பெருமதிப்புக்குரிய டாக்டர்.கே.குழந்தைவேலு அண்ணா அவர்கள்
நமது சம காலத்தில் கொங்கு நாடு பெற்றெடுத்த மிக உயர்ந்த கல்வியாளர் ஆவார். அண்ணா
என்கின்ற அடைமொழியை இராமகிருஷ்ணா வித்யாலத்தில்
பெற்ற அவர்கள், பின்னர் அவரைப் பற்றி அறிந்த அனைவராலும் அவர் மீது கொண்ட அன்பாலும்
மரியாதையாலும் அவ்வோறே அழைக்கப்பட்டவர்.
சமுதாயத்தில் திறமையாளர்கள் பலர் இருப்பார்கள். ஆனால்
உயர்ந்த குணத்தையும் எளிமையையும் கொண்டவர்கள் மிகச் சிலரே ஆவர். அந்த மிகச்
சிலரில் முதன்மையான ஒருவராக அண்ணா விளங்கி வருகிறார் என்றால் அது மிகையாகாது. அந்த
வகையில் நமது எல்லோருக்கும் அண்ணா அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு.
ஒரு சாதாரணக் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில்
பிறந்து, வெளி நாட்டில் கல்வி கற்று, சிறந்த கல்லூரி முதல்வராக விளங்கியவர்.
இராமகிருஷ்ண- விவேகானந்த வழிகாட்டுதல்களில் தனது முழு வாழ்க்கையையே அர்ப்பணித்துக்
கொண்ட பெரியவர் அவனாசிலிங்கம் செட்டியார் அய்யா அவர்களால் அடையாளம் காணப் பட்ட பெருந்தகை. பின்னர் அவனாசிலிங்கம்
மகளிர் பல்கலைக் கழகத்திற்கு வேந்தராகி
அந்தப் பொறுப்புக்குப் பெருமை சேர்த்தவர்.
கடந்த பல வருடங்களாகவே தமிழகத்தின் கல்வித் துறையானது
மிக வேகமாகக் கறை படிந்து போய்க் கொண்டிருக்கிறது. இள வயது ஆசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஒரு
முன் மாதிரியை எடுத்துச் சொல்வதற்கே
ஆட்களைத் தேட வேண்டியிருக்கிறது. அந்த வகையில் குழந்தைவேலு அண்ணா அவர்கள்
கல்வித் துறையில் உள்ள அனைவருக்கும் ஒரு பீஷ்ம பிதா மகன்.
முதன் முதலாக என்னுடைய படிப்பு சம்பந்தமான ஆலோசனைகளைப்
பெற 1980
களில் அண்ணா அவர்களைச் சந்திக்க இராமகிருஷ்ணா கல்லூரி வளாகத்திலுள்ள அவரது
இல்லத்துக்கு என்னுடைய சித்தப்பா என்னை அழைத்துச் சென்றார். மாணவனாகிய எனக்கு
அவரது ஆலோசனைகளை விட, அவரின் எளிமையும்,
பக்குவமும், அணுகுமுறையும் மிகவும் பிடித்துப் போனது. பின்னர் பாரதியார்
பல்கலைக் கழகத்தில் நான் ஆய்வு மாணவனாக இருந்த போது, அவரது பேச்சுகளைக் கேட்கும்
வாய்ப்புக் கிடைத்தது. அந்தச் சமயத்திலேயே
நான் அவரை கொங்கு நாட்டின் ஒரு முன்னுதாரணமான கல்வியாளராக மனதளவில் ஏற்றுக்
கொண்டேன்.
பின்னர் நான் கல்விப் பணிக்கு வந்த போது பல சமயங்களில்
அவருடன் பழகவும் பேசவும் வாய்ப்புக்கள் கிடைத்தன. அவரது தேசிய- காந்தியக்
கொள்கைகளும் எனது சுதேசி ஆய்வுகளும் எங்களை ஒருவருக்கொருவர் இயற்கையாகவே ஈர்த்தது.
அவர் அவனாசிலிங்கம் பல்கலைக் கழக வேந்தராக இருந்த போது, பல நிகழ்ச்சிகளில் என்னை
அழைத்துப் பேச வைத்தார்.
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை என்னை
அழைத்து அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று சுதேசிப் பொருளாதாரம் குறித்து நான் பேச
வேண்டும் என்று சொன்னார். அப்போது அனைத்து மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் முன்பு இந்தியப் பொருளாதாரம் மற்றும் கலாசாரம் குறித்து நான் பேசியது எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு
நிகழ்வு. பின்னர் ஒரு முறை குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து நமது தேசத்தின்
பெருமைகளைப் பற்றிப் பேசச் சொன்னார். நமது
தேசத்தை உளமாற நேசித்த மிகப் பெரிய கல்விமான் அண்ணா அவர்கள்.
பெருமைக்குரிய
வரலாற்றினைக் கொண்ட நமது தேசம் மற்றும் கலாசாரம் குறித்துப் பல்கலைக்கழகப்
பாடத்திட்டத்தில் எதுவுமில்லை என்பது வருத்தமளிக்கக்கூடிய விசயமாகும். அந்தக் குறையைச் சரி செய்ய நம்மால் முடிந்த
அளவு முயற்சி செய்ய வேண்டும் என்னும் நோக்கில் கோவை பாரதிய வித்யா பவனின் தலைவர்
திரு. பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு
கல்வியாளர்கள் குழுவை அமைத்தார்கள். அதன் மூலம் பாடத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு
பல்கலைக்கழகங்கள் முன் வைக்கச் செயல்
முறைகள் வகுக்கப்பட்டது. அந்தக் குழுவில் மூத்த கல்வியாளரான அண்ணா அவர்கள் தன்னுடைய
நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் பல முக்கியமான
கருத்துகளை எடுத்து வைத்து எங்களை எல்லாம் வழி நடத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக
பாரதிய வித்யா பவனின் அந்தப் திட்டமானது
தமிழகப் பல்கலைக் கழகங்களின் நிர்வாகங்கள்
போதிய அளவு ஒத்துழைக்காததால்,
முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.
அண்ணா அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னாலும்,
தொடர்ந்து பல விதமான கல்வி சம்பந்தமான முயற்சிகளில் தன்னுடைய பங்களிப்பைத் தரத் தவறியதில்லை. அண்ணா அவர்களின் வாழ்வும், செயல்பாடுகளும் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு
ஒரு பெரிய பாடம். அவர் எங்களின் தலை
முறைக்குக் கிடைத்த ஒரு நல்ல முன்னுதாரணம். அவரது வாழ்வு நிறைவான ஒன்று. அவர்
எல்லா நலமும் பெற்று நூறாண்டு கடந்து பல்லாண்டுகள் வாழ வேண்டும் என இறைவனைப்
பிரார்த்திப்போம்.
( டாக்டர் கே.குழந்தைவேலு, மேனாள் வேந்தர்,
அவனாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை அவர்களின் 90 ஆம் ஆண்டு விழா சிறப்பு மலர்
கட்டுரை, பேரூர் சாந்தலிங்கர் தமிழ்க் கல்லூரி, கோவை, மே 14, 2017)
No comments:
Post a Comment