அமிர்த கால நிதி நிலை அறிக்கை 2023-24

 

2023-24 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை அமிர்த கால தொடக்கத்தின் முதலாவதானதாகும். 2014 ஆம் ஆண்டு தொடங்கி பிரதமர் மோடி அரசின் கடந்த எட்டு வருட கால ஆட்சியில் நாட்டின் வெவ்வேறு துறைகளிலும் பல்வேறு முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் பல அசாத்தியமானவை. மேலும் தேச மக்கள் அனைவரும் பலன் பெறும் வகையில் வலுவான அடித்தளங்கள் போடப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

உலக முழுவதையும் கொரோனா பெருந்தொற்று வெகுவாகப் பாதித்து பொருளாதாரங்களைச் சீரழித்தது. அதன் பாதிப்புகளிலிருந்து உலகின் பணக்கார நாடுகளே கூட மீண்டு வர முடியாமல் தடுமாறிக் கொண்டுள்ளன. தொடர்ந்து ரஷ்யா- உக்ரெய்ன் போரின் காரணமாக சர்வதேச அளவில் பல பிரச்னைகள் நடந்து கொண்டு வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் மீறி இந்த நிதியாண்டில்  இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஏழு விழுக்காடு அளவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் உலகின் பெரிய நாடுகளில் அதிக வளர்ச்சியைக் கொண்ட நாடாக நமது தேசம் இருந்து வருகிறது. மேலும் நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் 2014 ஆம் வருடத்தோடு ஒப்பிடும்போது, இரண்டு மடங்கு அளவுக்கு மேல் அதிகரித்து 1.97 லட்சம் ரூபாய் அளவாக  உயர்ந்துள்ளது.  ஆகையால் சர்வதேச நிதி ஆணையம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் இருளடைந்து கிடக்கும் தற்போதைய உலகச் சூழலில் இந்தியப் பொருளாதாரம் ஒளி வீசும் பகுதியாக இருந்து வருகிறது எனத் தொடர்ந்து கூறி வருகின்றன.

இந்த நிதி நிலை அறிக்கை மூன்று முக்கிய நோக்கங்களை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன: 1) நாட்டு மக்களுக்குகுறிப்பாக இளைஞர்களுக்கு- முன்னேற்றத்துக்கான வாய்ப்புக்களை அதிகரித்துக் கொடுப்பது 2) வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் 3) வலுவான மற்றும் நிலையான பொருளாதார சூழ்நிலையை ஏற்படுத்துவது

ஏழு முன்னுரிமைகள் இந்த அறிக்கையின் அடிப்படைகளாக அமைந்துள்ளன. அவை: 1) அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி 2) திட்டங்களின் பலன்கள் கடைசி மனிதனைச் சென்றடையுமாறு செயல்படுதல் 3) கட்டமைப்பு வசதிகளை பெருக்குதல் மற்றும் மூலதனங்களை ஊக்குவித்தல் 4) மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணர நடவடிக்கைகளை எடுத்தல் 5) சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வளர்ச்சியை அமைத்துக் கொள்தல் 6) இளைஞர் சக்தியை அதிகரித்தல் 7) நிதித் துறை சார்ந்த செயல்பாடுகள்

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு கட்டமைப்பு வசதிகள் அத்தியாவசியமானவை. மோடி அரசு கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக கட்டமைப்புத் துறைகளில் பெரும் கவனத்தைச் செலுத்தி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த நிதி நிலை அறிக்கை கட்டமைப்புத் துறைக்கான ஒதுக்கீட்டை 33 விழுக்காடு அதிகரித்து, வரலாறு காணாத வகையில் பத்து லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. அதன் மூலம் நாடு பெரிய வளர்ச்சியைக் காணும்.

பிரயாணம் மற்றும் சரக்குகள் நடமாட்டத்துக்கு அடிப்படையாக விளங்கும் ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியாக 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு 2014 ஆம் வருடத்துடன் ஒப்பிடும் போது சுமார் ஒன்பது மடங்கு அதிகமானதாகும். அதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக பலன் கிடைக்கவுள்ளது. மேலும் எதிர்காலத்தில் வெளிவரும் வேகமானவந்தே பாரத்ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் ஆதரமான விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் உலக அளவில் சிறு தானிய வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அளவில் நமது நாடு அதிகமாக சிறு தானியங்களை உற்பத்தி செய்து வருகிறது. எனவே உலக அளவில் இந்தியாவை சிறு தானிய மையமாக உருவாக்கஷ்ரீ அன்னாதிட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் உற்பத்தி அதிகரித்து சாதாரண விவசாயிகள் அதிக அளவில் பலனடைவது மட்டுமன்றி, மாறி வரும் சூழ்நிலையில் மக்களின் உடல் நலனும் பாதுகாக்கப்படும்.

விவசாயத்துறைக்கு இருபது லட்சம் கோடி ரூபாய் அளவு கடனுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது கால்நடைகள், பால்வளம் மற்றும் மீன்வளத் துறைகளுக்கு முக்கிய கவனம் கொடுப்பதாக இருக்கும். ஏனெனில் இந்த துறைகள் விவசாயம் சார்ந்து அவற்றுடன் இணைந்து இருப்பவை. விவசாயத் துறைக்கான டிஜிட்டல் உள்ளிட்ட கட்டமைப்புகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு இந்த அறிக்கை முக்கியத்துவம் கொடுக்கிறது.

தற்போது பல மாநிலங்களில் கிராமப்புறங்கள் வேலை வாய்ப்பு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. அதே சமயம் அங்கு தொழில் முனையும் திறமை பெற்றவர்கள் நிறைய இருந்து வருகின்றனர். எனவே அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்புக்களைக் கொடுத்து கிராமப்புறங்களில் புதுமை வாய்ந்த புதிய நிறுவங்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கிராமப் பகுதிகளில் அதிக எண்ணிக்கைளிலான புதியஸ்டார்ட் அப்நிறுவனங்கள் பல உருவாகும்.

விவசாயத்துக்கு அடுத்தபடியாக நமது நாட்டில் முக்கிய பங்கு வகிப்பது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சார்ந்த துறையாகும். அதன் வளர்ச்சிக்காக வரும் ஏப்ரல் 1, 2023- ல் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் தொகையுடன் சீரமைக்கப்பட்ட கடன் உத்திரவாத திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. மேலும் மூலதனத்துக்கான செலவு ஒரு விழுக்காடு அளவு குறைக்கப்பட உள்ளது. வங்கிகளின் நிர்வாக முறைகளை முன்னேற்றுவதற்காக நடைமுறையிலுள்ள வங்கிகள் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டின் பல பகுதிகளிலும் பாரம்பரியமான கைவினைப் பொருட்கள், உடைகள் என வெவ்வேறு தனித்தன்மை வாய்ந்த உற்பத்திகளை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவை மிகவும் சிறப்பானவை; நமது பன்முக கலாசாரத்தை பிரதிபலிப்பவை. ஆனால் அவற்றுக்குப் போதுமான ஊக்கம், அங்கீகாரம் ஆகியவை இல்லாத காரணத்தால் நலிந்தும், வெளியே தெரியாமல் இருந்தும் வருகின்றன. அவற்றை ஊக்குவிக்கும் வகையில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் நமது பாரம்பரியம் காக்கப்படுவது மட்டுமன்றி, கைவினைஞர்கள் உள்ளிட்ட திறமைசாலிகள் வாழ்க்கை மேம்படும்.

மோடி அரசு பதவியேற்றது முதல் தொடர்ந்து திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த அறிக்கை  பிரதமர் திறமைசாலி முன்னேற்ற திட்டம் 4.0’ என்னும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் உள்ள வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், நாட்டின் பல மாநிலங்களிலும் முப்பதுஇந்தியா திறன் மேம்பாட்டு சர்வதேச மையங்கள்துவக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

உலக அளவில் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு இடையிலும் நமது நிலைமை ஸ்திரமாக இருந்து வருவது பாராட்டுதலுக்குரிய விசயமாகும். திறமையான நிர்வாகம் காரணமாக நாட்டின் நிதிப் பற்றாக்குறை குறைந்து வருகிறது. வரி வருவாய் 20.9 லட்சம் கோடி ரூபாய் அளவு உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் தொடர்ந்து பல மாதங்களாக 1.40 லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருந்து வருகிறது. வெளி நாடு வாழ் இந்தியர்கள் சென்ற வருடம் அதிக அளவாக 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள தொகைகளை நமது நாட்டுக்கு அனுப்பியுள்ளர்.

இந்த அறிக்கையின் இன்னொரு சிறப்பம்சம் வருமான வரிக்கான வரிகள் பல மட்டங்களிலும் குறைக்கப்பட்டு, அதன் மூலம் மக்களின் கைகளில் அதிக தொகைகள் இருக்குமாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகும். இனி மேல் ஏழு லட்சம் ரூபாய் வரை வருட வருமானம் பெறுபவர்கள் அரசுக்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் ஒரு வருடத்துக்கு ரூபாய் ஐம்பதாயிரம் அளவு வருமானத்திலிருந்து குறைத்துக் கொள்ளக் கூடியஸ்டேண்டேர்டு டிடக்சன்நடைமுறைக்கு வருகிறது.

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்  வயது முதிர்ந்தவர்கள் திட்டம்  மூலமாக முதலீடு செய்யும் திட்டத்தின் அளவு  பதினைந்து லட்சம் ரூபாயிலிருந்து முப்பது லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேமிப்புகளை மேற்கொண்டு வருவாய் பெறக் கூடிய வகையில் வயது  மூத்தவர்கள்  பலன் பெறுவார்கள். அதிக வருமானம் ஈட்டுபவர்கள் செலுத்த வேண்டிய கூடுதல் வரி 37 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் முன்னேற்றத்துக்காக மோடி அரசு தொடர்ந்து பல திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறது. அந்த வகையில் அவர்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில்  அதிக அளவிலான 7.5 விழுக்காடு வட்டியுடன் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பெண்கள் இரண்டு வருட காலத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து பலன் பெற முடியும்.

மோடி அரசின் கனவான சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை உலகை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தும் வகையில், இந்த அறிக்கை பசுமை எரிசக்திஎன்னும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி எரிசக்தி உபயோகம் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் அமைய, 35000 கோடி ரூபாய் அளவு மூலதனம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயுக்களின் உபயோகத்தைக் குறைத்து, உலக அளவில் மாற்று எரிசக்திகளுக்கான முக்கிய நாடாக இந்தியா மாறும் வகையில்தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன்ரூபாய் 19,700 கோடி ஒதுக்கீட்டுடன் அமைக்கப்பட உள்ளது. பேட்டரி சேமிப்பு முறைகளை உருவாக்கி செயல்படுத்த நிதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 5.25 லட்சம் கோடி அளவிலிருந்து, ரூபாய் 5.94 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வித் துறையில் மாற்றங்களைக் கொண்டு வர டிஜிட்டல் முறைக்குக் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் பஞ்சாயத்துகள் மற்றும் வார்டுகளின் அளவில் நூலகங்கள் அமைக்க மத்திய அரசு உதவி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பெரிய நகரங்களுக்கு அடுத்தபடியாக உள்ள, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் முன்னேற்றத்துக்கு ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிநகர்புற கட்டமைப்பு முன்னேற்ற நிதிபத்தாயிரம் கோடி ரூபாய் அளவு ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட உள்ளது. அதன் மூலம் அனைத்து மக்களுக்கும் வசதிகள் கிடைக்கும்.

வரும் நிதியாண்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 66 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு, ரூபாய் 79,000 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டின் பல பகுதிகளையும் இணைக்கும் வகையில் விமானம் தரையிரங்கும் பகுதிகள் மேலும் ஐம்பதாக அதிகரிக்கப்பட உள்ளது.

எனவே இந்த நிதி நிலை அறிக்கை நமது  நாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று, உலகின் முதல் நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்படுள்ளது.

( ஒரே நாடு, பிப் 2023, சென்னை)

No comments: