மருத்துவ மாணவர் உறுதி மொழி – இந்திய மயமாக்கலை திமுக அரசு எதிர்ப்பது அரசியல் -- பேரா கனகசபாபதி அறிக்கை

 

அண்மையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் மருத்துவத்தைக் குறிக்கும் வெள்ளை மேலாடை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாணவர்கள் கல்லூரிகளில் இதுவரை எடுத்து வந்த ஹிப்போகிராடிக் உறுதிமொழிக்குப் பதிலாக  பண்டைய இந்திய மருத்துவத் துறை முன்னோடி மகரிஷி சரகர் அவர்களின் நூலில் இருந்து எடுத்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

அது திமுக அமைச்சர்கள் மற்றும் மாநில அரசால் அரசியலாக்கப்பட்டு அந்தக் கல்லூரியின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய உறுதி மொழியை மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பு என்று சொல்லி, இனி மேல்  தமிழக மருத்துவக் கல்லூரிகள் ஹிப்போகிராடிக் உறுதி மொழியைக் கட்டாயம் எடுக்க வேண்டும் என மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஹிப்போகிராடிக் உறுதி மொழி ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட கிரேக்க மருத்துவ நிபுணரில் பெயரில் அமைந்த ஒன்றாகும். அதை உருவாக்கியது அவரல்ல என்று மேற்கத்திய மருத்துவர்களே சொல்கின்றனர். எனவே அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் என  உலகின் பல பகுதிகளிலும், தமக்குப் பொருத்தமான உறுதி மொழிகளை அவை உருவாக்கி, நடைமுறையில் வைத்துள்ளன. ஆகையால் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உறுதி மொழி என எதுவும் தற்போது இல்லை.

அந்த வகையில் அண்மையில் தேசிய மருத்துவ கவுன்சில் இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய ஆயுர்வேத நிபுணர் சரகரால் தொகுக்கப்பட்ட நூலில் உள்ள மாணவர்களுக்கான உறுதி மொழியை தற்போது எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியிருந்தது. சரகரின் நெறி முறைகள் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம், ஆசிரியர்மாணவர்கள் உறவு, மருத்துவர் மேற்கொள்ள வேண்டிய அர்ப்பணிப்பு, நோயாளிகளை நடத்த வேண்டிய முறை ஆகியவை பற்றிச் சொல்கின்றன.

 

தொடர்ந்து பாராளுமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சர் சரகரின் உறுதி மொழியை விரும்பும் மாநிலங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் எனவும்    மற்றவை பழைய முறையையே தொடரலாம் எனவும் தெளிவு படுத்தியிருந்தார். அதனடிப்படையில் பல மாநிலங்கள் சரகர் உறுதி மொழியை அறிமுகப்படுத்தியுள்ளன. அதே போல மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களும் அந்த உறுதி மொழியைத் தற்போது எடுத்துக் கொண்டுள்ளனர்.

இத்தனைக்கும் மாணவர்கள் அந்த உறுதி மொழியை ஆங்கிலத்தில் தான் வாசித்துள்ளனர். அந்த ஒட்டு மொத்த உறுதி மொழியில்மகரிஷி சரக் சபத்என்பதில் மட்டுமே அதிக பட்சமாக சமஸ்கிருதம் உள்ளதாகச் சொல்ல முடியும்.  அதிலும் மகரிஷி சரக் என்பது மருத்துவ நிபுணரின் பெயர். உறுதி மொழி என்பது சபதம் என்கின்ற அர்த்தத்தில் சபத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வார்த்தையை என சுலபமாக ஆங்கிலத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

எனவே இதில் எங்கிருந்து சமஸ்கிருத திணிப்பு வந்தது? உலக முழுவதிலும் நாடுகள் ஹிப்போகிராட் உறுதி மொழியைத் தவிர்த்து வருகின்றன. அந்த உறுதி  மொழியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. அதே போல் மத்திய அரசும் நமது கல்வித் துறையை இந்திய மயமாக்கி வருகிறது. அதிலும் நமது நாட்டில் ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட பண்பட்ட மருத்துவ முறைகள் பல நூறாண்டுகளாக உலக அளவில் சிறந்து விளங்கி வருகின்றன. இந்திய மருத்துவத் துறை சுமார் மூன்றாயிர வருட பாரம்பரியம் மிக்கது.

எனவே  நமக்குச் சம்பந்தமில்லாத கிரேக்க உறுதி மொழிக்கு மாற்றாக, நமது பெருமையைச் சொல்லும் இந்திய உறுதி மொழியை ஏற்பது எப்படித் தவறாகும்? சுதந்திரம் பெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்னரும், இந்திய மயமாக்கல் செய்வது தவறா? சபத் என்கின்ற ஒற்றை வார்த்தை சமஸ்கிருத திணிப்பாகுமா? அதை மத்திய அரசு எங்கே திணித்தது?

ஆகையால் இந்த விசயத்தில் திமுக மீண்டும் மொழி அரசியல் செய்கிறது. மக்கள் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

( Dinamalar, May 3,2022)

No comments: