இரண்டாண்டுகளில் இமாலய முயற்சி- புதிய இந்தியாவுக்கான அடித்தளங்கள்


கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி இந்தியாவின்  பிரதமராக திரு.நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அவர் பொறுப்பேற்று இப்போது  இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்தச் சமயத்தில் மோடி அரசின் செயல்பாடுகளைப் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.  ஏனெனில் இந்த இரண்டாண்டுகளில் சுதந்திர இந்திய வரலாற்றின் பல அடிப்படையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

 நமது நாடு பல்வேறு  தனிச் சிறப்புகளைப் பெற்றது.  நீண்ட நெடிய வரலாறு, உயர்ந்த பாரம்பரியம், உலகளாவிய சிந்தனைகள், வெவ்வேறு துறைகளிலும் அளப்பரிய சாதனைகள் எனப்  பல விதங்களிலும் உலகின் முன்னோடியாக விளங்கி வந்தது. பொருளாதாரத் துறையில் உலகின் செல்வந்த நாடாகப் பல நூறாண்டுகள் தொடர்ந்து இருந்து வந்தது.

நமது நாட்டின் செல்வச் செழிப்பும், குணாதிசயங்களுமே அந்நியர்களை நமது நாட்டின் பக்கம் இழுத்தன. பின்னர்  பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலி கொடுத்து, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இழந்து, பெரும் சேதங்கள், சீரழிவு, அவமானம் மற்றும் அச்சுறுத்தல்களையெல்லாம்  எதிர் கொண்டு கடைசியாக சுதந்திரத்தைப் பெற்றோம். அதற்காகப் பல்வேறு கால கட்டங்களில்  நாட்டின் பல பகுதிகளிலும் பல  இலட்சக் கணக்கான பேர் எதிரிகளை எதிர்த்துப் போராடியும், வீர மரணம் தழுவியும், வெவ்வேறு வகைகளில் பங்களித்துத் தமது வாழ்வை அர்ப்பணித்தனர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது சுயநலமிக்க  கொள்கைகளால் நமது பொருளாதாரம் சீரழிந்து, நாடு வறுமையும் பஞ்சமும் மிகுந்ததாக மாறிப் போனது. விவசாயம், தொழில், கல்வி எனப் பல துறைகளிலும் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. வலுவான நமது கட்டமைப்புகள் எல்லாம் செயலிழந்து போயின. 

எனவே சுதந்திரம் பெற்ற உடனே நமது நாட்டுக்குப் பொருத்தமான கொள்கைகளை வகுக்க வேண்டும்; அதன் மூலமே நாடு ஒட்டு மொத்தமான முன்னேற்றத்தைக் காண முடியும் என மகாத்மா காந்தி போன்றவர்கள் விரும்பினர். ஆகையால் சுதந்திரத்துக்கு முன்னரேயே, நாடு சுதந்திரம் அடைந்ததும்  கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதார அணுகுமுறைகள் குறித்துப் பலரும்  விவாதம் செய்து சரியான அணுகுமுறைகளை முடிவு செய்ய வேண்டுமென அவர் முயற்சி எடுத்தார். அதற்காக அவர் நேருவுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் நேரு அதை நிராகரித்து விட்டார்.  

சுதந்திரம் பெற்ற பின்னர்  நாட்டுக்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது, ஜவகர்லால் நேரு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சி அந்நிய சித்தாந்தமான சோசலிச  முறையையே மையமாக வைத்தது.   அதன் மூலம்  பொருளாதாரத்துக்கெனத் தனக்கே உரித்தான வெற்றிகரமான வழிமுறைகளைக்   கொண்டிருந்த நமது நாட்டில், அந்நிய சித்தாந்தம் திணிக்கப்பட்டது. அதன் விளைவாகப் பொருளாதாரம் தவறான திசைக்குத் தள்ளப்பட்டது.

தொடர்ந்து வந்த இந்திரா காந்தி அரசு, சோசலிசத்தை  வலுவாகப் பிடித்துக் கொண்டது. ’வறுமையை ஒழிப்போம்’ என்பது வெற்றுக் கோஷமாக்கப்பட்டது. கூடவே மதச் சார்பின்மை என்பது அரசியலாக்கப் பட்டது. பின் வந்த காலகட்டத்தில் நாட்டுப் பொருளாதாரம் மோசமான விளைவுகளை எதிர் கொண்டது. எனவே அப்போதிருந்த காங்கிரஸ் அரசு  மற்றொரு  அந்நிய சித்தாந்தமான உலக மயமாக்கலை அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக் கொண்டது. ஆக நமது நாட்டைப் பெரும்பான்மை காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தமது பொருளதாரக் கொள்கைகளை வகுக்கும் போது ஒவ்வொரு முறையும் அந்நிய வழி முறைகளையே முன் வைத்து வந்தன. அதனால் நாடு நமது வளங்களையும், மக்களின் திறமைகளையும் பயன்படுத்தி முழுமையான பலன்களைப் பெற முடியவில்லை.   

 பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி, இன்ன பல துறைகளிலும், தேசியத் தன்மைகள் அற்ற அந்நியச் சிந்தனைகளேயே ஆட்சியாளர்கள்   ஆராதித்து வந்தனர். கல்விக் கூடங்கள் சொந்தச் சிந்தனைகள் எதையும் வளர்க்காத  மேற்கத்திய கோட்பாடுகளை மட்டுமே போதிக்கும் பணி மனைகள் ஆகிப் போயின. அயல் நாட்டுக் கொள்கைகளிலும், உள்நாட்டு பாதுகாப்பு விசயங்களிலும் கூட தேசத்தின் நலன் முதன்மைப் படுத்தப்படவில்லை.

2004 ஆம் வருடம் தொடங்கி அடுத்த பத்தாண்டுகளில் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்களில் ஈடுபட்டது. இலட்சக் கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள் என்பதெல்லாம் நடைமுறைக்கு வந்தது. நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விசயங்களில் கூட காங்கிரஸ் கட்சியின் சுய நலமும், குறுகிய எண்ணங்களுமே மையமாக இருந்தன. அவர்களின் பின்பகுதி ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. பெரு வாரியான  மக்கள் நம்பிக்கை இழந்து நின்றார்கள்.

அந்தச் சமயத்தில் தான் குஜராத் முதல்வராக இருந்த  மோடி தலைமையில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்திய அரசியலில் முப்பது வருடங்களுக்கப்புறம் ஒரு கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப்  பெற்றது அப்போது தான்.
அப்போது தொடங்கி கடந்த இரண்டு வருடங்களாகப் பல புதிய அணுகுமுறைகள் மூலம் வெவ்வேறு  முயற்சிகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. பிரதம மந்திரியாகத் தன்னைக் கருதாமல், தான் நாட்டின் பிரதான  சேவகனாகவே  இருக்க விரும்புவதாக அவர் அறிவித்தார். பாராளுமன்றத்துக்கு முதல் முறையாகச்  சென்ற போது அதன் படிக்கட்டில் தனது தலையை வைத்து வணங்கினார்; அதன் மூலம் பாராளுமன்றம் புனிதமானது என உணர்த்தினார்.

1950 களில் நாட்டுக்கான கொள்கைகளை வகுப்பதற்கு அப்போதைய பிரதமர் நேரு திட்டக் குழுவை அமைத்தார். அது ரஷ்யக் கம்யூனிஸ்ட்  தலைவர் ஸ்டாலினின் திட்டமிடுதலுக்கான அமைப்பு முறையை வைத்து ஏற்படுத்தப்பட்டது.  அந்த முறையில் திட்டமிடுதலை மெத்தப் படித்த சில பேர் டெல்லியில் உட்கார்ந்து மேற்கொண்டு வந்தனர். காலப்போக்கில் திட்டக் குழுவானது உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஆகியவற்றில் பணியாற்றி, மேற்கத்திய பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிர நடைமுறைப் படுத்தும் நிபுணர்களின் கூடாரமாக மாறிப் போனது.

தனது முதல் சுதந்திர தின விழா உரையில், திட்டக் குழுவுக்கு மாற்றாக  ஒரு அமைப்பு உருவாக்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி 2015ஆம் வருடம்  ஜனவரியில் நிதி ஆயோக் என்னும் புதிய அமைப்பு அறிவிக்கப்பட்டது. அதன் முக்கிய அம்சம்  வருங்காலங்களில் பாரதிய சிந்தனைகளின் அடிப்படையிலேயே நாட்டுக்கான திட்டமிடல் மேற்கொள்ளப்படும் என்பதாகும்.

மேலும் இனி மேல் கொள்கைகள் வகுக்கும்போது பிற நாட்டு அணுகுமுறைகள் கண்ணை மூடிக் கொண்டு அப்படியே பின்பற்றப்படாது என்பதும் தெளிவாக்கப்பட்டது. இந்த அறிவிப்பு இந்தியப் பொருளாதார வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் சுதந்திரத்துக்கு அப்புறம் முதல் முறையாக கொள்கை வகுப்பது என்பது நமது தேசத்தின் நடை முறைகளை மையமாக வைத்து மட்டுமே இருக்கும் என்று ஒரு அரசு தெளிவாக்கியுள்ளது.

திட்டக் குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசப் பிரதிநிதிகள் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தும், கூட்டாட்சித் தத்துவத்தை மையமாக வைத்தும்  செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் திட்டமிடுதல் என்பது கீழிருந்து மேல் நோக்கிச் செல்வதாக இருக்கும் எனவும், தேசத்தின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆட்சிக்குப் பெரும் இடையூறாக இருப்பதே ஊழல் தான். அதனால் மக்களுக்குச் சென்றடைய வேண்டிய பலன்கள் முழுமையாக அவர்களைப் போய்ச் சேருவதில்லை. எனவே நிர்வாகத்தில் ஊழலை அகற்றுவதற்காகப் பிரதமர் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உயரதிகாரிகள் மட்டத்தில் திறமையும் நேர்மையும் மிக்கவர்களுக்கே முக்கியமான  பொறுப்புகள்  கொடுக்கப்பட்டு வருகின்றன. ஊழலில் ஈடுபடுவோர், செயல்பாடு இல்லாதவர்கள் ஆகியோர் பணியிலிருந்து  நீக்கப்பட்டும், தண்டனைகளுக்கு உள்ளாகியும் வருகின்றனர்.

கோப்புகள் ஒரே இடத்தில் தேங்காமல் இருக்க வழி முறைகள் வகுக்கப்பட்டு அவற்றைக் கடைப்பிடிப்பது கண்டிப்பாக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மட்டத்தில் ஊழலற்ற நிர்வாகம் உறுதியாக்கப்பட்டுள்ளது.இடைத் தரகர்கள் நிர்வாகத்தில் தலையிடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.    

நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த தொழில் நுட்பம் முழு அளவில் பயன்படுத்தப்படுகிறது. அரசு சொத்துக்களை ஏலம் விடும் முறைகள் முற்றிலும் வெளிப்படையாக்கப் பட்டுள்ளன. அதனால் நிலக்கரி, அலைக்கற்றை உள்ளிட்ட பொதுச் சொத்துக்கள் இதுவரை ஏலம் விடப்பட்டதில் மட்டும், பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் அரசுக்குச் சேர்ந்துள்ளது.

சாதாரண மக்களுக்குச் சென்று சேர வேண்டிய அரசின் உதவித் தொகைகள், மானியம் மற்றும் அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களும், அவர்களை நேரடியாகச் சேரும் வண்ணம் இப்போது புதிய முறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் படி அவர்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் அனைத்தும் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அவர்கள் யாருடைய தயவுமின்றி அதை முழுமையாக அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.

வங்கிக் கணக்குகளில் நேரடிப் பணப்பரிமாற்றம் செயல்படுத்தப்பட்டதால் இதுவரை 31 கோடி பயனாளிகளுக்கு 61 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட முறை மூலம் போலி நபர்களும்  களையப் பட்டுள்ளனர். உதாரணமாக ஒரே நபர் போலியான பெயர்களில்  பல சமையல் எரிவாயு கனெக்சன்களை வைத்துக் கொண்டு அதன் மூலம் மானியங்களையும் பெற்று வந்தனர். அவை இப்போது நிறுத்தப்பட்டுள்ளன.

சுதந்திரம் அடைந்து அறுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்னரும், ஏழை மக்களை வங்கிகள் சென்றடையவே இல்லை. அந்தக் குறையைக் களைய பணம் எதுவும் செலுத்தாமலேயே வங்கிக் கணக்குத் துவங்கும் ஜன தன திட்டத்தை மோடி துவக்கினார். அதன் மூலம் இதுவரை சுமார் 22 கோடி புதிய வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.  அவற்றின் மூலமே அரசின் பணப் பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும் சாதாரண மக்கள் அவர்களின் கணக்குகளில் போட்ட முதலீடு மட்டுமே நாடு முழுவதும் சேர்ந்து 37 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வரும்  மற்றொரு அம்சம் நாட்டின் அடிப்படைத் துறைகளான விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் குறித்த சரியான பார்வை இல்லாத தன்மையாகும். மிக அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பளித்து, அதிகம் பேரை சொந்தக் காலிலேயே நிற்க வைத்து வருபவை குறு, சிறு தொழில்கள் தான். ஆனால் அவற்றில்  புதியதாக ஈடுபட விரும்புவர்களுக்கும், ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நிதி எளிதாகக் கிடைப்பதில்லை. வங்கிகள் மூலம் அவர்களுக்கு வெறும் நான்கு விழுக்காடு உதவியே கிடைக்கிறது. எனவே அவர்கள் தனியார்களிடம் மிக அதிகமான வட்டியைக் கொடுத்து கடன் வாங்கி சிரமப்படும் நிலையில் உள்ளனர்.

அவர்களின் குறையைப் போக்கும் வகையில் மோடி அரசு முத்ரா வங்கி என்கின்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் சாதாரண மக்கள் தொழில் நடத்த எளிதாகக் கடன் பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் மட்டும் இதுவரை மூன்றரை கோடி தொழில் முனைவோர்களுக்கு ஒரு லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படிக் கடன் பெற்றவர்களில் அதிகமானவர்கள் பெண்கள்.

விவசாயத் துறையைப் பொருத்த வரையில் முக்கியமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை நடைமுறைக்கு வந்துள்ளன. நமது விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக ஆக்குவோம் என்கின்ற இலக்கினைப் பிரதமர் அறிவித்துள்ளார். அதற்காக புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம், யூரியா உற்பத்தி அதிகரிப்பு, மண் பரிசோதனை முறைகள், சிறு தடுப்பணைகள் அதிகம் கட்டுவது உள்ளிட்ட முயற்சிகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.   
கிராமங்களை முன்னேற்றுவதன் மூலமே நாட்டை முன்னேற்றமடையச் செய்ய முடியும். அந்த வகையில் இந்த வருடத்துக்கான நிதி நிலை அறிக்கையில் கிராம முன்னேற்றம் மற்றும் விவசாயத்துக்காக முன்னுரிமை கொடுக்கப்பட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடு  வேகமாக  வளர்ச்சியடைய வேண்டுமென்றால் கட்டமைப்பு வசதிகள் அவசியமாகிறது. அதில் முக்கியமாக சாலைகள், தடையில்லா மின்சாரம் ஆகியவை முதன்மையானது. புதிய சாலைகளை உருவாக்கவும், சாலை வசதிகளைப்  பெருக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு நாளைக்கு வெறும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே சாலைகள் போடப்பட்டு வந்தன. அது இப்போது இருபது கிலோ மீட்டர்களாக அதிகரித்துள்ளது.

மோடி அரசு எடுத்து வரும் வேகமான நடவடிக்கைகளின் காரணமாக மின்சாரம் பற்றாக்குறை நிலையிலிருந்து உபரி நிலைக்கு மாறி வருகிறது.  மின்சார சேமிப்பை அதிகப்படுத்த நாடு முழுவதும் ஒரு கோடிக்கு மேற்பட்ட  எல்.ஈ.டி பல்புகள் இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும் இருளில் மூழ்கிக் கிடக்கும் கிராமங்களை அரசு  கணக்கெடுத்த போது, அவை பதினெட்டாயிரத்துக்கு மேல் இருந்தன. ஆயிரம் நாட்களுக்குள் அவை அனைத்தையும் ஒளி பெறச் செய்ய வேண்டும் எனப் பிரதமர் அறிவித்தார். அதன்படி இதுவரை 7781 கிராமங்களுக்கு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

நாடு முன்னேற்றம் பெற இளைஞர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும்; புதிய துறைகளிலும் தொழில்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வசதிகள் இருக்க வேண்டும். அதற்காக மத்திய அரசு வெவ்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இளைஞர்களின் திறன்களை அதிகரிக்க முதன் முறையாக திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தொழில்கள் பெருக அரசு நடவடிக்கைகள் எளிமையாக்கப் பட்டு வருகின்றன. அதனால் முதலீடுகள் வெகுவாக அதிகரித்துள்ளன.   எந்த முன்னேற்றமும் ஏழை மக்களைச் சென்றடையவில்லையானால், அது முழுமையடையாது. அந்த வகையில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்தப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் எரிவாயு  இணைப்புகள் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வீடில்லாத நகர்ப்புற ஏழைகளுக்கு இரண்டு கோடி வீடுகளும், கிராமப்புற ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகளும் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுத்தமான இந்தியா, மேக் இன் இந்தியா ( இந்தியாவில் உற்பத்தி செய்வோம்), டிஜிட்டல் இந்தியா எனப்  பல புதுமையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாகப் பெண்கள் படிக்கும் பள்ளிக் கூடங்களில்,  கழிவறைகள் கட்டும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி, இதுவரை சுமார் 1.92 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

பொதுவாக இந்தியா என்றாலே வெளி நாடுகளில் நாம் ஒரு சாதாரண வளரும் நாடாகத் தான் பார்க்கப்பட்டு வரும் நிலை பரவலாக இருந்து வந்தது.  அந்த நிலையை மாற்றுவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் பிரதமர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்து வருகின்றன. வெளி நாடு வாழ் இந்தியர்கள் பெருமையுடன் தமது தாய் நாட்டைப் பற்றிப் பேசுவது அதிகரித்துள்ளது. இனி உலக அரங்கில் எந்த வித சர்வதேசப் பொருளாதார அரசியல் முடிவுகளையும் நமது நாட்டின் பங்களிப்பு இல்லாமல் செய்ய முடியாது என்னும்  நிலை உருவாகியுள்ளது. அண்மையில் நடந்த சர்வதேச சுற்றுச் சூழல் மாநாட்டில் இந்தியா முக்கியமான பங்கினை ஆற்றியது இங்கு குறிப்பிடத் தக்கது.

அறுபத்தைந்து வருடங்களாக நம்மை ஆட்சி செய்து வந்த அரசுகள், இந்த நாட்டின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பெருமையாகக் கருதாத ஒரு அவல நிலை நீடித்து வந்தது. பிரதமர் வெற்றி பெற்றதும் தனது தொகுதியான வாரணாசியில் நெற்றியில் சந்தனமும் குங்குமும் பூசி, ஆரத்தி எடுத்து இறைவனை வழி பட்டது இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாத ஒரு அரிய செயலாகும். 

அனைவருக்கும் வளர்ச்சி என்கின்ற மந்திரத்தை முன் வைத்து உறுதியுடன் செயல்பட்டுக்குக் கொண்டிருக்கும் மத்திய அரசு அனைவரின் பாராட்டுதலுக்கும் உரியது.  அரசு எடுத்து வரும் வெவ்வேறு முயற்சிகளில், சிலவற்றின் பலன்கள் உடனடியாகத் தெரிகின்றன. இன்னும் பலவற்றின் பலன்கள் எதிர் வரும் காலங்களில் தான் முழுமையாகத் தெரியும். ஏனெனில் இப்போது போடப்படுவது செழிப்பான எதிர்காலத்துக்கான வலுவான அஸ்திவாரங்கள். மோடி அரசின் பணிகள் மென்மேலும் சிறக்க வேண்டும்; அதன் மூலம் வெகு சீக்கிரமே நமது தேசம் உலக அளவில் முதன்மை நிலைக்கு வர வேண்டும்.


( சுதேசி செய்தி, ஜூன் 2016)

முன்னேற்றப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்



இந்தியப் பொருளாதாரம் தனித்தன்மைகளைக் கொண்டது. அதன் வேர்கள் பாரம்பரிய மிக்க நமது மண்ணில் ஆழமாக வேறூன்றிக் கிடக்கின்றன. நமது பொருளாதாரச் சிந்தனைகள் மேற்கத்திய முதலாளித்துவ மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களுக்கு வெகு காலத்துக்கு  முற்பட்டவை. அவை நமது மக்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறை மற்றும் கருத்தோட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின், நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு சோசலிச சித்தாந்தத்தை மையமாக வைத்து நாட்டுக்குப் பொருத்தமில்லாத கொள்கைகளை வகுத்தது. அதனால் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர்களால் நாட்டின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கூடத் தீர்க்க முடியவில்லை. 1980 களின் இறுதியில் சோவியத் ருஷ்யா பத்துக்கும் மேற்பட்ட நாடுகளாகச் சிதறுண்டு போன போது, உலக முழுவதும் கம்யூனிசம் தோற்றுப் போனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
அந்தச் சமயத்தில் நமது நாட்டுக்குப் பொருத்தமான சரியான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துக் கொள்ள மீண்டுமொரு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அப்போது காங்கிரஸ் அரசு உலக மயமாக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது. அதன் மூலம் மீண்டுமொரு மேற்கத்திய சித்தாந்தத்தை நடைமுறைத் திட்டமாக அரசு அங்கீகரித்தது.
அதனால் இந்தியப் பொருளாதாரத்தில் சில கடுமையான விளைவுகள் ஏற்பட்டன. நமது நாட்டுக்கு அடிப்படையான விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாயின. வேலை வாய்ப்பு உருவாக்கம் குறைந்து, அந்நிய நிறுவனங்களின் தாக்கங்கள் அதிகரித்தன. எனவே 1990 களின் பிற்பகுதியில் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றது.
அந்த சமயத்தில் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த முக்கியமான முடிவுகளை எடுத்தது. அதன் விளைவாகக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம் மற்றும் இந்தியத் தொழில்களில் வளர்ச்சி ஆகியன ஏற்பட்டன. முந்தைய ஆண்டுகளில் இல்லாத வகையில், வேலை வாய்ப்பு உருவாக்கம் பெருமளவு அதிகரித்தது. சுதந்திரம் பெற்ற பின், ஜனசங்கம் அங்கம் வகித்த ஜனதா கட்சி ஆட்சிக்குப் பின் இரண்டாவது முறையாக, வாஜ்பாய் ஆட்சி மத்திய அரசின் நிதி நிலைமையை பற்றாக்குறையிலிருந்து உபரியாக மாற்றிக் காட்டியது.
அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு உலக அளவில் உயர ஆரம்பித்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறையாக உலக நாடுகள் இந்தியப் பொருளாதாரத்தை அங்கீகரிக்கத் தொடங்கின. இந்திய நாடு எதிர்காலத்தில் பெரிய பொருளாதாரமாக உருவாகும் தன்மையைக் கொண்டது என மேற்கத்திய நாடுகளும், பன்னாட்டு அமைப்புகளும் ஒப்புக் கொள்ளத் துவங்கின.
அப்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டனி 2004 வது வருடம் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து வந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைக் கண்டது. எல்லாத் துறைகளிலும் ஊழல்கள் பெருகி, சர்வதேச அளவில் நமது நாடு ஊழல் மிகுந்த தேசம் என்னும் அவப் பெயரைப் பெற்றது.
அடிப்படையான தொழில்களின் வளர்ச்சி பின்னடைவைக் கண்டது. கடைசி ஐந்து வருடங்களில் வேலை வாய்ப்பு உருவாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. நாட்டின் பொதுச் சொத்துகளைக் கூட்டணிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கூறு போட்டுக் கொண்டது. விலைவாசி அதிகரித்து மக்கள் வாழ்க்கை நடத்தவே பெரும் சிரமப்பட்டனர். பத்து வருடங்களுக்கு முன்னர் பெரும் நம்பிக்கையுடன் விளங்கிய இந்தியப் பொருளாதாரம், காங்கிரஸ் ஆட்சியில் பெரும் சீரழிவைச் சந்தித்தது.
2014 ஆம் வருடம் நடந்த தேர்தலில் திரு. நரேந்திர மோடி அவர்கள் முந்தைய முப்பது வருடங்களில் இல்லாத அளவு பெரும்பான்மை இடங்களைப் பெற்று பாரதீய ஜனதா கட்சித் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியை அமைத்தார். அந்த வருடம் சுதந்திர இந்தியாவுக்கு மட்டுமன்றி, இந்தியப் பொருளாதாரத்துக்கும் ஒரு திருப்பு முனையா அமைந்துள்ளதை கடந்த இருபத்தி மூன்று மாத கால மோடியின் ஆட்சி வெளிப்படுத்துகின்றது.
மத்திய திட்டக்குழு என்பது 1950 களில் நேரு பிரதமராக இருந்த போது அப்போதைய சோவியத் நாட்டின் தலைவர் ஸ்டாலினின் அணுகுமுறைகளை ஒட்டி இங்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அது டெல்லியிலிருந்து கீழாக அதிகார வர்க்கத்தின் மூலம் திட்டமிடலை மையமாகக் கொண்டது. காலப் போக்கில் உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் பணி புரிந்து சந்தைப் பொருளாதார ஆதரவு நிலைப்பாடு கொண்ட நிபுணர்கள் வழி நடத்தும் அமைப்பாக மாறி விட்டிருந்தது.
பிரதமரான பின் தனது முதல் சுதந்திர தின உரையில் திட்டக்குழு மாற்றியமைக்கப்படும் என மோடி அறிவித்தார். அதன் படிநிதி ஆயோக்அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் முக்கிய நோக்கமே மேல் நாட்டு பொருளாதாரச் சிந்தனைகளை அப்படியே கடைப்பிடிக்காமல், பாரதீய சிந்தனைகளின் அடிப்படையில் தேசத்தை மையமாக வைத்துக் கொள்கைகளை வகுப்பதுதான். அந்த முறையில் நமது தேசத்தின் சூழ்நிலை மற்றும் அடித்தனங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி கொள்கைகள் வகுக்கப்படும் எனப் பிரதமர்  அறிவித்தார்.
நிதி ஆயோக் குழுவில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் முக்கியமான  இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் கூட்டுறவு முறையில் மாநிலங்கள் ஒன்றாக இணைந்து தேசத்தின் வளர்ச்சிக்காகத் திட்டமிடும் சூழல் உருவாகி உள்ளது. எனவே கீழிலிருந்து மேலாகச் செல்லும் திட்டமிடும் முறை உருவாகி உள்ளது. அதன் மூலம் சுதந்திரம் பெற்று முதன் முறையாக அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின்னர், நமது தேசத்தை மையமாக வைத்துக் கொள்கைகளை வகுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நமது தேசத்தின் பொருளாதாரத்துக்கான ஆதாரமே விவசாயம் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் ஆகும். அவை தான் பெரும்பான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் அளித்து வருகின்றன. எனவே அவற்றின் வளர்ச்சியை அதிகரிக்க பல புதிய திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.
புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமையும். ஏனெனில் விவசாயிகள் இயற்கைச் சீற்றங்கள் மற்றும் சூழ்நிலைகளால் நிறைய சமயங்களில் அதிக இழப்புகளை சந்திக்கின்றனர். இந்த வருடம் ஏப்ரல் 14 அன்று அறிவிக்கப்பட்டுள்ள சந்தைகளை இணைக்கும் திட்டத்தின் மூலம், எதிர்காலத்தில் நாடு முழுவதும் ஒரே சந்தை உருவாகி, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் இலாபகரமாக விற்கக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. யூரியா உற்பத்தி அதிகரிப்பு, எத்தனாலுக்கான அறிவிப்பு, விவசாயிகளின் கணக்கில் நேரடியாக அரசு பணம் செலுத்தும் முறை ஆகியன விவசாயிகளின் பிரச்னைகளைக் களைய அரசு எடுத்து வரும் முயற்சிகளைக் காட்டுகின்றன.
நமது நாட்டில் உள்ள குறு, சிறு தொழில்கள் 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்பினை அளித்து வருகின்றன. ஆனால் அவற்றுக்குக் கிடைக்கும் வங்கி உதவி வெறும் நான்கு விழுக்காடு மட்டுமே. அவை பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினங்களைச் சேர்ந்த சாதாரண மக்களால் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே அவை போதிய நிதியுதவி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டுக் கொண்டுள்ளன.
அவற்றுக்கு நிதியுதவி கொடுத்து சாதாரண மக்களை வெற்றிகரமான தொழிலதிபர்களாக உருவாக்கவும், வேலை வாய்ப்புகளை வேகமாகப் பெருக்கவும் முத்ரா வங்கி என்னும் புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கடந்த ஒரு வருடத்திலேயே இதுவரை பல்லாயிரக்கணக்கான பேர் உதவி பெற்றுள்ளனர். முத்ரா வங்கி இந்தியத் தொழில் துறை வரலாற்றில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்  என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் கட்டமைப்புகள் தரமாக இருக்க வேண்டும். அதன் மூலமே தொழில்கள் பெருகி வேலை வாய்ப்புகள் அதிரிக்கும். எனவே அதற்காக கட்டமைப்புத் துறைகளில் அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் இதுவரை மின்சாரத்தையே பார்த்திராத கிராமங்களே சுமார் பதினேழாயிரத்துக்கு மேல் உள்ளன. அவையெல்லாம் கண்டறியப்பட்டு, மார்ச் 2018 க்குள் அத்தனை கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கும் நடவடிக்கை வெகு வேகமாக நடந்து வருகிறது. திட்டமிட்டதற்கு முன்பாகவே இதுவரை மூன்றில் ஒரு பங்கு கிராமங்களுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன.
சென்ற காங்கிரஸ் ஆட்சியில் ஒரு நாளைக்கு சராசரியாக தினமும் இரண்டு கிலோ மீட்டர் அளவு தான் சாலைகள் போடப்பட்டன. ஆனால் மோடி அரசில் அது பத்து மடங்கு அதிகரித்து, இப்போது தினமும் இருபது கிலோ மீட்டர் அளவு சாலைகள் போடப்பட்டு வருகின்றன. அதை முப்பது கிலோ மீட்டராக உயர்த்த அரசு செயல் பட்டு வருகிறது.
ஜனசங்கத்தின் சித்தாந்தை உருவாக்கிய சிந்தனையாளர் மரியாதைக்குரிய தீன தயாள் உபாத்யாய ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே கட்சியின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.  அதன் அட்டிப்படையில் சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வங்கியில் பணமில்லாமல் கணக்கு துவங்கும் ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தில் இதுவரை இருபது கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் கணக்கு துவங்கியுள்ளனர். அதன் மூலம் அவர்கள் வைப்பு நிதியாக வங்கிகளில் முப்பதாயிரம் கோடிக்கு மேல் செலுத்தியுள்ளனர்.  சாதாரண மக்களெல்லாம் கணக்குத் துவங்கியதால், இப்போது அவர்களுக்கு அரசு கொடுக்கும் உதவித் தொகைகள், மானியம் போன்றவையெல்லாம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்ந்து விடுகின்றன. அதனால் அவர்களுக்குச் சேர வேண்டிய முழுமையான தொகை போய்ச் சேர்கிறது; மேலும் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தில் நேர்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் வேகம் ஆகியவை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் சேவகர்களாகச் செயல்படுகின்றனர். எந்த வித ஊழலுக்கும் இடம் கொடுக்காத நல்லாட்சி நடை பெற்று வருகிறது.
கடந்த வருடமே சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளரக் கூடிய நாடாக இந்தியா உருவாகி விட்டது.  பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் கால வரையறைக்குள் இலக்கினை அடையும் நோக்கில் செயல்படுத்துப்பட்டு வருகின்றன. எனவே இந்திய தேசம் ஒரு நிரந்தரமான வளர்ச்சியை நோக்கிய பயணத்தை வெற்றி கரமாகத் துவக்கிச் சென்று கொண்டுள்ளது. அதன் மூலம் நமது பொருளாதாரம் உலக அளவில் ஒரு சிறப்பான நிலையினைக் கூடிய விரைவிலேயே அடையும். 

( ஒரே நாடு - சிறப்பிதழ், சென்னை, மே 2016)