பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில்
நடைபெற்று வரும் பாரதிய ஜனதா அரசு கடந்த மூன்றாண்டுகளாக பொருளாதாரத் துறையில் நடைமுறைப்படுத்தி
வரும் செயல்பாடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது நாடு சுதந்திரம் பெற்ற
பின் அறுபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நிகழாத
பல பெரும் மாற்றங்கள் இந்த மூன்றாண்டுகளில்
மட்டுமே நடந்துள்ளன.
தொன்மை வாய்ந்த நமது நாட்டுக்கு நீண்ட நெடிய பொருளாதார வரலாறு
உள்ளது. அந்நியர்களால் காலனி ஆதிக்க காலத்தில் நமது பொருளாதாரம் பெரும் சீரழிவைச் சந்தித்தது.
அதனால் உலகிலேயே அதிக செல்வச் செழிப்புடன்
விளங்கி வந்த நமது நாடு, ஏழை நாடாக ஆகிப் போனது.
சுதந்திரத்துக்குப் பின் வந்த காங்கிரஸ் அரசு, நமது தேசத்தின் அடிப்படைத் தன்மைகளைப்
புரிந்து கொள்ளாமல், மேற்கத்திய சித்தாந்தங்களையும், வழி முறைகளையும் மையமாக வைத்துக்
கொள்கைகளை வகுத்து வந்தது.
அதனால் திட்டக் குழு அமைத்து ஐம்பது வருடங்களுக்கு மேலான
பின்னரும், நாட்டுக்குப் பொருத்தமான முறையில் திட்டங்கள் அமையவில்லை. எனவே போதுமான
குறைந்த பட்ச முன்னேற்றத்தைக் கூட பெரும்பான்மையான
சாதாரண மக்களால் காண முடியவில்லை. அதனால் தான் பிரதமர் மோடி அவர்கள் பொறுப்பேற்றதும்
அனைவருக்குமான வளர்ச்சி என்கின்ற அடிப்படையில் கொள்கை மாற்றங்களையும், திட்டங்களையும்
கொண்டு வந்தார்.
நாடு விடுதலை அடைந்த பின் யாருடைய தலையீடும் இல்லாமல் நமது
நாட்டுக்கெனத் திட்டமிடுவற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு தான் திட்டக்குழு என்பதாகும். 1950 ஆம் வருடம் திட்டக் குழுவை ஜவகர்லால் நேரு
அமைத்தார். ஆனால் சோசலிச சித்தாந்தின் மேல்
தமக்குள்ள பிடிப்பால், ஸ்டாலின் ஆட்சி செய்து வந்த அப்போதைய சோவியத் ரஷ்யாவில் இருந்து
வந்த அமைப்பை ஒட்டியே நேரு இந்தியாவுக்கான திட்டக்குழுவை வடிவமைத்தார்.
அந்தக் குழு டெல்லியில் உட்கார்ந்து கொண்டு, பன்முகத் தன்மை
கொண்ட பாரம்பரியம் மிக்க நமது நாட்டுக்கு ஐரோப்பிய அமெரிக்க நடைமுறைகளை ஒட்டி திட்டங்களை
வகுத்துக் கொண்டு வந்தது. உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகளில் வேலை பார்த்து
ஓய்வூதியம் வாங்குபவர்களே அதன் தலைமைப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டார்கள். அதனால் நமது கொள்கைகள் பலவற்றையும் அந்நியத் தாக்கமே ஆக்கிரமித்து வந்தது.
எனவே நமது நாட்டுக்குண்டான தனித்தன்மை வாய்ந்த அடிப்படைகள், வலிமைகள் மற்றும்
சூழ்நிலைகளை மையப் படுத்தாத வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்டன. அதனால் முன்னேற்றம் தடைப்பட்டு வந்தது. பிரதமராகப்
பொறுப்பேற்ற பின் மோடி அவர்கள் 2014 ஆம் ஆகஸ்ட் மாதம் தனது முதல் சுதந்திர தின விழா
உரையில் திட்டக்குழு மாற்றி அமைக்கப் படும் என அறிவித்தார். அதை ஒட்டி 2015 ஆம் வருடம்
ஜனவரி ஒன்றாம் நாள் ‘நிதி ஆயோக்’ என்னும் புதிய திட்டக் குழு அமைக்கப்பட்டது.
அதன் சிறப்பம்சமே ”நாட்டுக்கான திட்டங்கள் இனி மேல் அந்நியச்
சித்தாந்தங்களை ஒட்டி அமையாது; மாறாக அவை பாரதீய அடிப்படையில் அமையும்” என்பது தான்.
மேலும் மாநிலங்கள் அனைத்தும் இணைந்து செயல்பட்டு கூட்டுறவு முறையில் வளர்ச்சி,
கிராமத்தை மையமாக்கித் திட்டமிடல், சிறு –
குறு தொழில்களுக்கு முக்கியத்துவம், தொழில் முனையும் தன்மையை ஊக்குவிப்பது, சமூக மூலதனம்
போன்ற நாட்டின் பாரம்பரிய சொத்துக்களை முன்னேற்றத்துக்குப் பயன் படுத்துவது ஆகியவை
திட்டமிடலில் அடிப்படையாக இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
மேற்கத்திய தாக்கங்கள் இல்லாமல் சொந்த சிந்தனைகளின் மூலமாக
நமது நாட்டுக்கு நம்மாலேயே திட்டமிட முடியும் என்பதை முதன் முறையாக அறிவித்து, அதன்
படி நமது பிரதமர் செயல்பட்டு வருகிறார். இது
எழுபது ஆண்டு கால சுதந்தர இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கியமான மாற்றமாகும்.
நமது நாட்டில் 2014 ஆம் ஆண்டு வரை வளர்ச்சி, முன்னேற்றம்,
ஏழ்மை ஒழிப்பு என்பதெல்லாம் வெற்றுக் கோஷமாகவே இருந்து வந்தது. அதைக் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும்
தொடர்ந்து கூசாமல் செய்து வந்தன. ஒவ்வொரு தேர்தலிலும்
வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன. மேலும் திட்டமிடுதலில் எந்தவிதமான இலக்கும் இல்லாத
ஒரு சூழ்நிலை நிலவி வந்தது. மக்கள் கேள்வி
கேட்கும் போது மதச்சார்பின்மை என்ற போர்வையில் தவறான வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
அத்தகைய போக்கை இந்திய அரசியலில் மாற்றிக் காட்டியது மோடி
அரசு. கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொறு துறைக்கும் இலக்குகளை வைத்து அவற்றை அசுர வேகத்தில்
நிறைவேற்றி வருகிறது. பல துறைகளில் இலக்குகளை மீறிய முன்னேற்றம் நிகழ்ந்து வருகிறது.
உதாரணமாக நாடு முழுவதும் மின்சாரம் கிடைக்காத கிராமங்களாக சுமார் 18,500 கண்டறியப்பட்டு
அவை அனைத்துக்கும் மின் இணைப்புகள் கொடுக்க
வருட அளவில் இலக்குகள் நிர்ணயம் செய்யப் பட்டன. ஆனால் அந்த இலக்குகளை மீறி துரித கதியில்
மின் துறை செயல்பட்டு வருகிறது. அதனால் இன்னமும் ஒரு வருட காலத்தில் மின் இணைப்பு இல்லாத
கிராமங்களே இல்லை என்னும் சூழ்நிலை உருவாகி விடும்.
வளர்ச்சி என்பது அனைவருக்குமாக இருக்க வேண்டும்; அதிலும் மிக முக்கியமாக ஏழைகள் மற்றும் நலிவடைந்த
பிரிவினர்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்கின்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு
வருகிறது. அதற்காகப் பல புதிய திட்டங்கள் வெற்றிகரமாக
நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக
வங்கிப் பக்கமே செல்ல முடியாமல் இருந்த ஏழை
மக்களுக்கு பணம் எதுவும் இல்லாமல் வங்கிக் கணக்கு துவக்குவது, வருடம் வெறும் பன்னிரண்டு
ரூபாய்க்கு விபத்துக் காப்பீடு, வருடம் 330 ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு மற்றும் ஏழ்மை
நிலையில் வசிக்கும் குடும்பப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட திட்டங்களைக்
குறிப்பிடலாம்.
ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளைத் துவக்கும் ஜன தன் திட்டத்தைப்
பொறுத்த வரை, இந்த வருடம் மே மாதம் 17 ஆம் தேதி நிலவரப்படி 28.64 கோடி பேர் புதிய கணக்குகளைத்
துவங்கியுள்ளனர். அதில் 17.10 கோடி பேர் கிராமப்புறம்
மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள். மேலும் அவர்கள் தங்கள் கணக்குகளில் ரூபாய்
64,365 கோடி அளவு தொகையை இருப்பாக வைத்துள்ளனர். இது ஒரு பெரிய அமைதிப் புரட்சியாகும்.
ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பங்கள் அடுப்பெறிக்க விறகுகளைத்
தேடிச் சென்று பாதுகாத்து வைக்க வேண்டும். மழை காலங்களில் அது மிகவும் சிரமம். மேலும்
பெண்கள் அடுப்பு ஊதி அதன் விளைவாக அவர்களின் உடல் நிலை பாதிக்கபடுகிறது. அவர்களின்
சிரமங்களைப் போக்கும் வகையில் சென்ற வருடம்
மே மாதத்தில் பிரதமர் ஒரு புதிய திட்டத்தைத் துவக்கினார். அதன்படி ஏழைக் குடும்பங்களுக்கு
பெண்களின் பெயரில் இலவச எரிவாயு இணைப்பும், இணைப்புக்கான செலவுக்காக ரூபாய்
1600 உதவித் தொகையும் கொடுக்கப்படும். அதன்படி
மூன்று ஆண்டுகளில் ஐந்து கோடி குடும்பங்களுக்கு உதவ மோடி அரசு திட்டமிட்டது. இது வரை
ஒரு வருட காலத்திலேயே 2.24 கோடி பேருக்கு மேல் இணைப்பு கொடுத்தாகி விட்டது.
இந்த இலவச எரிவாயுத்
திட்டத்தில் இன்னொரு முக்கிய அம்சம் உள்ளது. அதன்படி வருடம் பத்து இலட்சம் ரூபாய்க்கு
மேல் வருமானம் ஈட்டுபவர்கள் தமக்குக் கிடைக்கும் அரசு மானியத்தை தாங்களே முன் வந்து
விட்டுக் கொடுக்க வேண்டும் எனப் பிரதமர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அதன்படி
இது வரை சுமார் ஒரு கோடியே ஐந்து இலட்சம் பேர் தங்களுக்கான மானியத்தை வேண்டாம் என அரசுக்கு
அறிவித்து விட்டனர்.
பொருளாதார வளர்ச்சிக்கு
அடிப்படையான ஒரு விசயம் கட்டமைப்பு வசதிகள். கட்டமைப்புகள் சரியாக இருக்கும் போது தான்,
முன்னேற்றம் ஏதுவாக அமையும். அதற்காக மத்திய அரசு சாலை மேம்பாடு, புதிய சாலைகள் உருவாக்கம்
ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மட்டுமன்றி, நீர்வழிச் சாலைகள், மலைப் பகுதி சாலைகள்
போன்றவற்றையும் முன்னெடுத்துச் சென்று வருகின்றது.
நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு மையமாக விளங்குவது விவசாயம்
மற்றும் குறு,சிறு தொழில்கள் தான். எனவே அவற்றுக்கான சிறப்புக் கவனம் கொடுக்கப்பட்டு
புதிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. முழுமையான பயிர் காப்பீடு, நீர்
மேலாண்மை, வேம்பு தடவிய யூரியா மற்றும் மண் சுகாதார அட்டை எனப் பல புதிய திட்டங்கள் நன்கு செயல்பட்டு வருகின்றன.
சிறு மற்றும் குறுந் தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் சாதாரணப்
பின்னணிகளில் இருந்து வரும் மக்கள். பல சிரமங்களுக்கிடையில் தொழில் செய்பவர்கள். அவர்கள் தான் இன்று சுமார் ஆறு கோடி சிறிய தொழில்களை
நடத்திக் கொண்டு, பொருளாதாரத்துக்குப் பெரிய பங்களிப்பினைச் செய்து வருகிறார்கள். அந்தத்
தொழில்களில் வேலை செய்பவர்கள் மட்டும் சுமார் 12 கோடி பேர்கள்.
ஆனால் அவர்களின் நிதிப்
பிரச்னைகளுக்கு உதவுவதற்கு எந்த வித பெரிய திட்டங்களும் இதுவரை இல்லை. எனவே அதைப் போக்குவதற்கு மத்திய அரசு முத்ரா வங்கித்
திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் மூலம் 2015-16 மற்றும் 2016-17 ஆகிய இரண்டு வருடங்களில்
மட்டும் சுமார் 7.45 கோடி பயானிகளுக்கு, சுமார் மூன்று இலட்சத்து எட்டாயிரம் கோடி ரூபாய்க்கு
மேல் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் பத்தாண்டு காலத்தில் நாட்டின்
மிகப் பெரிய ஊழல்கள் நடந்தேறின. அதனால் நாட்டுச் சொத்துக்கள் ஆட்சியாளர்கள் மற்றும்
தரகர்களின் கைகளுக்குச் சென்று கொண்டிருந்தன.
மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர், ஊழலை ஒழிக்கவும், நாட்டின் சொத்துக்களைப் பாதுகாக்கவும்
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இயற்கை வளங்கள் ஏலம் விடுவதில் வெளிப்படைத்
தன்மை உருவாக்கப்பட்டுள்ளது.
அரசு மட்டத்தில் டிஜிட்டல் முறையைப் புகுத்துவதன் மூலம் லஞ்சம் தடுக்கப்பட்டு வருகிறது. உயர் மதிப்பு நோட்டுகள்
மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கருப்புப்
பணத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. அரசின் மூலம்
மக்களுக்குச் செலுத்தப்படும் ஊதியம், சலுகைகள் உள்ளிட்டவை தற்போது நேரடியாகப் பயனாளிகளுக்கு
அவர்களின் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. அதன் மூலம் மக்களுக்கு முழுத் தொகையும் சென்று
சேருகிறது. மேலும் இடைத் தரகர்களுக்குச் சென்று
கொண்டிருந்த பல்லாயிரம் கோடி ரூபாய்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
வணிகர்களின் சிரமங்களைக் குறைத்து, பொருளாதாரத்தை வலுப்படுத்த
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி முறை வருகின்ற ஜீலை மாதம் முதல்
அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரி ஏய்ப்பவர்களக் கண்டு பிடித்து, அதிகம் பேரை வருமான
வரி செலுத்த வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் சென்ற வருடம்
மட்டும் புதியதாக 91 இலட்சம் பேர் வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
எனவே பல்வேறு நிலைகளிலும் பொருளாதாரத்தை முன்னேற்ற முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காகப் பிரதமர்
அவர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் நமது நாட்டில் இது வரை இல்லாத
ஒரு பெரிய நம்பிக்கை மக்களிடையே தோன்றியுள்ளது.
மேலும் உலக முழுவதுமே நமது நாட்டை ஒரு ‘ ஒளி வீசும்’ இடமாகப் பார்க்கத் துவங்கியுள்ளது. மோடி அவர்களின்
தலைமையில் நடைபோட்டு வரும் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு இந்தியாவை வல்லரசாக்கும் முயற்சியில் முழு மனதுடன் செயல்பட்டு வருகின்றது.
( மோடி அரசின் மூன்றாண்டு நிறைவு சிறப்பிதழ் கட்டுரை, ஒரே நாடு, மே 2017 )