தேச பக்தாவின் தூய்மையான பாரதம் - துவக்க நிகழ்ச்சி


பாரதப் பிரதமர் அவர்களின் ’தூய்மையான பாரதம்’ திட்டத்தில் உந்தப்பட்டு கோவையிலுள்ள ‘தேச பக்தா’ அமைப்பு இன்று ஒரு கோவிலில் தனது பணியினைத் துவங்கியது. கோவை பாப்பநாயக்கன்பாளையத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் அந்தப் பணியைத் துவக்குவது என முடிவு செய்யப்பட்டது.

சுத்தம் செய்யத் தேவையான உபகரணங்களுடன் கோவிலில் காலை ஏழு மணிக்கு நண்பர்கள் கூடினர். உடனே வேலை ஆரம்பிக்கப்பட்டது. மேலும் சிலர்  தொடர்ந்து வந்து இணைந்து கொண்டனர். தொழில் செய்பவர்கள், கணிப்பொறியாளர்கள், மாணவர்கள் என இளைஞர்கள் மிகுந்த குழு. மொத்தம் பதினாறு பேர்கள்.

கோவிலின் உயரமான கூரைப் பகுதிகளில் தொடங்கி முழுவதுமாக ஒட்டடை அடிக்கப்பட்டது. பின்னர் கோவிலின் மேல் பகுதிகளில் ஏணியில் ஏறிச் சென்று,  அங்கு சுத்தம் செய்யப்பட்டு தேங்கியிருந்த குப்பைகள் அனைத்தும் எடுத்துக் கீழே கொண்டு வரப்பட்டது.   உள்ளே ஓரங்களில் கிடப்பில் வைக்கப்பட்டிருந்த சாமான்களைச் சுற்றியிருந்த குப்பைகள் சுத்தம் செய்யப் பட்டது.  கடைசியாக கோவில் சுற்றுச் சுவருக்கு வெளியே உள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு, குப்பைகள் எல்லாம் மாநகராட்சி குப்பைப் பெட்டிகளில் போடப்பட்டன.

சுமார் இரண்டே முக்கால் மணி நேரத்தில் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு விட்டது. இளைஞர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பொது வேலைக்காகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வேலை செய்தது மிகவும்  பாராட்டும் வகையில் அமைந்தது. அவர்களில் ஏறத்தாழ யாருமே அந்த வகையான வேலையைத் தங்கள் வீடுகளில் அதிகம் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களே கூரைகளில் ஏறி சீமாறுகளையும், துடைப்பான்களையும் பிடித்துக் கொண்டு  குப்பைகளுக்குள் வேலை செய்து கொண்டிருந்தது அவர்களின் ஆர்வத்தைக் காட்டியது.

இடையில் கோவில் நிர்வாகத்தினர் அனைவருக்கும் தேநீர் கொடுத்து உபசரித்தனர். கடைசியில் வேலை செய்த குழுவுக்காகக் கோவில் நிர்வாகம் சிறப்பு பூசையினைச்  செய்தது. பின்னர் அனைவருக்கும் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பெரியவர்கள், பெண்மணிகள், பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் உழவாரப் பணியினை மேற்கொண்ட அனைவரையும் பாராட்டினர்.


அந்த சமயத்தில் பக்கத்தில் வசிக்கும் பேரா. நா. கணேசன் அவர்களிடம் நாங்கள்  சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு இருப்பதாக அலைபேசியில் கூறினேன். சிறிது நேரத்தில் அங்கு வந்த அவர், அனைவரையும் பாராட்டி ஐநூறு ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து விட்டுச் சென்றார். இறுதியாக விடை பெறும் போது கோவில் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த  பெரியவர், அடுத்து வரக்கூடிய இம்மாதிரி சுத்தம் செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் தனக்கும் வந்து விட்டது எனக் கூறினார். 

No comments: