகாசங்கராந்தி அன்று நிறைவு பெறுகிறது. அப்போது தமிழ் நாட்டில் நமக்கு தைப் பொங்கல் சமயம்.
உத்தராயண் சமயத்தில் பட்டம் விட்டுக் கொண்டாடுவது குஜராத்தில் பாரம்பரியமாக இருந்து வரும் வழக்கம்.
சங்கராந்தி அன்று குடும்பங்கள் மற்றும் நட்புகளுடன் ஒன்று சேர்ந்து பட்டங்களை விடுவது
ஒரு பெரிய திருவிழா போலவே நடைபெறுகிறது. மேலும் கோகுலாஷ்டமி உள்ளிட்ட வேறு
சில சமயங்களிலும் பட்டம் விடும் பழக்கம் அங்கு உள்ளது.
அந்த மக்களுக்குத்
தேவைப்படும் பட்டங்கள் குஜராத் மாநிலத்திலேயே தயாராகின்றன. இந்துக்களும்
முஸ்லிம்களும் இணைந்து அந்தத் தொழிலை நடத்தி வருகின்றனர். பட்டத் தயாரிப்புகளைப்
பொருத்த வரையில் பெருமளவில் முஸ்லிம் மக்கள்
ஈடுபட்டுள்ளனர். அதிலும் பெண்களின் பங்கு அறுபது
விழுக்காட்டுக்கு மேல். அங்கு பட்டத் தொழில் என்பது ஒரு வெறும் ஒரு குடிசைத் தொழில் தான். சாதாரண மக்கள் தங்களின்
வீடுகளிலேயே தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1990களின் மத்திய காலத்தில் தொடங்கி முதுகலை மேலாண்மை மாணவர்களுடன்
சேர்ந்து தமிழ் நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களில் நாங்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டு
வந்தோம். பின்னர் 2001 ஆம் வருடம் தொடங்கி சுதேசி கல்விப் பேரவையில் இணைந்து நாட்டின்
பிற மாநிலங்களிலும் ஆய்வுகள் விரிந்தன. அந்தப் பேரவை பிரபல பொருளாதார நிபுணர் திரு.எஸ்.குருமூர்த்தி
அவர்களைத் தலைமை ஆலோசகராகவும், அவினாசிலிங்கம்
பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் முனைவர் கே.குழந்தைவேலு உள்ளிட்ட சில மூத்த கல்வியாளர்களை வழிகாட்டிகளாகவும் கொண்டு செயல்பட்டு வந்தது. தொழில்
துறையில் தேர்ச்சி பெற்ற தணிக்கையாளர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அதில் பங்காற்றி
வந்தனர்.
அந்த சமயம் 2003 ஆம் வருட பின்பகுதியில் ஒரு நாள் குஜராத்
மாநிலத்தில் உள்ள பட்டத் தொழிலை முன்னேற்றுவது குறித்து ஆய்வு நடத்தி ஆலோசனைகள் வழங்க அம்மாநில முதலமைச்சர் திரு. நரேந்திர மோதி அவர்கள்
கேட்டுக் கொண்டதாகத் திரு. குருமூர்த்தி அவர்கள் தெரிவித்தார். பின்னர் திரு. குருமூர்த்தி
அவர்கள் தலைமையில் சுதேசி கல்விப் பேரவைக் குழு 2003 வருடம் நவம்பர் மாதத்தில் ஆமதாபாத் சென்றது.
அப்போது குஜராத்
மாநிலத்தின் தொழில் துறைகளில் பொறுப்பு வகிக்கும் உயர் அதிகாரிகள், அக்குழுவைச் சந்தித்து
பட்டத் தொழில் சம்பந்தமான விபரங்களை எடுத்துக் கூறினர். பின்னர் அந்தத் தொழில் பற்றிய
கணக்கெடுப்பு, புள்ளி விபரங்களைச் சேகரிக்கும் விதம் மற்றும் ஆய்வுக்காக மேற்கொள்ள
வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை பற்றித் திட்டம் வகுக்கப்பட்டது. தொடர்ந்து வந்த நாட்களில்
கணக்கெடுப்பு வேலைகள் நடைபெற்றன. கணக்கெடுப்புகள்
முடிந்ததும், தொடர்ந்து அந்த வேலைகளில் ஈடுபட்டவர்களுடன்
சுதேசி கல்விக் குழுவைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட மும்பை தணிக்கையாளர் குழு கலந்துரையாடல் நடத்தி விபரங்களை ஒழுங்குபடுத்தினர்.
பின்னர் அந்தப் புள்ளி விபரங்களும் சேகரித்த மற்ற விசயங்களும்
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.அவற்றை வைத்து பட்டத் தொழிலுக்கும், 2004 ஆம் வருடம் குஜராத்
அரசு நடத்தத் திட்டமிட்டிருந்த சர்வதேசப் பட்ட விழாவுக்குமாகச் சேர்த்து இரண்டு கருத்தறிக்கைகளை
சுதேசி கல்விக்குழு அந்த அரசுக்குத் தயாரித்துக்
கொடுத்தது. மேலும் பட்டத் தொழில் சம்பந்தப்பட்ட
அரசுத் துறைகள், வங்கி மற்றும் நிதி அமைப்புகள், நிபுணர்கள், தன்னார்வ அமைப்புகள்,
மற்றும் தொழிலின் பல்வேறு நிலைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள், வியாபாரிகள்
எனப் பலரின் கருத்துகளையும் கேட்டறிய ஒரு பணிமனை நடத்தலாம் என்ற கருத்தினை சுதேசிக்
குழு அரசுக்கு வைத்தது. அதை குஜராத் அரசும் அப்படியே ஏற்றுக் கொண்டது.
தொடர்ந்து டிசம்பர் மாதம் 2003 ல் அந்த அரசு பணிமனையை ஏற்பாடு செய்தது. அதை குஜராத் முதல்வர் திரு.நரேந்திர
மோதி அவர்கள் துவக்கி வைத்தார். அதில் மாநிலத்தின் மூன்று அமைச்சர்கள், தேசிய சிறுபான்மையினர்
முன்னேற்றம் மற்றும் நிதி நிறுவனத்தின் தலைவர், கனடாவைச் சேர்ந்த சர்வதேச பட்ட நிபுணர்
முனைவர் ஸ்கை மாரிசன், மாநில தலைமைச் செயலர், சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள்,
பட்டம் சம்பந்தப்பட்ட தொழிலில் வெவ்வேறு நிலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பட்ட ஆர்வலர்கள்
எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குஜராத் முதல்வர் பணிமனையைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.
அப்போது பட்டத் தொழிலை மேம்படுத்த அரசு தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும்
என அறிவித்தார். மேலும் பட்ட உற்பத்தியாளர்களின்
பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஒருங்கிணைந்த கொள்கை வெளியிடப்படும்
எனக் கூறினார். கூடவே பட்டத் தொழிலை அடுத்த
ஐந்து ஆண்டுகளில் பல மடங்கு உயர்த்துவதற்கு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பட்டத் தொழில் சம்பந்தமான பலவிதமான பிரச்னைகளையும்
விவாதிக்கும் வகையில் மூன்று வெவ்வேறு குழுக்கள் தனித்தனியாக அமர்வுகளை நடத்தின. முதல்
குழுவில் பட்டத் தொழிலின் தரத்தை உயர்த்துவது குறித்து பல தலைப்புகளில் கலந்துரையாடல்
நடைபெற்றது. பட்டங்களைத் தயாரிப்பதில் உள்ள
நடைமுறைகள், பட்டத் தயாரிப்புக்குத் தேவையான கச்சாப் பொருட்களான மூங்கில் மற்றும் பேப்பர்களைக்
குறைந்த விலையில் சுலபமாகப் பெறுவதற்கான வழிகள், தயாரிப்பாளர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்
கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவை பற்றியெல்லாம்
கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பட்டங்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தவும், அவற்றை ஏற்றுமதி
செய்யவும் பட்டத்துக்கான வடிவமைப்புகளில் எவ்வாறு புதுமைகளைச் செய்யலாம் என்பவை குறித்துச் சர்வதேச பட்ட நிபுணர் விளக்கினார்.
பட்டங்களை சந்தைப் படுத்துவது மற்றும் விளம்பரம் செய்வது
பற்றிய விசயங்களை இரண்டாவது குழு ஆலோசித்தது. முத்ரா தகவல் தொடர்பு நிறுவனத்தின் பேராசிரியர் அவற்றுக்கான அவசியம் மற்றும் உத்திகள் குறித்து
எடுத்துரைத்தார்.
மூன்றாவது குழு பட்டத் தொழில் சம்பந்தமான நிதி விசயங்களைப்
பற்றி விரிவாக விவாதம் செய்தது. குஜராத் மகளிர் பொருளாதார முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை
இயக்குநர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பட்ட உற்பத்திக்கான நிதியளிப்பு குறித்து
விவரித்தார். நாட்டின் பிரபலமான பெண்கள் சேவை
அமைப்பான சேவா ( SEWA) பொறுப்பாளர், பெண்கள் ஈடுபட்டுள்ள குடிசைத் தொழில்களில் வங்கிகளின்
செயல்பாடுகள் பற்றிய அவர்களின் அனுபவங்களை எடுத்துச் சொன்னார். பின்னர் குஜராத் சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டு
அமைப்பின் மேலாண்மை இயக்குநர் தனது கருத்துகளைத் தெரிவித்தார். முன்னதாக குஜராத் பட்டத்
தொழிலின் முன்னேற்றத்துக்கான ஒருங்கிணைந்த செயல் திட்டம் குறித்து சுதேசி கல்விப் பேரவை
தனது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டது.
மேற்கண்ட மூன்று அமர்வுகளிலும் குறைந்தது ஒரு அமைச்சரும்,
சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளும் நாள் முழுவதும் இருந்தனர். ஒவ்வொரு அமர்வுக்கும் ஒரு அமைச்சரே தலைமை வகித்தார். ஆய்வுகளின் போது தொழிலில் தாங்கள் கண்ட குறைபாடுகள்,
மக்கள் எழுப்பிய பிரச்னைகள், தொழில் மேம்படுவதற்கு
அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை பற்றி கல்விப் பேரவையின் பிரதிநிதிகள் எடுத்துச்
சொன்னார்கள்.
தொழிலில் ஈடுபட்டுள்ள
சாமானிய உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள்,
அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் அனைவர் முன்னிலையிலும் தங்களின் பிரச்னைகளை
வெளிப்படையாக எடுத்துக் கூறி தேவையான உதவிகளைக் கேட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பட்ட ஆர்வலர்களும், நிபுணர்களும் பல விதமான ஆலோசனைகளைத் தெரிவித்தனர். சில பிரச்னைகள் சம்பந்தமாக
அமைச்சர்கள் அங்கேயே அதிகாரிகளுடன் பேசி முடிவுகளை அறிவித்தனர். முக்கியமான கொள்கை
முடிவுகள் சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டும் முதல்வர் மற்றும் அவற்றுக்குண்டான துறைகளுடன்
விரிவாகக் கலந்தாலோசித்து முடிவுகளை அறிவிப்பதாக கூறினர்.
அங்கு அன்று கண்ட பல விசயங்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்க
வைத்தன. ஒரு குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள படிப்பறிவு குறைந்த சாதாரணப் பெண்கள், அமைச்சர்கள்
மற்றும் மேலதிகாரிகளிடம் தங்களின் சிரமங்களை மற்றவர்கள் முன்னிலையில் எடுத்துச் சொல்ல
வாய்ப்புக் கொடுத்த விதம் வெளிப்படையான நிர்வாகத்துக்கு அடையாளமாகப் பட்டது.
மேலும் அந்தப் பணிமனைக்கு ஆலோசனைகள் சொல்ல அழைக்கப்பட்டிருந்த
பலரும் சம்பந்தப்பட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் உயர் பொறுப்பு வகிப்பவர்களாகவும்
இருந்தனர். வழக்கமாக நிபுணர்களின் ஆலோசனைகள் என்பது பெரிய கம்பெனிகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
ஆனால் குடிசைத் தொழிலுக்குக் கூட அத்தகைய ஆலோசனைகள் கிடைக்குமாறு பொதுச் செலவில் அரசு
ஏற்பாடு செய்து கொடுத்தது, சாதாரண மக்களின்
முன்னேற்றத்தில் அரசு கொண்டுள்ள உண்மையான அக்கறையை வெளிப்படுத்தியது.
மேலும் ஒரு மிகச் சிறு தொழிலில் ஈடுபட்டுள்ள சாமானிய மக்களுக்கும்
அவர்களின் திறமைகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்திக்
கொள்ள பெரிய நிறுவனங்களில் இருந்து பேராசிரியர்களையும் நிபுணர்களையும் அழைத்து வந்து
ஆலோசனைகள் கொடுத்தது, சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசின் நோக்கத்தை
எடுத்துக் காட்டியது. பட்ட உற்பத்தியில் பெண்களும் சிறுபான்மையினரும் அதிகம் ஈடுபட்டிருப்பதால், மகளிர் அமைப்புகளில்
அனுபவம் பெற்று பொறுப்பு வகிப்பவர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சிறுபான்மை முன்னேற்ற நிதி அமைப்புகளின் தலைவர்
மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தது,
சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் முன்னேற்றத்தில்
அரசு உண்மையிலேயே ஈடுபாட்டுடன் செயல்பட்டதைக் காட்டியது.
பின்னர் அன்று மாலையில் குஜராத் முதல்வர் சுதேசி கல்விப்
பேரவைக் குழுவினருக்கு தனது வீட்டில் தேநீர் அளித்தார். ஒரு மாநிலத்துக்கு முதலமைச்சர் என்கின்ற எந்த வித
தோரணையும் இல்லாமல் மிகவும் இயல்பாகப் பேசினார். வீட்டில் அவரைத் தவிர இரண்டு உதவியாளர்கள்
மட்டுமே இருந்தனர். குஜராத் தொழில்கள் மற்றும்
அவற்றின் முன்னேற்றம் பற்றியே அதிகம் பேசினார். பட்டத் தொழிலை உலக அளவில் எடுத்துச்
செல்லப் போவதாகவும், அதற்காக எவ்வாறு சர்வதேச பட்ட விழாக்களை நடத்தத்
திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்பது பற்றியும் எடுத்துச் சொன்னார்.
பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து ஆமதாபாத்தில் சர்வதேசப்
பட்ட விழா ஜனவரி 2004 சங்கராந்தி சமயத்தில் நடைபெறுவதாக அழைப்பு வந்தது. அந்த விழாவின்
துவக்க நிகழ்ச்சியில் பட்டத் தொழில் சம்பந்தமாக சுதேசி கல்விப் பேரவை தயாரித்த புத்தகம், குஜராத்
மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரால் வெளியிடப்படுகிறது என்கின்ற செய்தியும் கிடைத்தது.
சுதேசி கல்விப் பேரவையின் சார்பாக தணிக்கையாளர் திரு. எஸ்.முரளிதரன்
அவர்களும், நானும் அந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து புத்தகத்தைப் பெற்றுக் கொண்டோம்.
பின்னர் உலகின் பல நாடுகளிலும் இருந்து வந்திருந்த வெளி நாட்டு பட்ட ஆர்வலர்கள், பல
நாடுகளில் வாழ்ந்து வரும் குஜராத்திகள், மாநிலத்தின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த
மக்கள் ஆகியோர், பெரிய மைதானத்தில் வித விதமான பல வண்ணங்களைக் கொண்ட சிறியதும் பெரியதுமான
பட்டங்களை விட்டு மகிழ்ந்தனர். முன்னர் குஜராத் மகளிர் தங்களுக்கே உரிய நளினத்துடன்
பாடிக் கொண்டு அவர்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்வித்தனர்.
பதினோரு வருடங்கள் கழித்து, இந்த வருடம் குஜராத் பட்டத் தொழில்
எழுநூறு கோடி ரூபாய் அளவு வளர்ந்துள்ளதாக செய்திகளில் படித்தேன். சில மாதங்களுக்கு
முன்னரே பட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத்
தேவையான பயிற்சிகள் எல்லாம் அரசு மூலம் கொடுக்கப்பட்டு, அதனால் அவர்களின் திறன் அதிகரித்து
தொழில்
முன்னேற்றம் கண்டு வருகிறது என்று முதல்வர்
பேசியதாகச் செய்திகள் வந்திருந்தன.
2003 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் ஒரு இலட்சம் சாமானியக் குடும்பங்களே
ஈடுபட்டிருந்த ஒரு குடிசைத் தொழிலை எடுத்துக் கொண்டு, அதைப் பத்து வருட காலத்தில் திரு.மோதி
பெருமளவு மாற்றியிருக்கிறார். குஜராத் பட்டங்களை சர்வதேச அளவில் பிரபலமாக்கியிருக்கிறார். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் மிகவும்
பாராட்டத்தக்கவை. மேலும் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து செய்து வரும் இந்தத் தொழிலை
ஊக்குவிப்பதன் மூலம், உண்மையான சமூக நல்லிணக்கம்
மேலும் பெருக அரசு விரும்புகிறது என்பது தெரிய
வருகிறது.
பொதுவாக மக்கள் சாதாரணமாகக் கருதும் பட்டத் தொழிலை முன்னேற்றுவதற்கு
ஆய்வு செய்ய வெளி மாநிலத்தில் இருந்து கல்விப் பேரவை போன்ற அமைப்பினை அழைத்து, பின்னர் அதில் பல நிபுணர்களை ஈடுபடுத்தி,
அதனால் அதில் ஈடுபட்டுள்ள சாமானிய மக்களின்
வாழ்க்கையயும், மாநிலத்தின் பொருளாதாரத்தையும்
உயர்த்தி வருவது அவரை ஒரு அசாதாரணமான தலைவராகக் காட்டுகிறது.
( ’மோதியும் சிறு தொழில் வளர்ச்சியும் – ஒரு நேரடி அனுபவம்’, தமிழ்ஹிந்து.காம்,
ஏப்.24, 2014)