உலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடு



உலக அளவிலான பன்னாட்டு அமைப்புகளில் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் கருத்துகளுக்கு எதிர்மறையான நிலைப்பாடுகளை வழக்கமாக இந்தியா எடுப்பதில்லை. நேரு தொடங்கி வைத்த அந்த வகையான அணுகு முறை நமது தேசத்தின் நலன்கள் பாதிக்கப்படும் போதும் கூட ஏறத்தாழ அப்படியே தொடர்ந்து வந்திருக்கிறது.  அதுவும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட  விசயங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.  

அந்த வகையில் இந்திய அரசு உலக வர்த்தக அமைப்பில் தற்போது முதல் முறையாக பணக்கார  நாடுகளின் விருப்பத்துக்கு மாறாக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தொடர்ந்த முயற்சிகள் மற்றும்   வற்புறுத்தல்கள் போன்ற   உத்திகளை எல்லாம் மீறி  அரசு செயல்பட்டுள்ளது. 

மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் தங்களின் விருப்பத்துக்கு மாறாக இந்தியா செயல்படக் கூடும் என்பதால் ’உலக வர்த்தக அரங்கில் இந்தியா தனக்கான இடத்தை முடிவு செய்து கொள்ள வேண்டும்’  என  ஜூலை மாதத்தின்  கடைசி நாட்களில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி எச்சரிப்பது போன்ற பாணியில் பேசி வைத்தார். ’இந்த முறை ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் உலக வர்த்தகம் பெரிதும் பாதிக்கும்; அதற்கான பழி இந்தியாவின் மீது விழும்’ என்று மேற்கத்திய உலகு பூச்சாண்டி காட்டியது.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. மாறாக  நமது தேசத்திலுள்ள கோடிக் கணக்கான சாமானிய  மக்களின் நலன்களையும், விவசாயிகளின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவது தனது கடமை என இந்திய அரசு அறிவித்தது. அதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இனிமேல் இந்தியா செயல்படாது என்னும் உறுதியான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது சுதந்திர இந்தியாவின்  வரலாற்றில் ஒரு முக்கியமான தொடக்கமாகும்.

இதன் பின்னணி குறித்துப் பார்ப்பதற்குக் கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து வருவோம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியம் ஆகிய அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில்,  வர்த்தகத்துக்கான ஒரு சர்வதேச அமைப்பையும் துவக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அது வெற்றி பெறவில்லை.  அதன் பின்னர் நாடுகளுக்கிடையேயான தடைகள் மற்றும் கட்டணங்களைக் குறைத்து வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் ’வர்த்தகம் மற்றும் கட்டணங்களுக்கான பொது ஒப்பந்தம்  ( General Agreement on Trade and Tariffs - GATT)’ 1947 இல் துவங்கப்பட்டு,  1948  தொடக்கத்தில்  நடைமுறைக்கு வந்தது.

அப்போது அந்த அமைப்பு தொழில் சம்பந்தமான பொருட்களை மட்டுமே கவனத்துக்கு எடுத்துக் கொண்டது.  அதில் விவசாயம், சேவைத் துறை ஆகியன இல்லை. ஏனெனில் விவசாயப் பொருட்களின்   வர்த்தகம் என்பது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து விடும்; எனவே அதைத் தவிர்க்க வேண்டும்  என்கின்ற எண்ணம் அந்தக் காலத்தில்  இருந்தது.

1980 களில் பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களின் இலாபத்தை அதிகரிக்கத் திட்டங்களைத் தீட்டி  பல ஆலோசனைகளைத் தெரிவித்தன.  அதன் அடிப்படையில் விவசாயம், அறிவு சார் சொத்துரிமை, சேவைத் துறை மற்றும் மூலதனம் ஆகியவை பின்னர் புதியதாக வர்த்தக வளையத்துக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

தொடர்ந்து 1995 ஆம் வருடத்தில்   GATT  உரு மாறி உலக வர்த்தக அமைப்பு என்ற பெயரில் புது அவதாரத்தை எடுத்தது. ஆரம்ப முதற்கொண்டு அதில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் தாக்கமே அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் மேலாதிக்க மனப்பான்மையுடன்  செயல்பட்டு வருவதாகப் பரவலான  குற்றச் சாட்டுகள் உள்ளன.   

மேலும் பெரும்பாலான சமயங்களில் அமெரிக்கா மற்றும்   ஐரோப்பிய நாடுகள் உலக வர்த்தக அமைப்பில் ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவதைப் பார்க்க முடியும். கூடவே சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி அவ்வப்போது தங்களுடன் அவை வேறு சில நாடுகளையும் இணைத்துக் கொண்டு செயல்படும்.

அதனால் வளரும் மற்றும் ஏழை நாடுகளின் நலன்களே  பெருமளவு பாதிப்புகளுக்கு உள்ளாகி வந்துள்ளன. உதாரணமாக சில வருடங்களுக்கு முன் அமெரிக்கா  தமது நாட்டைச் சேர்ந்த சில பருத்தி விவசாயிகளின் இலாபத்தைப் பெருக்குவதற்காக, ஏழை ஆப்பிரிக்க நாடுகளின் பருத்தி விளைச்சலை அழித்து, அதனால் அவர்களின் பொருளாதாரமே  சீர்குலைந்து போனதைச் சுட்டிக் காட்டலாம்.        

மேலும்  தங்களின் நலனுக்காக உலக வர்த்தக அரங்கில் சாதாரண நாடுகளின் ஒற்றுமையைக் குலைக்கவும்  அவர்களைப் பிரிக்கவும் மேற்கத்திய நாடுகள் எல்லாவித தந்திரங்களையும் கையாள்கின்றன. அதற்காகவே திறமை வாய்ந்த பல  பேர் ஆலோசகர்களாகப் பேச்சு வார்த்தைகளின் போது  அமர்த்தப்படுகிறார்கள். அதற்காகப் பெரிய அளவில் பணம் செலவழிக்கப்படுகிறது.

அதே சமயம் தங்களின் தனிப்பட்ட  நலன்கள் பாதிக்கப்படும் போது மட்டும் வளர்ந்த நாடுகள் ஒவ்வொன்றும் உறுதியுடன் எதிரணியில் நிற்கும்.  அதற்காகப் பேச்சு வார்த்தைகளையே தாமதப்படுத்தி தடம் புறழச் செய்ய எல்லா நடவடிக்கைகளையும்  எடுக்கும். அப்படியே முடிவுகள் எடுக்கப்பட்டாலும் புதிய உத்திகள் மூலம்  அவற்றை மீறிச் செயல்படுவதற்கு  முயற்சிகளை மேற்கொள்ளும்.  அதன் பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குத் தயாராகும்.

2001 ஆம் வருடம் அரேபிய நாடான கட்டாரிலுள்ள தோஹாவில் நடந்த அமைச்சர்கள் மட்டத்திலான உலக வர்த்தக அமைப்பின் மாநாடு முக்கியமான ஒன்றாகும்.   அப்போது  உலக வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் தோஹா சுற்றுப் பேச்சு வார்த்தை என்னும் முக்கிய முயற்சி தொடங்கப்பட்டது.

ஆயினும் மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய   அந்தப் பேச்சு வார்த்தை மூலம் உறுப்பு நாடுகளுக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்க  முடியவில்லை. அதனால் 2003 மற்றும் 2008 ஆவது வருடங்களில் அந்தப் பேச்சு வார்த்தைகள் பெரும் தோல்வியில் முடிந்து உலக வர்த்தக அமைப்பையே கேள்விக் குறியாக்கியன.

அதன் பின்னர் உலக வர்த்தக அமைப்பு தோல்வியில் முடிந்து விடக்கூடாதென என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டது. அதனால்   எப்படியாவது பேச்சு வார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. எனவே வர்த்தகம் சம்பந்தமான எல்லாப்  பிரச்னைகளையும் ஒரு சேர விவாதங்களுக்கு எடுத்துக் கொள்ளாமல், குறிப்பிட்ட சில விசயங்களில் இருந்து மட்டும் பேச்சுகளைத் தொடங்குவது என்று 2012 ஆம் வருடத்தில் முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து 2013 ஆம் வருடம் டிசம்பரில் இந்தோனேசிய நாட்டிலுள்ள  பாலித் தீவில்  ஒன்பதாவது அமைச்சர்கள் மட்ட மாநாடு நடைபெற்றது. அதில் சர்வதேச அளவில் வர்த்தகத்தை அதிகரிக்க உறுப்பு நாடுகளில் சுங்க நடைமுறைகளை எளிமைப்படுத்துவது மற்றும் வர்த்தகத்துக்குத் தேவையான  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றிய  பேச்சுகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும்  வளரும் நாடுகளின் அரசுகள் வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்கள் கையிருப்பு,  பொது விநியோகத் திட்டம் மற்றும்  விவசாயம் சம்பந்தமாக அரசுகள் கொடுக்கும் சலுகைகள் உள்ளிட்டவையும் பேச்சுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

உலக வர்த்தகத்தைச் சுலபமாக்குவதற்கு உறுப்பு நாடுகளின்  சுங்க விதிமுறைகள் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் அதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்த வேண்டும் என்பதும் பணக்கார நாடுகளின் ஒரு முக்கிய கோரிக்கையாகும். மேலும் வர்த்தகத்தை  அதிகரிக்க துறைமுகங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நவீனப் படுத்துதல் மற்றும்  கணினி மயமாக்குதல் ஆகியன செய்யப்பட வேண்டும் என்றும்  சொல்லப்பட்டது. ஏனெனில் வளரும் மற்றும் ஏழை நாடுகள் பலவற்றில் கட்டமைப்பு வசதிகள் குறைந்தும், சுங்க நடை முறைகள் எளிமையாக இல்லாமலும், துறைமுகங்கள் நவீன மயமாக்கப்படாமலும்  உள்ளது.

பிற  நாடுகள் அவ்வாறு செய்யும் போது உலக வர்த்தகம் ஒரு டிரில்லியன் டாலர்கள் ( ஏறத்தாழ அறுபது இலட்சம் கோடி ரூபாய்) அளவு அதிகரிக்கும் என்கின்ற கணக்கினை வளர்ச்சியடைந்த  நாடுகள் முன் வைக்கின்றன. மேலும் பல இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் அவை கூறுகின்றன.

ஆனால் வளரும் நாடுகளைப் பொருத்த வரையில் வர்த்தகத்தை எளிமைப்படுத்துதல் என்பது வளர்ந்த நாடுகளிலிருந்து இறக்குமதிகளை எளிமைப்படுத்துவதற்கான செயலாகவே    முடிந்து விடலாம் எனக் கருத இடமுள்ளது.  பணக்கார நாடுகளின் எண்ணமே பிற நாடுகளில் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு,  துறைமுறைகள் நவீன மயமாகி,  சுங்க நடைமுறைகள் சுலபமாகும் போது அவற்றுடன் தங்களின் வர்த்தகத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்பது தான்.

 மேலும் வளரும் மற்றும் ஏழை நாடுகள் தங்களின் கட்டமைப்புகளை ஏற்படுத்தி  நவீன மயமாக்கல் உள்ளிட்ட வேலைகளை மேற்கொள்ள  முதலீடுகள் போட வேண்டியுள்ளது. அதற்காக நிதி வசதி தேவைப்படும். பெரும்பான்மை மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூடப்  பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இன்னமும் பல நாடுகள் உள்ளன. எனவே அவற்றின் முன்னுரிமை என்பது தங்களின் மக்களுக்குக் கொடுக்க வேண்டிய அத்தியாவசியத் தேவைகளாகவே இருக்க முடியும்.

பாலியில் பேச்சு வார்த்தைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  இன்னொரு முக்கிய விசயம் அரசுகள் தங்களிடம் வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்கள் கையிருப்பு, விவசாயிகளுக்கு விளை  பொருள்களுக்காகக் கொடுக்கும் குறைந்தபட்ச விலை, விவசாயத்துக்கான சலுகைகள்  மற்றும் பொது விநியோகத் திட்டம்  ஆகியவை சம்பந்தமானது. உறுப்பு நாடுகளின் அரசாங்கங்கள் தங்களின் உணவுப் பொருட்கள் கையிருப்பு மற்றும் விவசாயச்  சலுகைகளுக்காக நாடுகளின் மொத்த விவசாய உற்பத்தியில் பத்து விழுக்காட்டுக்கு மேல் செலவிடக் கூடாது என்று சொல்லப்பட்டது. அதுவும் மொத்த உற்பத்தி என்பது 1986-88 இல் நிலவிய   விலைகளின் படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை சார்ந்து வாழும் நாடு. அதில் அதிகம் பேர்  சிறிய விவசாயிகள். அவர்கள் பலரும் கடந்த பல வருடங்களகாவே மிகவும் சிரமப்பட்டு வேறு வழியில்லாமல் விவசாயம் செய்து வருபவர்கள். அவர்களின் விளை பொருள்களுக்குக் கொடுக்க வேண்டிய விலைகள் மற்றும் சலுகைகளில் கைவைப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமன்றி நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கி விடும்.

மேலும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஏழ்மை நிலையிலுள்ள பல கோடி மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அவற்றின் அளவை உலக வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில்  பணக்கார நாடுகள் வரையறை  செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது.

எனவே மேற்கண்ட பொருள் குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்ததும், 2017 ஆம் வரை மேலும் ஒரு நான்கு வருட காலத்துக்கு எந்தக் கேள்விகளும் எழுப்பப்பட மாட்டாது என்று பணக்கார நாடுகள் தரப்பில் சொல்லப்பட்டது. அதே சமயம் சுங்க முறைகள் எளிமைப் படுத்துதல் மற்றும் விவசாய விளைபொருட்கள் சம்பந்தப்பட்ட  இரண்டு விசயங்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும் என்று  அவர்கள் தரப்பில் முன் வைக்கப்பட்டது.  அவற்றுக்கு  இந்தியா ஒப்புக் கொண்டது.

இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. 2014 மே மாதத்தில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது. புதிய அரசு வந்ததுமே பாலி மாநாடு சம்பந்தப்பட்ட விசயங்களில் அணுகுமுறை எப்படி இருக்குமென ஊகங்கள் எழுந்தன. உலக வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்கின்ற கருத்தை மையமாக வைத்து  எப்படியும் இந்தியாவைத் தங்களின் விருப்பத்துக்கேற்ப  சம்மதிக்க வைத்து விட வேண்டுமெனப் பல நாடுகளும்  விரும்பின.

ஆனால் உணவுப் பொருள் கையிருப்பு, விவசாயச் சலுகைகள், குறைந்த விலை நிர்ணயம் மற்றும் பொதுவிநியோகம் சம்பந்தமான விசயங்களில் பிற  நாடுகளின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது என  இந்திய அரசு அறிவித்தது. அதே சமயம் சர்வதேச வணிகம் பெருக வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய விசயங்கள் குறித்தும்  உலக வர்த்தக அமைப்பில் ஒன்றாகவே முடிவு செய்ய வேண்டுமென புதிய அரசு கூறியது. ஏனெனில் வர்த்தகம் சம்பந்தமான விசயம் முடிவுக்கு வந்து விட்டால்,  விவசாயம் சார்ந்த பிரச்னைகளை முடிக்க  மேற்கத்திய நாடுகள் ஆர்வம் காட்டுமா  என்பது சந்தேகமே.

அரசின் மேற்கண்ட முடிவின் மூலம் நமது பெரும்பான்மை  மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. விளை பொருட்களின் கையிருப்புகளும், விவசாயத்துக்கான சலுகைகளும் மொத்த உற்பத்தியில் பத்து விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது என்று வளர்ந்த நாடுகள் சொல்வது  முறையானதல்ல. ஏனெனில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் சுமார் முப்பது விழுக்காடு பேர் உள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. அப்படியிருக்கும் போது அவர்களுக்குத் தேவையான உணவு சம்பந்தமான ஏற்பாடுகளுக்கு உதவி  செய்ய வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. எனவே அதற்கான செலவுகள் பற்றி நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

அதே போல விவசாயம் சம்பந்தமான சலுகைகளைப் பற்றி மேற்கத்திய  நாடுகள் தலையிட அனுமதிக்கக் கூடாது. அமெரிக்க ஐரோப்பிய  நாடுகள் அவர்களின் விவசாயத்தைத் தக்க வைத்துக் கொள்ள பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மானியங்களை வருடா வருடம் அளித்து வருகின்றன. இத்தனைக்கும் அங்கு விவசாயத்தைச் சார்ந்து வாழுபவர்கள் மிகவும் குறைவு.

உதாரணமாக அமெரிக்காவிலுள்ள  விவசாயிகளின்  எண்ணிக்கை  ஏறத்தாழ இருபது இலட்சம் பேர்கள் மட்டுமே. ஆனால் அவர்களுக்கு சலுகைகளாக 120 பில்லியன் டாலர்களை ( சுமார் ஏழு இலட்சத்து இருபதாயிரம்  கோடி ரூபாய்கள்) அமெரிக்க அரசு வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதை விடவும் அதிக அளவில் விவசாயிகளுக்குச் சலுகைகள் கிடைப்பதாகத் தெரிகிறது.  

அதே சமயம் நமது நாட்டு மக்கள் தொகையில் சுமார் ஐம்பது விழுக்காடு பேர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அரசு கொடுக்கும் சலுகைகள் சுமார்    12 பில்லியன் டாலர்கள் அளவு மட்டுமே. அதாவது அமெரிக்க அரசு அங்கு கொடுக்கும் அளவில் சுமார் பத்தில் ஒரு பாகம் மட்டுமே. ஆகவே அந்த நாடுகள் எல்லாம் தங்களின் விவசாயத்தைத் தக்க வைத்துக் கொள்ள  எல்லாவித  முயற்சிகளையும்  மேற்கொண்டு வருகின்றன. அதே சமயம்  இந்தியா போன்ற பெரும்பாலான மக்கள் நம்பி வாழக்கூடிய அந்தத் தொழிலுக்குக் கொடுக்கக் கூடிய  குறைந்த அளவு சலுகைகளைக் கூடக் கட்டுப்படுத்த வேண்டுமெனக்  கோருகின்றன. 

மேலும் நாட்டின் மொத்த விவசாய உற்பத்தி சம்பந்தமான மதிப்பை சுமார் இருபது வருடத்துக்கு முந்தைய மதிப்பின்படி எடுத்துக் கொள்ள வேண்டுமென வற்புறுத்துகின்றன. 1980 களிலிருந்து 2014 வரை விலைவாசி அதிகரித்துள்ளது. எனவே பழைய நிலவரத்தை வைத்துக் கொண்டு உணவுக் கையிருப்புகள் மற்றும் சலுகைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பது வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதரங்களை முடக்கும் செயலாகும்.  

மேற்கண்ட விசயங்கள் குறித்து முடிவுகளை இறுதி செய்து அறிவிக்க உலக வர்த்தக அமைப்பு சென்ற ஜூலை மாதக் கடைசியில்  ஜெனிவாவில் பொதுக் குழுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. உறுப்பு நாடுகள் தங்களின் இறுதியான நிலைப்பாடுகளைத்  தெரிவிக்க ஜூலை 31 கடைசி  நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே தான் அன்று  இரவு வரை வளர்ந்த  நாடுகள்  உலக வர்த்தக  அமைப்பின் மூலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த முக்கியமான செய்தி அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக அமைந்தது. அதற்கு முந்தைய வாரமே  மோடி  அரசின் நிலைப்பாடு பற்றிய செய்திகள்  வெளியாகத் தொடங்கியதும் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டன.  அந்த சமயத்தில் இந்தியா வந்திருந்த அமெரிக்காவின் இரண்டு முக்கிய அமைச்சர்களும் உலக வர்த்தகப் பேச்சு வார்த்தைகளில் நமது நாட்டின் முடிவு பற்றி  மிகவும் குறிப்பாக இருந்தனர். 

ஏனெனில் இந்த முறை அந்த நாடுகளுக்குச் சாதகமான முடிவு ஏற்படுவதற்கு இந்தியாவின் நிலைப்பாடு தடையாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்குக் காரணம் அவர்களுக்கு மாற்றான கருத்தைக் கொண்டிருந்த மிகச் சில நாடுகளில் மிகவும்  முக்கியமானது இந்தியா. ஆகையால் தான் இந்தியாவைச் சமாளிக்க வைப்பதன் மூலம் தாங்கள் வெற்றி பெற்று விடலாம் என அவர்கள் முயற்சி செய்தார்கள்.

ஆனால் இந்தியா தனது முடிவில் உறுதியாக இருக்கவே,   ஜெனிவா கூட்டத்தின் இறுதியில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி தங்களுக்குச் சாதகமான முடிவினை எடுக்கச் சில நாடுகள் முயற்சிகளைத் தொடங்கின.  ஆனால் இந்தியாவை மீறி உலகப் பொருளாதாரம் சம்பந்தமான முக்கிய முடிவினை எடுத்து விடலாம் என நினைப்பது இனிமேல் எளிதான காரியமல்ல.  எனவே அதற்கான  முயற்சிகள் தொடர்ந்து மேலே செல்ல முடியவில்லை.

அதனால் இந்த முறை ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.  துரதிர்ஷ்டவசமாக முந்தைய அரசு உலக வர்த்தக அமைப்பில் நமது மக்களின் நலனை முழுமையாக எடுத்துக் கொள்ளவில்லை. பாலி மாநாட்டின் தொடக்கத்தில் சில விசயங்களில் மேற்கத்திய நாடுகளின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா,  அந்தக் கூட்டம் முடிவதற்கு முன்னரே தனது கருத்தை மாற்றி அவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டது நம்மில் சிலருக்கு ஞாபகமிருக்கலாம்.

எனவே உலகப் பொருளாதார அரங்கில்  இந்திய அரசு தனது தேசம் சார்ந்த நிலைப்பாட்டைத் தற்போது உறுதியாக அறிவித்துள்ளது. உலக வர்த்தக அமைப்பைப் பொறுத்த வரையில் முதன் முறையாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  அவர்களின்  ஆட்சிக் காலத்தில் தான் மேற்கு நாடுகளுக்கு மாற்றாக இந்தியாவின் குரல் ஒலித்தது.    

ஆகையால்  இந்திய அரசின் தற்போதைய  முடிவு அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தல்களுக்குக் கொஞ்சமும் செவி சாய்க்காமல் தேசத்தின் நலனை முதன்மையாக வைத்து மோடி அரசு செயல்பட்டுள்ளது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. உலகப் பொருளாதார அரங்கில் இனிமேல் இந்தியாவின் நிலைப்பாடுகள் தேச நலன்களை மையமாக வைத்து மட்டுமே அமைய வேண்டும். அதற்கான தொடக்கமாக தற்போதைய முடிவு இருக்க வேண்டும்.






No comments: