பொருளாதாரக் கோட்பாடுகள் என்றவுடனே நம் மனதுக்கு வருவது மேற்கத்திய
நாடுகள் தான். அதற்கு சில காரணங்கள் உள்ளன. கடந்த இருநூறு வருடங்களாக ஐரோப்பிய நாடுகளும்
அமெரிக்காவும் பொருளாதாரத்தில் உலக அளவில் முன்னணி நாடுகளாக இருந்து வந்துள்ளன.
நவீன பொருளாதார வரலாறு என்பதே ஐரோப்பிய நாடுகளில்
இருந்துதான் ஆரம்பிக்கிறது எனப் பாடப்புத்தகங்கள் சொல்லிக் கொடுக்கின்றன. உலகின் பிரபலமான
பொருளாதார தத்துவங்களாகச் சொல்லப்படும் கம்யூனிசம்,
முதலாளித்துவம் என்னும் இரண்டுமே ஐரோப்பியாவில் தான் தோன்றியுள்ளன.
அது மட்டுமின்றி நமது நாடு சுதந்திரம் பெற்ற பின் வந்த இந்திய
அரசுகள் மேற்கத்திய நாடுகளையே தங்களின் முன் மாதிரியாகவும் அவர்களின் கோட்பாடுகளையே
தங்களின் வழி காட்டியாகவும் கருதி வந்துள்ளன. முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், பொருளாதார
நிபுணர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள்
எனப் பலரும் அவைகளைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். எனவே தான் ஆயிரக் கணக்கான
ஆண்டுகளுக்கான வரலாற்றைப் பெற்றுள்ள இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்குக் கூட
பொருளாதார வழிமுறைகள் மற்றும் சிந்தனைகள் ஏதாவது
இருந்திருக்க வேண்டுமென நமக்குத் தோன்றுவதில்லை.
மேற்கத்திய கோட்பாடுகள் எதுவுமே உலகின் எந்தவொரு பகுதியிலாவது
தொடர்ந்து ஒரு நூறு வருடமாவது நடைமுறையில் செயல்பட்டதாகத் தெரியவில்லை. அதே சமயம் இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து பல நூற்றாண்டுகள் உலகின் முன்னணிப்
பொருளாதாரங்களாக இருந்து வந்துள்ளன. இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் முக்கியமான கண்டுபிடிப்புகளும்,
மிகப் பெரிய அளவில் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. ஆனாலும், மேற்கத்திய நாடுகளுக்கு
மட்டுமே தனியான சிந்தனைகள் மற்றும் வழிமுறைகள் இருப்பதாக நாம் நம்பி வருகிறோம்.
அதற்குக் காரணங்கள் உள்ளன. ஐரோப்பியர்கள் பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கி
உலகின் பல நாடுகளையும் காலனிகளாகக் கொண்டு
வந்த போது, அந்த நாடுகளில் நிலவி வந்த இயற்கையான
கலாசாரங்கள், வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள் என அனைத்தையும் அழித்தனர். அதற்குப் பதிலாகத் தங்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் அங்கெல்லாம்
புதிய முறைகளை உருவாக்கினர். அப்படித்தான் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் அங்கு செயல்பட்டு
வந்த பொருளாதாரங்கள் அழிக்கப்பட்டன.
மேலும் ஐரோப்பியர்கள் பத்தொன்பது இருபதாம் நூற்றண்டுகளில்
ஐரோப்பாவை மையப்படுத்தி உலகப் பொருளாதார வரலாற்றைத்
திரித்து எழுதினர். அப்போது அதற்கு முன்பு உலகில் செயல்பட்டு வந்த பொருளாதார முறைகளெல்லாம்
மறைக்கப்பட்டன. உலகின் பெரும்பகுதியான பொருளாதார
வரலாற்றை மிகப் பெரும்பாலான பொருளாதார வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் ஒதுக்குவதாகவும்,
ஆகையால் அவர்கள் தான் மிகப் பெரிய குற்றவாளிகள் எனவும் பிரபல ஜெர்மானிய- அமெரிக்க பொருளாதார
வரலாற்றாசிரியரான ஆன்ட்ரி பிராங்க் குற்றம்
சாட்டுகிறார். ஐரோப்பா வரலாற்றாசிரியர்களைக் கண்டுபிடித்து பின்னர் அந்நாடுகளின் நலன்களை
வளர்த்துக் கொள்ள அவர்களை நன்கு உபயோகப்படுத்திக் கொண்டது என பிரெஞ்சு வரலாற்றாசிரியர்
ஃபெர்னாண்ட் பிராடெல் கூறியதை கவனத்தில் கொள்ள
வேண்டும்.
ஐரோப்பியர்கள் இந்தியாவில் கல்வி முறையில் செய்த மாற்றங்கள்
படிப்பவர்களை நமது நாட்டின் சிந்தனைகளிலிருந்து பிரித்தன. அதனால் தொடர்ந்து வந்த தலைமுறைகளுக்கு மேற்கத்திய நாடுகளின் எண்ண ஓட்டங்களும் கருத்துகளுமே
மனதில் நின்றன. இன்னமும் நமது கல்வி முறை பெரும்பாலும்
மேற்கத்திய முறைகளை ஒட்டியே அமைந்திருப்பதால் கல்விக் கூடங்களில் படிப்பவர்களுக்குச்
சரியான பொருளாதார வரலாறும், நடைமுறைகளும் தெரிவதில்லை.
இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளைப் புறந்தள்ளி உலக
அரங்கில் அமெரிக்கா மேலெழுந்தது. எனவே அவர்களின் பொருளாதாரக் கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகள்
எல்லாம் முன்னுரிமை பெற ஆரம்பித்தன. பன்னாட்டு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், புத்தகங்கள் எனப் பலவற்றின் வழியாகவும் அவர்களது கருத்துக்கள் முதன்மைப்படுத்தப் பட்டன.
கடந்த நாற்பது ஆண்டுகளாக உலக அளவிலான அவர்களின்
பொருளாதார மற்றும் அரசியல் பலம் அதற்கு மிகவும்
உறுதுணையாக அமைந்தது. உலகின் பல நாடுகளும்
இருபதாம் நூற்றாண்டில் சுதந்திரம் பெற்று விட்டாலும் கூட, அங்கெல்லாம் இன்னமும் ஐரோப்பிய
அமெரிக்க தாக்கங்களே அதிகமாக நீடித்து வருகின்றன.
பதினைந்தாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ
முறை நிலவி வந்தது. பின்னர் வர்த்தகத்தை மையமாக வைத்த மெர்க்கன்டலிச முறை பதினாறு முதல்
பதினெட்டாம் நூற்றாண்டுகள் வரை பிரதானமாக இருந்து வந்தது. உலக வர்த்தகம் என்பது ஒரு
குறிப்பிட்ட ஒரு வரையறை செய்யப்பட்ட அளவுதான் இருக்க முடியும் எனவும் அதை அதிகரிக்க
முடியாது எனவும் அது நம்பியது. அதன்படி நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இருப்புகளைப்
பெருக்கிக் கொள்வது அந்நாட்டின் வளத்தைக் குறிப்பதாகக்
கருதப் பட்டது. அதற்காக அந்த நாடுகள் போட்டி
போட்டுக் கொண்டு கடற்கொள்ளை உள்ளிட்ட போன்ற எல்லா வழிகளிலும் ஈடுபட்டன.
பின்னர் அதுவே புதிய
சந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான போட்டியாக மாறியது. ஆங்கிலேய, பிரெஞ்சு, டச்சு
உள்ளிட்ட நாடுகளுக்கிடையே போர்கள் ஏற்பட்டன. வர்த்தகர்கள் புதிய நாடுகளுக்குச் செல்லுமாறு ஊக்குவிக்கப்பட்டனர்.
அப்படித்தான் ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த கொலம்பஸ் அமெரிக்காவைச் சென்றடைந்தார். பின்னர்
போர்த்துக்கீசிய மாலுமி வாஸ்கோடகாமா இந்தியாவின் மேற்குக் கடற்கரையை அடைந்தார். தொடர்ந்து வந்த காலங்களில் அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்க
கண்டங்கள் உள்ளிட்ட உலகின் பகுதிகளைச் சேர்ந்த
நாடுகளை ஐரோப்பியர்கள் தங்கள் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர். அதுவே காலனி ஆதிக்கத்துக்கு வழி கோலியது.
பின் வந்த காலங்களில் மெர்க்கன்டலிச முறையின் மையக் கருத்தில்
மாற்றம் ஏற்பட்டது. அதன்படி உள் நாட்டு உற்பத்திகளை
அதிகப்படுத்துவதும் கச்சாப் பொருட்களின் ஏற்றுமதிகளைத் தடை விதிப்பதும் அடிப்படை நோக்கமாக ஆனது. மெர்க்கன்டலிசத் திட்டங்கள் வகுப்பதில் வியாபாரிகளும்
அரசு ஊழியர்களும் முக்கிய பங்கு வகித்தனர். அரசுகளுக்கு வரிகள் மூலமும் மற்ற வழிகளிலும் வருமானம் அதிகமானது.
அதே சமயம் தொழிலாளர்களும் விவசாயிகளும் உயிர் வாழ்வதற்கே சிரமப்பட வேண்டியிருந்தது.
கூடுதல் வருமானம், கல்வி, ஓய்வு நேரம் போன்றவை கொடுக்கப்பட்டால் அவர்கள் சோம்பேறிகளாக
மாறி பொருளாதாரம் பாதிக்கப்படும் என சொல்லப்பட்டது.
பரவலான ஏமாற்றங்களுக்கிடையே
பதினெட்டாம் நூற்றாண்டில் மெர்க்கன்டலிசம் பல விதமான கேள்விகளுக்கு உள்ளானது. எனவே அதற்கு மாற்றாக 1776 ஆம் வருடம் ஆடம் ஸ்மித்
முதலாளித்துவ முறையை முன் வைத்து தனது கருத்துகளை வெளியிட்டார். தொடர்ந்து வந்த காலத்தில் அரசாங்க ஆதரவுகளும் விலக, மெர்க்கன்ட்லிசம் முக்கியத்துவத்தை இழந்தது. தொழில்கள்
அனைத்தும் தனியார் மூலமாக இலாப நோக்கில் சந்தைகள் மூலமே நடத்தப்பட வேண்டுமென்பதும்,
தொழில்களில் அரசாங்கம் எந்த விதமாகவும் தலையிடக் கூடாது என்பதும் முதலாளித்துவத்தின் மையக் கருத்தாக அமைந்தது. அதிகமான
பேர் தொழில்களில் ஈடுபடுவதால் மக்களில் பலருக்கும் அந்த முறை பலனளிக்கும் எனக் கருதப்பட்டது. ரிக்கார்டோ, கீன்ஸ் உள்ளிட்ட பல நிபுணர்கள் அந்த
சித்தாந்தத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாளித்துவ சித்தாந்தத்தில்
புதிய கோட்பாடுகள் உருவாகின. அவை எல்லாப் பொருளாதாரச்
செயல்பாடுகளின் நோக்கமும் மனிதனின் சுய தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவே இருக்க வேண்டும்
என எடுத்து வைத்தன. தொடர்ந்து வந்த கோட்பாடுகளில் நிதிச் சந்தைகள் முக்கிய இடத்தைப்
பெற்றன. அதனால் சந்தைப் பொருளாதாரக் கருத்துகளே பல்கலைக் பல்கலைக்கழகங்களில் முன்னிலைப்
படுத்தப்பட்டன. நோபெல் பரிசு உள்ளிட்ட அங்கீகாரங்கள் எல்லாம் சந்தைப் பொருளாதார நிபுணர்களுக்கே
அதிகமாக வழங்கப்பட்டன.
இதற்கிடையில் ஆடம் ஸ்மித் முன் வைத்த முதலாளித்துவ சித்தாந்தம்
முன்னரே தோல்வியைச் சந்தித்திருந்தது. இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியைத் தொடர்ந்து
தொழிற்சாலைகள் அதிகரித்தன. முதலாளிகள் உருவாயினர். ஆனால் தொழிலாளிகள் சிரமப்படுத்தப்பட்டனர்.
சந்தையின் செயல்பாடுகள் அந்த சித்தாந்தம் சொல்லியபடி
சரியாக அமையவில்லை. அதன் விளைவாக சமூகத்தில் பலத்த எதிர்ப்புகள் தோன்றின. எனவே அதற்கு
மாற்றாக 1867 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரடெரிக் ஏஞ்செல்ஸ் இருவரும் கம்யூனிச சித்தாந்தத்தை முன் வைத்தனர்.
முதலாளித்துவம் என்பது தொழிலாளர்களை வைத்து முதலாளிகள் அதிக
இலாபம் சம்பாதிப்பதற்கான முறை என்றும், அது சுரண்டலை மையமாக வைத்தது எனவும் கம்யூனிசம்
சொல்லியது. எனவே எல்லா தொழில் அமைப்புகளையும் அரசாங்கமே நடத்த வேண்டுமென அது கூறியது.
ஆகையால் பொருளாதாரத்தை நடத்தி, வேலை வாய்ப்புகளைக்
கொடுத்து, மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கு கட்சி வழிநடத்தக்கூடிய அரசாங்கத்தைப் பொறுப்பாகியது.
1917 ஆம் ஆண்டு சோவியத் ருஷ்யாவில்
முதன் முதலாக கம்யூனிச கட்சி ஆட்சியைப் பிடித்தது. பின்னர் எழுபத்தி இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆம் வருடத்தில்
அங்கு கம்யூனிசம் விலக்கிக் கொள்ளப் பட்டது. இடையில் சீனா உள்ளிட்ட வேறு சில நாடுகளிலும்
கம்யூனிச ஆட்சிகள் ஏற்பட்டன. ஆனால் சீனாவிலும் அந்த சித்தாந்தத்தின் பொருளாதார அம்சங்கள்
வெற்றி பெறவில்லை.
கம்யூனிசக் கொள்கைகள் தோல்வியைத் தழுவிய பின்னர் சந்தைப்
பொருளாதார முறையே உலக முன்னேற்றத்துக்கு ஒரே வழியாக அமையும் என அமெரிக்காவும் அதன்
கொள்கைகளை ஆதரிப்பவர்களும் மார் தட்டினார்கள். எல்லா நாடுகளிலும் அந்தக் கொள்கைகள்
முன்னிறுத்தப்பட்டன. அதன் விளைவாகப் பல நாடுகளும் அந்தக் கொள்கைகளின் படி திட்டங்கள்
வகுக்குமாறு வற்புறுத்தப்பட்டன. எனவே அதன் அம்சங்கள் பல நாடுகளிலும் நடைமுறைக்கு வந்தன.
அதனால் ஏற்பட்டு வரும்
மோசமான விளைவுகள் கடந்த சில வருடங்களாகவே கடுமையாக இருந்த போதும், அதுவே சரியான
முறையென மேற்கத்திய நிபுணர்கள் சொல்லி வருகின்றனர். அதனால் பலனடைவோரும் அதுவே சரியென
வாதிடுகின்றனர். எனவே அது உலகின் பல நாடுகளிலும்
இன்னமும் தொடர்ந்து செயல் படுத்தப்பட்டு வருகிறது. 2008 ஆம் வருடம் உலகப் பொருளாதார
நெருக்கடி பெரிதாக வெடித்தது. அந்த நெருக்கடியின்
தாக்கங்களிலிருந்து இன்னமும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீண்டு வர முடியவில்லை. மேலும்
ஐரோப்பாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி சில நாடுகளைக் கடுமையான சிக்கல்களில் தள்ளியுள்ளது.
எனவே மேற்கத்திய நாடுகளின் கடந்த நானூறு வருட வரலாறு சில
அடிப்படை விசயங்களை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. மேற்கத்திய சித்தாந்தங்கள் எல்லாமே
முழுமையில்லாத சில அனுமானங்களின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை எதிலும்
ஒட்டு மொத்த மக்களின் நலன்கள், எதிர்காலம் மற்றும் விருப்பு வெறுப்புகள் கருத்தில்
எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே எல்லாவற்றிலுமே பெரும்பான்மை மக்கள் பாதிப்புக்குள்ளாகும்
தன்மை உள்ளது. அதனால் எந்த நாட்டிலும் அந்தக் கோட்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் செயல்பட
முடியவில்லை.
மேற்கத்திய நாடுகளின் குறுகிய அணுகுமுறைகளே அதற்குக் காரணமாகத் தெரிகிறது. அவற்றில்
பரந்த நோக்கு இல்லை. நிலப் பிரபுத்துவ முறையில் ஆரம்பித்து இன்று வரை அவர்களது பொருளாதாரக்
கோட்பாடுகள் ஒவ்வொன்றும் மேல் நிலையில் உள்ளவர்களைப் பலப்படுத்துவதாகவும் பெரும்பான்மையாக
உள்ள மற்றவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்குவதாகவுமே இருந்து வருகிறது.
பொருளாதாரம் என்பதே மற்றவர்கள்
மேல் ஆதிக்கம் செலுத்தி அதன் மூலம் பலன் பெறுவதற்கான
வழியாக அமைந்துள்ளது. மேற்கத்திய பொருளாதார சித்தாந்தம் கடந்த நானூறு வருடங்களுக்கு
மேலாகவே சுயநல மிக்க தனிமனிதர்களையும், சந்தை முறையையும் வளர்த்து அதன் மூலம் சமூகங்களை
மதிப்பிழக்கச் செய்து கொண்டு வருகிறது என ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீபன்
மார்க்லின் குற்றம் சாட்டுகிறார்.
அவற்றில் வெறும் பணமும் பொருட்களுமே மையப்படுத்தப் படுகின்றன.
ஆனால் அவை மட்டுமே வாழ்க்கையின் எல்லா சமயத்திலும் முக்கியமல்ல. உறவுகள், அன்பு, பாசம்,
பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் எனப் பலவும் வாழ்க்கைக்கு அவசியமாக உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம்
சுத்தமாக ஒதுக்கித் தள்ளி விட்டுப் பொருட்களை மட்டுமே பிரதானமாக அவை முதன்மையாக வைக்கின்றன. அதனால் ஏற்படும்
வக்கிரங்களைத்தான் நாம் இப்போது கண்டு வருகிறோம்.
ஒரு பக்கம் தினமும் கோடிக்கணக்கில் வருமானம் பெறும் கம்பெனி நிர்வாகிகள் மற்றும் நிதிச்
சந்தையில் செயல்படுபவர்கள். மறு பக்கம் தினசரி உணவுக்கு வழியில்லாத கோடிக்கணக்கான மக்கள்.
மெர்கன்டலிசம் மற்றும் சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையான
அம்சம் மேற்கத்திய நாடுகள் உலகின் பிற பகுதிகளிலுள்ள வளங்களைச் சுரண்டித் தமது சொந்த
இலாபத்துக்குப் பயன்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அதனால் அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் நலன்கள் பாதிக்கப்படுவது பற்றி அவற்றுக்கு அக்கறை
எதுவுமில்லை. ஏனெனில் அவை உள் நாடுகளிலேயே வலிமையும் சூழ்ச்சியும் உள்ளவர்கள் பலன்
பெறும் வகையிலேயே வடிவமைக்கப் பட்டுள்ளன. அவற்றில் மனித நேயம் சம்பந்தப்பட்ட குணங்களுக்கு
எந்த வித இடமுமில்லை.
மேற்கத்திய கோட்பாடுகளைப் பற்றிய முக்கியமான விசயம் அவற்றை
உருவாக்கி நடத்துபவர்கள் அவை மட்டுமே உலக முழுமைக்கும் சரியானது என நினைப்பதுதான். இத்தனைக்கும் அவர்களது கோட்பாடுகள்
அனைத்தும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் அந்தந்தக் கால கட்டங்களில் நிலவி வரும் நம்பிக்கைகள்,
பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டவை. எனவே பல்வேறு வாழ்க்கை
முறைகளைக் கொண்டு வெவ்வேறு நிலைகளில் இருந்து வரும் எல்லா நாடுகளுக்கும் அவை கண்டிப்பாகப் பொருந்தாது.
ஆயினும் அவைதான் உலக முழுமைக்கும் பொருத்தமானது என அதன் ஆதரவாளர்கள் சொல்லுவது கடந்த நானூறு ஆண்டுகளாக அவர்களிடம் நிலவி வரும் ஆதிக்க மனப்பான்மையையே
காட்டுகிறது. அவர்களின் ஒவ்வொரு கோட்பாடுகளும் அந்த ஆதிக்க தன்மையை ஆரம்ப முதலே கொண்டுள்ளன.
தற்போதைய
சந்தைப் பொருளாதாரம் அந்த ஆதிக்க மனப்பான்மையினுடைய உச்சகட்ட வெளிப்பாடாக உருவாகி உள்ளது.
நாடுகளுக்கிடையிலும் நாடுகளுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. சந்தைக்
கோட்பாடுகள் தனி மனித வாழ்க்கையிலும் ஊடுருவி
குடும்பங்களையும் சமூகங்களையும் சீரழித்து வருகின்றன. அதனால் யாருமே நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு
வருகிறது.
மேற்கத்திய கோட்பாடுகளில் ஒட்டு
மொத்த மனித இனம் மற்றும் ஒருங்கிணைந்த வாழ்க்கைக்கு எதிரான ஒரு வித வன்முறை இருந்து
வருகிறது. பேராசையும், தனி மனித நுகர்வும், அடுத்தவர்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாத
தன்மையுமே அவற்றில் தலை தூக்கி நிற்கின்றன.
எனவே அவை ஒதுக்கித் தள்ளப்பட வேண்டும். அதற்கு மாற்றாக நம்முடைய நாட்டுக்குப் பொருத்தமான
முறைகளை நாம் கண்டறிய வேண்டும். அதிர்ஷ்டவசமாக நம்முடைய வரலாறும் நிகழ்காலமும் அதற்கான பதில்களைக் கொடுக்கும்
நிலையில் உள்ளன.
( ஓம் சக்தி,
டிச.2012)
No comments:
Post a Comment