ஏப்ரல் 19 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நிறைவுற்ற இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபத்தியொன்றாவது
காங்கிரஸில் புதிய தேசிய பொதுச் செயலாளராக திரு. சீதாரம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் 1964 ஆம் வருடம் உருவான அந்தக் கட்சியின்
ஐந்தாவது பொதுச் செயலாளர்.
இது வரை அந்தப் பதவியை வகித்து வந்த பிரகாஷ் கராத் கட்சியின்
கோட்பாடுகளை வலியுறுத்துவபர் என்று அறியப்பட்டவர். மாறாக யெச்சூரி நடைமுறையாளர் என்றும், பிற கட்சித் தலைவர்கள் பலருடனும்
நெருக்கமான தொடர்பினை வைத்துக் கொண்டுள்ளவராகவும் அறியப்படுகிறார்.
2008 ஆம் வருடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவுடனான மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி
ஒப்பந்தத்தை எதிர்த்து, காங்கிரஸ் கூட்டணிக்கு
அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு வெளியில் வந்தது. அந்த முடிவுக்கு இடது சாரிக்
கட்சிகளுக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லை. ஆயினும்
அத்தகு முடிவை எடுப்பதற்கு பிரகாஷ் கராத்தின் உறுதியான அணுகுமுறைதான் காரணம் என்று
கூறப்பட்டது. அந்த நிலைப்பாட்டை அப்போது கட்சிக்குள்
எதிர்த்தவர் யெச்சூரி என்று கூறப்படுகிறது. அதனாலும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு
நெருக்கமானவராகக் கருதப் படுகிறார்.
அவர் பொறுப்பேற்றதும் கம்யூனிஸ்ட் கட்சி சிரமமான சூழ்நிலையில்
இருப்பதாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்குப் பதிலாக கேரளாவைச் சேர்ந்த இராமச்சந்திரன் பிள்ளையைப் பொதுச் செயலாளர் ஆக்குவதற்குக்
கடைசி வரை கட்சிக்குள் ஒரு குழு முயற்சித்து வந்தது.
1925 ஆம் வருடம் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. சுதந்திரத்துக்கப்புறம் 1957ல் முதன் முதலாக ஈ.எம்.எஸ்.
நம்பூதிரிபாட் தலைமையில் அக்கட்சி தலைமை தாங்கிய
அரசு கேரளாவில் ஆட்சிக்கு வந்தது. பின்னர் மேற்கு வங்காளத்தில் 1977 தொடங்கி முப்பத்தி
நான்கு வருடங்கள் தொடர்ந்து இடதுசாரிக் கூட்டணி ஆட்சி செய்து வந்தது. திரிபுரா மாநிலத்தில்
இடதுசாரிக் கூட்டணியின் தற்போதைய முதல்வர் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி நடத்தி
வருகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு விழுக்காடு தொடர்ந்து பல வருடங்களாக
இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. 2004 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலில் அதிக அளவு
எண்ணிக்கையில் உறுப்பினர்களைப் பெற்றனர். பின்னர்
2009 பாரளுமன்றத் தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்த வாக்கு விழுக்காடு 1.43 மட்டுமே.
2014ல் நடைபெற்ற தேர்தலில் வெறும் ஒன்பது உறுப்பினர்கள்
மட்டுமே அவர்களுக்குக் கிடைத்துள்ளனர். வலது கம்யூனிஸ்டுகள் ஒரே ஒரு இடத்தை மட்டும்
பெற்றுள்ளனர்.
மாநில அளவில் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது
ஆட்சியில் இருப்பது திரிபுராவில் மட்டும் தான். கேரளாவில் இடது சாரிக் கூட்டணி எதிர்க்
கட்சியாக செயல்பட்டு வருகிறது. 2011 தேர்தலில் மேற்கு வங்காளத்தில் இடதுசாரிக் கூட்டணி
பெரும் தோல்வியைச் சந்தித்தது. அண்மைக் காலமாக அக்கட்சியைச் சேர்ந்த பலர், பாஜக போன்ற
மாற்றுக் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர்.
கேரளாவில் நிலவும் கடும் கோஷ்டிப் பூசலால் கட்சி பெரிய பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. ஒன்று பட்ட
கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்து மார்க்சிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் தற்போதுள்ள ஒரே தலைவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன். அவருக்கு
எதிராகக் கடந்த பல வருடங்களாக அந்த மாநிலத்தின் கட்சித் தலைமையே
தொடர்ந்து செயல்பட்டு வருவது அன்னைவருக்கும் தெரிந்தது தான். அவர் கட்சியின்
மாற்றியமைக்கப்பட்ட தற்போதைய மத்திய குழுவில்
உறுப்பினராகக் கூட இல்லை; வெறும் அழைப்பாளர் மட்டுமே.
கம்யூனிச கட்சிகள் உலகளவில் கடந்த பல வருடங்களாகவே கடும்
தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. அதற்குக்
காரணம் அவர்கள் முன் வைக்கும் தவறான சித்தாந்தத்தின் ஒற்றைப்படையான தன்மையாகும். அதற்காக அவர்கள் உலக முழுவதுமே வன்முறைகளைக் கையாண்டு வந்துள்ளனர். ஜனநாயகக் குரல்வளையை
நெறிக்கின்றனர்.
நமது நாட்டிலும் அவர்களின் செயல்பாடுகள் பலவும் தவறானதாகவே
இருந்து வந்துள்ளது. 1962ஆம் வருடம் சீனா நமது நாட்டின் மீது படையெடுத்த போது அவர்கள்
சீனாவை ஆதரித்தார்கள். 1979ல் மேற்கு வங்கத்தில் மரிச்சபி தீவில் வாழ்வதற்கு உரிமை
கேட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட தலித் குடும்பங்கள் காணாமல் போயினர். பல நூறு பேர் கொல்லப்பட்டனர்.
பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது. அந்த நடவடிக்கைகளை ஜோதி பாசு
நியாயப்படுத்தினார். இன்று வரைக்கும் அதற்காக ஒரு மன்னிப்பு கூட யாரும் கேட்கவில்லை.
அவர்களின் மதச் சார்பின்மை வாதம் எவ்வளவு போலியானது
என்பது சற்று கவனிப்பவர்களுக்குத் தெரியும்.
கம்யூனிசமே ஐரோப்பியர்களின் குறுகிய அனுபவங்களின் அடிப்படையில் பதினெட்டு- பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்
அங்கு நிலவிய சூழ்நிலைகளை மையமாக வைத்து எழுதப்பட்டது. எனவே அது மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட எல்லா உலக நாடுகளுக்கும்
எப்படிப் பொருந்த முடியும்?
உலக வரலாற்றில் ஐரோப்பாவின் அனுபவம் மிகவும் குறுகியது. அவர்களின்
வரலாறும் கூட அப்படித் தான். ஏறத்தாழ பதினைந்தாவது நூற்றாண்டு வரைக்கும் அங்கு நிலப்
பிரபுத்துவ முறை நிலவி வந்தது. அனைத்து நிலங்களும் சிலரிடத்தில் மட்டுமே இருந்தன. பெரும்பாலான
மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து வாழும் சாமானிய
மக்களாக இருந்தனர். அவர்களுக்கு உரிமைகள் இல்லை.
அதற்குப் பின்னர் அங்கு ’மெர்க்கண்டலிசம்’ எனப்படும் வணிகத்துவ
முறை நடைமுறைக்கு வந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த அரசுகள் வணிகத்தின் மூலம் தங்களது
கஜானாவிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளி இருப்புகளை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டன. அதற்காகக்
கடலில் செல்லும் கப்பல்களைக் கொள்ளையடிப்பது ஒரு வழி முறையாகக் கருதப்பட்டது. அதற்கு
அரசுகளின் அங்கீகாரமும் இருந்தது.
தொடர்ந்து பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் முறை தோன்றியது. அதுவே
பின்னர் காலனி ஆட்சி முறைக்கு வலி கோலியது. ஐரோப்பிய அரசர்கள் வணிகத்துக்காகப் பிற நாடுகளைக் கைப்பற்றுவதற்கு ஊக்கமளித்தனர்; படைகளை
அனுப்பினர். அதன் மூலம் உலகின் பல பகுதிகளையும் சில ஐரோப்பிய நாடுகள் தங்கள் ஆளுமைக்குக்
கீழ் கொண்டு வந்தன. காலனி நாடுகளின் வளங்கள்
சுரண்டப்பட்டு, ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
ஆதிக்க நாடுகளின் கஜானாக்களில் செல்வங்கள் சேர்ந்து வணிகர்கள்
கொழுத்த போதும், சாதாரண மக்களின் வாழ்க்கையில் எந்த வித மாற்றங்களும் ஏற்படவில்லை.
அவர்களுக்குரிய ஊதியம், தேவையான ஓய்வு, கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டன.
அந்த சமயத்தில் 1776 ஆம் வருடம் வணிகத்துவ முறைக்கு மாற்றாக,
ஆடம் ஸ்மித் என்னும் பொருளாதார நிபுணர் முதலாளித்துவ முறையை முன் வைத்தார். அதன் மூலம்
அரசுகளின் தலையீடு இல்லாமல் தொழில்கள் உருவாக்கப் பட வேண்டும்; அதன் மூலம் நிறைய தொழில்கள்
உருவாகி பல பேர் தொழில் துறைக்கு வர வேண்டும் என்பது அவரது எண்ணத்தின் அடிப்படை.
அந்த சமயத்தில் காலனி நாடுகள் மூலம் செல்வம் பெருகியது. அதனால் தொழில்களும் அதிகரித்தன. தொழில் வளம் அதிகரிக்க
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட வளங்கள் ஒரு மிக முக்கிய காரணமாக இருந்தது என்று அவர்களின்
வரலாற்றசிரியர்களே சொல்லியுள்ளனர். ஆனால் அந்த வளர்ச்சியின் பலன்கள் பெரும்பாலான மக்களுக்குச் சென்றடையவில்லை.
தொழிலாளர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாயினர். பெண்களும், குழந்தைகளும் கூட வேலைகளில்
கொடுமைப்படுத்தப்பட்டனர். சாமானிய மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது.
அந்த சூழ்நிலையில் தான் அங்கு 1867 ஆம் வருடம் கார்ல் மார்க்ஸ்
மற்றும் பிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோர் “ தாஸ் கேபிடல்” என்ற நூலை எழுதி வெளியிட்டனர்.
அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மையமாக வைத்து கம்யூனிச சித்தாந்தம் உருவானது. அதன்படி
தொழில்கள் தனியாரிடம் இருக்கக் கூடாது; அவை அரசாங்கத்தின் கை வசமே இருக்க வேண்டும்
என்னும் கொள்கை முன் வைக்கப்பட்டது. அதை நடைமுறைப் படுத்த கம்யூனிச ஆட்சி முறை உருவாக
வேண்டும் என்று சொல்லப்பட்டது.
பின்னர் 1917 ஆம் வருடம் அப்போதைய சோவியத் ரஷ்யாவில் முதன்
முதலாக லெனின் தலைமையில் கம்யூனிச ஆட்சி அமைக்கப்பட்டது. 1989 ல் கம்யூனிசம் தோற்றுப் போய் விட்டதாக அந்த நாட்டின் தலைமையே அறிவித்தது.
சோவியத் ரஷ்யாவே பத்துக்கு மேற்பட்ட நாடுகளாக உடைந்து போனது.
கம்யூனிஸ்ட் ஆட்சி அமைக்கப்பட்ட இன்னொரு பெரிய நாடு சீனா.
அங்கு 1949ல் மாசேதுங் கம்யூனிஸ்ட் ஆட்சியை
அமைத்தார். பின்னர் 1970 களிலேயே சீனாவில்
கம்யூனிசப் பொருளாதாரக் கொள்கைகள் கைவிடப்பட்டன. அதன் பின் அவர்கள் முதலாளித்துவம்
சார்ந்த கொள்கைகளையே கடைப்பிடித்து வருகின்றனர்.
நடைமுறையில் பிரபலமாக முன் வைக்கப்படும் இரண்டு பொருளாதாரக்
கொள்கைகளான முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் இரண்டுமே ஐரோப்பியச் சித்தாந்தங்கள்
தான். அவை உலக முழுமைக்கும் பொருத்தமானதாக ஆக முடியாது. ஏனெனில் உலகிலுள்ள ஒவ்வொரு
நாட்டுக்கும் அதற்கே உரித்தான தனித் தன்மைகள் உண்டு. அதற்கெனத் தனியான வாழ்க்கை முறைகள்,
பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் ஆகியவை உள்ளன. அவையெல்லாம் அந்த நாட்டின் வரலாறு, கலாசாரம்,
சமூகங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டவை.
பொருளாதார முறை என்பது ஒவ்வொரு நாட்டிலும் வாழக் கூடிய மக்களின் தன்மைகள், பழக்க வழக்கங்கள், எண்ணங்கள் ஆகியவற்றை மையமாக வைத்தே அமைகிறது. அதனால்
தான் கம்யூனிசமே கூட சோவியத் ரஷ்யாவிலும், சீனாவிலும் ஒரே மாதிரி அமையவில்லை. ஆனால்
மேற்கத்திய பொருளாதார சித்தாந்தங்கள் இரண்டும் உலக முழுமையையும் ஐரோப்பிய- அமெரிக்க நோக்கிலேயே பார்க்கின்றன.
அதனால் தான் கம்யூனிசமும், மேற்கத்திய முதலாளித்துவ சித்தாந்தத்தின்
பரிணாம வளர்ச்சியான சந்தைப் பொருளாதாரமும் உலக முழுவதும் தோல்வியைத் தழுவி வருகின்றன.
அவை இரண்டுமே மேற்கத்திய பார்வையை மையப்படுத்தி எழுதப்பட்ட ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ஒன்று சந்தையை முன் வைக்கிறது. இன்னொன்று கட்சியையும், அரசாங்கத்தையும்
முன் வைக்கிறது. அவை இரண்டிலுமே மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் குடும்பம்,
சமூகங்கள், உறவுகள் ஆகியவற்றுக்கு எந்த இடமும் இல்லை. நாடுகளின் வரலாறுகள், கலாசாரம்,
மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியனவற்றுக்கு இரண்டிலுமே எந்த விதப் பங்கும்
இல்லை.
கடந்த முன்னூறு காலப் பொருளாதார வரலாறு ஒரு முக்கியமான விசயத்தை
உலகுக்கு உணர்த்துகிறது. ஒரு நாட்டு மக்களின்
வேர்களுக்குப் பொருத்தமில்லாத எந்த வித அந்நிய
சித்தாந்தமும் அங்கு தோல்வியிலேயே முடியும் என்பது தான் அது. மேலும், அந்நாட்டு மக்களுக்கு அது தீங்கிழைத்தும்
விடும் என்பதையும் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
சோவியத் ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிச சித்தாந்தத்தை
நடைமுறைப் படுத்துவதற்காக கோடிக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல இலட்சக் கணக்கான பேர் பட்டினியால் மடிந்து போயினர். மாற்றுக் கருத்துக்களைச் சொன்னவர்கள் தீர்த்துக்
கட்டப்பட்டனர். கலாசாரம் குழி தோண்டிப் புதைக்கப் பட்டது. தனி நபர்களின் வாழ்க்கை முறையில்
கூட கட்சியும் அரசாங்கமும் தலையிட்டது. அதனால் ஏற்பட்ட விளைவு என்ன? பின்னர் அந்த சித்தாந்தமே
மக்களால் தூக்கி எறியப்பட்டது.
சந்தைப் பொருளாதாரமும் அப்படித்தான். கம்யூனிசம் தோல்வி அடைந்ததும்
தங்களின் கோட்பாடுகளே உலக முழுமைக்கும் வளர்ச்சியைக் கொடுக்கும் என அதை ஆதரிப்போர் கூக்குரல் போட்டனர். பின்னர் 2008 ஆம்
வருடத்திய உலகப் பொருளாதார நெருக்கடியால், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும்
சிரமங்களைச் சந்தித்தன. எனவே இப்போது அவர்களால் எதுவும் பெருமையாகப் பேச முடிவதில்லை.
நாளுக்கு நாள் உலகம் வேகமாக மாறி வருகிறது. இந்த சமயத்தில்
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் மாறுபட்ட சூழ்நிலைகளில் உருவான ஒரு சித்தாந்தம் தான்
இந்தியாவுக்கும் பொருந்தும் என்று சொல்லுவது
நகைச் சுவை. கார்ல் மார்க்ஸ் போன்றவர்களுக்கு இந்தியாவைப் பற்றிச் சரியாகத் தெரியாது
என்பதற்கு அவர் நமது நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள சில விசயங்களே போதுமானது. அவர்
ஐரோப்பியர்கள் கொடுத்த சித்திரத்தை வைத்து நமது நாடு வெள்ளையர்களால் அழிக்கப்படுவதை
ஆதரித்தார்.
நமது நாட்டுக்கெனப் பண்டைய காலந் தொட்டு ஒரு தொடர்ச்சியான நீடித்த பொருளாதார முறை இருந்து
வந்துள்ளதைக் கடந்த முப்பது ஆண்டுகளாகச் சர்வதேச
அளவில் வெளி வந்து கொண்டிருக்கும் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பொருளாதார வரலாற்றாசிரியான
ஆங்கஸ் மாடிசன் அவர்களின் பொருளாதார வரலாற்று ஆய்வுகள், கடந்த இரண்டாயிரம் வருட காலத்தில்
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முதல் நிலையிலும், சீனா இரண்டாமிடத்திலும் தொடர்ந்து
எண்பது விழுக்காடு காலம் இருந்து வந்ததை எடுத்து வைக்கின்றது.
2015 வருடத்துக்கு முன்னால் பொது யுக தொடக்க காலத்தில், உலகப்
பொருளாதாரத்துக்கு இந்தியா மட்டுமே 32.9 விழுக்காடு பங்காக அளித்து முதல் நிலையில்
இருந்து வந்தது. ஆங்கிலேயர்கள் வந்து நமது பொருளாதாரத்தைச் சீரழிக்கும் வரை, இந்தியா
உலகின் செல்வந்த நாடாக மிகப் பெரும்பாலான காலம் இருந்து வந்துள்ளது. இன்னொரு
பழமையான கலாசாரமான சீனாவுக்கும் தனித் தன்மை வாய்ந்த பொருளாதார முறை இருந்துள்ளது.
காலங்காலமாகத் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக நம்மை முதன்மை
நிலையில் வைத்திருந்த பொருளாதார முறை ஒன்று இருந்துள்ளதே; அதன் மூலம் நாம் பாடம் கற்றுக்
கொள்ள வேண்டாமா? சுதந்திர இந்தியாவில், முதல் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சோசலிச சிந்தனைகளை
ஒட்டியே கொள்கைகள் வகுக்கப்பட்டன. எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை.
பின்னர் 1990 களில் தொடங்கி, உலக மயமாக்கல் கொள்கையின் அடிப்படையில்
திட்டங்கள் தீட்டப்பட்டன. அதனால் நமது பொருளாதாரத்துக்குப் பல்வேறு சிரமங்கள். மேற்கண்ட இரண்டு தவறான சித்தாந்தங்களைத்
தொடர்ந்து நடைமுறைப் படுத்திய பின்னரும், இந்தியப்
பொருளாதரம் பல்வேறு சிரமங்களையும் மீறி நடை போட்டு வருகிறதே அதற்கு என்ன காரணம்?
அந்தக் காரணத்துக்கான அடிப்படை இந்த மண்ணில் உள்ளது; நமது
மக்களிடம் உள்ளது. எனவே நமது நாட்டுக்குத்
தேவையான வழி முறைகள் இங்கிருந்து தான் உருவாக முடியும். நமக்கான சித்தாந்தம் நம்மிடத்திலிருந்து
மட்டுமே தோன்ற முடியும். ஏனெனில் நமக்கென ஒரு
பெரிய பொருளாதார வரலாறு மட்டுமன்றி, இன்றளவும் நடை முறைகளும் இருந்து வருகின்றன. அதனால்
தான் நமது மக்கள் உலக அளவில் இன்றும் அதிகமாகச் சேமித்து வருகின்றனர்; இலண்டன் மேலாண்மை
நிறுவனத்தின் கணக்குப்படி எட்டரை கோடிப்பேர் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால் இந்தியப் பொருளாதாரம் அந்நியக் கோட்பாடுகளையும், அவற்றை நடைமுறைப்படுத்தும் அரசுகளையும் மீறி நடை
போட்டு வருகின்றது. எனவே நமது நாட்டுக்குக்
கம்யூனிசம் உள்ளிட்ட மேற்கத்திய சித்தாந்தங்கள் இரண்டுமே பொருந்தாது. இந்தக் கருத்தை
இப்போது பெரும்பாலான உலகச் சிந்தனையாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அமெரிக்கப் பொருளாதார முறைகளை ஆதரிக்கும் உலக வங்கி
உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கூட ஒற்றைப் படையான பொருளாதாரக் கோட்பாடுகள் உலக முழுமைக்கும்
பொருந்தாது என்பதை ஏற்றுக் கொண்டு விட்டன. ஏனெனில் இது சரித்திரம் கற்றுத் தரும் உண்மை.
எனவே இந்த சமயத்தில் கம்யூனிச சித்தாந்தம் நமக்குப் பொருத்தமாக
இருக்கும் என்பதெல்லாம் நம்பக் கூடியதாக இல்லை. அப்படிச் சொல்பவர்கள் கம்யூனிசக் கட்சி
ஆட்சி நடத்தும் சீனாவில் போய், ஏன் மார்க்ஸ் மற்றும் மாசேதுங் ஆகியோரின் கொள்கைகளைக்
கடைப் பிடிக்கவில்லை என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அல்லது முப்பத்தி நான்கு
வருடங்கள் ஒரு மாநிலத்தில் மக்கள் ஆட்சி நடத்த வாய்ப்புக் கொடுத்த பின்னரும், ஏன் அவர்கள்
சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர வைக்க முடியவில்லை என்பதை யோசித்துப் பார்க்கலாம்.
நமது நாட்டுக்கெனத் தனித்தன்மைகள் நிறைய உள்ளன. அதனால் நமது
சமுதாயத்தில் முன்னேற்றத்துக்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. அவை தான் நமது மிகப்
பெரிய பலம். எனவே நாம் நமது வரலாற்றையும், தற்போதைய நடை முறைகளையும் பார்ப்போம். அவற்றிலிருந்து
பாடம் கற்றுக் கொள்வோம். எந்த விதமான அந்நியக் கோட்பாடுகளை விடவும் பாரம்பரியம் மிக்க
இந்த மண்ணின் செயல்பாடுகள் உயிப்புடையது.
( சுதேசி செய்தி, மே 2015)
No comments:
Post a Comment