சுதந்திர போராட்ட பழம் பெரும் தலைவர் திரு டி எம் காளியண்ணன் மறைவுபேரா கனகசபாபதி இரங்கல்

 

1950-52ல் இந்தியாவின் முதல் இடைக்கால பாராளுமன்றத்தின் கடைசி வாழும் உறுப்பினராக இருந்த திருச்செங்கோடு திரு டி எம். காளியண்ண கவுண்டர் அவர்கள் இன்று இறைவன் திருவடி சேர்ந்தார். மாணவப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் குதித்து, மகாத்மா காந்தி, ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாக பழகியவர். பாராளுமன்ற உறுப்பினர், தமிழக சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர் என  மூன்று வகையான பொறுப்புகளிலும் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர்.

அப்போதைய சேலம் மாவட்ட போர்டு தலைவர், காமராஜ் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த போது மாநில துணைத் தலைவர், திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவன இயக்குநர் உள்ளிட்ட பல பொறுப்புகளையும் வகித்துள்ளார். 1952 முதல் 1967 வரை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அந்த காலகட்டங்களில் ஒன்றுபட்ட சேலம் பகுதிகளில் ஆயிரம் பள்ளிக் கூடங்களைக் கொண்டு வந்துள்ளார்.  மிகச் சிரமம் வாய்ந்த  கொல்லிமலை சாலை, ஈரோடு- பள்ளிபாளையம் பாலம் ஆகியன அவர் முயற்சியால் உண்டானவை. மேலும் பல கோவில்கள் மற்றும் தர்ம நிறுவங்களை உருவாக காரணமாக இருந்துள்ளார். பல ஆண்டு காலம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பொறுப்பிலிருந்து சிறப்பாகப் பணியாற்றினார்.

கடைசி வரை சேவை செய்து நூற்றாண்டு கடந்து வாழ்ந்த அந்த மாமனிதர் இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவரது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும், எண்ணற்ற நலம் விரும்பிகளுக்கும் மனமார்ந்த ஆறுதல்கள். 

 

எதிர்கட்சிகளின் அர்த்தமற்ற புகார்


2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் உலகத்தைத் தாக்கிய போது. உலகமே நிலை குலைந்து போனது. மோடி அரசு ஊரடங்கை உறுதியாக நடைமுறைப் படுத்தி உயிர்களைப்  பாதுகாத்தது.  பலதரப்பட்ட மக்களின்  வாழ்வாதாரம் மற்றும் தொழில்களைப் பாதுகாக்க உதவிகள் மற்றும் சலுகைத் திட்டங்களை செயல்படுத்தியது.  

கொரோனா தாக்கம் குறையத் துவங்கியவுடன், பொருளாதார நடவடிக்கைகள் வேகம் கண்டன. அதன் மூலம் கொரோனாவைச் சிறப்பாக வெற்றி கண்டதாக உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் பிரதமரைப் பாராட்டின.

மீண்டும் இந்த வருடம்  கொரோனா மிக அதிக வீரியத்துடன் வந்தது. அதற்காக மத்திய அரசு முன்னதாகவே பல நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மார்ச் 17 ஆம் தேதி முதலமைச்சர்கள் கூட்டத்தில் இரண்டாவது அலை வருவது பற்றி எச்சரித்து, நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

ஆக்சிஜன் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்து 9500 மெட்ரிக் டன் அளவு உயர்ந்துள்ளது.  அதை நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்ல ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்  இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 727 டேங்கர்கள் மூலம் 11800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டுள்ளது, நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தியை உண்டாக்கும் நோக்கில் பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிதி மூலம் 551 மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க எல்லாவித முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சுதேசி நிறுவனமான பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவேக்சின் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ள வைரஸ்களையும் வெற்றி கொள்ளும் திறன் மிக்க மருந்தாக அறியப்பட்டுள்ளது. மத்திய அரசு ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதனால் ஸ்புட்னிக் நிறுவனம் ஜூன் மாதத்தில் உற்பத்தியைத் துவங்கவுள்ளது.  மேலும் ஆறு புதிய நிறுவனங்கள் உற்பத்தியை மேற்கொள்ளும். அதனால் மே மாதத்தில் 8.80 கோடியாக இருக்கும் மருந்து உற்பத்தி டிசம்பரில் 60 அறுபது கோடியாக அதிகரிக்கும். 2021 இறுதிக்குள் நாம்  260 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்வோம்.  

உலக அளவில் எல்லா  நாடுகளையும் விஞ்சி அதிகம் பேருக்கு வேகமாக தடுப்பூசிகள் போட்டது இந்தியா தான். மே 20 ஆம் தேதி வரை இந்தியாவில் சுமார் 19 கோடி பேருக்கு ஊசிகள் போடப்பட்டுள்ளன. இறப்பு விகிதம் இங்குதான் உலக அளவில் மிகவும் குறைவு.

இதுவரை இந்தியாவில் பொது மருத்துவ மனைகளில் வெறும் 17, 850 வெண்டிலேட்டர்கள் மட்டுமே இருந்தன. பிரதமர் நிதி மூலம் கடந்த 14 மாதங்களில் சுமார் 44000 வென்டிலேட்டர்களை  மோடி அரசு மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் தமிழ்நாட்டின் பங்கு  1450.  

மத்திய அரசின் வெவ்வேறு துறைகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. மத்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ 2 டிஜி என்று நீரில் கலந்து குடிக்கும் ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளது. அது வைரஸ் பெருகுவதை தடுத்து, வெளியிலிருந்து பெறப்படும்  ஆக்சிஜன் தேவையைக் குறைக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அசாத்தியமான நடவடிக்கைகளை எடுத்து கொரோனா களத்தில் ஒரு அசராத வீரனாக செயல்பட்டு மக்களைக் காப்பாற்றி வருகிறது.

(துக்ளக், ஜூன் 2, 2021)