மங்கள்யான் திட்டத்தின் வெற்றி பல வகைகளில் நமது நாட்டுக்குப்
பெருமையைச் சேர்த்துள்ளது. முதலாவதாக செவ்வாய் கிரகம் பற்றி ஆய்வு செய்ய விண்கலத்தை
அனுப்பிய நாடுகளில் நான்காவதாக இந்தியா உருவாகி உள்ளது. இரண்டாவதாக முதல் முறையிலேயே
வெற்றிகரமாக விண்கலத்தைச் செலுத்திய நாடுகளில் முதலாவது என்னும் சிறப்பு கிடைத்துள்ளது.
மூன்றாவதாக உலக அளவில் குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு
விண்கலம் அனுப்பிய நாடு என்னும் பெயர் நமக்குக் கிடைத்துள்ளது. இத்தனைக்கும் அந்தத்
திட்டத்தை உருவாக்கிய வல்லுநர்கள் பல பேர் சாதாரணக் கல்விக் கூடங்களில் படித்தவர்கள்.
பெரிய பின்புலங்கள்
இல்லாத பின்னணிகளைக் கொண்டவர்கள். அந்தத் திட்டத்தில் ஈடுபட்ட பொறியாளர்களில்
இரண்டு விழுக்காடு பேர் மட்டுமே இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி) மற்றும் மண்டல
பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் செயல்பட்டு வரும் அரசு ஆய்வு
மையங்கள் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் வல்லுநர்களில்
பலபேர், தனியார் துறை சார்ந்த கம்பெனிகள்
அல்லது வெளி நாடுகளில் வேலைக்குச் சேர்ந்தால் அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். ஆனால் அதை விடுத்து அவர்கள் தாய் நாட்டின் முன்னேற்றத்துக்காகப்
பணியாற்றிக் கொண்டுள்ளனர்.
அவர்கள் பலரின் சாதனைகள் அந்தந்த வளாகங்களுக்கு வெளியே தெரிவதில்லை.
ஆனாலும் அவர்கள் அதைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. இவ்வாறு அரசு அமைப்புகளில்
மட்டுமன்றி, வெவ்வேறு துறைகளிலும் அசாத்தியமான காரியங்களைப் பலர் அமைதியாகச் செய்து
வருகின்றனர். அதனால் பெரிய அளவில் நாட்டுக்குப் பலன்கள் கிடைத்து வருகின்றன.
கடந்த இருபது வருடங்களாக நாட்டின் பலபகுதிகளில் தொழில் மையங்களில் கள ஆய்வுகளை மேற்கொள்ளும் போது, அசாத்தியமான
சாதனைகளச் செய்து வரும் பல பேரைப் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. அதிகப் படிப்பு
கூட இல்லாமல் சாதாரணப் பின்னணியில் வாழ்ந்து கொண்டு தொழில்
நுட்பத்திலும் கண்டுபிடிப்புகளிலும் அவர்கள் நிகழ்த்தி வரும் சாதனைகள் நம்மை மலைக்க
வைக்கின்றன.
வெளி நாடுகளிலும் உயர் கல்விக் கூடங்களிலும் படித்து உலகின் பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் நிபுணர்களை விடவும், அவர்களின்
பல பங்களிப்புகள் அசாதாரணமாக உள்ளன. அதன் மூலம்
தொழில் வளர்ச்சிக்குப் பெரிய உந்துதல்கள் ஏற்பட்டு அதனால் பொருளாதார முன்னேற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன.
அவற்றில் பல நாம் வாழும் பகுதிகளிலும் கூட நம்மைச் சுற்றி
நடந்து வருகின்றன. ஆயினும் அவை நமது கவனத்துக்கு வருவதே இல்லை. திருப்பூருக்கு அருகில்
உள்ள கிராமத்தில் பிறந்த சுந்தரம் என்னும் தொழில் முனைவோர், மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே
படித்தவர். ஆனால் அவரது கண்டுபிடிப்பின் மூலமாக நமது நாடு முழுவதையும் தனது சந்தையாக
வைத்திருந்த ஒரு பன்னாட்டுக் கம்பெனியை நாட்டை விட்டே அனுப்பி விட்டார். அதற்குக் காரணம்
அந்தக் கம்பெனி தயாரிக்கும் முக்கிய இயந்திரத்தை தனது சொந்த முயற்சியால் அவர்களின்
விற்பனை விலையில் மூன்றில் ஒரு பங்குக்குத் தயாரித்து வெளியிட்டார்.
அதைக் கண்டதும் பன்னாட்டு நிறுவனம் ஆடிப்போனது. சுந்தரத்தை
வந்து பார்த்து அவரின் தயாரிப்புகளை தங்களுக்கு விலைக்குக் கொடுக்குமாறு கேட்டது. அவர் பெரிய பண பலம் இல்லாதவர். வட்டிக்குக்
கடன்களை வாங்கி கண்டுபிடிப்பினை மேற்கொண்டவர். அப்போது சிரமங்களில் இருந்தார். ஆயினும்
சொந்தப் பெயரிலேயே தமது தயாரிப்புகளை உருவாக்கி
விற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இப்போது அவரது இயந்திரங்கள் நாடு முழுவதிலும் விற்பனையாகின்றன.
அவரது கண்டுபிடிப்பின் மூலமாக இங்கிருந்து வெளி நாட்டுக்குச் செல்ல வேண்டிய தொகைகள் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால் அந்நியச் செலவாணி இருப்பு காப்பாற்றப் படுகிறது.
சாதனை செய்பவர்களில் சிலர் மேலும் பல மடங்கு உயர்ந்து நின்று தமது மொத்த
முயற்சியின் பலன்களையும் ஒட்டு மொத்த சமூகத்துக்கு அளித்து விடுவதையும் பார்க்க முடிகிறது.
தமது உழைப்பினால் விளையும் நன்மைகளை ஒரு குறைந்த
பட்ச எதிர்பார்ப்புக் கூட இல்லாமல் நாட்டுக்கு அப்படியே அளிப்பதில் அவர்கள் நிறைவடைகின்றனர்.
கோவைக்குச் சற்று தொலைவிலுள்ள ஒரு கிராமத்தில் மிகச் சாதாரணமான
குடும்பத்தில் பிறந்து தனது சொந்த உழைப்பின்
மூலம் ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தி வருபவர் முருகானந்தம். குடும்பச் சூழ்நிலை காரணமாக
பள்ளி இறுதிப் படிப்பைக் கூட முடிக்க முடியாமல் ஒரு பணி மனையில் வேலைக்குச் சேர்ந்தவர்.
அவர் தனது மனைவியின் மூலம் மாதவிடாய்க் காலத்தில் சாதாரணக்
குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் எளிதாக ’சானிடரி நாப்கின்கள்’ வாங்க முடிவதில்லை என்பதை
அறிகிறார். அதற்குக் காரணம் சாமானிய மக்களுக்கு
அவற்றின் விலைகள் அதிகம் என்பதைத் தெரிந்து கொள்கிறார். கடைகளில் விற்கப்படும் நாப்கின்கள்
குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் ‘பிராண்டுகள்’ என்றும், எனவே அவற்றின் விலை அதிகமாகத் தான் இருக்கும்
என்றும் அவருக்குத் தெரிய வருகிறது.
ஆகையால் வெளிநாட்டு நிறுவனங்களின் பொருட்களுக்கு மாற்றாக
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பயன் பெறும் வகையில் விலை குறைந்த நாப்கின் ஒன்றைத்
தயாரிக்கும் முயற்சியில் இறங்குகிறார். பணமோ, பெரிய நிறுவனத் தொடர்புகளோ, கல்வி நிறுவங்களின்
தாக்கமோ எதுவும் அவருக்கு இல்லை. ஆயினும் வெளிநாட்டு நிறுவன நாப்கின்கள் குறித்துத்
தனிப்பட்ட முறையில் தீவிரமாக ஆய்வு செய்து அவை பற்றி முழுமையாக அறிந்து கொள்கிறார்.
அப்போது பன்னாட்டுக்
கம்பெனிகள் உபயோகப்படுத்தக் கூடிய நாப்கின்களைத் தயாரிக்கும் இயந்திரங்களின் விலை அதிகம்
என்பது தெரிய வருகிறது. நாப்கின்களின் விலை அதிகமாக இருக்க அது ஒரு முக்கியமான காரணம்
என்பதை அறிகிறார். எனவே குறைந்த விலையில் நாப்கின்களைத்
தயாரிக்கும் இயந்திரங்களையே உருவாக்கி விடுவது என்னும் முயற்சியில் இறங்குகிறார்.
தளராத முயற்சியின் மூலம் சில ஆண்டுகளில் வெற்றி பெறுகிறார். அதனால் மிகக்
குறைந்த விலையில் நாப்கின்கள் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டு பிடிக்கிறார். தொடர்ந்து
அதன் மூலம் குறைந்த விலை நாப்கின்களைத் தயாரிக்கிறார். அவரின் கண்டுபிடிப்பால் சாமானியக் குடும்பங்களைச்
சேர்ந்த ஏழைப் பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் படும் அவதிகள் இல்லாமல் போக வழி கிடைக்கிறது.
ஆனால் அவர் தனது கண்டுபிடிப்புகள் மூலம் நிறைய அளவில் நாப்கின்களை
நாடு முழுவதும் விற்றுப் பெரிய பணக்காரராக விரும்பவில்லை. மாறாகத் தனது முயற்சிகளின் பலன்கள் ஏழை மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார்.
அதுவும் நகரங்களை விட்டு வெளியில் கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வாழும் பெண்கள் பயன் அடைய வேண்டும் என முடிவு செய்கிறார்.
எனவே தனது இயந்திரங்களை சாமானியப் பெண்கள் நடத்தும் சுய உதவிக்
குழுக்களுக்குக் கொடுத்து, அவர்களுக்கு நாப்கின் தயாரிக்கும் முறையைக் கற்றுக் கொடுக்கிறார்.
அதன் மூலம் அவர்களுக்கு வருமானமும், அதே சமயம் அங்கு வசிக்கும் பெண்களுக்குக் குறைந்த விலையில் நாப்கின்கள் எளிதாகக்
கிடைக்கவும் வழி வகை செய்து கொடுக்கிறார். அதனால் சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் பின் தங்கிய மற்றும் மலை வாழ் மக்கள்
பயனடையும் வகையில் குறைந்த விலை நாப்கின்கள்
அங்கு தயாரிக்கப்படுகின்றன.
இது ஒரு அசாதாரணமான முயற்சி. ஒரு சாதாரண மனிதர் புகழ் பெற்ற தொழில் நுட்ப நிறுவனங்களோ, பெரிய கம்பெனிகளோ
செய்யாத காரியத்தைச் செய்திருக்கிறார். ஆனால் அதனால் கிடைக்கக் கூடிய பலன்களை நாட்டின்
சாமானிய மக்களுக்குக் கொடுக்க முடிவு செய்கிறார். அதற்காக அவரது தொழிலையே மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்கிறார்.
இந்த சமயத்தில் இன்னொரு முக்கியமான விசயத்தையும் குறிப்பிட்டாக
வேண்டும். மேற்கண்ட முயற்சிகளை நிகழ்த்தியவர்கள் அனைவருமே மிகக் குறைந்த செலவில் அவர்களது
தயாரிப்புகளை உருவாக்கியுள்ளனர். மங்கள்யான் விண்கலத்தைப் போலவே, மற்ற இரண்டு கண்டுபிடிப்புகளும் மிகவும் குறைவான
செலவில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
அதனால் அவர்களின் தயாரிப்புகளின் விலை சர்வதேச அளவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் விற்பனை
விலைகளை விடப் பல மடங்கு மிகக் குறைவாக உள்ளது. எனவே அவை சாதாரண மக்களுக்கும் கிடைக்கிறது. இவ்வாறான பல வகை முயற்சிகள் இன்று நமது நாட்டில்
நமக்குத் தெரியாமலேயே நடந்து வருகின்றன. அதனால் இந்தியா உலக அளவில் சிக்கனக் கண்டுபிடிப்புகளின்
முக்கியமான மையமாக மாறி வருவதாக மேற்கத்திய
ஆய்வு நிறுவனங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
வசதிகள் குறைவான சூழ்நிலைகளில் வாழ்க்கை நடத்தி உயர்ந்த நோக்கங்களுடன்
பெரிய பணிகளைச் செய்யும் மனிதர்கள் பலரைப் பரவலாகப் பிற துறைகளிலும் பார்க்க முடிகிறது.
அர்ப்பணிப்பையும் சேவையையும் இந்தியப் பாரம்பரியம் ஆரம்ப முதலே முன்னிறுத்தி வந்துள்ளது.
அந்த வகையில் இப்போதும் தங்களின் சொந்த வாழ்க்கையை சமூகப்
பணிகளுக்காக அர்ப்பணித்து மற்றவர்களுக்காக வாழ்பவர்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களது பங்களிப்புளின் தாக்கங்கள் தான் வேறுபடுகிறதே தவிர, நோக்கம் ஒன்றாகவே உள்ளது. அது சமூகம் மேம்பட வேண்டும்; அதற்காகத்
தம்மால் முடிந்த அளவு அதிகமாக உழைக்க வேண்டும் என்பது தான்.
இந்த சமயத்தில் சில வருடங்களுக்கு முன்னால் வெளிச்சத்துக்கு
வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அசாதாரண மனிதர் பற்றி நினைவுக்கு வருகிறது. அவரது
பெயர் ஜாதவ் மொலய் பாயெங் ( Jadhav Molai Payeng). 1980 ல் அந்த மாநிலத்தின் சமூக வனத்திட்டத்தின்
கீழ் மரம் நடுவதற்காக ஒரு வேலையாளாகச் சேர்கிறார். ஐந்து வருடங்களில் அந்தத் திட்டம்
நிறைவுற்று, அவருடன் வேலை பார்த்தவர்கள் எல்லாம் அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.
அவர் அங்கேயே தங்குகிறார். நடப்பட்ட மரங்களைப் பரமாரிக்கிறார்.
மேலும் சுற்றியுள்ள இடங்களில் புதிதாக மரங்களை
நாள் தோறும் நடத் தொடங்குகிறார். அதன் மூலம் மொத்தம் சுமார் 1400 ஏக்கர்கள் அளவு இடத்தில் வனம்
உருவாகிறது. அதனால் ஜோர்ஹத் மாவட்ட பிரம்மபுத்திரா மணல் திட்டுகள் பகுதி அற்புதமான
வனப் பகுதியாக மாறுகிறது.
அதனால் அந்தக் காடுகளில் பல வகையான தாவரங்கள் மற்றும் மரங்கள்
புதிதாக வளர்கின்றன. மேலும் வெவ்வேறு வகையான உயிரினங்கள் வந்து வசிப்பதற்கான புகலிடமாக
அவை மாறுகின்றன.
அவற்றுக்கெல்லாம் காரணமான அவர் தனது குடும்பத்துடன் ஒரு குடிசையில்
வாழ்க்கை நடத்துகிறார். தனது மாடு, எருமைகளின் பாலை விற்றுக் கிடைக்கும் வருமானத்தில்
தான் அவரது வாழ்க்கை நடக்கிறது.
படிக்காத ஒரு சாதாரண மனிதர் அரசாங்கம் செய்ய முயலாத மிகப்
பெரிய காரியத்தைத் தனியாக நின்று சாதித்திருக்கிறார். அது மகத்தான சாதனை. பிரம்மபுத்திரா
நதியின் பிற மணல் திட்டு பகுதிகளிலும் மேலும் புதிய வனக்காடுகளை உருவாக்க அவர் ஆர்வம்
தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்டவர்கள் எல்லாம் தான் ஒட்டு மொத்த மக்களின் பாராட்டுக்குரியவர்கள்.
நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்களின் செயல்பாடுகள் மற்றும் பங்களிப்புகள்
பற்றி நம்மில் நிறைய பேருக்குத் தெரிவதில்லை.
அவையெல்லாம் பல சமயம் அவர்கள் சார்ந்த குறிப்பிட்ட வட்டங்களில் நின்று போய் விடுகின்றன. சிலரைப் பற்றி
எப்போதாவது செய்திகள் வரும். ஆனால் அவை குறித்து பெரும்பான்மையானவர்களுக்கு எதுவும்
தெரியாது. அதனால் அவர்களின் சாதனைகளுக்குத் தகுந்த அங்கீகாரமோ அல்லது விருதுகளோ கூட மிகவும் அரிதாகவே
கிடைக்கும்.
ஒரு அறிவார்ந்த சமூகம் தன்னலமில்லாமல் தேசத்துக்குப் பணியாற்றுபவர்களையும்,
சாதாரண மக்களுக்குச் சேவை செய்பவர்களையும் அதிகமாகக் கௌரவிக்க வேண்டும். விருதுகள்
மற்றும் அங்கீகாரங்கள் வழங்கும் போது அவர்களைத்
தேடிச் சென்று தேர்வு செய்ய வேண்டும்.
அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, உயர்ந்த நோக்கம், எந்தவிதப் பலனையும்
எதிர்பார்க்காமல் செயல்படும் தன்மை ஆகியவை பரவலாகத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
அவர்களின் செயல்பாடுகள் மூலம் நாட்டுக்கு ஏற்படும்
நன்மைகளைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
அந்த வகையானவர்களின் முக்கியமான பங்களிப்புகள் குறித்துப்
பள்ளி, கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்க வகை செய்ய வேண்டும். அதன் மூலம் நாட்டு நலனில் அக்கறை கொண்ட
நல்ல சமுதாயம் உருவாகுவதற்கு உத்வேகமும் வழி வகைகளும் பிறக்கும்.
(’மக்கள் பணியாற்றுவர்களைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் தினமணி,
ஜன.5, 2014)
No comments:
Post a Comment