வெளி நாட்டு முதலீடுகள் அத்தியாவசியமா?




 ” அமெரிக்க தொழில் துறையைச் சேர்ந்த பலர் இந்தியாவில் முதலீடு செய்வது கடினமாக உள்ளதாகக் கூறுகின்றனர். சில்லறை வணிகம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா வெளி நாட்டு மூலதனத்தைக் கட்டுப்படுத்தியோ அல்லது தடுத்தோ வருகிறது ”  என அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டு மூலதனம் இரு நாடுகளிலுமே வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதற்கு அவசியம் என்றும், அதன் மூலமே இந்தியா தொடர்ந்து வளர முடியும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

இதே ஒபாமா தான் அதிபர் தேர்தலில் தனக்கு எதிராகப் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி முன்னர் மாநில ஆளுநராக இருந்த போதும், தனது சொந்த நிறுவனத்தை நடத்தி வந்த போதும் அமெரிக்க வேலை வாய்ப்புகளை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி விட்டார் என தேர்தல் மேடைகளில் அவரைக் குறை கூறி வருகிறார். மேலும் ஒபாமா தலைமையிலான அரசுதான் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மேற்கத்திய நாடுகளிலுள்ள வாய்ப்புகளைத் தடுத்து முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறது.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன் அங்கு தொடங்கிய உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா இன்னமும் மீண்டு வர முடியாத நிலைமையில் உள்ளது. எனவே  தங்களது நாட்டுக் கம்பெனிகளின் வியாபாரத்தைப் பெருக்கவும் தமது  மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அவர்கள் புதிய சந்தைகளைத் தேடி வருகின்றனர். அந்த முயற்சிகள் தடைபடும் போது உருவாகும் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக ஒபாமாவின் கருத்துகள் அமைந்துள்ளன.

1990 களின் ஆரம்பத்தில்  உலக மயமாக்கல் கொள்கைகளை இந்தியா ஏற்றுக் கொண்டது முதல் வெளி நாட்டு மூலதனங்களை அனுமதிக்க இங்கு பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. அதற்காக சம்பந்தப்பட்ட  சட்ட திட்டங்கள் தளர்த்தப்பட்டு நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பல அரசுகளும் வெளி நாட்டு முதலீடுகளை வரவேற்கும் வகையில் சலுகைகளைக் கொடுத்து வருகின்றன.  எனவே 1992-93 ஆம் வருடத்தில் 1,713 கோடி ரூபாயாக இருந்த மொத்த வெளிநாட்டு மூலதனம் 2010-11 ஆம் வருடத்தில் 2,81,897 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.

வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்து இருபது வருடங்கள் ஆகிய பின்னர் இன்னமும் அரசு தரப்பிலும் அதற்கான எதிர்பார்ப்புகள் குறையவில்லை. கடந்த இரண்டு வருடமாக இந்தியப் பொருளாதாரம் பல முனைகளில் சிரமங்களை சந்தித்துக் கொண்டு வருகிறது. எனவே நிலைமையை சரி செய்யவும் வளர்ச்சியை அதிகரிக்கவும் வெளி நாட்டு முதலீடுகளை குறிப்பிட்ட துறைகளில் அனுமதிக்க வேண்டுமென்ற கருத்து அத்தியாவசியமானதாக தற்போது முன் வைக்கப்படுகிறது.

அந்த வகையில் பல திசைகளிலிருந்து வந்த எதிர்ப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகள் பற்றிய விசயத்தை நமது ஆட்சியாளர்களும் கையில் எடுக்கத் துவங்கியுள்ளனர். அந்தத் துறையில் உடனடியாக அந்நிய முதலீடுகளை அனுமதிக்க வேண்டுமென மத்திய அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள சில அமைச்சர்களும் அலுவாலியா உள்ளிட்ட அதன் பிரதம ஆலோசகர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளி நாட்டு முதலீடுகளைப் பற்றிய தற்போதைய கருத்துகள் வெளியிலிருந்து வந்தவையாகவே உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் நலன்களே அவற்றில் மையமாகத் தெரிகின்றன. வெளி நாட்டு முதலீடுகள் மூலமே வளர்ச்சி அதிகமாகுமென்று அவர்கள் சொல்வதை நமது நிபுணர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். கருத்துருவாக்கும் நிலையில் உள்ள அறிவு ஜீவிகள் பலரும் அதே கருத்தை ஆமோதிக்கின்றனர். எனவே அந்தக் கருத்து விசயம் தெரிந்த மக்களின் ஒட்டு மொத்த கருத்தாகத் தோற்றமளிக்கிறது.

பொதுவாக வெளி நாட்டு முதலீடு என்று வரும் போது ஏறத்தாழ எல்லா அரசுகளுமே அதிகமான  விவாதமின்றி அனுமதிக்கவே முயற்சிக்கின்றன. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பாதிக்கப்படும் மக்களும் எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பும் போது அது அரசியல் எதிர்ப்பாகவும் பொருளாதாரம் பற்றிய மக்களின் அறியாமையாகவுமே கருதப்படுகிறது. நாட்டின் சுய சார்பு தன்மை பற்றியதாகவோ எதிர்காலம் சார்ந்த விசயமாகவோ எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.  

வெளி நாட்டு மூலதனத்துக்காக முன் வைக்கப்படுகிற முக்கியமான வாதம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமென்றால் முதலீடுகளை  அதிகப்படுத்த வேண்டும் என்பதாகும். எனவே அதற்கு நிதி அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால் தேவைப்படும் நிதியை இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டுக்குள்ளேயே முழுவதுமாக திரட்ட முடியாது. ஆகையால் அதை  வெளிநாடுகளில் இருந்து ஈர்ப்பதன் மூலமாகவே செய்ய முடியும்.

ஆனால் இந்தக் கருத்து நாட்டின் நடைமுறைப் பொருளாதாரத்துக்குப் பொருந்துவதாக இல்லை. இந்தியா சுதந்தரமடைந்த போது மிகவும் ஏழை நாடாக இருந்தது. ஏறத்தாழ 45 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தனர். முன்னேறுவதற்கு அதிக வாய்ப்புகளில்லை. ஆயினும் தங்களின் கடுமையான உழைப்பின் மூலம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். சிரமங்களுக்கிடையிலும் சேமிப்புகளை மேற்கொண்டனர். முடிந்த அளவு முதலீடுகளைச் செய்தனர். அதனால் 1950-51 ஆம் வருடம் மக்களின் ஒட்டு மொத்த சேமிப்பு 8.6 விழுக்காடாகவும்  உள்நாட்டு மூலதனம் 8.4 விழுக்காடாகவும் இருந்தன. தொடர்ந்து அவை படிப்படியாக அதிகரித்து வந்தன. எனவே உலக மயமாக்கல் கொள்கைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே 1990-91 ஆம் வருடத்தில் மூலதனம் 26 விழுக்காடாக அதிகரித்தது. இருபது ஆண்டுகள் கழித்து 2010-11 ஆம் ஆண்டில் சேமிப்புகள் 32.3 விழுக்காடாகவும் முதலீடுகள் 35.1 விழுக்காடாகவும் ஆயின.  

உலக அளவில் அதிகமாக சேமிப்புகளை மேற்கொள்ளும் மக்களை நாம் பெற்றுள்ளோம். நமக்குப் பரவலாகத் தெரியும் முறைகளில் மட்டுமன்றி அந்தந்தப் பகுதிகளுக்கே உரித்தான பல வகைகளில் மக்கள் சேமிக்கின்றனர். அவற்றில் பலவற்றுக்கு அரசாங்கத்திடம் கணக்கு கூட கிடையாது. நாட்டின் மொத்த சேமிப்புகளில் மூன்றில் இரண்டு பங்கும் அதற்கு அதிகமாகவும் குடும்பங்கள் மூலமாகவே ஏற்படுகிறது. கம்பெனிகள்  மற்றும் அரசு சார்ந்த துறைகள் மூலமாக மீதமுள்ள சேமிப்புகள் நடக்கின்றன.

குடும்பங்களால் நடத்தப்படும் கம்பெனிகள் சாராத துறை இந்தியப் பொருளாதாரத்திற்கு 57 விழுக்காடு அளவு வருமானத்தையும்  92 விழுக்காடு வேலை வாய்ப்பினையும்  அளிக்கிறது. அந்தத் துறையானது பொருளாதாரத்துக்கு அடிப்படையாக அமைந்து இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் ஆரம்பிக்கப்படும் தொழில்களுக்குத் தேவையான முதலீடுகள் தொழில் முனைவோர்களின் சொந்த பணம், குடும்ப சேமிப்பு, உறவுகள் மற்றும் தொடர்புகள் மூலமாகவே வருகின்றன. அந்த நிறுவனங்களில் வங்கிகள்  மற்றும் நிதி நிறுவனங்களின் உதவி கூட ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளதாக அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றுக்கும் வெளி நாட்டு முதலீடுகளுக்கும் சம்பந்தமே இல்லை.

இந்தியாவில் நாட்டில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தொழில் மையங்கள் உள்ளன. அவற்றில் பல கோடிக் கணக்கான ரூபாய் அளவுகளில் வியாபாரமும் ஏற்றுமதியும் நடைபெற்று வருகின்றன. சூரத்தின் வைர வியாபாரம் மட்டும் எழுபதாயிரம் கோடிக்கு மேல் நடக்கிறது. திருப்பூரில் பத்தாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் ஏற்றுமதி நடக்கிறது. அதை ஆரம்பித்து நடத்துவபர்கள் எல்லாம் சாதாரண குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். உலகின் பல நாடுகளில் பொருள்களை விற்கின்றனர். அங்கெல்லாம் எந்த வித வெளி நாட்டு முதலீடும் கிடையாது.  

அவர்கள் எல்லாம் எவ்வாறு முதலீடு செய்கிறார்கள்? எப்படி தொழில்களை பெருக்குகிறார்கள்? இந்திய சமூகம் அசாத்தியமான முதலீடு செய்யும் தன்மையைப் பெற்றுள்ளதை பல கள ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.  தமிழ் நாட்டின் சில்லறை வணிகத் துறையை எடுத்துக் கொண்டால் அதன் வளர்ச்சியில் மகமை என்கின்ற முறையின் பங்கு முக்கியமானது. இந்த மகமை என்பது அந்தத் தொழிலில் பெரும்பான்மையாக உள்ள மக்கள் தங்களின் சேமிப்புகளையும் மூலதனங்களையும் அதிகப்படுத்துவதற்காக தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட ஒரு அற்புதமான செயல் திட்டமாகும். அதன் மூலம் அந்தத் தொழில் பெருகியது மட்டுமன்றி, வேறு பல தொழில்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உருவாக்கம் ஆகியன நிகழ்ந்துள்ளன.  அதனால் ஒட்டு மொத்த மாநிலத்தின் வளர்ச்சி பெருகியுள்ளது.    

இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு அவை ஆரம்பித்து நடத்தும்  தொழில்களுக்குத் தேவையான முதலீடுகளை விட அதிகமாக உள்ளது. எனவே மீதமுள்ளது அரசு மற்றும் கம்பெனி சார்ந்த துறைகளுக்கு முதலீடுகளாகச் செல்கிறது. கடந்த சில வருடங்களாக கம்பெனி சார்ந்த துறைகளும் கணிசமான அளவில் சேமிப்புகளை மேற்கொள்கின்றன. எனவே அதிக வளர்ச்சிக்குத் தேவையான சேமிப்புகளை மேற்கொண்டு  போதுமான நிதிகளைத் திரட்டக்கூடிய தன்மையை நாடு பெற்றுள்ளதாக மத்திய அரசின் பதினொன்றாவது திட்டத்துக்கான சேமிப்புக் குழு தனது அறிக்கையில் சொல்லியுள்ளது.

வெளி நாட்டு முதலீடுகள் என்பது 2004-05 ஆம் வருடம் வரைக்கும் மொத்த பொருளாதார உற்பத்தியில் சராசரியாக ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருந்துள்ளது. பின் வந்த காலங்களில் அவை அதிகரித்த போதும் அவற்றின் பங்கு மிகவும் குறைவாகும். மத்திய ரிசர்வ் வங்கி உள் நாட்டு சேமிப்புகள் மூலம்தான் 95 விழுக்காட்டுக்கு மேற்பட்ட முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. ஆகையால் நமது பொருளாதாரம் வெளி நாட்டு மூலதனமின்றி அதிகமாக வளர முடியாது என்பது தவறானதாகும்.

மேலும் வெளி நாட்டு மூலதனங்கள் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்து உறுதியான முடிவுகள் இல்லை. நிதித்துறை சம்பந்தமான முதலீடுகளைப் பொருத்த வரையில் அவை பல நாடுகளின் பொருளாதாரத்தையே நிலை குலைய வைத்தது தெரிந்த ஒன்றாகும். மற்ற வகையான நேரடி முதலீடுகளை எடுத்துக் கொண்டால் கூட அவை எல்லா சமயத்திலும் நன்மை பயப்பதில்லை என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அவற்றால் ஏற்படும்  எதிர்மறை விளைவுகள் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் பெரிய ஆபத்தாக அமைந்து விடுகின்றன. மேலும் அவை நாட்டின் சமூக பொருளாதார அமைப்புகளுக்கான அடிப்படைகளையே தகர்த்தெறியும் பலம் பெற்றதாகவும் உள்ளன.

1950-51 முதல் 2010-11 வரையிலான கடந்த அறுபது வருட கால முதலீட்டு விபரங்கள் இன்னொரு உண்மையையும் நமக்கு உணர்த்துகின்றன. அது என்னவெனில் 1990-91 தொடங்கி 2010-11 முடிந்த கடைசி இருபது ஆண்டு காலத்தில் ஏற்பட்ட மொத்த முதலீடுகளின்  வளர்ச்சி விகிதம்,  முந்தைய காலங்களுடன் ஒப்பிடும் போது பாதியாகக் குறைந்துள்ளது என்பதாகும். எனவே வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் போது அவை உள் நாட்டு முதலீடுகளைத் தடுத்து விடுகின்றனவா என்கின்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அந்நிய முதலீடுகள் வரும் போது உள்ளூர் தொழில் முனைவோர்கள் களத்தில் நிற்க முடிவதில்லை.

மேலும் வெளி நாட்டு கம்பெனிகளை அனுமதிப்பதற்காக நாம் கொடுக்கும் விலையும் மிக அதிகமாக உள்ளது. அவைகளுக்குக் கொடுக்கின்ற சலுகைகள், தடையற்ற மின்சாரம், வரி குறைப்பு போன்றவையெல்லாம் உள்நாட்டில் ஒரு சமனற்ற நிலையை உருவாக்கி விடுகின்றன. அதனால் உள்ளூர் தொழில்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. அது போன்ற சலுகைகளை உள் நாட்டு நிறுவனங்களுக்கே அளித்து அவற்றை ஏன் ஊக்கப்படுத்தக்கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.

எனவே வெளி நாட்டு முதலீடுகள் என்பது இன்னொரு நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்க வருவதல்ல. அப்படியானால் அமெரிக்காவுக்குப் பிரச்னைகளே இருக்கக் கூடாது. ஏனெனில் அந்த நாடு தான் உலகில் அதிக அளவு வெளி நாட்டு மூலதனத்தைப் பெருகிறது. இந்தியா உலகிலேயே சுய சார்புத் தன்மை அதிகமாகக் கொண்ட மக்களைப் பெற்ற நாடு. அதனால் தான் மேற்கத்திய சித்தாந்தங்களை மீறி கடந்த அறுபது வருட காலத்தில் தனித் தன்மையுடன் வெகுவாக முன்னேறி வருகின்றது. ஆகையால் நமது மக்களின் சுய சார்புத் தன்மையைப் பாதிக்கக் கூடிய எந்த விதமான கருத்துகளையும் நாம் ஏற்க வேண்டியதில்லை.

( தினமணி, சென்னைப் பதிப்பு, ஜூலை 30, 2012)

No comments: