மாதொருபாகன் நாவல் விவகாரம்: மக்களின் மீதான தாக்குதல்


திருச்செங்கோடு தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நகரம். திருச்செங்கோடு என்றவுடனே நினைவுக்கு வருவது அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவில்தான். ஆணும் பெண்ணும் சரிபாதி என்னும் இந்தியப் பண்பாட்டின் உயர்ந்த தத்துவத்தை நிலை நாட்டும் வகையில் மாதொரு பாகனாக ஆண்டவன் அங்கே காட்சி தருகிறார். கொங்கு நாடு முழுவதுமுள்ள கிராமங்கள் பலவற்றுக்கும்   அர்த்தநாரீஸ்வரர் கோவிலுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.  

திருச்செங்கோடு  பகுதி விவசாயம் சார்ந்ததாகவே இருந்து வந்தது. கடந்த காலங்களில் போதிய நீர்வளம் இல்லாததால் மக்கள் வெவ்வேறு தொழில்களுக்கு மாறினார்கள். தங்களின் கடினமான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வினால் இன்று வெவ்வேறு  தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்செங்கோடு ஒரு சுதேசி தொழில் மையம். முழுக்க முழுக்க சாதாரண மக்களின் உழைப்பினால் அரசின் துணையின்றி உருவான பகுதி. சில விதங்களில் தொழில் முனைவுக்கு தேச அளவில் கூட ஒரு எடுத்துக்காட்டு. அந்தப்பகுதி மக்களின் தொழில் திறமை தமிழகத்தின் பல  பகுதிகளை விடச் சற்று அதிகம். அவர்களிடத்தில் அசாத்தியமான தொழில் முனையும் தன்மை உள்ளது.

சென்ற 2011 ஆம் வருடம் வடகிழக்கு மாநிலங்களுக்கு இரண்டு வாரப் பயணமாகச் சென்றிருந்தோம். முதல் நாள் அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரான இடாநகரில் கருத்தரங்கு முடிந்து விடுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அங்கு வழியில் ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரம் வேலை செய்து கொண்டிருந்தது.

அருகில் சென்ற பார்த்த போது அது திருச்செங்கோட்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது. இவ்வாறு அப்பகுதி மக்கள் ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலை நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆகையால் இப்போது திருச்செங்கோடு நாடு முழுவதும் அறியப்படும் நகரமாக உள்ளது. போக்குவரத்துத் தொழிலில் பக்கத்தில் உள்ள நாமக்கல் மற்றும் சங்ககிரி தேசிய அளவில் மிக முக்கியமான தொழில் மையங்கள். எனவே அந்தத் தொழில் திருச்செங்கோட்டிலும் உள்ளது. மேலும் விசைத்தறி,  ஜவுளி உள்ளிட்ட தொழில்களை  மக்கள் செய்து  வருகின்றனர். 

 அர்த்தநாரீஸ்வரர் கோவில் மற்றும் தொழில் முனையும் தன்மைக்கு எடுத்துக்காட்டாக நாடு முழுவதும் பெருமையுடன் அறியப்பட்டு வந்த திருச்செங்கோடு,  கடந்த இரண்டு மாதங்களாக ஒரு தவறான காரணத்துக்காக பரவலாகப் பேசப்பட்டு  வருகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிக்கைகள், தேசிய மற்றும் மாநில    ஊடகங்கள்  எனப் பலவற்றிலும் தொடர்ந்து கட்டுரைகளும்,  விவாதங்களும், செய்திகளும் தொடர்ந்து  வந்து கொண்டுள்ளன. 

அதன் பின்னணியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியரான பெருமாள் முருகன் என்பவர் எழுதிய மாதொரு பாகன் என்னும் நாவல் உள்ளது. அவரது புத்தகத்தில்  எழுபது வருடங்களுக்கு முன்னால் அங்கு நடந்தவற்றைச் சொல்வதாகக் கதையைப் படைத்துள்ளார்.  அது திருச்செங்கோட்டுக்கு அருகில் உள்ள கிராமப் பகுதியில்  வாழ்ந்த மக்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

தனது நாவலுக்காகக்  கள ஆய்வுகள் மூலம் தகவல்களைச் சேகரித்ததாக அவர் முன்னுரையில் கூறுகிறார். மேலும் அதை எழுதுவதற்காக ஒரு குறிப்பிட்ட அமைப்பில் நிதி பெற்றிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தகம் வெளிநாட்டு வாசகர்களுக்காகப் பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

நாவலின் கதாநாயகர்கள் அங்கு பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். அந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகிப்  பல வருடங்களாகக் குழந்தை பிறக்கவில்லை.  திருமணமானவர்கள் குழந்தைப் பேற்றுக்காக இறைவனை வேண்டுவதும்,  மலைக்கு மேலே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் சென்று வழிபடுவதும் காலம் காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம்.

நாவலில் குழந்தைப் பேறு தாமதமானதால், கதாநாயகி கோவில் தேர்த் திருவிழாவின் பதினான்காம் நாளன்று இரவு முகம் தெரியாத வேறு ஆணுடன் உறவு கொள்ளுமாறு உறவினர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறார். அதற்கு அந்தப் பெண் மறுக்கவே, அது குழந்தைப் பேறு தாமதமானவர்களுக்கு வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடை முறைதான் என்றும், அதற்காகவே அன்று ஆண்கள் இரவு நேரத்தில் காத்துக் கிடப்பார்கள் என்றும், எனவே அதில் தவறு இல்லை எனவும் சொல்லப்படுகிறது.  மேலும் அப்படிப் பிறக்கும் குழந்தைகள் ‘சாமி குழந்தைகள்’ என்று அழைக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் நாவல் கூறுகிறது.

திருச்செங்கோடு பகுதியைப் பொறுத்தவரையில் அங்கு வருடா வருடம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் முக்கியமானது. பதினைந்து நாட்கள் நடை பெறும் அந்த விழாவில் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுடன் சேர்ந்து அது மிகவும்  விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் பிரச்னையின் பின்னணியை அறிந்து கொள்ள இரு வாரங்களுக்கு முன்பு ஈரோடு பகுதியைச் சேர்ந்த இரண்டு தொழில் துறை நண்பர்களுடன் திருச்செங்கோடு சென்றிருந்தேன். அப்போது அங்கு வாழும் பல சமூகங்களைச் சேர்ந்த மக்களையும், கோவில் கட்டளைதாரர்களையும் சந்தித்தோம். அப்போது அவர்கள் உண்மைகள் வெளியில் தவறாகச் சித்தரிக்கப்படுவதாக மிகுந்த மன வேதனையுடன்  கூறினர்.   

சென்ற வருட இறுதியில் அந்த நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை சிங்கப்பூரில் வாழும் அந்த ஊரைச் சேர்ந்தவர் படித்திருக்கிறார். அதன் பின் அவர் இங்குள்ள  தனக்கு நெருக்கமானவர்களைத் தொடர்பு கொண்டு, அந்தப் புத்தகத்தின் மூலமான தமிழ் நாவலைப் படிக்குமாறு சொல்லியிருக்கிறார். அதன் பின்னரே அதிலுள்ள விசயம் அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.

காலங்காலமாக தாங்கள் பிரதானமாக வழிபட்டு வரும் தெய்வத்தின் தேர்த் திருவிழா நிகழ்வுகள் பற்றியும், தங்கள் ஊர்ப் பெண்களின் கற்பு பற்றியும் மிகவும் கேவலமாகச்  சித்தரித்துள்ளதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அங்குள்ள சிலர் நாவலாசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்டுள்ள விபரங்களுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர். அவர் அதற்கு முறையாகப் பதில் அளிக்காமல், இணைப்பையும் துண்டித்து விட்டதாகச் சொல்கின்றனர். அங்கு நாங்கள் சந்தித்த இரண்டு பேர்   அவரிடம் பேசியதாகச் சொன்னார்கள். அவர்களில் ஒருவர் தனது குடும்பம்  நாவலாசிரியருக்கு  நெருக்கமானது  எனக் கூறினார். 

பின்னர் உண்மையை அறியும் நோக்கில் ஊர் மக்கள் கூடிப் பேசி  காவல் துறையை அணுகி நாவலாசிரியர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியுள்ளனர்.  நாட்கள் கடந்த பின்னரும், அங்கு எதுவும் நடக்காததால், திருச்செங்கோடு நகரில் அவர்கள் ஒரு நாள் கடையடைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி கடையடைப்பு அனைவரின் ஒருமனதான ஆதரவாலும் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

நிலைமையின் தன்மையைப் புரிந்து கொண்ட மாவட்ட நிர்வாகம், அதன் பின்னர் பிரச்னையைத் தீர்த்து வைக்க எழுத்தாளரிடமும் பொது மக்கள் பிரதிநிதிகளுடனும் தனித் தனியாகப் பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளது. பொதுமக்கள் தரப்பில் புத்தகத்தில் தவறாகக் குறிப்பிட்டுள்ள விசயங்களுக்கு நாவலாசிரியர் ஆதாரம் காட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இல்லையெனில், தவறாகக் குறிப்பிட்டுள்ள பத்திகளை நீக்க வேண்டும் எனவும், அடுத்த பதிப்புகளில் அவை இடம் பெறக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அப்போது சம்பந்தப்பட்ட  அதிகாரியின் முன்னிலையில் நாவலாசிரியர் நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விசயங்கள் கற்பனையென்றும், அந்தப் புத்தகத்தின் விற்காத பிரதிகளைக் கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுக்  கொள்வதாகவும் எழுதிக் கொடுத்துள்ளார்.  பொது மக்கள் தரப்பில் இனிமேல் எந்தவிதப்  போராட்டமும் நடத்தப் படக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது. அதற்கு அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். அவற்றை ஒரு ஒப்பந்தமாக அந்த அரசு அதிகாரி இரு தரப்பிலும் கையெழுத்துகளை வாங்கி முடித்துள்ளார்.

மறு நாள் பெருமாள் முருகன் தனது முகநூல் பக்கத்தில் தனக்குள்ளிருந்த நாவலாசிரியர் செத்து விட்டதாகவும், இனிமேல் ஒரு கல்லூரி ஆசிரியராக மட்டுமே அவர் செயல்படுவாரென்றும் அறிவித்தார். உடனே அந்த விசயம் பத்திரிக்கைகளில் வெளிவந்தது. தொடர்ந்து சென்னையில் உள்ள பத்திரிக்கையாளர்கள்,  ஊடகங்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், இடது சாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரால்  அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  

அதற்காகப் பல கட்டுரைகள் எழுதப்பட்டன; நாடு முழுவதும் செய்திகள் வந்தன. தேசிய அளவிலான ஆங்கிலத் தொலைக்காட்சிகளிலிருந்து, தமிழகத் தொலைக் காட்சிகள் வரை பலவற்றிலும் விவாதங்கள் நடத்தப் பட்டன.  மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கூட்டங்கள் இன்னமும் நடைபெற்று வருகின்றன.  சர்வதேச அளவில் பி.பி.சி. மற்றும் பாகிஸ்தான் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன.

அவை எல்லாவற்றிலும் முக்கியமாக உள்ளூர் மக்கள் ஜாதியவாதிகளாகவும், மத வெறி பிடித்தவர்களாகவும் ஒரு மனதாகச் சித்தரிக்கப்பட்டனர்.  ஒரு பிரபலமான ஆங்கில தொலைக்காட்சி அவர்களை ‘லும்பென்’ (lumpen) என மோசமாகக் குறிப்பிட்டது. தமிழகத்தின் ஒரு இடதுசாரி அறிவுஜீவி ‘ பாசிசக் குழு’ என அம்மக்களை வர்ணித்ததாக பத்திரிக்கைச் செய்தி வந்தது.

நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் நாவலாசிரியரின் எழுத்துரிமைக்கு என்று சொல்லி  வாதாடும்  அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விசயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா? தாங்கள் புனிதமாக வழிபடும் தெய்வத்தின் தேர்த் திருவிழா பற்றியும், தங்கள் பகுதி பெண்களின் மானம் பற்றியும் வரலாறு என்று சொல்லித் தவறுதலாகச் சித்தரித்தற்கு ஆதாரம் கேட்பதற்கு அவர்களுக்கு எந்த வித உரிமையும் இல்லையா?

ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு  எந்தவிதமான  ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர்.  அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும்  பொறுப்புக்கள் உள்ளன. அதற்கான கட்டளைகள் அவர்கள் அனைவருக்கும் காலங்காலமாக இருந்து வருகிறது.

மேலும் தாங்கள் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடவில்லை என அவர்கள் கூறுகின்றனர். அமைதியான முறையில் தமது எதிர்ப்புகளைச் சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள்  தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து  ஊர்வலமாகச் சென்றபோது, சிலபேரால் புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கங்களின் பிரதிகள் எரிக்கப்பட்டன.    

அதற்காக அவர்களை வன்முறையாளர்கள் என ஊடகங்கள்  சித்தரிக்கப்படுவது  குறித்து மிகவும் கவலை  தெரிவிக்கின்றனர். அந்த  மக்களைப் பற்றி எவ்வளவோ குறைகளைச் சொல்லும்  ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து அங்கு என்ன நடந்து வருகிறது என்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாமே? அதற்கு என்ன தயக்கம்? இந்த விசயத்தைப் பொறுத்த மட்டில் ஏன் தலைநகரில் இருந்து ஒரே மாதிரியாகவே கருத்துக்கள் வருகின்றன?

புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்த்திருவிழாவின் பதினான்காவது நாள் நிகழ்ச்சிக்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்றும், அது முற்றிலும் தவறானது என்றும் மக்கள் கூறுகின்றனர். புலவர் இராசு கொங்கு நாட்டின் முக்கியமான சமகால வரலாற்றாசிரியர். தமிழ் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டு மற்றும் அகழ்வாராய்ச்சித் துறையின் தலைவராக இருந்தவர்.  நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியவர். தமிழக அரசின் முதல் உவேசா விருதினைப்  பெற்றவர்.  திருச்செங்கோட்டுக்கு அருகில் உள்ள மாவட்டமான ஈரோட்டைச் சேர்ந்தவர். 

அவர் நாவலில் குறிப்பிட்டுள்ள அந்த விசயங்களுக்காக எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளார்.  மேலும் கொங்கு நாட்டுப் பெண்கள் ஆரம்ப முதலே தமது உயிரை விடவும் மானத்தைப் பெரிதாகக் கருதி வாழ்ந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கிறார். அங்குள்ள வயதில் மூத்தவர்களும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள மாதிரி எதுவும் இருந்ததாகத் தாங்கள் இதுவரை கேள்விப்பட்டதே  இல்லை எனக் கூறுகின்றனர்.

மேலும் அந்த நாவலில் வரலாற்றுப் பிழைகள் உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக அங்கு தேவடியாள் தெரு என இருந்ததாகப் புத்தகத்தில்   குறிப்பிடப்பட்டுள்ளது.  தேவரடியார்கள் சமூகத்தைச் சேர்ந்தவரும், கோவில் கட்டளைதாரருமான ஏ. கோபால கிருஷ்ணன் அது முற்றிலும் தவறு என மறுக்கிறார். அது தேரடித் தெரு என்றும், அதிலுள்ள முதல் வீடே அந்த  நகரத்தின் முக்கியத் தலைவராக விளங்கிய டாக்டர் சுப்பராயன் அவர்களுக்குச் சேர்ந்தது என்றும், இன்னமும் அது அவர்களின் குடும்பத்திடமே இருந்து வருகிறது என்றும் கூறுகிறார்.

சுப்பராயன் அவர்கள் 1926 முதல் 1930 வரை மெட்ராஸ் பிரசிடென்சியில் முதலமைச்சராகவும், பின்னர் நேருவின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும், இந்தோனேசியா நாட்டுக்கு நமது தூதராகவும் பல பொறுப்புகளில் இருந்தவர். அவரது குடும்பத்தினர் தொடர்ந்து இன்று வரை அரசாங்கத்தில்  முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.

நன்கு படித்து சொந்தமாகத் தொழில் புரியும் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி என்னிடத்தில் சொன்னார். “ சார், திருமணமாகி ஆறு வருடங்களாக எனக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அதற்காகத் தினமும் நான்  மாதொருபாகனை வேண்டி வருகிறேன். எனக்குக் குழந்தை பிறக்கும் போது, இந்த உலகம் என்னை எப்படிப் பார்க்க வேண்டுமென இந்த முற்போக்கு வாதிகள் விரும்புகிறார்கள்?” அப்படிச் சொல்லும் போதே அவர் கண்களில் நீர் ததும்பியது.

பிரபல சமூகவியலாளர் பிரான்சிஸ் புகுயாமா சொல்கிறார்: “ சமூகங்களை எளிதில் அழித்து விடலாம். ஆனால் அவற்றை மீண்டும் உருவாக்குவது எளிதான காரியமல்ல” இந்திய தேசம் குடும்பங்களாகவும், சமூகங்களாகவும்  அமைதியான முறையில் இயங்கி, மக்கள் தங்களின் வாழ்க்கையைத் தமது கலாசாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றையொட்டித் தொடர்ந்து  நடத்தி வருகின்றனர். அவர்கள் அடுத்தவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. அரசாங்கத்தைக் கூடச் சார்ந்து நிற்பதில்லை.

இந்தப் பண்புகள் தான் இன்று உலக அளவில் நமது தேசத்தின் மிகப் பெரிய பலம். நமது சமூகங்கள் தேசத்தின் அமைதிக்கும்  பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவு ஆற்றி வரும் பங்கு பற்றி ஆய்வுகள் வந்து கொண்டுள்ளன.   அப்படித்தான் திருச்செங்கோடு, நாமக்கல், சங்ககிரி,  சிவகாசி, சூரத்  ஆகியன இன்று தேசப் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன.  அதற்கு அந்த மக்களின் கலாசாரம் மற்றும் வாழ்க்கை நெறிகள் ஆகியவையே காரணமாக இருந்து வருகின்றன.   

எனவே தங்களின் தெய்வத்தைக் கொண்டாடி  வழிபட்டு அமைதியாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை ஏன் மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டும்? அவர்கள் என்ன குற்றத்தைச் செய்தார்கள்? அறிவு ஜீவிகள் என்றும் விபரம் தெரிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பெரு நகரங்களில் உட்கார்ந்து, தூரத்தில் வாழ்ந்து வரும் மக்கள்  மேல் பழி சுமத்திக் கொண்டே போவது எந்த வகையில் நியாயம்? 

 ஊடகத்தின் மூலம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வாய்ப்பில்லாத மக்களின் கருத்துக்களைத் தெரிவிக்க உதவுதுதான் அறிவுலகவாதிகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே அது முற்றிலும் மாறாக நடக்கிறதே? கொலைக் குற்றவாளிக்குக் கூட  அவனது கருத்தைச் சொல்ல வாய்ப்புக் கொடுத்த பின்னரே தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த விசயத்தில் எந்த வித வாய்ப்பும் கொடுக்கப்படாமல் அந்த ஊர் மக்கள் அனைவர் மீதும் தொடர்ந்து  குற்றம் சாட்டிக் கொண்டே செல்வது எந்த வகையில் நியாயமாகும்?

எந்த வித ஆதாரமும் இல்லாமல் நடைமுறைகள் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன;  கற்பனை வரலாறாகிறது. பின்னர் அவற்றுக்கு விளக்கம் கேட்கும் மக்கள் தொடர்ந்து கேவலப்படுத்தப் படுகின்றனர். எனவே இந்தப் பிரச்னை கருத்துச் சுதந்திரம் பற்றியதல்ல. மாறாக பாரம்பரியமான தமிழ் கலாசாரத்தின் மீதும், தமது உயிரை விட மானத்தைப் பெரிதாகக் கருதும் பெண்கள் மீதும், அந்தப் பகுதி சார்ந்த ஒட்டு மொத்த மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகவே உள்ளதாக மக்கள்  கவலை தெரிவிக்கின்றனர்.   

( சுதேசி செய்தி, மார்ச் 2015)


No comments: