மக்களை ஏமாற்றும் மாநில நிதிநிலை அறிக்கை 2025-26

 

ஒரு மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை அதன் தன்மைகள், சூழ்நிலைகள், வலிமைகள்,   சிரமங்கள் மற்றும் சவால்களை மனதில் வைத்து வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கான திட்டங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவும் தமிழகம் போன்ற வளர்ச்சிக்கான அடிப்படைத் தன்மைகளை நிறையப் பெற்ற மாநிலத்தில், அவற்றையெல்லாம் முழுமையாகப் பயன்படுத்தி எதிர்காலத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும் வகையில் ஒரு தொலை நோக்கு இலக்கு மற்றும் அதை அடையத் தேவையான செயல் திட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால் திமுக அரசின் 2025-26 அறிக்கையில் அவ்வாறு எதுவும் இல்லை.

மாறாக சுய தம்பட்டம், வெற்று விளம்பரங்கள், மத்திய அரசு மேல் பழி போடுதல் மற்றும் தேர்தல் அறிக்கையைப் போன்ற அறிவிப்புகளைக் கொண்டதாகவே இருக்கிறது. மாநிலத்தில் 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே எல்லா முன்னேற்றமும் தொடங்கியது போலவும், அத்தனைக்கும் முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி அவர்களே காரணம் போலவும் சொல்லியிருப்பது உண்மைக்கு மாறானது. சுதந்திரத்துக்குப் பிந்தைய மாநில வளர்ச்சியில் மாமனிதர் திரு காமராஜர் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. அதற்குப் பின்னர் வந்த கால கட்டங்களில் வேறு கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களும் தங்களின் பங்கினை அளித்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளின் நிதிநிலை அறிக்கைகளில் சொல்லப்பட்டிருந்த விசயங்கள் பல இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பது இந்த அரசு நிதிநிலை அறிக்கைகளை முக்கியமானதாக எடுத்துக் கொண்டிருக்கிறதா என்கின்ற அடிப்படைச் சந்தேகத்தைக் கிளப்புகிறது. மேலும் முந்தைய வருடங்களில் சொல்லப்பட்டிருந்த அதே விசயங்கள் சில இப்போதும் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது அரசின் அக்கறையின்மையைக் காட்டுகிறது. தங்களின் 2021ஆம் தேர்தல் அறிக்கையில் மக்களிடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பல நான்கு வருடங்கள் கழிந்த பின்னரும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாகும். இது மக்களாட்சியையே கேள்விக்குரியதாக ஆக்குகிறது. அதனால் இந்த நிதிநிலை அறிக்கையில் கூடசெய்து விடுவோம்; அடைந்து விடுவோம்என்று சொல்வது உண்மையில் நடக்குமா என்பதில் பெருத்த சந்தேகம் உள்ளது.

வகுப்பறைகள் இல்லாமல் குழந்தைகள் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு பாடம் படிப்பது, வகுப்பறைக்குள் மேல் கூரை பழுதாகி விழுந்து மாணவர்கள் காயமடைவது, அரசு பேருந்துகள் பழுதாகி பயணியர்கள் தள்ளிச் செல்வது,  கிராமங்களில் போக்குவரத்து வசதி இல்லாததால் மருத்துவமனை செல்ல நோயாளிகளைச் சுமந்து சென்று சிகிச்சைக்குத் தாமதமாகி உயிரிழப்பு நடப்பது, மருத்துவமனைகளில் போதிய மருத்துவர், செவிலியர்கள் இல்லாதது ஆகியன இப்போதும் நம் கண் முன்னே தமிழகத்தில் நடந்து கொண்டு வருகிறது. இவற்றையெல்லாம் சரி செய்ய செய்யாமல், எங்களின் திராவிட மாடல் அரசு பிற மாநிலங்களுக்கு மட்டுமல்ல; பல மேற்கத்திய நாடுகளை விட சிறப்பாக இருந்து வருகிறது என்று சொல்வது நகைப்புக்குரியது.

தமிழக அரசு வருவாயில் சுமார் இருபது விழுக்காட்டுக்கு மேல் தொடர்ந்து மது விற்பனை மூலமே கிடைத்து வருகிறது. மதுவினால் தினசரி குடும்பங்கள் சீரழிந்து கொலை,  கொள்ளைகள் என தவறுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. எனவே சரியான மக்கள் நல அரசாங்கம் மது மூலமான வருவாயைக் குறைத்து மற்ற வருவாய்களைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து வருடா வருடம் இலக்குகளை அதிகரித்து நிறைய பேரைக் குடிக்க வைக்கும் அரசு எப்படி நல்ல அரசாங்கமாக இருக்க முடியும்?  இத்தனைக்கும் நோபெல் பரிசு பெற்றவர்கள், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்  உள்ளிட்ட பெரிய பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளின் பேரில் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டதாக முதல்வர் கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே முதன்மையான பொருளாதாரமாக விளங்குவது மகாராஷ்டிரா மாநிலம். தமிழகத்தை விட மக்கள் தொகையும் அதிகம். நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். நம்மைப்போல சுமார் மூன்று மடங்கு மக்கள் தொகை. ஆனால் நாட்டிலேயே அதிகமான கடன் வாங்குகின்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. அதனால் தமிழர்களின் தலையில் கடன் அதிகமாகிக் கொண்டே போகிறது. மேலும் இந்த வருடம் 1,05,000 கோடி கூடுதலாக கடன் வாங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேட்டால் கடன் அதிகபட்ச வரம்புக்குள் உள்ளது என விளக்கமளிக்கிறார்கள். மகாராஷ்டிரா பெரிய பொருளாதாரமாக இருந்தும், அவர்கள் எப்படி நம்மை விடக் குறைவான கடன் வாங்கி முதல் மாநிலமாக விளங்குகிறார்கள்?

தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள். அவையே அதிக வேலை வாய்ப்புகளையும் கொடுக்கின்றன. ஆனால் சிறு, குறு தொழில் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை வெறும் ரூபாய் 1918 கோடி மட்டுமே. மேலும் அவற்றுக்கான பிரச்னைகளைக் களைய அரசு எடுக்க வேண்டிய திட்டங்கள் என எதுவும் அறிவிக்கப்படவில்லை. திமுக அரசு வந்த பின்னர் மின் கட்டணங்களைத் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழக மக்கள் மட்டுமன்றி, சிறு குறு தொழில்களும் பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. ஆனால் அவற்றுக்கான சலுகைகள் எதுவும் இல்லை.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், சுமார் 3,50,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் எனச் சொன்னார்கள். ஆனால் கடந்து நான்கு வருடங்களில் 78 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையே சொல்கிறது. அப்படியானால், சராசரியாக வருடா வருடம் பலனடைந்தவர்கள் இருபதாயிரம் பேர்கள் கூட இல்லை. அதே சமயம் எதிர்வரும் 2025-26 வருடம் மட்டும் 40,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எப்படிச் சொல்கிறார்கள்? அதை எப்படி நம்புவது?

மாநிலத்துக்கு அடிப்படையானது விவசாயத் துறை. விவசாயம் செய்யக் கூடிய நிலங்கள் வருடா வருடம் குறைந்து வருகின்றன. அதைச் சரி செய்ய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. நெல்லுக்கும், கரும்புக்கும் உறுதி கொடுத்த குறைந்தபட்ச ஆதார விலைகளை நான்காண்டுகள் கழித்து இன்னமும் கொடுக்கவில்லை? செயல்படாத கூட்டுறவு ஆலைகள், தூர்வாரப்படாத நீர்வழிகள், கிடங்கு வசதிகள் கூட ஏற்படுத்தப்படாமல் மழைகளில் நனையும் நெல் மூட்டைகள் என விவசாயிகளின் அடிப்படைப் பிரச்னைகள் எதைப்பற்றியும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

அரசு நிர்வாகத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் துறைகளான மின்சாரம், போக்குவரத்து எனப் பலவுமே நட்டத்தில் இயங்கி வருகின்றன. அவற்றை மீட்டுக் கொண்டு வர எந்த திட்டங்களும் இல்லை. வாழ்க்கையை அர்ப்பணித்துப் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளித்தபடி சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் இன்னமும் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க ரூபாய் பத்து கோடியை ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இதைச் செய்ய ஏன் இவ்வளவு வருட காலம் தாமதம்? திருக்குறள் 35 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளதாகச் சொல்லியுள்ளனர். ஆனால் அதில் முப்பதுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளை மத்திய அரசின் செம்மொழித் தமிழ் ஆய்வு மையம் மோடி அரசு பதவியேற்ற பின் செய்துள்ளது. மேலும் அந்த மையம் பல சங்க இலக்கியங்களையும் முதன் முறையாக கடந்த பத்து வருட காலத்தில் செய்துள்ளது. இதில் மாநில அரசு பெரிதாக எதையும் செய்யவில்லை.

மருத்துவம், தொழில் நுட்பம் சார்ந்த புத்தகங்களைத் தமிழில் மொழி பெயர்க்க நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த விசயத்தில் பிற மாநிலங்களில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் அவர்களின் தாய்மொழியில் புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு அவையெல்லாம் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பாடங்களாகப் போதிக்கப்பட்டு வருகின்றன. தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளின் தரமான உயர்கல்விப் புத்தகங்களைத் தாய் மொழியாக்கம் செய்வது. அதை நான்காண்டு காலம் செய்யாமல் விட்டு, இப்போதாவது தொடங்கியிருப்பது நல்லது தான்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என மாநில அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆனால் நாட்டின் பல மாநிலங்களில் தாய்மொழிகளில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகள் நடைமுறைக்கு வந்து விட்டன. தமிழக மாணவர்களுக்கு மட்டும் அவை ஏன் இன்னமும் முழுமையாக் கொடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை? டிஜிட்டல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த உள்ளோம் என அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. டிஜிட்டல் துறையில் இந்திய அரசு உலக அளவில் முன்னணியில் இருக்கும் போது, தமிழகம் பின் தங்கி விடக் கூடாது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தடையாக இருப்பது எங்கும் வியாபித்திருக்கும் ஊழல்தான். எனவே ஊழல்களைத் தடுக்க மாநில அரசு முனைப்போடு செயல்பட்டால் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும். மேலும் இயற்கை வளங்கள் கொள்ளை போவது மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

மொத்தத்தில் திமுக அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை என்பது ஏமாற்றம் அளிக்கக் கூடியதாகவே உள்ளது.  மனித வளமும் இயற்கை வளமும் நிறையப் பெற்ற நமது மாநிலம் பெரிய அளவு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் உள்ள பகுதியாகும். ஆனால் அவை முழுவதும் பயன்படுத்தப்படாமல் இருப்பது வருத்தத்துக்குரிய ஒன்றாகும்.

 

No comments: