இந்தியப் பொருளாதாரம் மேற்கத்திய நாடுகளிலிருந்து வேறுபட்டது.
நாட்டின் ஒட்டு மொத்த வருமானத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு கம்பெனிகள் மற்றும்
அரசாங்கம் சாராத துறைகளின் மூலமே கிடைக்கிறது. அவை தான் பல இலட்சக்கணக்கான தொழில் முனைவோர்களை
உருவாக்கியும், நாட்டில் 92 விழுக்காடு பேருக்கு வேலை கொடுத்தும் வருகின்றன.
அப்படிப்பட்ட தொழில்களில் சில்லறை வணிகம் மிகவும் முக்கியமானது.
அந்தத் தொழிலில் சுமார் நான்கு கோடி பேர் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கோடியே முப்பது இலட்சம் கடைகள் உள்ளன. அது 11 விழுக்காடு மக்களுக்கு வேலை கொடுத்து, விவசாயத்துக்கு
அடுத்தபடியாக நாட்டிலேயே இரண்டாவது அதிகம் பேருக்கு, வாழ்வைக் கொடுத்து வருகிறது.
தற்போது நமது பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு அதிகரித்து
வருகின்றது. சேவைத்துறையில் அதிக பங்கு வகிப்பது
வணிகத்துறையாகும். நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் வணிகத்துறையின் பங்கு
சுமார் 15 விழுக்காடாகும். 2005-06 முதல் 2009-10 வரையான ஐந்து வருடங்களில் அதன் வளர்ச்சி
9 விழுக்காட்டுக்கு மேலாக உள்ளதாக மத்திய அரசின் பொருளாதாரக் கணக்கெடுப்பு 2010-11
கூறுகிறது.
இந்த வளர்ச்சி அனைத்தும் உள் நாட்டு மூலதனங்கள் மூலமே ஏற்பட்டுக்
கொண்டுள்ளது. பொருளாதார மதிப்பின் அடிப்படையில் தற்போது உலகிலுள்ள ஐந்து பெரிய சில்லறை
வணிகச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
அதன் மொத்த மதிப்பு சுமார் 450 பில்லியன் டாலர் ( சுமார் 23,85,000 கோடி ரூபாய்)
என்று கணக்கிடப்படுகிறது. இவ்வளவு வாய்ப்புள்ள துறையில் ஏன் வெளி நாட்டு நிறுவனங்களை
அனுமதிக்க வேண்டும்?
இந்தியா சுய சார்பு மிக்க பொருளாதாரம். இங்கு தொழில் முனைவோர்
தமக்குத் தேவையான முதலீடுகளைத் திரட்டுவது இயற்கையாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை
எடுத்துக் கொண்டால், சில்லறை வணிகத்துறையில் பெரும்பான்மையாக உள்ள மக்கள் தங்களின்
நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மகமை என்று ஒரு முறையை தாங்களாகவே ஏற்படுத்தினார்கள்.
அதன் மூலம் தங்களின் தொழில்களுக்குத் தேவையான மூலதனங்களைத் திரட்டி தொழிலை வளர்த்தினார்கள்.
பிற தொழில்களுக்கும் சென்றார்கள்.
சில்லறை வணிகத்துறையில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பதன்
மூலம் மக்களுக்கு அதிகமாகப் பலன்கள் ஏற்பட்டு பொருளாதாரம் முன்னேற முடியும் எனச் சொல்கிறார்கள்.
அது உண்மைக்கு மாறான வாதமாகும். அதற்கான ஆதாரங்கள் எங்கும் இல்லை. அதற்கு முன் ஒரு
முக்கியமான விசயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் என்ற பெயரில்
இங்கு வரக்கூடிய பன்னாட்டு நிறுவனங்கள் அசுர பலம் வாய்ந்தவை. அமெரிக்காவைச் சேர்ந்த
வால் மார்ட் நிறுவனம் தற்போது செய்யக் கூடிய வியாபாரம் ஒட்டு மொத்த இந்திய நாட்டின்
வியாபாரத்துக்குச் சமமானது.
அவர்களின் வருகையால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல
விலை கிடைக்கும்; அதன் மூலம் விவசாயிகள் பலன் பெற முடியும் என்று சொல்கிறார்கள். அது உண்மையல்ல. உலகின் எந்த நாட்டிலும் பன்னாட்டு
நிறுவனங்களால் விவசாயிகள் பலனடையவில்லை. மாறாக சொல்ல முடியாத அளவு சிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு
விவசாயத்தை விட்டு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். ஏனெனில் பன்னாட்டு நிறுவனங்கள் விவசாயிகள்
மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து விலையை அடி மட்டமாகக் குறைத்து மட்டுமே வாங்குகிறார்கள்.
அதிலும் உற்பத்திச் செலவை விடவும் குறைவான விலைக்கு விற்குமாறு அவர்களை கட்டாயப்படுத்துகிறார்கள்.
அமெரிக்காவில் சில்லறை வணிகம் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு டாலருக்கும்
1950 களில் விவசாயிக்கு 40 சென்டுகள் கிடைத்தது. அது இப்போது 19 சென்டுகளாகக் குறைந்துள்ளது.
சில்லறை நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு நன்மை கிடைப்பதாக இருந்தால்,
அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ஏன் உலகிலேயே அதிகமாக பல இலட்சம் கோடி ரூபாய்கள் அவர்களுக்கு
மானியத்தைக் கொடுக்கின்றன? அமெரிக்க அரசின் 2008ம் வருட சட்டம் ஐந்து வருடத்துக்கு விவசாய மானியம் மற்றும் கிராமப்புற
விசயங்களுக்கு 299 பில்லியன் டாலர் ( சுமார் 15,84,700 கோடி ரூபாய்) செலவு செய்ய வகை
செய்கிறது. ஐரோப்பிய யூனியன் விவசாயம் மற்றும்
மீன்பிடித் தொழிலுக்காக மானியமாக மட்டும் பட்ஜெட்டில் 40 விழுக்காடு ஒதுக்குகின்றது.
அவர்களின் விவசாயம் அரசுகளின் அபரிமிதமான மானியத்தினால்
மட்டுமே தூக்கி நிறுத்தப்பட்டு வருகின்றன. அது இங்கு சாத்தியமா?
பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்
என்று சொல்லப்படுவது நகைப்புக்குரியது. தற்போது நமது நாட்டில் ஒட்டு மொத்தமாக சிறுவணிகத்
துறை செய்யக் கூடிய வியாபாரத்தை ஒரே நிறுவனமாகச் செய்து கொண்டிருக்கும் வால் மார்ட்
கம்பெனியில் மொத்தம் வேலை செய்பவர்கள் வெறும் 22 இலட்சம் பேர்கள் மட்டுமே. அமெரிக்காவில்
சில்லறை வணிக நிறுவனங்களால் 1980 கள் முதல்
இலட்சக்கணக்கான பேர் வேலையிழந்து வருவதை அவர்களின் ஆய்வுகளே வெளிப்படுத்துகின்றன.
ஊழியர்களை நடத்துவதில் உலக அளவில் மிக மோசமான நிறுவனமாக வால்
மார்ட் விளங்கி வருகிறது. மிகக் குறைவான சம்பளம், முறையில்லாத பணி நேரங்கள், பெண்கள்
மற்றும் கருப்பின மக்கள் மேல் பாகுபாடு, குடும்ப மற்றும் சகாதாரப் பாதுகாப்பு நிதி
வழங்காமை, குறைகளை வெளிப்படுத்த வாய்ப்புத் தராமை எனப் பல வகைகளிலும் ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
சம்பளம், போனஸ், ஓவர்டைம் சம்பளம் ஆகியவை முறையாகத் தராமல் ஏமாற்றியதற்காக அங்கு அந்தக்
கம்பெனி மேல் 31 மாநிலங்களில் நீதி மன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அதனால்
ஆயிரக்கணக்கான கம்பெனி ஊழியர்கள் அரசு உதவியையே நம்பியுள்ளனர். எனவே அரசாங்கம் அந்த
ஊழியர்களுக்கு உதவ மட்டும் பல இலட்சம் டாலர் கோடி வரிப்பணத்தை செலவு செய்து வருகிறது.
சீனா, வங்காள தேசம், ஹொண்டுராஸ் என அவர்கள் வெளி நாடுகளில்
தொழிற்சாலைகள் வைத்திருக்கக் கூடிய இடங்களில் நிலைமை மேலும் மோசமாக உள்ளது. தொழிலாளர்கள்
வாரத்தில் ஏழு நாட்களும் ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம், முக்கியமான சமயங்களில்
இருபது மணி நேரம், வேலை செய்கிறார்கள். ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான பேர் வசதியின்றி
வேலை செய்ய வைக்கப்பட்டும், விடுதிகளில் தங்க வைக்கப்பட்டும் சிரமப்படுத்தப் படுகின்றனர்.
சீனாவில் குவாங்டாங் பகுதியில் ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சக் கூலி
மணிக்கு 31 சென்டுகள். ஆனால் வால்மார்ட் கொடுப்பது வெறும் 13 சென்டுகள் ( 6 ரூபாய்
89 காசுகள் ) மட்டுமே.
மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் உள்நாட்டு சில்லறை
வணிகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு வரும். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலேயே
அவர்களின் பெரிய நிறுவனங்கள் உள்ளூர் கடைகளைகளையும் நிறுவனங்களையும் அழித்து வருவதற்கு
ஏராளமான சான்றுகள் உள்ளன. இங்கிலாந்தில் 90 விழுக்காடு சிறு கடைகள் ஐம்பது வருடத்தில்
மூடப்பட்டு விட்டன. எனவே ஆறு கோடிக்கு மேல் மக்கள் தொகையுள்ள அந்த நாட்டில் வெறும்
நாலாயிரம் கடைகளே செயல்பட்டு வருகின்றன.
அண்மைக் காலமாக நமது நாட்டில் செயல்பட்டு வரும் உள்நாட்டு
சில்லறை வணிக நிறுவனங்களால் இது வரை சிறு வணிகர்களுக்கு எந்த விதப் பாதிப்பும் இல்லை
எனச் சுட்டிக் காட்டப்படுகிறது. இந்திய நிறுவனங்களைப் போல் அல்லாமல், பன்னாட்டு நிறுவனங்கள் உலகில் எங்கு பொருட்களை மிகக்
குறைந்த விலைக்கு வாங்க முடியுமோ அங்கு சென்று வாங்கி வந்து அவற்றை இங்கு விற்பனை செய்யும்.
பன்னாட்டு நிறுவனங்கள் போட்டியாளர்களை அழிக்கும் நோக்கில் உற்பத்தி விலையை விடக் குறைத்துக்
கொடுத்துப்பதை இங்கிலாந்து அரசின் விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது. அதற்காக தண்டனைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
பன்னாட்டு நிறுவனங்கள் பெரிய அளவில் தொழில் செய்வதால் அவர்கள்
வாங்கும் விலையிலிருந்து குறைந்த அளவே விலையை ஏற்றி அதன் பலனை வாடிக்கையாளர்களுக்குக்
கொடுப்பார்கள் என்று நினைப்பது தவறானதாகும். இந்திய நிலைமையுடன் ஒப்பிடும் போது பன்னாட்டு
நிறுவனங்கள் பொருட்களின் உற்பத்தி விலைக்கு மேல் இரண்டு முதல் ஒன்பது மடங்கு அதிகமாக
ஏற்றி விற்கின்றன என ஆர்கே சுவாமி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சேகர் சுவாமி
கூறுகிறார். மேலும் இந்தியாவில் குறைந்த செலவில்
திறமையாகப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லும் வேலை ஏற்கெனவே நடந்து வருகிறது
எனவும் தெரிவிக்கிறார்.
பன்னாட்டு வணிக நிறுவனங்கள்
சட்டங்களையும் விதிமுறைகளையும் மதிக்காமல் செயல்பட்டு வருவது தொடர்ந்து உலகெங்கும்
நடைபெற்று வருகிறது. வால் மார்ட் கம்பெனி அமெரிக்காவில்
சுற்றுச்சூழல் விதி முறைகளை மீறியதற்கு மட்டும் பல மாநிலங்களில் தண்டிக்கப்பட்டும்
வழக்குகளைச் சந்தித்தும் வருகின்றன. அமேசான் மழைக்காடுகளில் உள்ள வனங்கள் இங்கிலாந்தின்
நிறுவனங்களால் சட்ட விரோதமாக அழிக்கப்பட்டு
வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
பன்னாட்டு நிறுவனங்கள் வருவதால் கட்டமைப்பு வசதிகள் பெருகும்
எனச் சொல்லப்படுவது உண்மையல்ல. நமக்குத் தற்போது அத்தியாவசியமானது சாலைகளும் மின்சாரமும்
மட்டுமே. அவற்றைக் கொடுக்க வேண்டியது அரசுகள் மட்டுமே. பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றைச்
செய்யாது. மேலும் இந்தியாவில் விளைச்சலுக்கு அப்புறம் 40 விழுக்காடு பழங்களும் காய்கறிகளும்
வீணாகின்றன என்று சொல்வது மிகையாகும். மத்திய
அரசின் பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அறிக்கை அதிக பட்சமாக ஆறிலிருந்து
பதினெட்டு விழுக்காடு வரை தான் இழப்பு ஏற்படுகிறது எனச் சொல்கிறது. ஆனால் அதே சமயம்
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் 34 விழுக்காடு அளவு வீணாவதாக சர்வதேச அறிக்கை தெரிவிக்கின்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக உணவுப் பாதுகாப்பு என்பது அதிக மக்கள்
தொகையுள்ள நமது நாட்டுக்கு அவசியமாகும். பன்னாட்டு நிறுவனங்கள் நமது உணவுச் சங்கிலியைத்
தம் வசப்படுத்தி விட்டால் அது ஆபத்தாக முடியும். உலகில் கால் வைக்கும் இடங்களில் எல்லாம்
அவை தமது வளையத்தை விரித்துக் கொண்டே செல்கின்றன. இங்கிலாந்து நாட்டின் மூன்றில் இரண்டு
பங்கு சந்தை மூன்று நிறுவனங்களின் கைகளில்
உள்ளது. கடந்த இருபது வருட காலத்தில் பிரேசில், தாய்லாந்து என அவை நுழைந்த பல நாடுகளிலும் பன்னாட்டு நிறுவனங்களின்
ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
உலகின் பெரும்பாலான பணக்கார நாடுகள் வெளிநாட்டு முதலீடுகள்
குறித்து கட்டுப்பாடுகளை வைத்துள்ளன. வால்மார்ட்
எவ்வளவோ முயற்சி செய்தும் நியூயார்க் நகரம் அதை அனுமதிக்கவில்லை. இங்கிலாந்து மக்களவையின்
அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு 2006, தனது
அறிக்கையில் 2015ம் வருடத்தில் மேலும் பல சிறு கடைகள் அழிந்து விடும் என்றும், மக்களும்
சமூகங்களும் பெருத்த பாதிப்புக்குள்ளாவர்கள் என்றும் எச்சரித்துள்ளது.
சில்லறை வணிகம் என்பது ஏதோ இன்னொரு தொழில் அல்ல. அது இந்த
நாட்டு மக்களின் சொந்த வாழ்க்கையோடும் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்தது. எனவே
அதில் வெளிநாட்டு முதலீடு என்பது அந்நியர் தலையீடாகவே முடியும். அதனால் சமூகப் பொருளாதார
கட்டமைப்புகள் கடும் பாதிப்புக்குள்ளாகும். மக்களின் வாழ்வாதாரங்களைச் சில வெளிநாட்டுக் கம்பெனிகளின் பேராசைக்குத் தாரை
வார்த்துக் கொடுப்பது நாட்டு நலனுக்கு முற்றிலும் விரோதமானது.
( ஆழம், நவ.2012)
No comments:
Post a Comment