சுதேசிப் பொருளாதாரத்துக்கான மோடி அரசின் திட்டங்கள்


நம்முடைய பொருளாதாரம் தொன்மையும் சிறப்புகளும் வாய்ந்தது. உலகின் மற்ற எந்த நாட்டையும் விட நமக்கெனப் பெருமைகள் நிறைந்த மிக நீண்ட பொருளாதார வரலாறு உள்ளது. நமது தேசம் தொன்று தொட்டு உலகின் முதல் நிலைப்  பொருளாதாரமாகப் பல நூறாண்டுகள் விளங்கி வந்ததை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. உலகத்தின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரம்  2300 வருடங்களுக்கு முன்னமே நமது நாட்டில் தான் எழுதப்பட்டது. நாமெல்லாம் நவீன கால திட்டங்களாகக் கருதும் ஊக்கத் தொகை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட தொழிலாளர் நலத் திட்டங்கள் பலவும் பழைய காலத்திலேயே இங்கு நடைமுறைப் பட்டதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

நமது பொருளாதாரத்தின் தனித்தன்மையே அதனுடைய சுய சார்புத் தன்மையாகும். இந்தியப் பொருளாதார முறைகள் அனைத்தும் சுய சார்பு கொண்டவையாகவே உருவாக்கப் பட்டு, நடை முறைப்படுத்தப் பட்டு வந்துள்ளன. ஒவ்வொரு கிராமமும், பகுதிகளும் கூட சுய சார்பு மிகுந்தவையாகவே அமைக்கப்பட்டு இருந்துள்ளன. நமது முன்னோர்கள் தேசத்துக்கெனப் பொருத்தமான வழிமுறைகளை அமைத்துச் செயல்பட்டு வந்ததால், பிறரைச் சார்ந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.  அதனால் நமது நாடு ஒரு நீடித்த பொருளாதாரத் தன்மையைக் கொண்டதாக இருந்து வந்தது.  

எனவே  உலக அளவில் நமது நாடு விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் எனப் பலவற்றிலும் முன்னணியில் இருந்து வந்துள்ளதை வரலாறு எடுத்துக் காட்டுகின்றது.  மேலும் தொடர்ந்து பல நூறாண்டுகள் இந்தியா பிற நாடுகளுக்கு முன்னோடியானதாகவும், ஏற்றுமதி நாடாகவுமே இருந்து வந்துள்ளது.

அந்நியர் ஆட்சிக் காலத்தின் தான் நமது நாட்டின் சுய சார்புத் தன்மையானது பெரும் சிதைவுகளுக்கு  உள்ளானது. பொது யுக தொடக்க காலத்தில், அதாவது இன்றிலிருந்து 2018 வருடங்களுக்கு முன்பு,  நமது நாடு  உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை தன் வசம் வைத்திருந்ததாக வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் நிரூபித்துள்ளார்.  நமக்குப் பின்னால் சீனா இருபத்தாறு விழுக்காடு பங்களிப்பு செய்து இரண்டாம் நிலையிலிருந்தது.  கடந்த இரண்டாயிர வருட காலத்தில் பெரும்பான்மையான காலம் நமது நாடுதான் உலக அளவில் முதல்நிலையில் இருந்து வந்தது.

ஆனால் ஐரோப்பியர்கள் நமது நாட்டைத் தமது ஆளுமைக்குக் கொண்டு வந்தது முதலே, நமது சுய சார்புத் தன்மையைத் தங்களின் சொந்த நலனுக்காகத் திட்டமிட்டு அழித்தனர். அதற்காகச் சட்ட பூர்வமாகவும், அநியாயமாகவும் எல்லா விதமான உத்திகளையும் பயன்படுத்தினர்.  அதனால் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டு வந்திருந்த  கட்டமைபுகள்   எல்லாம் சிதைக்கப்பட்டன. எனவே தொழில்களும் பொருளாதாரமும்  அழிந்தன. அதனால் உலகின் பெரும் செல்வந்த நாடாக விளங்கி வந்த நமது தேசம்,  மிகவும் ஏழை நாடாக ஆக்கப்பட்டது. 1950 ஆம் வருடம் புள்ளி விபரப்படி உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் நான்கு விழுக்காடாகக் குறைந்திருந்தது.

நாட்டுக்கான சுதந்திரம் நமது பொருளாதாரத்தைச் சரியான திசையில் மாற்றி அமைத்து அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையையும் முன்னேற்றுவதற்கு ஒரு அரிய வாய்ப்பாகவும் அமைந்ததது. ஆனால் அப்போதைய பிரதமர் நேரு, பொருளாரக் கொள்கைகளை சோசலிச சித்தாந்தத்தின் அடிப்படையில்  வகுத்தார். நாட்டுக்கான சரியான பொருளாதார வழிமுறைகள் எந்த வகையில் அமைய  வேண்டுமெனப் பரவலான விவாதம் நடத்த வேண்டுமென சுதந்திரத்துக்கு முன்னர் மகாத்மா காந்தி முன் வைத்த கருத்தை நிராகரித்தார். அதனால் சுதந்திர இந்தியாவின் முதல் நாற்பது வருட காலம் சோசலிச வழிமுறைகளை ஒட்டியே கொள்கைகள் தீட்டப்பட்டன. அதனால் வளர்ச்சி பெருமளவு தடை பட்டுப் போனது.

பின்னர் அப்போதைய சோவியத் ரஷ்யா பலவாறு உடைந்து உலக அளவில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்தது. அப்போது நமது தேசத்தில் அத்தியாவசியமான இறக்குமதிகளுக்குப் பணம் கொடுக்கக் கூட போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லை. அரசாங்கம் தனது தங்கக் கையிருப்பை அயல் நாட்டு வங்கியில் அடகு வைத்துக் கடன் வாங்க வேண்டிய வருத்தமான சூழ்நிலை இருந்தது.

எனவே அப்போதைய ஆட்சியாளர்கள் அரசு கடைப்பிடிக்க வேண்டிய மாற்றுப்  பொருளாதார அணுகு முறை குறித்து முடிவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவர்கள் மேற்கத்திய சித்தாந்தமான உலக மயமாக்கலை ஒட்டிய வழிமுறைகளையே  தேர்ந்தெடுத்தார்கள். பெரிய பொருளாதார பாரம்பரியம் உள்ள நமது நாட்டுக்கு சுதந்திரத்துக்குப் பின்னர்  இரண்டாவது முறையாகவும் ஒரு அந்நிய வழிமுறையையே நமது  ஆட்சியாளர்கள் மறுபடியும் எந்த விதமான விவாதமும் இல்லாமல் தேர்ந்தெடுத்தது மிகப் பெரிய தவறு. அதனால் பொருளாதாரத்தின் முக்கியமான அங்கங்களான விவசாயம், சிறு தொழில்கள் ஆகியன பெரிதும் பாதிப்புக்குள்ளாகி, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது நமக்குத் தெரியும்.

மோடி அரசு 2014 ஆண்டு பொறுப்பேற்கும் போது நாடு மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தது. இலஞ்சம் அரசு மட்டத்தில் தலையான பங்கு வகித்து வந்தது. மக்களின் பொதுச் சொத்துக்கள் எல்லாம் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆட்சியாளர்கள் பெரும் தொகைகளைக் கையூட்டாகப் பெற்றுக் கொண்டு பண முதலைகளுக்கு அலைக்கற்றை, நிலக்கரி என எல்லாவற்றையும்  ஏலம் போட்டு விற்றுக் கொண்டிருந்தனர். சாதாரண மக்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான வசதிகளை உருவாக்கிக் கொடுப்பது, பொருளாதாரத்துக்கு ஆதாரமான தொழில்களைப் பாதுகாப்பது, சிறு தொழில் முனைவோர்களை உருவாக்குவது எனப் பல விசயங்களிலும் காங்கிரஸ் கூட்டணி அரசு திசை தெரியாமல்  சென்று கொண்டிருந்தது. 

சுதந்திரத்துக்குப் பின்னர் நமது நாட்டுக்குக் கொள்கை வகுப்பதற்கென்று 1950ஆம் வருடத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு மத்திய திட்டக் குழு. அதனை அப்போதைய சோவியத் ரஷ்யாவில் அதிபர் ஸ்டாலின் தலைமையில் இயங்கி வந்த மாதிரி இங்கேயும் நேரு அமைத்தார். அது தான் திட்டங்களைக் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக டெல்லியில் குளு குளு அறையில் உட்கார்ந்து கொண்டு செயல்படுவர்களால் நடத்தப் பட்டு வந்தது. அதிலும் கடந்த பல வருடங்களாக பன்னாட்டு அமைப்புகளில் பணி புரிந்த அலுவாலியா போன்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

பிரதமர் மோடி அவர்கள் ஆக.15, 2014 அன்று தனது முதல் சுதந்திர தின உரையில் திட்டக் குழு மாற்றியமைக்கப்படும் என அறிவித்தார். அதன் படி ஜனவரி 2015 இல் நிதி அயோக் என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் உருவாக்கத் தீர்மானத்தில்  இனிமேல் நாட்டுக்கான கொள்கைகள் மேற்கத்திய சித்தாந்தங்களை ஒட்டி வகுக்கப்படாது  எனவும், பாரதீய அடிப்படைகளை மையமாக வைத்தே அமையும் எனவும் அரசு எடுத்துச் சொல்லியுள்ளது.  மேலும் திட்டமிடுதலில் நமது நாட்டுக்கே உரித்தான குடும்ப மற்றும் கலாசார அமைப்பு முறைகள், சமூக மூலதனம், தொழில் முனையும் தன்மை உள்ளிட்ட விசயங்கள் மையமாக அமையும் எனவும் கூறப்பட்ட்டுள்ளது. இது சுதந்திர இந்தியப் பொருளாதார வரலாற்றில்  நடந்த மிக முக்கியமான மாற்றமாகும். இதன் மூலம்  சுதேசி சிந்தனையாளர் அமரர் தத்தோபந்த் தெங்கடி அவர்கள் வலியுறுத்தி வந்த தேசியம் சார்ந்த பொருளாதார முறைகளைச் செயல் படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாடு முழுமையாக வளர்ச்சி பெற வேண்டுமானல் அடித்தட்டு மக்களுக்கும் அனைத்து விதமான அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக முழுமையான உணவும்,  அடிப்படை வசதிகளும் கிடைக்காதவர்கள் இன்னமும் நிறைய பேர் நமது தேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்கு அரசு பல விதமான முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏழை மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்காக புதிய மக்கள் நலத் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே உள்ள திட்டங்கள் நேர்மையான முறையில் மக்களைச் சென்றடைய புதிய வழி முறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் மின்சாரம் இல்லாத கிராமங்கள் கண்டறியப்பட்டு, அவை அனைத்துக்கும் மின்சார இணைப்பு கொடுக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அதன் மூலம் வருகின்ற 2019க்குள் அனைத்து கிராமங்களும் மின்சாரம் பெற்று விடும். மேலும்  நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பெண் குழந்தைகள் செல்லும் பள்ளிக்கூடங்கள் உட்பட்ட பொது இடங்களிலும் கூட, கழிவறைகளில்லாத நிலைமையைக் கவனத்தில் கொண்டு கழிவறை அமைக்கும் திட்டத்தை அரசு வேகமாக செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் இது வரை ஆறு கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த வருடத்தில் இன்னமும் இரண்டு கோடி கழிவறைகளக்  கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இன்னமும் அடுப்பு ஊதி சமையல் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. அதனால் அவர்களுக்கு உடல் நிலை பாதிப்புகள் ஏற்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே அப்படிப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை  மூன்று கோடி  இலவச எரிவாயு இணைப்புகள் நாடு முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னமும் எட்டு கோடி குடும்பங்களுக்கு கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு வேகமான வளர்ச்சி பெற வேண்டுமானால்  அதற்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும், மேம்படுத்துவதும் அவசியம். அந்த வகையில் மோடி அரசானது மின்சாரம், சாலை வசதிகள், துறைமுகம், தொலைத் தொடர்பு எனப் பல துறைகளிலும் கட்டமைப்பு வேலைகளை வேகமாகச் செய்து வருகின்றது. தேசப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் எல்லையோரச் சாலை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. புதிய முயற்சிகளாக நீர் வழிப் போக்குவரத்து, சூரிய ஒளி மின்சாரம், எல்ஈடி பல்புகள் ஆகியன முக்கிய கவனம் கொடுக்கப்பட்டு வருகின்றன.  இது வரை வடகிழக்கு மாநிலங்களை அரசுகள் பெரிய அளவில் கண்டு கொள்ளாத நிலை இருந்து வந்தது. ஆனால் மோடி அரசு அங்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த  சீரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது.

நமது பொருளாதாரத்தின் மையமாக விளங்கி அதிக அளவில் வேலை வாய்ப்புகளைக் கொடுப்பது விவசாயம் மற்றும் சிறு/ நடுத்தரத் தொழில்கள் தான். அவற்றை மேம்படுத்த தொடர்ந்து பல முயற்சிகள் எடுக்கப்படுக்க வருகின்றன. இந்த வருட நிதி நிலை அறிக்கை சுமார் 14.34 இலட்சம் கோடி ரூபாய்களை கிராமப்புற மேம்பாடு மற்றும் விவசாயத்துக்கு அரசு ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கிறது. புதிய பயிர் காப்பீடு திட்டம், நாடு முழுவதுள்ள கிராமப்புற சந்தைகளை இணைப்பது உள்ளிட்ட பல திட்டங்கள் விவசாயத்துறைக்காக நடைமுறைப்படுத்து வருகின்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் தலையான பிரச்னை என்பதே நிதிப் பற்றாக்குறை தான். அவை சாதாரண மக்களால் நடத்தப்படுவதால் வங்கிகளில் கடன் பெறுவதிலும் சிரமங்கள் நிலவி வருகின்றன.  எனவே தொழில் முனைவோர்களுக்கு எளிதாக கடன் கடன் கிடைக்கும் வகையில் மோடி அரசு முத்ரா என்னும் புதிய திட்டத்தை அறிவித்தது. அதன் மூலம் இது வரை பத்து கோடிக்கு மேற்பட்ட புதிய தொழில் முனைவோர்கள் உருவாகியுள்ளனர். அதில் 76 விழுக்காடு  பேர் பெண்கள்.

இந்தியர்கள் தொழில் முனைவதில் திறமை மிக்கவர்கள். ஆனால் அரசின் ஊக்கமில்லாத்தால் இது வரை உற்பத்தித் துறையில் நம்மவர்களின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவம் போன்ற துறைகளில் இன்னமும் நாம் பெருமளவு வெளி நாட்டு நிறுவனங்களையே நம்பியுள்ள சூழ்நிலை நிலவுகிறது. அதைச் சரி செய்யும் வகையில் ‘  மேக் இன் இந்தியா’ திட்டம் அரசாங்கத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வரக்கூடிய காலங்களில் இந்தியாவிலேயே எல்லாவிதமான  உற்பத்திகளையும் மேற்கொள்ள முடியும். இந்த திட்டமானது  நாடு சுய சார்பு அடைவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும்.

அதைத் தவிர அதிகப்படியான பேரை சுய தொழில்களில் ஈடுபடுத்த சிறப்புக் கவனம் கொடுத்து ’ஸ்டார்ட் அப் இந்தியா’, ஸ்டேண்ட் அப் இந்தியா’  உள்ளிட்ட வெவ்வேறு  விதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பட்டியலின மக்கள், இளைஞர்கள், பெண்கள் எனப் பல பிரிவினருக்கும் முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் அமைப்பு சாராத் தொழில்களைச் சார்ந்தவர்களுக்கெனப் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதியதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கு பிராவிடெண்ட் நிதியை முதல் மூன்றாண்டுகள் அரசாங்கமே செலுத்தும் திட்டம், அதில் பெண்கள் செலுத்தும் தொகைக்குச் சலுகை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

மொத்தமாகச் சொன்னால், நமது நாட்டை மேலெடுத்துச் செல்ல அரசாங்கம் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. ஊழல் இல்லாத நிர்வாகம், வெளிப்படைத் தன்மை ஆகியவை இப்போது நடைமுறைகளாகி வருகின்றன. தேசம் முன்னேறுவதற்கு அமைதியான சூழ்நிலை அவசியம். மோடி ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகின்றது. பாகிஸ்தான் தீவிரவாத நாடாக உலக முழுவதும் அறியப்பட்டு இருக்கின்றது. சீனா அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.  தீவிரவாதமும் நக்ஸலிசமும் கட்டுப்பாட்டுக்கள் வந்துள்ளன.  போலி மதச்சார்பின்மை வாதம் குறைந்து, அனைவருக்குமான வளர்ச்சி என்பது மையப்படுத்தப்பட்டு வருகின்றது.

மோடி அரசின் கடந்த நான்காண்டு திட்டங்களும், முயற்சிகளும் நமது நாட்டை சுய சார்பு தன்மை கொண்டதாக ஆக்கும் வகையில் அமைந்துள்ளன. அதனால் அனைத்து தரப்பு மக்களும் பலனடைந்து நமது நாடு உலக அரங்கில் முதல் நிலைக்கு வர நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

( பி.எம்.எஸ். செய்தி சிறப்பிதழ், ார்ச்.2018 )

No comments: