கடந்த
சில மாதங்களில் மத்திய திட்டக் குழுவைப் பற்றி
இரண்டு முக்கியமான செய்திகள் ஊடகங்களில் வெளி வந்தன. அப்போது திட்டக்குழு மற்றும் அதன்
துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா குறித்து விவாதங்கள் எழுந்தன. அந்தச் செய்திகளில் முதலாவது திட்டக் குழுவின்
வறுமைக்கோட்டுக்கான வரையறை பற்றியது. இரண்டாவது திட்டக்குழு அலுவலகத்தில் கழிவறையை
நவீனப்படுத்துவதற்காக செய்யப்பட்ட செலவுகள் பற்றியது.
வறுமைக்கோடு
சம்பந்தமாக திட்டக்குழு குறிப்பிட்டுள்ள தொகைகள் மிகவும் அபத்தமானவை. சென்ற 2011 செப்டம்பர்
மாதம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனது இரண்டாவது வாக்கு மூலத்தில் வறுமைக்கோட்டை
நிர்ணயம் செய்வதற்கான தொகைகள் பற்றிய விபரங்களை திட்டக்குழு சமர்ப்பித்தது. அதன்படி
நகரங்களில் வாழக்கூடிய மக்களுக்கு நபர் ஒன்றுக்கு 32 ரூபாய்களும் கிராமப்புற மக்களுக்கு
26 ரூபாய்களும் வறுமைக் கோட்டுக்கான அடிப்படை
அளவுகளாக எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்மூலம்
நகர்ப்புறங்களில் தலைக்கு ஒரு நாளைக்கு 32 ரூபாய்க்குக் கீழேயும் கிராமங்களில் 26 ரூபாய்க்குக் கீழேயும் செலவு செய்பவர்கள்
மட்டுமே வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என்று சொல்லப்பட்டது. மற்றவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டைத் தாண்டியவர்கள். மேற்கண்ட
தொகைகளை மாத வருமானமாகக் கணக்கிடும் போது தலை ஒன்றுக்கு நகர்ப்புறத்துக்கு 965 ரூபாய்களும்,
கிராமப்புறத்துக்கு 781 ரூபாய்களும் ஆகின்றன.
32 ரூபாயையும்
26 ரூபாயையும் வைத்துக் கொண்டு ஒருவர் என்ன
செய்ய முடியும்? மேற்கண்ட தொகைகளை வைத்து நுகர்வோர் விலைப் புள்ளியின் அடிப்படையில்
உணவு உண்பதற்கு அத்தியாவசியமான பொருள்களை எவ்வளவு வாங்க முடியும் என்று கணக்குகள் போடப்பட்டது.
அதன் படி பருப்பு வகைகளுக்கு 1.02 ரூபாய், காய்கறிகளுக்கு 1.95 ரூபாய், உணவு எண்ணைகளுக்கு 1.55 ரூபாய் மற்றும்
பழங்களுக்கு 44 பைசா தினமும் செலவு செய்பவர்கள் வசதியானவர்கள் ஆகி விடுகிறார்கள்.
இதில்
குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விசயமும் உள்ளது. திட்டக் குழு உச்ச நீதி மன்றத்துக்கு
2011 மே மாதம் சமர்ப்பித்த முதல் வாக்கு மூலத்தில் கொடுத்திருந்த தொகைகள் இன்னமும்
குறைவாகும். எனவே மேற்கண்ட தொகைகளே கூட உச்சநீதி மன்றம் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில்
பண வீக்கத்தைக் கருத்தில் கொண்டு திட்டக் குழுவால் மாற்றிக் கணக்கிட்டு சமர்ப்பிக்கப்பட்டவையே ஆகும்.
இந்த ஒரு நடவடிக்கை மூலம் மட்டுமே நமது திட்டக்குழு நாட்டின் மிக முக்கியமான பிரச்னையான
வறுமையைப் பற்றி எந்தவித கவனமும் அக்கறையும் இல்லாமல் எப்படி நடந்து கொள்கிறது என்பது
தெரிய வருகிறது.
பின்னர்
மார்ச் 2012ல் நாட்டின் வறுமை நிலைமை சம்பந்தமான தனது புள்ளி விபரங்களை 2009-10ம் வருட
அடிப்படையில் திட்டக்குழு வெளியிட்டது. அதன்படி
வறுமைக்கோடு வரையறைக்கான தொகைகள் மேலும் குறைந்திருந்தன. நபர் ஒன்றுக்கான தினசரி செலவு
நகர்ப்புறங்களில் 28.65 ரூபாயாகவும் கிராமங்களில் 22.43 ரூபாயாகவும் சொல்லப்பட்டது.
அதையே மாதத்துக்கு என்று கணக்கிட்டால் முறையே 859.60 மற்றும் 672.80 ரூபாய்கள் என வருகிறது.
மேற்கண்ட
புள்ளி விபரங்கள் அண்மைக் காலத்துக்கானவை. எனவே அவற்றையே சரியானது என எடுத்துக் கொண்டால்,
இந்தத் தொகைகளை செலவு செய்யும் நிலையில் உள்ளவர்களை எப்படி வறுமைக் கோட்டைத் தாண்டியவர்கள்
என்று சொல்ல முடியும்? அதுவும் இப்போது உள்ள விலைவாசியில் இந்தத் தொகையை வைத்துக் கொண்டு
வயிராற ஒரு வேளை உணவு உண்ண முடியுமா?
இந்தப்
பின்னணியில், திட்டக்குழு தனது அலுவலகத்தில் உள்ள இரண்டு கழிவறைகளை செப்பனிட்டு நவீனப்படுத்துவதற்காக
அண்மையில் 35 இலட்சம் ரூபாய்களை செலவழித்திருப்பது தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம்
வெளியானது. மேற்கண்ட தகவல் வெளியானதும் திட்டக்குழுவை நோக்கிக் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன.
’ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்கும் குறைவான செலவு செய்யும் நிலையில் உள்ளவர்களே வறுமைக்கோட்டைத்
தாண்டிய நிலையில் உள்ளவர்கள் என்று சொல்லும் திட்டக்குழு, எதற்காக ஏற்கெனவே உள்ள இரண்டு
கழிவறைகளை மேம்படுத்த 35 இலட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும்? நாடு பூராவும் உள்ள
மக்களுக்கு ஒரு வரையறை; தங்களுக்கு மட்டும் முற்றிலும் வேறான இன்னொன்றா?’ என்று குரல்கள்
ஒலித்தன. அதற்கு கழிவறைகளின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் கருதியே அந்த அளவு
தொகை செலவு செய்யப்பட்டதாக திட்டக்குழு விளக்கமளித்தது.
தங்களின்
தேவைகளுக்கும் கழிவறை பாதுகாப்புக்கும் அதீத கவனம் எடுத்துக் கொள்ளும் திட்டக்குழு
நாட்டில் நிலவும் வறுமை பற்றிய அடிப்படயான உண்மைகளைக் கூட அறியாமல் இருப்பது மிகவும்
வேதனைக்குரியதாகும். இது நாட்டின் கொள்கை வகுக்கும் பொறுப்பிலுள்ள பொருளாதார நிபுணர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நமது நாட்டைப் பற்றிய சரியான புரிதலும்
அனுபவங்களும் இல்லை என்பதையே காட்டுகிறது.
இந்த
நிலைமைக்குக் காரணம் என்ன? அறியாமையா அல்லது
அக்கறையின்மையா? அறியாமை என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் அவர்கள் எல்லாம் மெத்தப்படித்த
மேதாவிகள். அலுவாலியா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஏ மற்றும்
எம்.பில். பட்டங்களைப் பெற்றவர். அப்படியானால் அவர்கள் ஏன் இவ்வாறு செயல்படுகிறார்கள்.?
அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்ல முடியும்.
ஒன்று
அவர்களுக்கு நமது நாட்டைப் பற்றிய சரியான அறிவு இல்லை. நமது பாடப்புத்தகங்கள் நாட்டைப்
பற்றி முழுமையான முறையில் சொல்லிக் கொடுப்பதில்லை. எனவே கிராமங்கள் பிற்போக்கானவை,
சாதாரண மனிதனுக்கு எதுவுமே தெரியாது, வெளி நாட்டவர்கள் வந்துதான் இந்தியாவை முன்னேற்றினார்கள்
போன்ற தவறான சித்திரங்களே மனதில் விதைக்கப்படுகின்றன. அதிலிருந்து அவர்கள் விடுபடுவதில்லை.
இரண்டாவது அவர்களின் பொருளாதார படிப்புகளும், தொடர்புகளும் மேற்கத்திய சித்தாந்தங்களையே
முன்னிலைப் படுத்துகின்றன. அதனால் அவர்கள்
அவற்றையே சரியென நம்புகிறார்கள். அவற்றின் மூலமே
நமது நாட்டுப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என உறுதி கொள்கிறார்கள்.
நமது
நாட்டில் முக்கிய பொறுப்பில் அமரும் பல பேர்கள் மேலை நாட்டுக் கல்வியும் பணி தொடர்புகளும்
பெற்றவர்கள். கடந்த பல வருடங்களாகவே பன்னாட்டு அமைப்புகளான உலக வங்கி மற்றும் சர்வதேச
நிதி ஆணையம் ஆகியவற்றின் தலையீடுகள் இந்தியா
உள்ளிட்ட பல நாடுகளிலும் இருந்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த நிறுவனங்களில்
பணி புரிந்து அனுபவம் பெற்றவர்களும் அவர்களின் ஆசி பெற்றவர்களுமே வளரும் நாடுகள் பலவற்றின்
பொருளாதாரத் துறைகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்துள்ளனர். அவர்களை மேற்கத்திய நாட்டு சித்தாந்தங்களும் தொடர்புகளும்
அகங்காரம் மிக்கவர்களாகவே ஆக்கி விடுகின்றன.
அலூவாலியா
கூட தன்னுடைய படிப்பை முடித்த உடனே உலக வங்கியில் சேர்ந்து பத்து வருடத்துக்கு மேல்
அங்கேயே பணி புரிந்தவர். பின்னர் மத்திய அரசின் பொருளாதாரத் துறைகளில் இருபது வருடத்துக்கு
மேல் மிக முக்கியமான பொறுப்புகளை வகித்து விட்டு மீண்டும் 2001 ஆம் வருடம் சர்வதேச
நிதி ஆணையம் சென்றார். அங்கு புதிதாக ஏற்படுத்தப்பட்ட அமைப்பில் இயக்குநர் பொறுப்பில்
இருந்து வந்தார். பின்னர் அவரது நண்பர் மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றதும் அந்த
பதவியை விட்டு இந்தியா திரும்பி திட்டக்குழு துணைத்தலைவர் பொறுப்பில் 2004 ஆம் வருடம்
அமர்ந்தார்.
கடந்த
பல வருடங்களாகவே பன்னாட்டு அமைப்புகளின் தவறான செயல்பாடுகளைப் பற்றிய விபரங்கள் எல்லாம்
விரிவாக வந்துள்ளன. அவர்களின் குறுகிய நோக்குடைய சுயநலக் கொள்கைகள் வளரும் நாடுகளின்
வளர்ச்சிக்குப் பெருமளவு ஊறு விளைவிட்டதை அனுபவங்கள்
எடுத்துக் காட்டுகின்றன. எனவே அந்த நிறுவனங்கள் இன்று உலகளவில் மரியாதையை இழந்து விட்டன. ஆனால் நமது நாட்டுக்குத் திட்டம் தீட்டுபவர்கள்
இன்னமும் அங்கிருந்து அறிவுரை பெறுபவர்களாக உள்ளனர்.
கடந்த
பத்து வருட காலத்தில் உலகப் பொருளாதாரத்தில்
எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் வல்லமை
குறைந்து, ஆசிய நாடுகளான இந்தியா சீனா ஆகியவற்றின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
2008 ஆம் வருடத்திய உலக பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மேற்கத்திய பொருளாதாரங்கள்
நிலை குலைந்து விட்டன. அந்தப் பிரச்னைகளிலிருந்து அவர்களால் இன்னமும் மீண்டு வர முடியவில்லை.
அதன் விளைவாக அவர்களின் பொருளாதாரக் கோட்பாடுகள் தோல்வியடைந்து விட்டதாக அவர்களே ஒப்புக்
கொள்கின்றனர்.
நமது
நாடு தொன்மையானது. நமக்கென மிகச் சிறப்பான பொருளாதார பாரம்பரியம் உள்ளது. கடந்த இரண்டாயிரம்
வருட காலத்தில் பெரும்பான்மையான காலம் உலகிலேயே முதல் நிலை பொருளாதாரமாக விளங்கி வந்துள்ளது.
கடந்த அறுபது வருடங்களில் கூட பல வித கொள்கை
குழப்பங்களுக்கிடையிலும் பொருளாதாரம் முன்னேறி வருவதற்குக் காரணம் நமது தேசத்துக்கே
உரிய வலிமைகள். அதிக சேமிப்பு, கடுமையான உழைப்பு, தொழில் முனையும் தன்மை, இங்கு நிலவும்
சமூக மூலதனம், இங்குள்ள இயற்கை மற்றும் மானுட வளங்கள் ஆகியன நமக்குள்ள சொத்துக்கள்.
ஆனால்
இவைகளைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரிய மறுக்கின்ற ஒரு சிலரைத்தான் எல்லாம் தெரிந்தவர்கள்
என நமது அரசுகள் அங்கீகரித்து முக்கியமான பொறுப்புகளில் வைத்திருக்கின்றன. அவர்கள்
அந்தப் பொறுப்புகளை எடுத்துக் கொண்டு ஒட்டு மொத்த மக்களின் நலனுக்கு விரோதமாக செயல்படுகின்றனர்.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது நமது நாட்டின் வணிகத் துறைக்கு மட்டுமின்றி
விவசாயத்துக்கும் ஆபத்தான ஒன்றாகும். அதனால் நாட்டிலுள்ள பல அமைப்புகள் மட்டுமின்றி
பெரும்பாலான கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து
அந்தக் கொள்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால் அலுவாலியா போன்றவர்கள் இப்போது கூட போகின்ற இடங்களில் எல்லாம்
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அவசியம் எனப் பேசி வருகிறார். எனவே அந்தத் துறையில்
அந்நிய கம்பெனிகள் இந்தியாவில் நுழைவதற்கு முக்கியமாக முயற்சி செய்வதே இவரும், நிதி
அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகராக அமெரிக்க பல்கலைக்கழகத்திலிருந்து விடுப்பில்
வந்து பணி புரியும் பேராசிரியர் கௌசிக் பாசு என்பவரும் தான் என முன்னாள் மத்திய அமைச்சரவை
செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் அண்மையில் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலை
வாய்ப்புகளை உருவாக்குவதற்காக திட்டக்குழு
1999 ஆம் வருடம் ஒரு கமிட்டியை அமைத்தது. அதற்கு அலுவாலியா தலைவராக இருந்தார். அந்தக்
கமிட்டி 2001 ஆம் வருடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் வேலை வாய்ப்பை உள்
நாட்டில் அதிகமாக உருவாக்கி வரும் விவசாயம் மற்றும் சிறு தொழில் துறைகள் வெளி நாட்டு
மூலதனத்துக்கு திறந்து விடப்பட வேண்டுமென ஆலோசனை கூறப்பட்டிருந்தது. வேலை வாய்ப்பைக்
கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய துறைகளுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் ஆலோசனைகளைக்
கொடுத்ததால் அவ்வறிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பல அமைப்புகள் போராட்டங்களை
நடத்தி அதை நிராகரிக்க வைத்தன.
எனவே
இவர்களெல்லாம் நாட்டை சந்தைப் பொருளாதார முறைக்கு சாமரம் வீசி வெளி நாட்டுப் பெரு நிறுவனங்களை உள்ளே
கொண்டு வருவதற்கு அடித்தளம் போடுகின்றனர். அதற்காக நாட்டில் ஏதுவான சூழ்நிலையை உருவாக்க அரசுப் பொறுப்புகளைப்
பயன்படுத்துகிறனர். வழக்கமாக இந்தியா ஆட்சிப்பணி அதிகாரிகள் தான் துறைச் செயலாளர்களாக
பதவி வகிப்பார்கள். ஆனால் அலுவாலியா பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முக்கியமான துறைகளான
வணிகத்துறை, நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை என மூன்றிலும் செயலாளராக இருந்துள்ளார். மேலும் பிரதமரின்
பொருளாதார ஆலோசனைக்குழு திட்டக்குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார். திட்டக்குழு
துணைத்தலைவர் பதவியில் ஜீலை 2004 ஆம் வருடம் முதல் எட்டு வருட காலமாக இவரே இருந்து
வருகிறார். சுதந்திர இந்தியாவில் தற்காலிக பிரதமர் பொறுப்பை இரண்டு முறை வகித்த குல்சாரி
லால் நந்தாவுக்கு அடுத்த படியாக நீண்ட காலம்
இருப்பது இவர்தான்.
குல்சாரிலால்
நந்தா சுதந்திர இந்தியாவில் மத்திய அரசில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். பிற்காலத்தில்
தனக்கென எந்தவித வருமானமும் இல்லாத போதும்
தியாகிகளுக்கான உதவித்தொகையைக் கூட வாங்கத் தயங்கியவர். டெல்லியில் தான் குடியிருந்த
வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாததால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு அலகாபாத் சென்று
தன்னுடைய மகளுடன் வசித்தவர். எளிமையின் சின்னமாகத் திகழ்ந்தவர். ஆனால் தற்போதைய துணைத்
தலைவர் சென்ற வருடம் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெளி நாடு சென்றதற்கான செலவு
நாளொன்றுக்கு அரசுக்கு இரண்டு இலட்சம் ருபாய்க்கு மேல் என்று தெரிய வந்துள்ளது. மேலும்
2004 முதல் ஜனவரி 2011 வரையான காலத்தில் அவர் 42 முறை வெளிநாட்டு பயணம் (மொத்தம்
274 நாட்கள்) மேற்கொண்டு 2.34 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். மேற்கண்ட பயணங்கள் அனைத்தும்
தன்னுடைய அலுவலகப்பணிக்கு அவசியமானது என அவர் அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.
கடந்த
சில வருடமாக விவசாயத்துறை பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகிறது. விவசாயிகள் தற்கொலைகள்
தொடர்ந்து கொண்டுள்ளன. தவறான கொள்கைகளினால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவது குறைந்துள்ளது.
இதைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சந்திக்காத பொருளாதார
நிபுணர்கள் மக்களின் வரிப் பணத்தில் மேலை நாடுகளுக்குப் பறந்து கொண்டுள்ளனர். மக்களுக்கு உதவுகின்ற வகையில் பொருத்தமான திட்டங்களைத்
தீட்டுவது பற்றி எந்த விதமான சிந்தனையும் செய்யாமல் மேற்கத்திய சித்தாந்தங்களை செயல்
படுத்த முயற்சிப்பதிலேயே தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். எனவே சுதந்திரம்
பெற்று அறுபத்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் தங்களின் மூளைகளை தூரத்து நாடுகளில்
அடகு வத்திருக்கும் நிபுணர்கள் நமக்குப் பொருத்தமானவர்களா என நாம் சிந்திக்க வேண்டும்.
நாட்டைப்
பற்றிப் புரிதல் இல்லாத, நாட்டுக்குச் சற்றும் பொருத்தமில்லாத கருத்துகளைக் கொண்டுள்ளவர்களை
நமது அரசுகள் ஏன் திட்டமிடும் பொறுப்புகளில் தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளன?. இதற்கெல்லாம்
காரணம் நமது ஆளும் வர்க்கம் இன்னமும் தோற்றுப்
போன மேற்கத்திய சிந்தனைகளையே நம்பி வருவதுதான். அதனால் நாடு தொடர்ந்து சிரமங்களையே
சந்தித்துக் கொண்டு வருகிறது.
என்று
தணியும் இந்த அடிமையின் மோகம்?
( ஓம்
சக்தி மாத இதழ், கோவை, ஆகஸ்டு 2012)
No comments:
Post a Comment