சென்ற வருடம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு
பொறுப்பேற்ற பின்னர் அறிவிக்கப்பட்ட முக்கியமான முடிவுகளில் ஒன்று திட்டக்குழுவைக்
கலைப்பதென்பதாகும். ஏனெனில் அந்த அமைப்பு கடந்த பல வருடங்களாகவே வெவ்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தது.
இந்தியா சுதந்திரமடைந்த பின், 1950 ஆம் வருடம் அன்றைய பிரதமர்
ஜவஹர்லால் நேரு திட்டக் குழுவை அமைத்தார். அதற்கான தாக்கத்தை அவர் கம்யூனிச ஆட்சியின்
கீழிருந்த அப்போதைய சோவியத் ரஷ்யாவிடமிருந்து
பெற்றார்.
அதற்குப்பின் கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில்
பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலகின் இரண்டு முக்கிய பொருளாதார சித்தாந்தங்களாக
மேற்கத்திய சிந்தனையாளர்களால் முன் வைக்கப்பட்ட கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம்
இரண்டுமே பெருமளவு நிராகரிக்கப்பட்டுள்ளன.
1980களின் இறுதியில் கம்யூனிச சித்தாந்தம் தோற்றுப் போய்,
சோவியத் ரஷ்யாவே பல பிரிவுகளாகச் சிதறுண்டு போனது. கம்யூனிசத்தின் மற்றொரு முகமான சீனா,
சோசலிச
பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு விட்டது. கம்யூனிச ஆட்சி அதிகாரத்தின் கீழ் தமக்கேற்றவாறு
சந்தைக் கோட்பாடுகளைக் கொண்ட ஒரு பொருளாதார
முறையை அது நடைமுறைப் படுத்தி வருகிறது.
மேற்கத்திய முதலாளித்துவ சித்தாந்தம் காலப் போக்கில் முழுவதும்
சந்தைப் பொருளாதாரமாக மாறிப் போனது. தொடர்ந்து வந்த காலங்களில் உருவான புதிய கோட்பாடுகள்
அனைத்தும் நிதிச் சந்தைகளை மையமாக வைத்தே அமைந்தன. அதில் அமெரிக்க சிந்தனைகளின் தாக்கம்
மிக அதிகமாக இருந்தது.
பின்னர் 2008 ஆம் வருடத்தில் அமெரிக்காவில் உருவாகி தொடர்ந்து
உலகின் பல நாடுகளையும் பாதித்த உலகப் பொருளாதார நெருக்கடி, அவர்களின் நம்பிக்கையையே
தகர்த்துப் போட்டது. அதனால் அந்த நாடுகளைச் சேர்ந்த பெரும் நிபுணர்களே இப்போது அவர்களின்
சித்தாந்தை வெளிப்படையாகக் குறை கூறுகின்றனர்.
கடந்த சில வருடங்களாக மேற்கத்திய நாடுகள்
பலவற்றில் தொடரும் பிரச்னைகள், அந்த வாதங்களுக்கு
வலு சேர்க்கின்றன.
எனவே உலக நாடுகள் அனைத்துக்கும் மேற்கத்திய கொள்கைகளே பொருத்தமாக
இருக்கும் என ஆலோசனை கூறி வந்த சர்வதேச அமைப்புகளான உலக நிதி ஆணையம் போன்றவையெல்லாம்
கூட , ஒரே மாதிரி கொள்கைகள் எல்லா நாடுகளுக்கும் பொருந்தாது எனக் கூற ஆரம்பித்து விட்டன.
ஆகையால் நாடுகள் ஓவ்வொன்றும் முன்னேறுவதற்கு
வெவ்வேறு வகையான வழிமுறைகள் இருக்க முடியும்
எனப் பரவலாக இன்று ஒத்துக் கொள்ளப்படுகிறது.
நமது நாட்டைப் பொறுத்த வரையில் சுதந்திரம் பெற்ற பின் முப்பது
ஆண்டுகளுக்கு மேலாக சோசலிச சித்தாந்தமே அரசின் கொள்கைகளில் மையமாக இருந்து வந்தது.
ஆனால் அது எதிர்பார்த்த பலனைத் தராததால், 1990 களின் ஆரம்பத்தில் மேற்கத்திய உலக மயமாக்கல்
சிந்தனைகளை ஒட்டிய திட்டங்கள் முன் வைக்கப்பட்டன.
எனவே அரசின் கொள்கைகள் பெருமளவு மேற்கத்திய சித்தாந்தங்கள் மற்றும் கோட்பாடுகளை ஒட்டியே
கடந்த அறுபத்தைந்து வருடங்களாக இருந்து வருகின்றன.
அதனால் தான் நமது தேசத்தின் அஸ்திவாரங்கள் வலுவாக இருந்த
போதும் நம்மால் முழுமையான பலன்களைப் பெற முடியவில்லை. இன்னமும் வறுமையும், அடிப்படையான பிரச்னைகளும் நமக்குச் சவால் விட்டுக் கொண்டுள்ளன.
அதே சமயம் மேல் மட்டத்தில் கொள்கை வகுப்பவர்கள் தொடர்ந்து
தவறான சித்தாந்தங்களைத் தேர்வு செய்து வரும் போதும், மக்கள் தேசத்தின் பொருளாதாரத்தை
தங்களால் முடிந்த அளவு முன்னெடுத்துச் சென்று கொண்டுள்ளனர். நமது மக்களுக்கே உரிய தனித்
தன்மைகளான குடும்பம் சார்ந்த வாழ்க்கை முறை,
அதிக சேமிப்புகள், கடுமையான உழைப்பு, தொழில் முனையும் தன்மை, சமூக மூலதனம் ஆகியன தேசத்தின்
வளர்ச்சிக்கு, மேற்கத்திய சித்தாந்தங்களையும்
மீறி, வழி வகுத்து வருகின்றன.
திட்டக் குழுவைப்
பொறுத்த வரையில் அது எப்போதோ காலாவாதி ஆகிவிட்ட அமைப்பு. இந்தியாவைப் போல ஒரு பரந்த
பெரிய தேசத்துக்கு வெளிநாடுகள் அல்லது பெரு நகரங்களைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களில் பொருளாதாரம் படித்த சித்தாந்த
வாதிகள் சில பேர் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு கீழ் நோக்கித் திட்டம் தீட்டும் முறை
என்பதே மிகவும் தவறானதாகும்.
ஏனெனில் நமது தேசம் பல்வேறு வகையான வளங்கள், திறமைகள், மற்றும் தொழில்களைக் கொண்டது. அவையெல்லாம் அந்தப்
பகுதி மக்களின் கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைகளுடன் பின்னிப் பிணைந்தவை. அவற்றுக்கெனத்
தனியான சிறப்புகள் உண்டு. ஆனால் அவையெவற்றைப்
பற்றியும் பாடத்திட்டங்களில் எதுவும் இல்லை.
பல்கலைக் கழகங்களின் பாடங்கள் பலவும் மேற்கத்திய நாடுகளின்
கோட்பாடுகள் மற்றும் அவர்களின் சிந்தனைகள், வாழ்க்கை முறைகள், அனுபவங்களை மையமாக வைத்தே
உள்ளன. மேற்கத்திய சிந்தனைகள் பலவும் தங்களின் கருத்துக்கள் மற்றும் வாழ்க்கை முறைகள்
மட்டுமே உயர்ந்தவை; எனவே தமது வழிமுறைகள் மட்டுமே சரியானவை என்கின்ற அடிப்படையைக் கொண்டவை.
சுதந்தர இந்தியாவில் முதல் முறையாக மத்திய அரசு கொள்கை வகுப்பதில்
பாரதிய அணுகுமுறைகள் பின்பற்றப்படும் என்று அறிவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்தது. இதுவரைக்கும் வந்த அரசுகள் நமது நாட்டுக்கென உள்ள தனித்தன்மைகளையும் சிறப்புகளையும்
திட்டமிடுதலில் முன் வைக்கவில்லை. அவை நமக்கென தனித்தன்மைகள் உண்டு என்று சொல்லக் கூடத்
தயங்கி வந்தன.
அண்மைக் காலங்களில்
உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள், நமது தேசம் பழைய காலங்களிலும் இன்றும்
தனது தனித் தன்மைகள் மூலமே சிறப்பாக இயங்கி வந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் கடந்த இரண்டாயிரம் வருடங்களில் மட்டும், ஏறத்தாழ எண்பத்தைந்து
விழுக்காடு காலம் இந்தியா உலகின் செல்வந்த நாடாக முதல் நிலையில் இருந்து வந்தது என்பதை
வெளியிட்டுள்ளார்.
கடந்த நாற்பது வருடங்களாக மேற்கத்திய கோட்பாடுகள் உலகின்
பல நாடுகளிலும் பெரும் தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. ஆனால் நமது தேசம் உள் நாட்டுக்
கொள்கைக் குழப்பங்களையும், வெளி நாட்டுத் தலையீடுகளையும் மீறி தொடர்ந்து முன்னேறி வருகிறது.
அதற்குக் காரணம் நமக்கென உள்ள தனித் தன்மைகள் என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி
வருகின்றது.
நமது தேசத்துக்கென உள்ள திறமைகளையும் வாய்ப்புகளையும் உலகம்
உணரத் தொடங்கி வருகிறது. ஆனால் நமது நாட்டைச் சேர்ந்த பொருளாதார வாதிகள் மற்றும் அறிவு
ஜீவிகள் ஆகியோரில் பலரும் அவற்றை அங்கீகரிக்கத் தயங்கி வந்தனர்.
புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய கொள்கைக் குழு,
கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்று, அவற்றைச் சரி செய்யும் நோக்கில் அமைக்கப்
பட்டிருக்கிறது. பல்துறை நிபுணர்கள், அரசியல்
தலைவர்கள், தொழில் பிரதிநிதிகள் எனப் பல பேருடன் கலந்து, நிறைய விவாதித்து இந்த அமைப்பு ஏற்பத்தப்பட்டுள்ளது.
பழைய திட்டக் குழுவில் இருந்து வந்த பெரிய பிரச்னையே, மத்திய
மாநில அரசுகளுக்கிடையில் இருந்து வந்த சுமுகமில்லாத போக்கு. மத்திய திட்டக் குழு, மாநில
அரசுகளை நடத்திய விதம் பல சமயங்களில் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. தற்போதைய
கொள்கைக் குழுவில் மாநில அரசுகளின் வளர்ச்சி மூலமே தேசம் வளர்ச்சி பெறும் என்பது அடிப்படையாக
ஆக்கப் பட்டிருக்கின்றது.
மத்திய- மாநிலக் கூட்டுறவுக்கான வழி முறைகள் கொள்கைக் குழுவில்
மையமாக வைக்கப்பட்டிருக்கிறது. மாநில முதல்வர்கள்
அனைவரும் குழுவின் அங்கமாக ஆக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களுக்கிடையில் வரும் பிரச்னைகள் எழும் போது மண்டலக் குழுக்கள் உருவாக்கப் படும் வகையில் வழி
வகை செய்யப்பட்டுள்ளது.
திட்டங்கள் கிராம அளவில் ஏற்படுத்தப்பட்டு, அவை மேல் நோக்கிச்
செல்லும் வகையில் குழு செயல்படும் என சொல்லப்பட்டுள்ளது. விவசாயத் துறையைப் பொருத்த
வரையில் உற்பத்தித் திறன்கள் அதிகரிக்கப்பட்டு, உணவுப் பாதுகாப்பு என்பதை மீறீயதான
வளர்ச்சியாக இருக்கும்.
நமது நாட்டில் சிறு, குறு மற்றும் , மத்திய தரத் தொழில்களே
மிகப் பெரும் பங்கு வகித்து வருகின்றன. சாதாரணக்
குடும்பங்களால் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு கஷ்டங்களுக்கிடையே நடத்தப் பட்டு வரும் அவை, பொருளாதாரத்துக்கு ஏறத்தாழ பாதியளவு பங்கினை அளித்துக்
கொண்டுள்ளன; வேலை வாய்ப்புகளில் தொண்ணூறு விழுக்காட்டுக்கு மேல் பங்களித்து வருகின்றன.
நமது தேசத்தில் தொழில்களை வளர்ப்பது, தொழில் முனைவோரை உருவாக்குவது,
ஏற்றுமதிகள் செய்வது எனப் பலவகைகளிலும் அவற்றின் பங்கு அதிகமாக உள்ளது. அவற்றை முடுக்கி
விட்டால், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை
அதிகரிக்க முடியும் ஆனால் அவை தொடர்ந்து வந்த அரசுகளால் இதுவரை கண்டு கொள்ளப்படவேயில்லை.
இப்போது முதல் முறையாக அவற்றுக்கு உதவி செய்யும் வகையில் கொள்கைகள் அமைக்கப்படும் எனச்
சொல்லப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் சிறப்பாகச் செயல்படக் கூடிய பல விதமான
முறைகளை அந்தந்தப் பகுதிகளைச் சார்ந்த மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். அவற்றை வெற்றிகரமாகச்
செயல்படுத்தியும் வருகின்றனர். அவற்றில் பலவற்றை வேறு இடங்களிலும் செயல்படுத்த முடியும்.
ஆனால் அவை பற்றி மற்ற இடங்களில் உள்ளவர்களுக்குத் தெரிவதில்லை. இந்தக் குறையைப் போக்கும்
வகையில் தற்போது ஒரு மையம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன் மூலம் நாட்டில் நடக்கும் நல்ல
செயல்பாட்டு முறைகள் அனைவருக்கும் சொல்லப்படும்.
நமது நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் ஒரு முக்கியக்
காரணம் ’ சமூக மூலதனம்’ என்பதாகும். அது பிறருடன் இணக்கமாக இருந்து செயல்படும் தன்மை.
அது வெளி நாடுகளில் மிகவும் குறைவு. ஏனெனில் அவர்களின் தனி நபர் வாழ்க்கைத் தத்துவம்
கடந்த சில வருடங்களில் உறவுகளை வேகமாக அழித்து வருகிறது. நமது நாட்டில் அது அதிகமாக
உள்ளது. அதற்குக் காரணம் அரவணைத்துச் செல்லும் நமது மனப்பாங்கு மற்றும் உறவுகள் சார்ந்த
நமது வாழ்க்கை முறை.
பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மூலதனம் பெருமளவு உதவி புரிந்து
வருகின்றது. எனவே அதை அதிகரிக்க வெளி நாடுகளில் எவ்வளவோ முயற்சி செய்து வருகின்றனர். இப்போது முதன் முறையாக சமூக மூலதனம் தேச வளர்ச்சிக்குப்
பங்களிக்கிறது என அங்கீகரிக்கப்பட்டு, அது கொள்கைகள் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தப்
படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் சேவைத் துறைகளை உலகத் தரம் வாய்ந்ததாக உயர்த்த
கொள்கைக் குழு முயற்சிகளை மேற்கொள்ளும் என்பது
நமது தேசம் அடுத்த கட்டத்தை நோக்கி நகருவதற்கான ஒரு நடவடிக்கையாகும். மேலும் இதுவரை
உலக அரங்கில் பொருளாதார விவாதங்கள் மற்றும் கொள்கை வகுப்பதில் குறிப்பிட்ட சில மேற்கத்திய
நாடுகளே முக்கிய பங்கு வகித்து வந்தன. இனிமேல் அத்தகு சமயங்களில் இந்தியா முக்கியமான
இடத்தை வகிக்குமளவு கொள்கைக் குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது நமது நாட்டை
சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் இன்னொரு முக்கிய முயற்சியாகும்.
வெளி நாடு வாழ் இந்தியர்கள் உலகின் பல நாடுகளில் மிகச் சிறப்பாகச்
செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் திறமைகளையும் செல்வாக்கையும் இதுவரை வந்த அரசுகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது
அவர்களை நாட்டு முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக் கொள்ள கொள்கைக் குழு திட்டமிட்டுள்ளது.
தொழில் முனையும் தன்மை, கண்டுபிடிப்புகள், பாரம்பரிய அறிவு
ஆகியவை நாடு முழுவதும் பரவிக்கிடக்கின்றன. அவற்றை முழுமையாக வெளிக் கொணர்ந்து நாட்டு
முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை கொள்கைக் குழு செய்ய உள்ளது.
இதுவும் ஒரு முக்கியமான விசயமாகும்.
இளைஞர்களின் சக்தியை கல்வி, தொழில் நுட்பம் மற்றும் திறன்
வளர்ப்பு பயிற்சிகள் மூலம் பயன்படுத்துவது கொள்கைக் குழுவின் ஒரு நோக்கமாகும். மக்களிடையே
உள்ள வித்தியாசங்களைக் களைதல், வாய்ப்புக்கள் குறைந்த பிரிவினருக்கு அதிக கவனம் கொடுத்தல்,
பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துதல், சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் போன்ற முக்கிய
அம்சங்களை கொள்கைக் குழு கவனிக்கும். மத்திய
தர வர்க்கத்தினர் தங்களின் முழுத் திறமைகளை வெளிப்படுத்த கொள்கைக் குழு கவனம் செலுத்தும்.
மொத்தத்தில் நமது தேசத்தின் அடிப்படைகளைக் கவனத்தில் கொண்டு
, வெளிநாட்டுச் சித்தாந்தங்களை மையப்படுத்தாமல் நமக்குப் பொருத்தமான வகையில் திட்டங்களை
வகுப்பதற்கு ஏதுவாக கொள்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனைவரும் பயன் பெரும் வகையில் ஒட்டு மொத்தமான முன்னேற்றம் ஏற்பட முடியும்.
தொடர்ச்சியாக இந்தியா உலக அளவில் பெரும் பொருளாதார சக்தியாக உருவாக இதன் மூலம் பெரிய
உந்துதல் கிடைக்கும் என நம்புவோம்.
( சுதேசி செய்தி,
பிப். 2015)
No comments:
Post a Comment