இந்தியப் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே மிக மோசமான நிலைக்குச்
சென்று கொண்டுள்ளது. அதனால் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசிடமிருந்து பல தரப்பட்ட மக்களும்
நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். அதே சமயம் நிதி நிலை அறிக்கையை ஆறு வார காலத்துக்குள்
தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு இருந்தது. இந்தப் பின்னணியில் மோடி அரசு ஒரு
புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி்யுள்ளது எனச்
சொல்லலாம்.
2014-15 நிதி நிலை
அறிக்கை அடுத்த ஏழு மாதங்களுக்கு மட்டுமே உரித்தானது. ஆயினும் புதிய அரசின் எதிர்காலத்துக்கான
அணுகுமுறையை இதன் மூலம் உணர முடிகிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையான விவசாயம்,
சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சி, கட்டமைப்புகள் உருவாக்கம், பெண்கள் நலன்,
சேமிப்புகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல விசயங்களுக்கு கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரத்துக்கு அஸ்திவாரமாக விளங்கி வருவது குறு,
சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் விவசாயமும் ஆகும். அவை தான் மிகப் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி, நாட்டின் பொருளாதார
உற்பத்தியில் பாதிக்கு மேற்பட்ட பங்கினை அளித்து
வருகின்றன. ஆனால் கடந்த பல வருடங்களாக அவை பெருமளவு புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
நிதி நிலை அறிக்கை என்றதும் அது பெரிய கம்பெனிகள், வெளி நாட்டு
மூலதனம், மற்றும் பங்குச் சந்தைகள் ஆகியவற்றை ஒட்டியே திட்டமிடும் போக்கு இருந்து வருகிறது. இப்போது அந்த
அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றம் எதிர்வரும் காலங்களில் நமது நாட்டில் தேசம் சார்ந்த ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு
வழி வகுக்கும் எனச் சொல்லலாம். நாட்டில் அதிக பட்சமான வேலை வாய்ப்புகளை அளிப்பது மட்டுமல்லாமல்,
உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்ட பல தளங்களிலும் பொருளாதாரத்துக்கு முக்கியமாக விளங்கி
வருவது சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களாகும். ஆனால் அவை போதிய நிதி உதவிகள் கிடைக்காமல்
மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுள்ளன. இப்போது முதன் முறையாக அவற்றுக்கு நிதி உதவி கிடைக்க
புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பான அம்சமாகும்.
நமது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது போதிய அளவு
கட்டமைப்புகள் இல்லாத சூழ்நிலையாகும். அந்த வகையில் வெவ்வேறு வகையான திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன. தேசிய அளவில்
ஒரு பெரிய சாலைத் திட்டம் மற்றும் நூறு நவீன
மயமான நகர்களை உருவாக்கும் திட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை, மேலும் உயர்தரமான கல்வி பரவலாக அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இந்தியத்
தொழில் நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனங்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மக்களின் சேமிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
சேமிப்புக்கான வரம்பு ஐம்பதாயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய சிறு சேமிப்புப்
பத்திரங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. பெண்களின் கல்விக்கும் முன்னேற்றத்துக்கும்
ஊக்கமளிக்கும் வகையில் திட்டம் ஏற்படுத்தப்படவுள்ளது. நதி நீர் இணைப்புக்கான ஆய்வுகளை
மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது பாரம்பரியமான கால்நடைகள் பல பகுதிகளிலும் அழிந்து வருகின்றன. அவற்றைப்
பாதுகாப்பதற்காக ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற அரசின் தவறான
செயல்பாடுகளால், நிதிப் பற்றாக்குறை பெரிய அளவில் உள்ளது. அது பொருளாதார வளர்ச்சிக்கு
ஒரு பெரிய தடையாக உள்ளது. அதைச் சரி செய்யப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையில் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களின்
நலனையும் கருத்தில் கொண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பான அம்சமாகும்.
தற்போது நாட்டுப் பொருளாதாரம் மிகவும் மோசமாகவும், பற்றாக்குறைகள்
அதிக அளவிலும் உள்ளன. இந்தச் சிரமமான சூழ்நிலையில் வருவாய்களைப்
பெருக்கி, எல்லாப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும்
முன்னேறுவதற்கான ஒரு புதிய பாதையைக் காட்டுவதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.
( தினமலர், திருச்சி பதிப்பு, ஜூலை 21, 2014)
No comments:
Post a Comment