இந்தியா மீண்டெழ வாக்களிப்போம்



இந்தியா உலகின் தொன்மையான கலாசாரங்களில் மிகவும் முக்கியமானது. என்று தோன்றியது என்று கண்டுபிடிக்க முடியாத அளவு பழமையானது.  ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கான நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது.  ஆயினும் அன்று தொட்டு இன்று வரை ஒரு தொடர்ச்சியான பாரம்பரியத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதாக  அறிஞர்கள் பலராலும் பாராட்டப்படுவது.

இந்த தேசத்தின் வரலாறு நம்மைப் பெருமைப்பட வைக்கிறது. அதனால் உலகின் எந்த நாட்டுக் குடிமகனுக்கும் இல்லாத சிறப்புகள் இங்கு பிறக்கும்  ஒவ்வொருவருக்கும் சொந்தமாகி விடுகின்றன.  விவசாயம், தொழில்கள், கல்வி, அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், மருத்துவம், கணிதம், சர்வதேச வணிகம் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளிலும் முன்னோடியாக விளங்கி வந்துள்ள நாடு நம்முடையது.

என்றைக்கும் பொருந்தும் பல உண்மைகளை உலகுக்கு வகுத்துக் கொடுத்த பெருமையுடையது நமது தேசம். இயற்கையின் படைப்பில் எல்லா உயிர்களும் உயர்ந்தவை என்று அத்தனை உயிரினங்களையும் மேலாகப் பாவிக்கச் சொல்வது நமது  சிந்தனை. மேலும் உயிரில்லாத  எல்லாப் படைப்புகளும் முக்கியமானவையே என  அவற்றுக்கென உரிய இடத்தைக் கொடுத்துப்  போற்றி வருவது நமது மரபு.

உலகில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்து வந்த போது “ யாதும் ஊரே யாவரும் கேளிர்”  என  மானிட இனம் முழுவதையும் உறவுகளாகப் பார்க்கச் சொன்னது நமது கலாசாரம். அதனால்தான் உலகின் பிற  பகுதிகளில்  ‘எங்களது  கருத்துகள் மட்டுமே சரி; மற்றவை அனைத்துமே தவறு’ என்ற எண்ணம் முன்வைக்கப்பட்டு அதனால் சமூகங்கள் பிளவு படுத்தப்பட்டு வந்த போதும்,  ஒன்று பட்ட மனித இனத்துக்கு மாற்றாக இருந்து வருவது இந்திய சிந்தனைகளே.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது கலாசாரத்தின் அடிநாதம். அதையே தாரக மந்திரமாக நாடு பூராவும்  ஒவ்வொரு சாதாரண மனிதனும் கூட கடைப்பிடித்து வருகிறான். பிரிவினை வாதங்களால் கட்டுண்டு அவதிப்படும் உலகில் அதுதான்  இன்றைக்குப் பிணி தீர்க்கும் அரு மருந்தாக இருந்து வருகிறது. காலங்காலமாகவே  உலகின் பிற பகுதிகளில்   இன ஒழிப்புகள்  நடந்து  பிற சமூகத்தினர்கள் விரட்டி அடிக்கப்பட்ட போது,  பாதிக்கப்பட்டவர்களுக்குப் புகலிடம் கொடுத்து,  ஆதரவளித்து  நம்மவர்க்கு இணையான உரிமைகளையும் கொடுத்து வந்தது இந்தியப்  பாரம்பரியம்.  

உலகில் எங்குமில்லாத அளவுக்கு எத்தனை எத்தனை வகையான நூல்கள் இங்கிருந்து வெளிவந்துள்ளன? வேதங்கள், உபநிடதங்கள், இராமாயணம்,  மகாபாரதம், திருக்குறள்  உள்ளிட்ட பலவும் காலத்தால் அழிக்க முடியாத உண்மைகளைச் சுமந்து நிற்கும் பொக்கிஷங்கள். என்றைக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளைச் சொல்லும் அட்சய பாத்திரங்கள். மேலும் அறுவை சிகிச்சை தொடங்கி அரசு நிர்வாகம், பொருளாதாரம் எனப் பலதரப்பட்ட துறைகளிலும்  நுட்பமான விசயங்களைச் சொல்லும்   பலவகையான படைப்புகள்.  

சிந்து சரஸ்வதி நாகரிக காலத்தின் செயல்பாடுகள் உலகையே ஆச்சரியப்பட வைக்கின்றன.  4500 வருடங்களுக்கு முன்பே முழுமையாகத் திட்டமிடப்பட்ட நகரங்கள்   ஒரு வளர்ச்சியடைந்த நகர்ப்புறக் கலாசாரம் நமது தேசத்தில் இருந்து வந்ததை வெளிக்காட்டுகிறது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு தொடங்கி சர்வதேச வணிகத்தில் இந்தியா முதல் நிலையில் இருந்து வந்ததாக வரலாற்றாசிரியர் அகர்வாலா கூறுகிறார்.

பொது யுக காலம் தொடங்குவதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே இந்திய வாழ்க்கை முறை உயர் நிலையில் இருந்து வந்துள்ளதை வரலாறு தெரிவிக்கிறது.  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் தொடங்கி உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து  பல நூறாண்டுகள் முதலிடத்தில் இருந்து வந்ததை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே  ஐரோப்பியர்கள் இங்கு வந்து நாட்டின் அடிப்படைகளைச் சிதைக்கும் வரை இந்தியா உலகின் முதல் நிலைப் பொருளாதாரமாக விளங்கி வந்துள்ளது. அவர்கள் இங்கு வந்த சமயத்தில்  விவசாயம், தொழில்கள், வணிகம், கல்வி எனப் பல துறைகளிலும் இந்தியா மேல் நிலையில் இருந்ததை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

காலனி ஆதிக்கக் காலத்தில் ஐரோப்பியர்கள் உலக வரலாற்றைத் தங்களின் மேலாதிக்க தந்திரங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி எழுதினார்கள். அதனால் இந்தியாவின் வரலாறும் திரிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் திணிக்கப்பட்ட மெக்காலே கல்வி முறை தேசத்தின் பின்புலங்கள், நடைமுறைகள் மற்றும் சிறப்புகள் எனப் பலவற்றையும் மறைத்துப் போட்டது.

சுதந்தரம் வந்த பின்னர்  அரவிந்தர், தாகூர், காந்தி உள்ளிட்ட எத்தனையோ சிந்தனையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும் இன்று வரை தேசம் சார்ந்த கல்வி முறை அறிமுகப்படுத்தப்படவேயில்லை. எனவே நாடு பல துறைகளில் வளர்ந்த பின்னரும், தேசத்தைப் பற்றிச் சரியான பார்வையில்லாத இளைஞர்களையே நமது கல்விக் கூடங்கள்  உருவாக்கி வருகின்றன. 

நமது தேசத்துக்கென அசாத்தியமான சமூக மற்றும் பொருளாதார வலிமைகள் இன்றும் இருப்பதைக் கள ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பாரம்பரியமான நமது குடும்ப கலாசாரம், நீளும் உறவு முறைகள், பாசம், தியாகம் உள்ளிட்ட உயர் குணங்கள் ஆகியன நிறைவான வாழ்வுக்கு அடிப்படையாக விளங்கி வருகின்றன.  ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டும், மற்றவர்களுடன் உறவாடியும் வாழும் மனநிலையை நமது சமூகங்கள் பெற்றுள்ளன. இது தேசத்தின் அமைதிக்கு மட்டுமன்றி, ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைந்து வருகிறது  என நிபுணர்கள் கூறுகின்றனர்.  

இங்குள்ள இயற்கை வளங்கள் அபரிமிதவானவை. தட்ப வெப்பம், நில அமைப்பு, நீர் ஆதாரங்கள், கனிம வளங்கள், செடி கொடிகளின் வகைகள் எனப் பலவகையிலும் நமக்குச் சாதகமான அம்சங்கள் நிறைந்துள்ளன. நமது தேசம் முழுவதும் பாரம்பரியமான நெசவு முறைகள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு என தனித்தன்மை வாய்ந்த தொழில்கள் பரவிக் கிடக்கின்றன. அமைப்பு சாராத் தொழில்களுக்கான பிரிவின் கீழ் மட்டும் நான்கு கோடிக்கு மேற்பட்ட  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் செயல்பட்டு வருவதாக மத்திய அரசின் பொருளாதாரக் கணக்கெடுப்பு 2005 கூறுகிறது.

நமது தேசத்தின்  மனித வளம் மிகவும் உயர்வானது. குடும்ப அமைப்பைக் கட்டிக்காத்து அடுத்த தலைமுறைகளின் நன்மை கருதி தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்  மக்களே இங்கு நிறைந்துள்ளனர். கடினமான உழைப்பை மேற்கொள்ளவும், எளிய அமைதியான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவும் தயங்காத மக்களை நாம் அதிகம் பெற்றுள்ளோம்.  தொழில் முனைவோர்கள் மட்டுமே எட்டரை கோடி பேர்கள் நமது நாட்டில் உள்ளதாக லண்டன் வியாபார நிறுவனம் தெரிவிக்கிறது.

விவசாயம், நெசவு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, கிராமியக் கலைகள் எனப் பல விதமான  துறைகளில் கூர்மையான அறிவையும் பாரம்பரிய ஞானத்தையும்  கொண்ட பல லட்சக் கணக்கான பேர் நாடு பூராவும் நம்மிடையே வாழ்ந்து  வருகின்றனர்.  மேலும் உலகிலேயே அதிகமான இளைஞர் பட்டாளத்தை நமது நாடு  பெற்றுள்ளது. அவர்களின் திறமைகளைச் சரியான முறையில் பயன்படுத்தி அதனால்  தேசத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

இத்தனை பெரிய வரலாறும் வலுவான அடித்தளங்களும் வாய்ப்புகளும் இருந்தும், ஏன் நமது தேசத்தில் இன்னமும் பல கோடி பேர் வறுமையிலும்  வாய்ப்புகளின்றியும் உழலுகின்றனர்? அடிப்படைப் பிரச்னைகளைக் கூடத் தீர்க்க முடியாத நிலைமையில்  ஏன் அரசாங்கங்கள் இருந்து  வருகின்றன? தேசத்தின் வரலாறு மட்டுமன்றி, நிகழ்கால செயல்முறைகள் பற்றிக் கூட  எந்த வித அடிப்படை புரிதலும் மக்களுக்கு ஏன் இல்லாமல் உள்ளது?   

அவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் நமது தேசத்தின்  அடிநாதங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்றபடி உறுதியாகக் கொள்கைகளை வகுத்து, நாட்டை வழி நடத்தக் கூடிய தலைமை நமக்குத் தொடர்ந்து  கிடைக்கவில்லை. சுதந்தரத்துக்கு அப்புறம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அதிகப் படியான காலம் வகித்து வந்தவர்களுக்கு இந்த தேசத்தின் அடிப்படைகள் பற்றி சரியான புரிதல் இல்லை.  அதனால் அவற்றில் போதுமான நம்பிக்கை இல்லை. எனவே அவர்கள் நமது கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் எல்லாவற்றையும் மேற்கு நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யத் துவங்கினர்.  அது இன்று வரைக்கும் தொடர்ந்து சென்று கொண்டுள்ளது.  

அதனால் உலக வரலாற்றிலேயே மிகப் பெரும்பாலான காலம் ஒரு அளப்பரிய பொருளாதார சக்தியாக  விளங்கி  வந்த நமது தேசம், கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக முற்றிலும் வேறான  பின்னணிகளைக் கொண்ட ஐரோப்பிய- அமெரிக்க வழி முறைகளையே கடைப்பிடித்து வரும் அவலம் நிகழ்ந்தேறி வருகின்றது. அவர்களின் சமூக, கலாசார, பொருளாதார சிந்தனைகள் எல்லாம் தோற்றுப் போய் வருவதாக அவர்களே ஒப்புக் கொள்ளும் நிலையிலும் நாம் அவர்களை விடுவதாக இல்லை.  

வரம்பு மீறிய தனிநபர் வாழ்க்கை முறை, நுகர்வுக் கலாசாரம், அரசையே அதிகமாக நம்பி வாழும் தன்மை ஆகியன அவர்களின் அடிப்படை வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கியுள்ளன.  2008 ஆம் வெளிப்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னால், இன்னும் பல நாடுகள் சிக்கல்களிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் உள்ளன.

அதே சமயம் ஆட்சியாளர்கள் தொடர்ந்து தவறான கொள்கைகளையும் அணுகு முறைகளையும் மேற்கொண்டு வந்த போதும், இந்திய தேசம் மக்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த பல வருடங்களாக நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கள ஆய்வுகள்,  நமது சமூகங்கள்  அரசுகளின் பல தவறுகளையும் மீறி தேசத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தெளிவாக உணர்த்துகின்றன. 1960களில் இந்தியாவில் அமெரிக்காவின் தூதராகப் பணியாற்றியவரும், பொருளாதார நிபுணருமான கென்னத் கேல்ப்ரெய்த் 2001 ஆம் வருடம்  இங்கு வந்த போது,   இந்தியாவின் முன்னேற்றத்தில்  அரசை விட  மக்களும் கலாசாரமுமே மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றன என அறிவித்தார்.   

அண்மைக் காலமாக  இந்தியா, சீனா ஆகிய  நாடுகளின் அடிப்படைகளும் , சிந்தனை முறைகளும் சர்வதேச  அளவில் அங்கீகாரம் பெறத் துவங்கியுள்ளன. எனவே உலக அளவில் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களும், மேலாண்மை  நிறுவங்களும் நமது சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அவையெல்லாம் நமது தேசத்தின் சமூக, கலாசார அடித்தளங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்குப்  பேருதவி புரிந்து வருவதாகச் சொல்கின்றன.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உலக அளவில் நமது நாட்டைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்பு தொடங்கியது. ஆனால் கடந்த சில வருடங்களாக  நிலைமை  மாறி வருகிறது.  அதற்கு முக்கியக் காரணம் ஊழல்கள் நிறைந்த உறுதியில்லாத ஒரு தலைமை நாட்டை ஆண்டு வருவது தான். நாட்டின் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான கொள்கைகள் முடிவுகள் குறிப்பிட்ட சிலரின் சொந்த லாபத்தை மையமாக வைத்தே எடுக்கப்பட்டு வருகிறது.   

நம்முடைய நிதியமைச்சர் வெளி நாட்டில் போய் ஐயாயிரம் வருடமாக இந்திய நாடு ஏழை நாடாக இருந்து வந்திருக்கிறது என்று அறிவித்து வருகிறார். கடந்த  முப்பது வருடங்களுக்கு மேலாக அவர் பெருமையாகக் கருதும் அதே வெளி நாடுகளைச் சேர்ந்த பல பொருளாதார வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் பண்டைய பொருளாதாரச் செழிப்பு குறித்து ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர். கடந்த இரண்டாயிரம் வருடத்துக்கான உலகப் பொருளாதார வரலாறு பற்றிய ஆங்கஸ் மாடிசன் அவர்களின் ஆய்வு,  பொது யுகம் 0 வருடத்தில் உலக அளவிலான மொத்த பொருளாதார உற்பத்தியில்  இந்தியா 32.9 விழுக்காடு பங்களிப்புடன் மிகப் பெரிய வல்லரசாக விளங்கி வந்ததை எடுத்துக் காட்டுகிறது.  நாட்டைப் பற்றிய அடிப்படை வரலாற்று உண்மைகளைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் அதற்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பவர்கள்,  எவ்வாறு மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்க  முடியும்?

தொன்று தொடங்கி அன்று முதல் இந்திய தேசம் தனித் தன்மைகளுடன் விளங்கி வருகின்றது.  அது உலகுக்கு அளித்த கொடைகள் ஏராளமாக உள்ளன. எனவே நமது தேசத்தின் எழுச்சி நமக்கு மட்டுமன்றி உலகுக்கும் அவசியமாகிறது. அதன் உயர் நெறிகளும், அமைப்பு முறைகளும்,  ஆன்மிக சிந்தனையும், பரந்த பார்வையும் உலகின் பிற பகுதிகளுக்கும் தேவைப் படுகிறது. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் நாம் அடிமை நாடாக இருந்த போதே எதிர்காலத்தில் இந்தியா உலகுக்கு அளிக்க வேண்டியவை நிறைய உள்ளன என்று அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த்  அறுதியிட்டுச்  சொல்லியுள்ளார்.

தனது நெடிய பயணத்தில் நமது நாடு சந்தித்த பிரச்னைகளும் எதிர்கொண்ட சவால்களும் ஏராளம். அவை ஒவ்வொன்றையும் தாண்டித் தான் இன்று இந்தியா நடை போட்டு வருகின்றது. நமக்குத்  தேவையெல்லாம் ஒரு நல்ல தலைமை மட்டுமே. இந்த தேசத்தின் வலிமைகளுக்கெல்லாம் அஸ்திவாரமாக விளங்கி வரும் உயர்ந்த கலாசாரத்தின் மீதும், நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கட்டிக் காத்து வரும் பன்முகத் தன்மை கொண்ட சமூகங்கள்  மீதும் நம்பிக்கை வைத்துள்ள  ஒரு தலைமையே  நமக்கு அவசியம்.  

நமது எதிரிகளும், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளும் எந்த வித அச்சமுமின்றி நமது எல்லைக்குள் நுழைவதும், சர்வ சாதாரணமாக நமது வீரர்களைப் பிடித்து சென்று கொல்வதும் நமது தலைமையின் கோழைத் தனத்தைத் தோலுரித்துக்  காட்டுகின்றது. பெரும்பாலான கட்சிகள் மக்களின் உணர்வுகளைத் தூண்டும் சில வெற்று வாதங்களை மட்டுமே வைத்து கடந்த பல காலமாக அரசியல் நடத்தி வருகின்றன. அதனால்  நாட்டின் எதிர்கால நலனைக்  கருத்தில் கொண்டும், ஒட்டு மொத்த மக்களின் முன்னேற்றத்துக்குப் பொருத்தமான வகையிலும் சரியான கொள்கைகள்  வகுக்கப்படுவதில்லை. மாறாக மக்களைப் பிரித்து வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதும் போக்கு அதிகரித்து வருகின்றது. இது எந்த விதத்திலும் நாட்டுக்கு நல்லதல்ல.

எனவே தேச பக்தியும், ஒட்டு மொத்த மக்களின் நலனில் அக்கறையும் கொண்ட ஒரு தலைவரே நமக்குத் தேவை. அவர் செயல் திறன் மிக்கவராகவும், அடுத்த தலைமுறைகளுக்காகத் திட்டங்களைத் தீட்டும் உறுதி படைத்தவருமாக இருக்க வேண்டும். சுயநலனையும் சுற்றி உள்ளவர்களின் ஆசாபாசங்களையும் மையமாக வைத்து முடிவெடுப்பராக இருக்கக் கூடாது.

பாரம்பரிய மிக்க இந்த தேசம் மீண்டெழ நல்லவர்களின் தலைமை  வர வேண்டும். அரசியல் சுதந்தரம் பெற்று  அறுபத்தாறு ஆண்டுகள் கழிந்த பின்னரும் நம்பிக்கை இழந்து வாழும் நமது இளைய தலைமுறையினரை புதிய தெம்புடன் எழ வைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இந்தியப் பண்பாடு சீக்கிரமே மேலெழுந்து  வேண்டும். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது திறமைகள் முழுவதையும் வெளிப் படுத்தும் வகையில்  வாய்ப்புகள் பெருக வேண்டும்.  புத்துணர்வு மிக்க ஒரு புதிய இந்தியா உருவாக வேண்டும். நமது நாட்டைப் பாதித்து வரும் சிரமங்கள் வெகு சீக்கிரமே சரி செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியன் என்று சொல்லப் பெருமைப்படும் காலம் வர வேண்டும்.

உலகின் பலம் பொருந்திய நாடுகள் எல்லாம் தற்போது வலுவிழந்து நின்று கொண்டுள்ளன. எனவே இந்தக் கால கட்டத்தில் இந்தியா குறித்து சர்வ தேச அளவிலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆகையால் காலம் நமக்குத் தரும் அரிய வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  உலக அளவில் ஒரு நல்ல முன் மாதிரியாகவும், பொருளாதார சக்தியாகவும் விளங்கி வந்த நமது தேசம் மீண்டும் அந்த நிலையைக் கூடிய சீக்கிரம்  அடையும்  நிலைமை உருவாக வேண்டும். 

அதற்கேற்ற வகையில் வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பொருத்தமானதொரு தலைமை உருவாக நமது வாக்குகளை அளிப்போம்.   


No comments: