சனாதன தர்மம் என்னவென்று சரியாகப் புரிந்து கொள்ளாமலேயே, தங்களின் குறுகிய நோக்கங்களுக்காக அதைத்
திரித்துப் பேசுவது என்பது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. அதிலும் சமுதாயத்தில் நிலவி வரும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்குக்
காரணமே சனாதன தர்மம் அல்லது இந்து மதம் எனச் சொல்வது அதிகரித்து வருகிறது. முன்னர் மாணவர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான
கமலஹாசன் சனாதனச் சங்கிலிகளை, சர்வாதிகாரச் சங்கிலிகளை நொறுக்கித்
தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்விதான் எனப் பேசினார்.
இந்தியாவுக்கு கல்வியைக் கொண்டு வந்ததே ஆங்கிலேயர்கள் தான் – அதிலும் கிறிஸ்துவர்கள் தான்- என தமிழக சபாநாயகர் உள்ளிட்டோர் பேசி
வருகின்றனர். பல காலமாகவே நமது பண்டைய வாழ்க்கை முறையை இழிவு
படுத்தும் நோக்கில் ஆதாரமின்றி பொது வெளியில் பேச்சுக்கள் வெளி வந்து கொண்டுள்ளன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட நமது பண்பாட்டில் அவ்வப்போது தவறுகள்
ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவை நமது தர்மத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையல்ல.
மேலும் தவறுகளைச் சரி செய்யும் நடவடிக்கைகளும் உள்ளிருந்தே மேற்கொள்ளப்பட்டு
வந்துள்ளன.
அவர்கள் கூற்றுப்படி ஆங்கிலேயர் இங்கு வரும் வரை நம் நாட்டில் கல்வி என்பது இல்லை. அப்படியே ஏதாவது கொஞ்சம் இருந்திருந்தாலும்,
அது ஒரு உயர் ஜாதியினருக்கு மட்டுமே உரித்தானதாக இருந்து வந்துள்ளது.
அதே சமயம் இங்கிலாந்தில் அப்போதே கல்வி முறை உயர்வாக இருந்து அவர்கள்
அறிவியல் உள்ளிட்ட பல துறைகளிலும் சிறந்து விளங்கி வந்தனர் என்பதும் கருத்தாகிறது.
எனவே ஆங்கிலேயர்கள் வந்த பின்னரே கல்வி அனைவருக்கும் கிடைத்தது என்பதைத்
திராவிடவாதிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். அதனால் படித்தவர்கள்
கூட அதை நம்பி வருகின்றனர்.
ஆனால் உண்மை என்ன? முதலில்
பண்டைய காலத்துடன் தொடர்பான முக்கிய விபரங்களைப்
பார்ப்போம். நமது தேசத்தின் தொன்மையான படைப்பாக வேதங்கள் உள்ளன.
அவற்றின் தொடக்கம் 3500 வருடங்களுக்கு முந்தையதாக
இருக்கும் என கணிக்கப்படுகிறது. தொடர்ந்து வந்த காலங்களில் ராமாயணம்,
மகாபாரதம் உள்ளிட்ட பல இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவை இன்று உலகில் மிகவும் மதிக்கத்தக்க படைப்புகளாக அங்கீகரிக்கப்படுகின்றன.
சுமார் 2700 வருடங்களுக்கு
முன்னரே இங்கு தட்சசீலாவில் உலகின் முதல் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பல நாடுகளிலிமிருந்து வந்து படித்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் நாட்டின் பல பகுதிகளிலும் பல்கலைக்கழகங்கள்
அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளன. உலகின் முதல் அரசியல் மற்றும்
பொருளாதார புத்தகமான அர்த்த சாஸ்திரம் 2300 வருடங்களுக்கு முன்பே
எழுதப்பட்டுள்ளது. 2600 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட சுஸ்சுருத
சம்ஹிதம் உலகில் முதல் அறுவை சிகிச்சை புத்தகமாக மதிக்கப்படுகிறது.
தமிழில் திருக்குறள் சுமார் 2100 வருங்களுக்கு
முன்னரே இயற்றப்பட்டுள்ளது. சங்க காலத்தில் இங்கிருந்து பல்வேறு
உயர்தரமான படைப்புக்கள் வெளி வந்துள்ளன. வேதங்களுக்குப் பல பெண்
படைப்பாளிகள் பங்களித்துள்ளனர். சங்க காலத்தில் இருபதுக்கு மேற்பட்ட
பெண் புலவர்கள் படைப்புகளை நல்கியுள்ளனர். அவையெல்லாம் தரமான
கல்வியும், நிபுணத்துவமும் இல்லாமல் சாத்தியமாகி இருக்குமா?
இனி ஆங்கிலேயர் இங்கு நுழைந்த பின்னர் 1835
ஆம் வருடத்தில் மெக்காலே கல்வி முறையைத் திணிக்கும் முன்பு நமது நாட்டிலும்,
தமிழ் நிலத்திலும் பாரம்பரியமாக இருந்து வந்த கல்வி முறை பற்றிப் பார்க்கலாம்.
அது பற்றிய விபரங்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களே நாட்டின் பல மாவட்டங்களிலும்
அதிகாரப்பூர்வமாக கணக்கெடுப்புகள் நடத்தி சேகரித்தவை. சுதந்திரத்துக்குப்
பின்னர் காந்தியவாதியான தரம்பால் இங்கிலாந்து சென்று அவற்றை ஆங்கிலேய ஆவணங்களிலிருந்து
எடுத்தார். அவற்றில் சில இங்கும் அரசு ஆவணங்களாக உள்ளன.
பின்னர் அவை ”அழகிய மரம்” என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.
அதற்குக் காரணம் மகாத்மா காந்தி அவர்கள்
1931ல் லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் ஆங்கிலேயர்கள் இந்தியா வந்த பின்னர்
நமது பாரம்பரியக் கல்வி முறையைப் பற்றித் தெரிந்து கொள்ள மண்ணைத் தோண்டி வேர்களைப்
பார்த்ததாகவும், பின்னர் அதை அப்படியே விட்டுவிட்டதாகவும் கூறினார்.
அதனால் அழகிய மரம் போல இருந்து வந்த பாரம்பரிய இந்தியக் கல்வி முறை அழிந்து
விட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும் 1930 களுக்கு முந்தைய ஐம்பது வருடங்களுக்கு முன் அப்போது இருந்தை விடக் கல்வி நன்றாக
இருந்ததாகக் கூறினார்.
அப்போது அவரிடத்தில் அதற்கான புள்ளி விபரங்கள் இல்லை. ஆனாலும் அவர் தான் சொன்ன விசயம் குறித்துப்
பேசுவதற்குத் தனக்கு எந்தவிதப் பயமுமில்லை எனக் கூறினார். உண்மையில் அப்போதே அந்தக் காலத்திய
இந்தியக் கல்வி பற்றிய விபரங்கள் ஆங்கிலேயர் ஆவணங்களில் இருந்தன. ஆனால் ஆட்சியாளர்கள் அவற்றை வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தனர். அவர்களின் போலி வாதங்களையே சுதந்திரம் பெற்று எழுபத்தெட்டு வருடங்களுக்கு மேலாகியும்,
தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் சில இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பேசி வருவது
உண்மைக்குப் புறம்பானது. .
தற்போதைய தமிழகம் உள்ளிட்ட மெட்ராஸ் பிரசிடெசின்சி பகுதிகளில் அப்போது ஆளுநராக
இருந்த தாமஸ் மன்ரோ 1822-25 கால
கட்டத்தில் கணக்கெடுப்புகளை
நடத்தினார். அதே போல
1820 களில் பாம்பே பிரசிடென்சி பகுதிகளில் அங்கிருந்த ஆட்சியாளர்கள்
கணக்கெடுப்புகளை நடத்தினர். ஆட்சியாளர்களின் ஆதரவுடன் வில்லியம்
ஆடம்ஸ் என்னும் பாதிரியார் அப்போதைய வங்காள மற்றும் பீகார் பகுதிகளில்
1835-38 கால கட்டத்தில் கணக்கெடுப்பு நடத்தினார். பஞ்சாப் பகுதிகளில் பிரிட்டிஷ் அதிகாரி லெய்ட்னர் தலைமையில் 1850 களில் இருந்த நிலை பற்றிக் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் மேலாதிக்க நடவடிக்கைகளால் இந்தியா
கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி நிலைமை மிக மோசமாகச் சென்று கொண்டிருந்தது. ஆனாலும் நாட்டின் பல பகுதிகளிலும் கல்வி
முறை மிகச்சிறப்பாக இருந்து வந்ததை அவர்களின் கணக்கெடுப்புகள் எடுத்துக் காட்டின.
மெட்ராஸ் பிரசிடென்சியில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளிக்கூடம் இருந்து வந்தது எனத் தாமஸ் மன்ரோ கூறினார்.
1830 களில் வங்காள - பீகார் பகுதிகளில் பள்ளிக்
கல்வி பாதிப்புகளுக்குள்ளான பின்னரும் ஒரு லட்சம் பள்ளிக்கூடங்கள் இருந்து வந்ததாக
ஆடம்ஸ் அறிக்கைகள் கூறின. பாம்பே பிரசிடென்சி பகுதிகளிலும் அதே
மாதிரி நிலைமை வெளிப்பட்டது. எனவே ஆங்கிலேயர்களால் நாட்டின் பல
பகுதிகளிலும் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகள் அனைத்துமே இங்கு கல்வி பரவலாக இருந்து வந்ததாகச்
சொல்லியுள்ளன.
அதே சமயம் இங்கிலாந்தில் 1800 வரை
கல்வி பரவலாக இல்லை என அவர்களே குறிப்பிட்டுள்ளனர். அங்கு போடப்பட்ட
பதினாறாம் நூற்றாண்டுச் சட்டம் வசதி படைத்தவர் மற்றும் உயர் குடியினருக்கு மட்டுமே
கல்வி கொடுக்கப்படவேண்டும் எனவும் மற்றவர் குழந்தைகள் அவர்களின் குடும்பத் தொழில்களைச்
செய்ய வேண்டுமெனவும் சொல்லியிருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில்
தான் மதக்கல்வி அவசியம் எனக் கருதி ஏழைக்குழந்தைகள் பைபிள் படிக்க ஞாயிற்றுக்கிழமை
பள்ளிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. பெரிய பள்ளிகளிலும் கூட
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையக்காலம் வரை எழுதப் படிக்கத் தவிர மதநூல் போதனை மற்றும்
கணக்கு பாடம் மட்டுமே
சொல்லிக் கொடுக்கட்டுள்ளது.
பொதுவாகவே பலரும் இந்தியாவில் கல்வி உயர்சாதிப் பிரிவினருக்கு மட்டுமே கல்வி கிடைத்து
வந்துள்ளது என நம்பி வருகிறோம். ஆனால் உண்மையில்
கல்வி பரவலாக அனைத்து சாதியினர் மற்றும் மதத்தினருக்கும் கிடைத்து வந்ததாக கணக்கெடுப்புகள்
தெரிவிக்கின்றன. மெட்ராஸ் பிரசிடென்சி மாவட்டங்களில் உயர்சாதிகள் இல்லாத மற்ற சாதி குடும்பங்களைச்
சேர்ந்த மாணவர்கள் எண்பது விழுக்காட்டுக்கு மேல் பள்ளிகளில் படித்து வந்துள்ளனர்.
தென்னாற்காடு மாவட்ட பள்ளிகளில் உயர்சாதிக் குழந்தைகள் 13 விழுக்காடு மட்டுமே. அதே சமயம் பிற சாதிக் குழந்தைகள்
70 முதல் 84 விழுக்காடு வரை இருந்துள்ளனர்.
மலபார் பகுதிகளில் உயர்சாதியினர் 20 விழுக்காட்டுக்கு
கீழே. சூத்திரர் உள்ளிட்ட
பிற சாதியினர் 54 விழுக்காடு. இஸ்லாமியக்
குழந்தைகள் 27 விழுக்காடு. மெட்ராஸ் பகுதியில்
இஸ்லாமியர் மூன்று முதல் பத்து விழுக்காடு வரை.
மேலும் தங்களின் வீடுகளிலேயே கல்வி கொடுக்கப்பட்டு வந்த குழந்தைகளின் எண்ணிக்கை
பள்ளிகளில் படிப்பவர்களை விடப் பல மடங்கு அதிகமாக இருந்து வந்துள்ளனர். சென்னைப்பகுதியில் வீடுகளில் படித்து
வந்தவர்கள் சுமார் ஐந்து மடங்கு அதிகமாக இருந்துள்ளனர். அவர்களில்
சூத்திர வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் 29 விழுக்காடு..
மேலும் பெண்களுக்கும் கல்வி கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அவர்களில் அதிகம் பேர் வீடுகளில் படித்து
வந்தாலும், பள்ளிகளுச் சென்றும் படித்து வந்துள்ளனர்.
உதாரணமாக விசாகப்பட்டினம் பகுதியில் பள்ளிகளில் படித்துவந்த பெண் குழந்தைகள்
27 விழுக்காடு. மலபார் பகுதி பள்ளிகளில் படித்து
வந்த இஸ்லாமிய சமூகப் பெண்கள் 3.5 விழுக்காடு. உயர்சாதியில்லாத பிற சாதிப் பெண்கள் 18 விழுக்காட்டுக்கு
மேல்.
பள்ளிக்கல்வி தினமும் அதிகாலை தொடங்கி சுரியன் மறையும் நேரம் வரை சராசரியாக எட்டு
வருட காலம் இருந்துள்ளது. பள்ளிகளில்
இலக்கணம், இலக்கியம், கணிதம் தவிர சட்டம்,
மருத்துவம், வானவியல், தர்க்கம்
உள்ளிட்ட பாடங்களும் போதிக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றுடன் தொழில்
கல்வியும் கொடுக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் பிரசிடென்சி பள்ளிகளில்
ஜவுளி சம்பந்தப்பட்ட தொழில்கள், உலோகவியல், கட்டிடம் கட்டுதல், குளங்கள் வெட்டுதல், உப்பு மற்றும் எண்ணை தயாரிப்பு, மீன் பிடிப்பு,
தையல், தச்சு உள்ளிட்ட வெவ்வேறு தொழில்களும் கொடுக்கப்பட்டு
வந்துள்ளன.
ஆங்கிலேயர் கணக்கெடுப்புகளில் உயர்கல்வி பற்றிய சில விபரங்களும் இடம் பெற்றுள்ளன. அப்போதைய உயர்கல்வி நிறுவனங்களை இப்போதைய
கல்லூரிகள் எனக் கருதலாம் என தரம்பால் கூறுகிறார். மெட்ராஸ் பிரசிடென்சிக்குட்பட்ட
பகுதிகளில் ராஜமுந்திரி -279; கோவை -173; தஞ்சாவூர் -109; சேலம் -53; செங்கல்பட்டு
-51 என மாவட்ட வாரியாக அவை செயல்பட்டு வந்துள்ளன. வங்காளம்-பீகார் பகுதிகளில் சுமார் 1800 நிறுவனங்கள் உயர்கல்வி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
பண்டைய இந்தியாவிலும், தமிழகத்திலும்
செயல்பட்டு வந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை, பின்னணி பற்றியெல்லாம் இப்போது நமக்குத் தெரியாது. ஆனால்
பதினெட்டாம் நூற்றாண்டில் நிலவிய கல்வி பற்றிய முக்கிய விபரங்களை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில்
நடத்திய கணக்கெடுப்புகளே சொல்லியுள்ளன. அவற்றின் மூலம் தமிழ் நிலம் உள்ளிட்ட இந்திய
தேசத்தில் கல்வி அனைவருக்கும் பரவலாக இருந்து என்பதும் சாதிகள் போன்ற வித்தியாசங்களின்றி
அனைவருக்கும் கிடைத்து வந்ததும் தெரிகிறது.
எனவே ஆங்கிலேயர்தான் இங்கு வந்து கல்வி
கொடுத்தனர் என்பது பொய்யாகிறது. மேலும்
மெக்காலே கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நமது பாரம்பரியக்
கல்வி முறை சிதைக்கப்பட்டது. கல்வி கொடுப்பதற்கான நிதி ஆதாரங்கள்
தடுக்கப்பட்டு, இலவச கல்வி முறை நிறுத்தப்பட்டது. அதனால் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைகள் வேகமாகக் குறைந்து
போயின. 1891 ஆம் வருடம் இந்தியாவில் மாணவர்களின் எண்ணிக்கை ஒன்பது
விழுக்காடாக குறைந்து போயிருந்ததாக அமெரிக்க அறிஞர் வில் துரந்த் குறிப்பிடுகிறார்.
ஆகையால் அனைவருக்குமாக இருந்து சிறப்பாக விளங்கி வந்த நமது கல்விமுறை அழிந்து உலகின்
கல்வி மையமாகப் பல நூறாண்டுகள் விளங்கி வந்த இந்தியா, தனது பெருமைகளை இழந்தது. பின் வந்த காலங்களில் கல்வி பரவலாகக் கிடைக்க பல அமைப்புகளும், தனியாரும் நடவடிக்கைகளை எடுத்து வந்தன. சுதந்திரத்துக்குப்
பின்னர் மத்திய, மாநில அரசுகள் மட்டுமன்றி பிறரும் அனைவருக்கும்
கல்வி கிடைக்க உழைத்து வருகின்றனர். அதனால் பெரிய முன்னேற்றம்
ஏற்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment