சுதந்திர போராட்ட பழம் பெரும் தலைவர் திரு டி எம் காளியண்ணன் மறைவுபேரா கனகசபாபதி இரங்கல்

 

1950-52ல் இந்தியாவின் முதல் இடைக்கால பாராளுமன்றத்தின் கடைசி வாழும் உறுப்பினராக இருந்த திருச்செங்கோடு திரு டி எம். காளியண்ண கவுண்டர் அவர்கள் இன்று இறைவன் திருவடி சேர்ந்தார். மாணவப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் குதித்து, மகாத்மா காந்தி, ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாக பழகியவர். பாராளுமன்ற உறுப்பினர், தமிழக சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர் என  மூன்று வகையான பொறுப்புகளிலும் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர்.

அப்போதைய சேலம் மாவட்ட போர்டு தலைவர், காமராஜ் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த போது மாநில துணைத் தலைவர், திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவன இயக்குநர் உள்ளிட்ட பல பொறுப்புகளையும் வகித்துள்ளார். 1952 முதல் 1967 வரை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அந்த காலகட்டங்களில் ஒன்றுபட்ட சேலம் பகுதிகளில் ஆயிரம் பள்ளிக் கூடங்களைக் கொண்டு வந்துள்ளார்.  மிகச் சிரமம் வாய்ந்த  கொல்லிமலை சாலை, ஈரோடு- பள்ளிபாளையம் பாலம் ஆகியன அவர் முயற்சியால் உண்டானவை. மேலும் பல கோவில்கள் மற்றும் தர்ம நிறுவங்களை உருவாக காரணமாக இருந்துள்ளார். பல ஆண்டு காலம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பொறுப்பிலிருந்து சிறப்பாகப் பணியாற்றினார்.

கடைசி வரை சேவை செய்து நூற்றாண்டு கடந்து வாழ்ந்த அந்த மாமனிதர் இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவரது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும், எண்ணற்ற நலம் விரும்பிகளுக்கும் மனமார்ந்த ஆறுதல்கள். 

No comments: