பிப்ரவரி முதல் நாள் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. நாடு சுதந்திரமடைந்து நூறாவது ஆண்டை அடையும் போது, நாம் காண விரும்பும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான செயல்திட்டத்தை ஒட்டி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2022 ஆகஸ்டு தொடங்கி வரவுள்ள இருபத்தைந்து வருடங்களை அமுத காலம் எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டுகிறார். அந்த வகையில் இது அமுத காலத்தின் முதலாவது அறிக்கை.
பல விதங்களிலும் மோடி அரசில் குறை கண்டு பிடிப்பவர்கள் கூட இந்த அறிக்கை பற்றி அதிகம் கூற முடியவில்லை. அடுத்த வருடம் பாராளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், அதையொட்டி சலுகைகளோ, இலவசங்களோ எதுவும் இல்லை. இது முழுக்க அனைத்து பிரிவு மக்களும் முன்னேற்றம் கண்டு, அதன் மூலம் நாடு வளர்ச்சியுற வேண்டும் என்பதை மையமாக வைத்தே அமைந்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் பத்தாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்தை எட்டியுள்ளது. 2014 ஆம் வருடத்தோடு பார்க்கும் போது தனிநபர் வருமானம் இரு மடங்கு அதிகரித்து 1.97 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. நமது நாட்டுக்கான இந்த வருடப் பொருளாதார வளர்ச்சி ஏழு விழுக்காடாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் இந்தியப் பொருளாதாரம் இருள் மங்கிய சர்வதேச சூழலில் ‘ஒளி வீசும் பகுதி’யாக விளங்கி வருகிறது எனக் குறிப்பிடுகின்றன.
கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக சுமார் நாற்பத்தெட்டு கோடி ஏழை மக்கள் வங்கி கணக்குகள் துவக்கம், சுமார் பன்னிரெண்டு கோடி கழிவறைகள் கட்டியது மற்றும் பதினோரு கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் எனப் பல வகைகளில் சாதாரணக் குடும்பங்கள் முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றன.
அனைவரும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துதல் ஆகியன இந்த அறிக்கையின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.
ஏழு விசயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, திட்டங்களின் பலன்களைக் கடைசி மனிதனுக்கும் கொண்டு சேர்த்தல், கட்டுமானத் துறை வளர்ச்சி மற்றும் மூலதனம் அதிகரிப்பு, ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணர்தல், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் செயல் திட்டங்கள், இளைஞர் சக்தியை உபயோகித்தல் மற்றும் நிதித் துறை செயல்பாடுகள் என்பன அவையாகும். நாட்டில் மாற்றத்தை உண்டாக்குவதற்காகப் பெண்களுக்கான பொருளாதார பலத்தை அளிப்பது,
கிராமிய மற்றும் கைவினைத் தொழில்களை மேம்படுத்துவது, சுற்றுலாத் துறை மேம்பாடு மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் செயல்பாடுகளை ஊக்குவிப்பது என நான்கு முக்கிய வாய்ப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையானது கட்டமைப்புத்துறையாகும். அதை ஒட்டியே மற்ற துறைகளின் வளர்ச்சியும் அமைந்துள்ளன. அதற்காக வரலாறு காணாத வகையில் பத்து லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இந்த தொகை முப்பத்தி மூன்று விழுக்காடு அதிகமாகும்.
மேலும் ரயில்வே துறைக்கு மட்டும் 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் வருடத்துக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும் போது, இது நான்கு மடங்கு அதிகமாகும். அதிவேகமாகச் செல்லக் கூடிய ‘வந்தே பாரத்’ ரயில்கள் மேலும் அதிகரிக்கப்பட்டு, ‘வந்தே மெட்ரோ ரயில்’களும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி 66 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு 79,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டு வருடங்களில் மோடி அரசு விவசாயத்துறையை முன்னேற்ற நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த வருடமும் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் இளம் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தி விவசாயம் சார்ந்த ’ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை உருவாக்க நிதி திட்டம் உருவாக்கப்படும் என்பது அவற்றுள் முக்கியமானது. அதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு எளிதாகத் தீர்வு காண்பதும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி மற்றும் லாபத்தைப் பெருக்குவதும் நோக்கங்களாகும்.
நமது நாட்டில் தான் சிறுதானியங்கள் அதிகமாக விளைகின்றன. சோளம், கம்பு, தினை, ராகி எனப் பல தானியங்களை நமது நாடு பல நூற்றாண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறது. அவை உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. எனவே இந்தியாவை உலகின் ‘சிறுதானியங்களின் மையம்’ என உருவாக்கும் நோக்குடன் ” ஸ்ரீ அன்ன” என்னும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
விவசாயத் துறைக்கான கடன் தொகை இலக்கு இருபது லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. அதில் ஆடு, மாடுகள் வளர்ப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறை ஆகியன முக்கியத்துவம் பெறும். மீனவர், மீன் வியாபாரிகள் மற்றும் மீன் சம்பந்தமான குறு, சிறு தொழில் அமைப்புகளின் செயல்பாடுகளை அதிகரிக்க ஆறாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் திட்டம் துவக்கப்படும்.
குறு, சிறு விவசாயிகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை உயர்த்தும் நோக்கில் கூட்டுறவு முறை ஊக்குவிக்கப்படவுள்ளது. அதற்காக நாடு முழுவதுமுள்ள கூட்டுறவு அமைப்புகளை பலப்படுத்தி விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. விவசாயிகளின் விளை பொருட்களைச் சேமிப்பதற்கான கிடங்குகள் அமைக்கும் திட்டம் உருவாகவுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் துறை பிரிவு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைப்பட்டு வரும் அவசரகால கடனுதவி உத்தரவாத திட்டம் மேலும் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் புதிய முதலீட்டுடன் மாற்றியமைக்கப்பட உள்ளது. இனிமேல் தொழில் முனைவோர் கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டி ஒரு விழுக்காடு குறையும்.
நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் துவக்கப்படும். ஆசிரியர் பயிற்சி மாற்றியமைக்கப்படும். நாடு முழுவதும் தரமான புத்தகங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சுலபமாக கிடைக்கும் வகையில் தேசிய டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்படும். மேலும் பஞ்சாயத்து மற்றும் வார்டு அளவுகளில் நூலகங்கள் அமைக்க மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.
முன்னேற்றமில்லாத நிலையில் வாழும் மலைவாழ் மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த பதினைந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அடுத்த மூன்றாண்டுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மலைவாழ் மக்கள் பகுதி பள்ளிகளுக்கு 38,800 ஆசிரியர் மற்றும் அலுவலர் நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
நாட்டிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் ’நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டு நிதி’ உருவாக்கப்பட உள்ளது. அதற்காக மத்திய அரசு இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் பத்தாயிரம் கோடி நிதி அளிக்கும். மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றும் முறைக்குப் பதிலாக இயந்திரம் மூலம் அகற்றும் முறை எல்லா நகரங்களிலும் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான பசுமை எரிசக்திக்கு மாறுவதற்கு உதவும் வகையில் ரூபாய் 35000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் உபயோகத்தைக் குறைத்து, அதற்கு பதிலாக பசுமை சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி இந்தியா உலகளவில் முன்னணியில் வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
” பிரதம மந்திரி – பிரனாம்” என்னும் பெயரில் ரசாயன உரங்களைக் குறைத்து மாற்று உரங்களை ஊக்குவிக்க மாநிலங்களுக்கு உதவும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீணாகும் பொருள்களை உபயோகப்படுத்தி வருமானம் ஈட்டும் வகையில் 200 பயோ- கேஸ் நிறுவனங்கள் உள்பட 500 “கோபர்தன்” அமைப்புகள் பத்தாயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்படும். அடுத்த மூன்று வருடங்களில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை வேளாண்மைக்கு மாறும் வகையில் ஒரு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வெவ்வேறு துறைகளில் திறன்களைக் கற்றுக் கொடுக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் தேவைப்படும் திறன்களைக் கற்றுக் கொடுக்க நாடு முழுவதும் முப்பது சர்வதேச திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். அதனுடன் திறன் மேம்பாட்டை விரிவு படுத்தும் வகையில் ஒரு டிஜிட்டல் மேடை உருவாக்கப்பட உள்ளது.
அதன் மூலம் தொழில்களுக்குத் தேவைப்படும் திறன்களை அளிக்கவும், அதனை குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையோடு இணைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த மூன்று வருடங்களில் பல்வேறு தொழில்களுக்குத் தேவைப்படும் நாற்பத்தேழு லட்சம் ‘அப்ரெண்டிஸ்’ களை உருவாக்க ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான உதவித் தொகை நேரடி பணப் பரிமாற்றம் மூலமாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.
நமது நாட்டிலுள்ள புனித தலங்கள் மற்றும் முக்கிய இடங்களை மக்கள் சென்று பார்வையிடும் வகையில் மத்திய அரசு சுற்றுலா திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக குறைந்தது ஐம்பது சுற்றுலாத் தலங்களை எல்லா வகைகளிலும் மேம்படுத்தி அதன் மூலம் உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசுகள் அவற்றின் தலைநகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மாவட்ட அளவில் தனித்துவமாக விளங்கும் பொருள்கள் மற்றும் கைவினை தயாரிப்புகளை விற்கும் வகையில் ’யூனிட்டி மால்கள்’ அமைக்க ஊக்குவிக்கப்படும்.
நிதி மற்றும் நிதி சார்ந்த தகவல்களைத் திரட்டி ஒரே இடத்தில் சேமித்து வைக்கும் தேசிய அளவிலான நிதி தகவல் பதிவு மையம் அமைக்கப்படும். அதன் மூலம் நிதி தேவைப்படுவோருக்குத் தகுந்த முறையில் கிடைப்பதும். நிதித் துறை வலுவாக இருப்பதும் எளிதாகும். வங்கிகளின் நிர்வாகத்தை மேம்படுத்தவும், முதலீட்டாளர் பாதுகாப்பை உறுதி செய்யவும் வங்கி நிறுவனங்கள், வங்கி ஒழுங்குமுறை மற்றும் ரிசர்வ் வங்கி சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
பங்குச் சந்தை செயல்பட்டாளர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ள பங்குச் சந்தைகளை நிர்வகிக்கும் ’செபி’ அமைப்புக்கு தேசிய பங்குச் சந்தை நிறுவனம் கொடுக்கும் பாடங்களை ஒழுங்குபடுத்தி பட்டங்களை அளிக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக கேட்காமல் கிடக்கும் பங்குகள் மற்றும் ஈவுத் தொகைகளை எளிதாகப் பெறுவதற்கு முதலீட்டளார் பாதுகாப்பு நிதி ஆணையம் அமைக்கப்படவுள்ளது.
சுதந்திர தின பவள விழாவையொட்டி பெண்களுக்கு 7.5 விழுக்காடு வட்டியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு ரூபாய் இரண்டு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யும் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறுபது வயதுக்கு மேலானவர்களுக்கான சேமிப்பு திட்டத்தின் உச்சவரம்பு பதினைந்து லட்சம் ரூபாயிலிருந்து முப்பது லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம முன்னேற்ற வங்கிகளில் வைக்கப்படும் வைப்புத் தொகை மற்றும் பெறப்படும் கடன் ஆகியவற்றுக்கான உச்சவரம்பு உறுப்பினருக்கு ரூபாய் இரண்டு லட்சம் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உள்ள குறு நிறுவனங்களும் ஐம்பது லட்சம் ரூபாய் வரை சொந்தமாகத் தொழில் செய்பவர்களும் தாமாகவே கணக்கிட்டு வரி செலுத்திக் கொள்ளும் சலுகையைப் பெற்று வருகின்றனர். அவ்வகை உச்சவரம்புகள் தலா மூன்று கோடி மற்றும் எழுபத்தைந்து லட்சம் அளவு அதிகரிக்கப்படுகிறது.
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் 31.3.2023 வரை ஆரம்பிக்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அச்சலுகையானது அடுத்த நிதியாண்டு முழுக்க துவக்கப்படும் நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்க தேசிய புள்ளிவிபர நிர்வாக கொள்கை அறிவிப்பு, முதலீட்டுச் செலவினங்களுக்காக மாநிலங்களுக்கு ஐம்பது வருட வட்டியில்லா கடன் திட்டம் மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு, தொன்மையான எழுத்துக்களை ஆவணப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே இந்த வருட அறிக்கையானது நாட்டின் முன்னேற்றத்தை மேலும் பெருக்கி, இந்தியாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment