திண்டாடும் அமெரிக்கா



அமெரிக்கா என்றாலே நமது மனக்கண் முன் பிரமாண்டமான, வண்ணமயமான ஒரு சித்திரம்தான் உருவாகும். உலகின் செழிப்பான, வளர்ச்சியடைந்த நாடு. அசைக்கமுடியாத பொருளாதார பலம் கொண்ட நாடு. உலகிலுள்ள மிகப் பெரிய நிறுவனங்களின் தாயகம். இன்னும் பல.
ஆனால் அனைத்தையும் பொய்யாக்குகின்றன அங்கிருந்து கிடைக்கும் செய்திகள். அமெரிக்காவின் பொருளாதாரச் சிந்தனைகளும் கருத்துகளும் வேகமாகத் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருப்பதைத்தான் இச்செய்திகள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. அதன் முக்கியமான வெளிப்பாடுதான் 2007-08 வருடங்களில் அங்கு தோன்றிய நிதி நெருக்கடியாகும். அதுவே பின்னர் பொருளாதார நெருக்கடியாக விரிந்து பிற நாடுகளையும் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாக்கியது. அதன் விளைவாக மிகப்பெரிய கம்பெனிகள்கூட சிக்கல்களில் மூழ்கின. உலக அளவில் நிதித் துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த லெஹ்மன் பிரதர்ஸ் திவாலானது. தொடர்ந்து வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஒரு பலத்த அடி விழுந்தது. 1930களுக்கு பிறகு அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட பெரிய அடி இது என்று சொல்லப்படுகிறது. வசதியாக இருந்து வந்த பல லட்சக்கணக்கானவர்கள் மிகக் குறுகிய காலத்தில் ஏழைகளாக மாறிப்போனார்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளையும் வேலைகளையும் இழந்தனர்.
தங்கள் செயல்பாடுகளில் அரசாங்கம் எந்த வகையிலும் தலையிடக்கூடாது என்று அதுவரை சொல்லி வந்த பல பெரிய நிறுவனங்கள் உதவி வேண்டி அரசாங்கத்திடம் மண்டியிட்டன. அரசாங்கத்தின் 700 பில்லியன் டாலர் நிதி உதவி மூலமே பொருளாதாரம் செயல்பட ஆரம்பித்தது. இன்று வரை அமெரிக்க அரசு தனியார் நிறுவனங்களுக்குப் பல உதவிகளைச் செய்து கொண்டே இருக்கிறது.

ஆனால் பெரும்பான்மை மக்களின் வாழ்நிலையில் முன்னேற்றமில்லை. 2009 முதல் 2011 வரை தலைக்கு மேல் கூரையில்லாமல் வீதிகள் மற்றும் கார்களில் தங்குவோரின் என்ணிக்கை இரண்டு விழுக்காடு அதிகரித்துள்ளது. 2010ம் வருடம் 15.1% இருந்த வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை, 2011ல் 15.7% அதிகரித்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் சர்வே கூறுகிறது. எனவே கடந்த ஐம்பது வருடங்களில் இல்லாத அளவு அண்மைக்காலமாக வறுமை அதிகரித்துள்ளது. அதனால் கடந்த வருடம் 4.7 கோடி பேர், அதாவது மக்கள் தொகையில் ஆறில் ஒருவர், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வந்துள்ளனர். அதிலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், குழந்தைகள் மற்றும் தனித்து விடப்பட்ட பெண்கள் என்பது மிகவும் வேதனையான விஷயமாகும்.
2010ம் வருட கணக்குப்படி அமெரிக்காவில் வறுமையில் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை 22%. உலகிலுள்ள 35 முன்னேறிய நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கின்படி பார்த்தால், இதில் இரண்டாவது இடம் அமெரிக்காவுக்கே என்கிறது யுனிசெஃப். சுகாதார காப்பீடு அங்கு அவர்களின் வாழ்க்கைக்கு அவசியமாகக் கருதப்படுகிறது. ஆனால் மக்கள் தொகையில் ஆறு பேரில் ஒருவருக்கு அந்த காப்பீடு கிடைக்கவில்லை. அதி நவீன மருத்துவ வசதிகளைக் கொண்ட அந்த நாட்டில் மருத்துவச் செலவுகள் அதிகரித்தும், காப்பீடு எடுப்போர் எண்ணிக்கை குறைந்தும் வருகின்றன.
வேலை வாய்ப்புகளில் பெரிய முன்னேற்றமில்லை. அங்குள்ள இந்தியானா பலகலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு எதிர்காலத்தில் மக்களின் நிலைமை இன்னமும் மோசமாகவே இருக்கும் எனச் சொல்கிறது. பொருளாதார முன்னேற்றம் போதுமானதாக இல்லாததால் பலவிதமான அரசு உதவிகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அதனால் பல்கலைக்கழகங்கள் கட்டணத்தை அதிகப்படுத்தி வருகின்றன. மாணவர்கள் கல்வி பெறுவதில் பெருத்த சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. கல்விக் கடன்கள் அதிகரித்து வருகின்றன.
மேற்கண்ட சூழ்நிலை உலகப் பொருளாதார நெருக்கடியால் மட்டும் திடீரென்று உருவானதல்ல. அதற்கான விதை 1970களின் இறுதியில் போடப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாகவே அது பெரிய விருட்சமாக வளர்ந்து வந்துள்ளது. பெடரல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள குடும்பங்களின் நிதி நிலைமை பற்றிய 2010ம் வருடத்துக்கான அறிக்கை, 54 வயதுக்குக் கீழான மக்கள் சார்ந்த குடும்பங்களின் நிகர மதிப்பு 1983 ம் ஆண்டு இருந்ததை விட 2010ம் ஆண்டு குறைந்துள்ளதைக் காட்டுகின்றது. அதே சமயம் கிரெடிட் கார்டு கடன்கள் 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட எட்டு மடங்கு அதிகரித்துள்ளன.
மேலும், மக்களுக்கிடையே நிலவும் வருமானம் மற்றும் சொத்துகளின் வித்தியாசங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதிலும் மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு மட்டுமே உள்ள மேல் தட்டு மக்கள் தான் எல்லா வகையான பலன்களையும் அதிகமாகப் பெற்று வருகின்றனர். 1993 முதல் 2007 வரையிலான காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் பாதி பலன்கள் அந்த மக்களுக்கே சென்று விட்டதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. 1978 முதல் கணக்கிட்டால் பெரிய கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள் பெறும் வருமானம் 725% அதிகரித்துள்ளது. சாதாரணத் தொழிலாளிக்கு 6%க்கும் குறைவாகவே உள்ளது. நிதித் துறை நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் ஊதியம் 2011ம் வருடத்தில்கூட 20% அதிகரித்துள்ளது. அதே சமயம் சாதாரணத் தொழிலாளியின் வருமானம் பண வீக்கத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும் போது 2% குறைந்துள்ளது.
அந்த வகையில், சராசரி அமெரிக்கனின் பொருளாதார வீழ்ச்சி என்பது கடந்த பல ஆண்டுகளாகவே நடந்து வருவதுதான். கடந்த முப்பது வருட கால கோட்பாடுகள் மக்களுக்குத் தீங்கிழைத்து விட்டதாக நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பேராசிரியர் பால் க்ருக்மன் வெளிப்படையாகத் தெரிவித்தார். இன்னமும் மக்களின் வேதனைகள் அதிகரித்துக்கொண்டே வருவது, அமெரிக்க வழிமுறைகள் எவ்வளவு தவறானவை என்பதை உணர்த்துகின்றன. மேற்குறிப்பிட்ட பெடரல் வங்கி கணக்கெடுப்பு 2007 முதல் 2010 வரையான வருடங்களில் மட்டும் அமெரிக்கக் குடும்பங்களின் நிகர மதிப்பு 39% குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. அமெரிக்கா முன்னிறுத்திய உலகமயமாக்கல் கொள்கை அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளையே காவு கொண்டு வருகிறது. அந்நாட்டுக் கம்பெனிகள் குறைவான சம்பளத்தை வெளி நாட்டினருக்குக் கொடுத்து அதிக லாபம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
சர்வதேசப் பொருளாதார வளர்ச்சிக்கான திறவுகோல்கள் தம்மிடமே உள்ளதாக மார்தட்டிக் கொண்டு வந்த அமெரிக்காவால் தனது அடிப்படைப் பிரச்னைகளைக்கூடத் தீர்த்துக்கொள்ளமுடியவில்லை என்பதுதான் நிஜம். இதுவரை பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற 69 நிபுணர்களில் 49 பேர் அமெரிக்கர்கள். ஆனால் அவர்களால் தங்கள் நாட்டின் சிரமங்களுக்கு உருப்படியான ஒரு தீர்வைக்கூடச் சொல்லமுடியவில்லை.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் குறைபாடுகள் அவர்களுடைய கோட்பாடுகளிலேயே உள்ளன. சந்தைப் பொருளாதார முறை, அதைத் தாங்கிப் பிடிக்கும் தனி நபர் சிந்தனைகள், அவற்றையொட்டிய வாழ்க்கை முறைகள் ஆகியவை அமெரிக்கர்களைத் தவறான வழியில் இட்டுச் சென்றிருக்கின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களே. வால் ஸ்ட்ரீட் போராட்டத்தில், ‘நாங்கள் 99 விழுக்காடு’ என்று முழக்கமிடுபவர்களும் இவர்களே.
( ஆழம், ஆகஸ்டு 2012)

No comments: