ஒரு நாட்டின் பொருளாதார வரலாறு என்பது பல்வேறு கூறுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். அதிலும் இந்தியா போன்ற 5000 வருட உயிர்ப்புள்ள வரலாற்றை கொண்ட நாட்டின் பொருளாதாரத்தை ஆராய்வது சுலபமான காரியமல்ல. நில உடைமை, உபரி, சுரண்டல், சந்தை போன்ற சொற்களை வைத்து மட்டும் இந்தியாவின் பொருளாதார வரலாற்றை எழுதிவிட முடியாது. தொடர்ச்சியாக பல சித்தாந்த(அ)மத ரீதியான பொருளாதார படையெடுப்புகளை எதிர்கொண்ட-இன்றும் எதிர்கொண்டு வரும்-இந்திய சமூகம் மேற்கத்திய நாடுகளின் எந்தவித சொல்லாடலிலும் அடங்கி விடாது. இந்த கருத்தை மிக வலுவாக முன்வைக்கிறது இந்த நூல். கடந்த பொற்காலத்தை பற்றிய துதியை மட்டும் முன்வைத்தும், தற்கால நிலை குறித்து நிதர்சனத்தையும் அறியாமலும் இந்த நூல் பேசவில்லை. பொது யுகத்திற்கு முந்தைய இந்தியாவின் பொருளாதார நிலையை விரிவாக முன்வைத்து, அதிலிருந்து தொடங்கி 1750-ஆம் ஆண்டு(பொது யுகம்) வரையிலான அதன் உச்சத்தை மிகத் துல்லியமான புள்ளிவிவரங்களுடன் இந்த நூலாசிரியர் முன்வைக்கிறார். அதற்கு பிறகான சரிவையும், அதற்கான காரணங்களையும் அலசுகிறார். சுதந்திரத்திற்கு பிறகான இந்தியா, அதன் பொருளாதார போக்குகளை விரிவாக அலசுகிறார். இந்தியாவிற்கான வருங்கால திசை குறித்த சித்திரமும் நூலில் உண்டு.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார அளவைகள் இந்திய சூழலுக்கு எந்தளவிற்கு அந்நியமானவை என்பது குறித்தும், ஆசிய(குறிப்பாக இந்திய) சமூக சூழலுக்கும் மேற்கத்திய சமூக சூழலுக்கும், அதன் விழுமியங்களுக்கும், அதில் நிலவும் நுண்ணிய வேறுபாடுகளையும் தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர், இந்தியாவிற்கான பொருளாதார அளவைகளை அதன் சூழலிடமிருந்தே பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். இந்தியாவின் பொருளாதார வரலாறு முறையாக எழுதப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் இந்த நூல், அந்த முயற்சியில் நல்ல துவக்கமாகவும் அமைகிறது.
சொல்வனம்: மாதமிரு முறை வெளிவரும் இணைய இதழ் - “உங்களுக்காக சில புத்தகங்கள்....”
No comments:
Post a Comment