2015 முதல் பொருளாதாரம் நன்றாக செயல்பட வாய்ப்புகள் அதிகம்

கடந்த ஐந்து வருட காலமாகவே பொருளாதாரத்தின் போக்கு சரியாக இல்லாமலிருந்தது எனச் சொல்ல முடியும். அதற்குக் காரணம் அரசின் மேல் மட்டத்தின் நிலவிய போக்குகள் தான். அளவுக்கதிகமான ஊழல்கள், கொள்கை முடிவுகளை நியாயமாக எடுப்பதற்குத் தடையாக அமைந்தன. அதனால்பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் அவசியமான ஒன்று. மின்சாரம் தயாரிப்பதற்கு அதிகமான அளவு நிலக்கரி கையிருப்பு நம்மிடம் உள்ளது. ஆயினும்  நாம் அவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் நிலக்கரி ஒதுக்குவதில் நிலவிய ஊழல். அதனால் உச்ச நீதி மன்றம் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம்.

மேலும் உறுதியில்லாத தலைமை தவறான முடிவுகளுக்குத் துணை போகுமாறு அமைந்து விட்டது. உதாரணமாக இயந்திரங்கள் மற்றும்  தளவாடங்களின்  இறக்குமதி தேவையில்லாமல் அனுமதிக்கப்பட்டன.   உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் போது, பிற நாடுகளிலிருந்து அவை தாரளமாக வந்திறங்குவதற்குத் திட்டங்கள் போடப்பட்டன. அதனால் உள்நாட்டுத் திறன்களும், வேலை வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டதோடு, நமது நிதிப் பற்றாக்குறையும் அதிகரித்துச் சென்றது.

அதனால் சென்ற ஆட்சியின் கடந்த பத்தாண்டுகளில் குறிப்பாக கடைசி இரண்டு நிதியாண்டுகள், 2012-13 மற்றும் 2013-14, மிகக் குறைவான வளர்ச்சி விகிதத்தைக் கண்டன. அதிக வாய்ப்புகள் உள்ள உற்பத்தித் துறையில் வளர்ச்சி விகிதம் பெரும் வீழ்ச்சியைக் கண்டது. எனவே உலக அளவில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகக் கருதப்பட்டு வந்த இந்தியப் பொருளாதாரம், 2014 ஆம் ஆண்டு பாதி வரையிலும் மிகவும் நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தது.

பொருளாதார முன்னேற்றத்தை  முக்கிய குறிக்கோளாக வைத்துள்ள புதிய அரசு, பொறுப்பேற்றது முதற்கொண்டே பல முக்கிய முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தி வருகிறது. நிர்வாகத்தைச் சீர்படுத்துவதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன. அரசு மட்டத்தில் தேவையில்லாத செலவுகளைக்  குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் ‘ மேக் இன் இந்தியா’ போன்ற சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகையால் 2015 ஆம் ஆண்டு மிகவும் நம்பிக்கையுடன் துவங்கி உள்ளது. வருகின்ற புள்ளி விபரங்களும் ஆறுதல் அளிப்பதாகவே உள்ளன. உற்பத்தித் துறை கடந்த 2014-15 ஆம் நிதி ஆண்டில்  6.8 விழுக்காடாக உய்ர்ந்துள்ளது. அது முந்தைய நிதியாண்டில் 5.3 விழுக்காடாக இருந்தது. நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகள் என எல்லாமே இந்த வருடம் தொடங்கி இந்தியப் பொருளாதாரம் நன்கு வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாகக் கணிக்கின்றன. இந்த ஜனவரி மாதம் சர்வதேச நிதி ஆணையம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2016 ஆம் வருடத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் சீன நாட்டையும் மிஞ்சி விடும் எனத் தெரிவித்துள்ளது.  அதன் மூலம் உலகிலேயே அதிக வேகத்தில் வளரும் நாடாக இந்தியா உருவாகி விடும்.  

ஆனால் அதிகமான  வளர்ச்சி விகிதம் மூலம் மட்டுமே எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்க முடியாது. வறுமை நீங்கி, விவசாயம் உள்ளிட்ட பல வகைத் தொழில்களும் வளர்ந்து, வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் போது தான் அனைவருக்கும் பலன் கிடைக்கும். அதற்கு அரசு கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.  அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, அதற்கான செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகத்  தெரிகிறது.


( ”இந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரம் மலரும் வாய்ப்பு அதிகம்” என்ற தலைப்பில் தினமலர், பிப்.21, 2015)

No comments: