ஆசிரியர்: பேரா.ஜெ. ஞானபூபதி,
வெளியீடு: திருக்கோவில் பக்தர் பேரவை, திருப்பூர்
வாழ்த்துரை
வேதங்களும் உபநிடதங்களும் தொன்மை வாய்ந்த இந்தியப் பண்பாட்டின்
பெரும் பொக்கிஷங்கள். தவ வலிமை மிக்க ஞானிகளும்,
ரிஷிகளும் தங்களுடைய அயராத தேடுதல்களால் பல்லாண்டு கால முயற்சிகள் மூலமாக உருவாக்கிய
சிந்தனைக் களஞ்சியங்கள். நமது தேசத்தின் உயர்ந்த தத்துவப் பாரம்பரியத்தை இன்றளவும் உலகுக்குப் பறை சாற்றிக் கொண்டிருக்கும்
கலாசார அடையாளங்கள்.
உலக நாடுகள் பலவற்றுக்கும் தனித் தன்மை என ஒன்று உண்டு. நமது
நாட்டைப் பொருத்த வரையில் தனித்தன்மை என்பது ஆன்மிகமே ஆகும். அதனால் தான் இன்று வரைக்கும் எல்லாவற்றிலும் நாம்
இறைவனைப் பார்க்கிறோம்; எல்லாவற்றையும் இறை வடிவாகக் காண்கிறோம். ‘ காக்கை , குருவி
எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்க நோக்கக் களியாட்டம்’ என்று பாரதி சொல்வது
அந்த நோக்கின் அடிப்படையில் தான்.
மேற்கத்திய சிந்தாந்தங்கள் குறுகிய நோக்குடையவை; ஒட்டு மொத்த
வாழ்க்கையையும் முழுமையாக நோக்கும் சிந்தனை
அவற்றில் இல்லை. தனி மனிதத் தேவைகள் மற்றும் பொருளை மட்டுமே மையமாகக் கொண்ட பார்வை
ஆகியவையே அவற்றில் அடிப்படையாக உள்ளன. எனவே
அந்த சித்தாந்தங்களை ஒட்டி அமைந்த வாழ்க்கை முறைகள் தோல்வியடைந்து வருகின்றன.
பிரபஞ்சம், கடவுள், மனிதன், குடும்பம், ஆன்மிகம், பொருளாதாரம்
என எல்லாவற்றையும் இணத்து ஒரு சேரப் பார்க்கின்ற தன்மை நமது கலாசாரத்துக்கே உரிய சிறப்பாகும்.
மேலும், உடல், ஆன்மா மற்றும் வாழ்க்கையின் நோக்கம் உள்ளிட்ட நுட்பமான விசயங்களைப்
பற்றி எல்லாம் ஆழமாக ஆராய்ந்து எடுத்துச் சொன்னவர்கள் நமது முன்னோர்கள்.
அந்த வகையில் தான் வேதங்கள், உபநிடதங்கள் உள்ளிட்ட உயர் நூல்கள்
நமது தேசத்தில் தோன்றி வந்துள்ளன. அவற்றின் முக்கிய அம்சமே வாழ்வின் நிலையான உண்மைகளை எடுத்துச் சொல்லுவதுதான். அதனால் தான் உலகின் பல பகுதிகளிலும் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ள போதும், கடந்த
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக என்றைக்கும் மாறாத விசயங்களைச் சொல்லுபவையாக அவை நிலைத்து
நின்று வருகின்றன.
பழமைமையான நமது இந்து ஞானப் பாரம்பரியத்தில் உபநிடதங்கள்
முக்கியத்துவம் வாய்ந்தவை. மகரிஷி அரவிந்தர் அவர்கள் உபநிடதங்களைப் பற்றிக் குறிப்பிடும்
போது தேர்ந்தெடுத்த வார்த்தைகளை உபயோகப்படுத்தி
அவை ’இந்திய அறிவின் உயர்ந்த பங்களிப்பு’ எனச் சொல்லுவார். ஜெர்மானிய அறிஞர் மேக்ஸ் முல்லர் ‘ உபநிடதங்களை
விட உணர்ச்சியும், எழுச்சியும், ஊக்கமும் ஊட்டக் கூடிய நூல் உலகில் வேறெதுவுமில்லை’
எனக் குறிப்பிடுகிறார்.
துரதிர்ஷ்டவசமாக நிலவி வரும் நமது இந்தியக் கல்வி முறையின்
குறைபாடுகளால், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஆன்மிக
நூல்கள் பாடத்திட்டங்களில் இல்லை. அதனால் தொடர்ந்து பல தலைமுறைகளாக அவை மக்களுக்குத் தெரியமாலேயே உள்ளன.
அதுவும் வேதங்களும், உபநிடதங்களும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளதன்
காரணமாகவே அவற்றை ஏற்றுக் கொள்ளாத ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலையை நாம் தமிழகத்தில்
கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். அதனால் நாம் நமது சந்ததிகளுக்கு எவ்வளவு பெரிய தவறு செய்து வருகிறோம்
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் பேராசிரியர் ஜெ.ஞானபூபதி ஐயா அவர்கள் செய்துள்ள
இந்த முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியதாகும். ஐயா அவர்கள் ஆன்மிகத்தில் மிகுந்த அனுபவம்
பெற்றவர். தமிழ் மற்றும் பிற மொழி ஆன்மிக இலக்கிய நூல்களைப் பெரிதும் கற்றறிந்தவர்.
முன்னமே கடோபநிடதம் குறித்து மிகச் சிறப்பாக எழுதியுள்ளவர்.
உபநிடதங்கள் இந்து மதத்தின் மையத் தத்துவக் கோட்பாடுகளைச்
சொல்லுபவை. அவை பிரம்மனின் உண்மைத் தன்மையை எடுத்து வைத்து, மனித மோட்சத்துக்கான வழி
மற்றும் குணங்களை விளக்குகின்றன. இந்திய மதங்கள் மற்றும் கலாசாரத்தில் அவை மிக முக்கியமான
இலக்கியங்களாக உள்ளன. மேலும் பண்டைய காலந் தொட்டு இந்தியாவின் ஆன்மிகச் சிந்தனைகளின்
வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வந்துள்ளன.
பேராசிரியர் ஐயா அவர்கள் இந்த நூலுக்கு ஐதரேய மற்றும் கேன
உபநிடதங்களை எடுத்துள்ளார். 108 உபநிடதங்களில் அவை இரண்டுமே முக்கிய உபநிடதங்களாகக்கருதப்படும் பதின்மூன்றில் வருபவை. பகவான் ஆதி சங்கரரால் விளக்கம்
எழுதப்பட்ட பெருமைக்குரியவை.
தொன்மையான ஐதரேயா உபநிடதம் மூன்று முக்கிய தத்துவக் கருத்துகளை
முன் வைக்கிறது. கேன உபநிடதம் பிரம்மனை விவரிக்கிறது. இது இந்து மதத்தின் வேதாந்த சிந்தனை வழிமுறைக்கு
அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது.
இந்த நூலின் மிகச் சிறப்பான அம்சம் ஆசிரியர் உபநிடதங்களை
விளக்கிச் சொல்லும் முறையாகும். உபநிடத வாக்கியங்கள் முதலில் சமஸ்கிருதத்தில் அப்படியே
கொடுக்கப்பட்டுள்ளன. பிறகு அவற்றின் தமிழ்
உச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் சமஸ்கிருதம் தெரியாதவர்கள் தமிழில் படித்து
அதனைத் தெரிந்து கொள்ள முடியும்.
பின்னர் அவற்றுக்கான
விளக்கம் அழகிய தமிழில் கவிதையாக வடிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து சுலபமாகப் புரிந்து கொள்ளும் வண்ணம்
எளிமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் எல்லோரும் சிரமம் இல்லாமல் புரிந்து
கொள்ள முடியும். தேவைப்படும் இடங்களில் சொல்லியுள்ள விசயங்களுக்கான அர்த்தங்கள் விளக்கப்பட்டுள்ளன.
மேலும் உபநிடதங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில்
தேவையான இடங்களில் பகவான் சங்கரரின் விளக்கம், திருமந்திரம், திருவாசகம் போன்ற உயர்ந்த
ஆன்மிகத் தமிழ் இலக்கியங்கள், பாரதியார் கவிதை, ஆங்கில மொழி பெயர்ப்புகள், அண்மைக்
காலங்களில் செய்தியாக வந்த பொருத்தமான கருத்துக்கள் ஆகியவற்றை நூலாசிரியர் எடுத்துத்
தந்துள்ளார்கள். உபநிடதங்களை எளிமையாகவும்,
அதே சமயத்தில் முழுமையாகவும் எடுத்துச் சொல்லப் பேராசிரியர் எடுத்திருக்கும் முயற்சிகள்
மிகவும் பாராட்டுதலுக்குரியவை.
சுவாமி விவேகானந்தர் அவர்கள் ‘ உபநிடதங்கள் வலிமை அளிக்கக்
கூடிய பெரும் சுரங்கம். அங்கு மொத்த உலகையே தட்டி எழுப்பக் கூடிய போதுமான வலிமை உள்ளது’
என எடுத்துக் கூறினார். அதனால் ‘ ஒளிரக் கூடியதும்
,வலிமை தரக் கூடியதும், பிரகாசமான தத்துவமான துமான உபநிடதங்களுக்குச் செல்லுங்கள்’
என்கின்ற அறைகூவலை விடுத்தார்.
தமிழ் கூறும் நல்லுலகுக்கு அந்தப் பணியைச் செவ்வனே செய்யும்
முயற்சியைப் பேராசிரியர் ஞான பூபதி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அளப்பரிய மதிப்பு
மிக்க உபநிடதங்கள் தற்காலத்துக்கும் பொருத்தமானவை. கேன உபநிடதம் அன்றே ’அறிவும் ஆன்மாவும் அடைய வேண்டிய இலக்குகள்; எல்லா
உயிரனங்களும் அவற்றை அடைய ஏங்குகின்றன’ எனச் சொல்லி ’ஆன்மிக மனிதன்’ பற்றிப் பேசியது. அதையே இன்று நவீன
மேலாண்மை நிபுணர்கள் மனிதனின் ‘ ஆன்மிகத் தன்மை’
மூலமே வளர்ச்சி சாத்தியமாகும் எனக் கோட்பாடுகளை
உருவாக்கி வருகின்றனர்.
பேராசிரியர் ஐயா அவர்களின் இந்த முயற்சி தமிழ் நாட்டுக்கு
மிகவும் அவசியமானது. இதன் மூலம் உபநிடதங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். இந்து ஞான
மரபின் சிந்தனைகள் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்கள் ஆன்மிக
வெளிச்சம் பெற வேண்டும்.
இந்நூல் உருவாகக் காரணமாக இருந்து ஊக்கமளித்த மதிப்புக்குரிய
திரு. எக்ஸ்லான் கே. இராமசாமி அவர்களுக்கும், திருக்கோவில் பக்தர் பேரவை பொறுப்பாளர்களுக்கும்
எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
No comments:
Post a Comment