இந்தியப் பொருளாதாரம் - ஆழம் மாத இதழ் பேட்டி

இந்தியப் பொருளாதாரம்:
பண்டைய காலம் முதல் இன்று வரை

1.     பாரதப் பொருளாதாரம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு வரை எப்படியாக இருந்தது? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.

பண்டைய காலத்திலேயே பாரதப் பொருளாதாரம் செல்வச் செழிப்புடன் விளங்கியதாக ஆதாரங்கள் சொல்கின்றன.  நாலாயிரத்து ஐநூறு வருடத்துக்கு முந்தைய இந்து சரஸ்வதி நாகரிக காலத்தில் ஹரப்பா மொஹஞ்சாதாரோ ஆகிய நகரங்கள் மிக உயர்ந்த தரத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த விதம், அப்போதைய நமது மக்களின் பொருளாதார மற்றும் நாகரிக வளர்ச்சியைக் காட்டுகின்றன.   

உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரம் 2300 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது. அதன் ஆசிரியர் கௌடில்யர் தனக்கு முந்தைய காலங்களில்  வாழ்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை மேற்கோள் காட்டுகிறார். பொருளாதாரம் எனத் தனி நூலாக வர வேண்டுமானல் அதற்கான தேவை அப்போதே இருந்திருக்கிறது. மேலும் அதில் சொல்லப்படும் விசயங்கள் ஒரு வளர்ந்த நாட்டுக்கான விசயங்களாக இருக்கின்றன.

உதாரணமாக  ஏற்றுமதி இறக்குமதி, ஜவுளி ஆகியவற்றுக்கென தனித்துறைகள், அவற்றுக்கான  அரசு நிர்வாக அமைப்பு முறை, வரிகள், விலைகள் நிர்ணயம், சந்தைக் கட்டுப்பாடு, நுகர்வோர் நலன் பற்றிய விசயங்கள்  பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் இருந்த நாட்டுக்கான விபரங்களாக உள்ளன.  

நமது நாடு சுமார் ஐயாயிரம் வருட காலந் தொட்டு   ஏற்றுமதியில் உலக அளவில் முன்னணியில் இருந்து வந்துள்ளதாக வரலாற்றாசிரியர் அகர்வாலா தெரிவிக்கிறார். குறைந்தது 2800 வருடங்களுக்கு முன்னரே தற்போதைய கம்பெனி அமைப்பு முறை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தொழில்கள்  செயல்பட்டு வந்ததாக அண்மைக் கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  மேலும் அவையெல்லாம் இங்கு தான் இருந்தன  என்றும்,  தற்போதைய நவீன அமெரிக்க கம்பெனி அமைப்பு முறையை விடவும் உயர்ந்து விளங்கியதாகவும்  தெரிகிறது.

பொது யுக காலமான கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உலகப் பொருளாதாரம் குறித்த புள்ளி விபரங்கள் தற்போது வந்துள்ளன. வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசனின் ஆய்வுகள் பொது யுக தொடக்க காலத்தில் ( அதாவது 2015 ஆண்டுகளுக்கு முன்),  உலகப் பொருளாதாரத்தில் நமது நாடு 32.9 விழுக்காடு பங்களிப்புடன் முதல் நிலையில் இருந்துள்ளது. அதனால் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இருந்துள்ளது.  மேலும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் எண்பது விழுக்காடு காலம் முதல் இடத்திலேயே இருந்து வந்துள்ளது. அதன் மூலம் உலக வரலாற்றில் ஒரு நீடித்த தன்மை கொண்ட பொருளாதாரமாக இந்தியா விளங்கி வந்துள்ளது.

2. இந்திய பாரம்பரியத் தொழில்கள் குறிப்பாக வணிகம் குடும்ப/குலத் தொழிலாகத்தானே இருந்தது. ஒட்டு மொத்த சமூகத்துக்கு இது என்ன நன்மையைத் தந்திருக்கும். உதாரணமாக, யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்து முன்னேற வழி இருப்பதுதானே பொருளாதாரத்துக்கும் தனி நபர் வளர்ச்சிக்கும் நல்லது?

இந்தியத் தொழில்களும் வணிகமும் நீண்ட வரலாறும் பாரம்பரியமும் கொண்டவை. அவற்றில் ஐயாயிரம் வருடங்களாக நமது நாடு உலக அளவில் சிறந்து விளங்கி முன்னணி நிலையிலும் இருந்து வந்ததாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். வரலாற்றில் இன்று நாம் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்து விட்டோம். அதனால் முந்தைய நூற்றாண்டுகள் சம்பந்தப்பட்ட நமது எல்லா சந்தேகங்களுக்கும் முழுமையான பதில்கள், விரிவான  ஆய்வுகளுக்குப் பின்னரே உறுதியாகக் கிடைக்கும்.

துரதிர்ஷ்டவசமாக நமது பண்டைய காலப் பொருளாதாரம், தொழில்கள் மற்றும் வணிகம் குறித்த வரலாறு பற்றி நமது நிபுணர்களும் பல்கலைக்கழகங்களும் போதுமான ஆய்வுகளை மேற்கொள்வதில்லை. நமக்குக் கிடைத்து வரும் பெரும்பாலான விபரங்கள் மேல் நாட்டு நிபுணர்கள் மற்றும் அமைப்புகள் மூலமே கிடத்துள்ளன. இங்கு நாம் ஆய்வுகளை அதிகமாக மேற்கொள்ளும் போது நமது பல கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்புள்ளது.

நமக்குக் கிடைக்கின்ற விபரங்கள் மூலம் தொழில்கள் மற்றும் வணிகம் குறிப்பிட்ட காலங்களில் பெரும்பாலும் குடும்ப/ குலத் தொழிலாக இருந்தாலும், அவை பிற குடும்பங்களுக்கோ அல்லது குலங்களுக்கோ மறுக்கப்பட்டதாகத் தெரியவில்லை; மாறாக யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்வதற்கு வாய்ப்புகள் இருந்ததாகவே குறிப்புகள் பலவும் தெரிவிக்கின்றன. 

3.     கடந்த காலத்தில் இந்தியாவும் சீனாவும் பொருளாதாரத்தில் உயரிய நிலையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. எந்த அடிப்படையில் இது சொல்லப்படுகிறது? இந்தியத் தொழிலாளர்களின் சம்பளம் பிற நாட்டை விட அதிகமாக இருந்ததா.? இந்திய உற்பத்தி பிற நாடுகளைவிட அதிகமாக இருந்ததா..? இந்திய தொழில்கள் பிற நாட்டுத் தொழில்களைவிட லகுவானதாக, தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்ததாக இருந்ததா? இந்தியாவில் பிற நாடுகளைவிட செல்வம், வளம் முறையாகப் பகிர்ந்து தரப்பட்டதா?  இந்தியாவில் கடை நிலை சாதியினருடைய வாழ்க்கைத்தரம்  எப்படி இருந்தது.? ஒட்டு மொத்த சமூகமும் வளமாக இருந்ததாகச் சொல்ல முடியுமா?

கடந்த பல வருடங்களாக உலக அளவில் வெளிவந்து, நிபுணர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட  வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலேயே  இந்தியாவும் சீனாவும் உயர்ந்த நிலையில் இருந்துள்ளதை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். குறிப்பாக பணக்கார நாடுகளின் அமைப்பான “ பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு ( Organisation for Economic Cooperation and Development) வெளியிட்டுள்ள மாடிசன் குழுவின் ஆய்வுகள் இரண்டாயிரம் ஆண்டுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் வரை இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து முதல் இரண்டு நிலைகளில் உலக அளவில் செல்வந்த நாடுகளாக இருந்து வந்ததைப் புள்ளி விபரங்களுடன் எடுத்துக் காட்டுகின்றன.

அமெரிக்க நிபுணர் பால் எஸ்.கென்னடி உலக நாடுகளின் உற்பத்தித் துறை குறித்து ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். அதில் 1750 ஆம் வருடத்தில் இந்தியா உலக உற்பத்தியில் ஏறத்தாழ கால்பகுதி (24.5 விழுக்காடு) பங்களித்துக் கொண்டிருந்ததைச் சொல்லுகிறார். அப்போது நமது நாட்டில் கால் பதித்துக் கொண்டிருந்த இங்கிலாந்தின் பங்கு வெறும் 1.9 விழுக்காடு; அமெரிக்காவின் பங்கு 0.1 விழுக்காடு மட்டுமே.

இந்தியாவின் உற்பத்தித் திறன் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவை நம்மிடம் மற்ற நாடுகளை விடப் பல மடங்கு உயர்ந்து இருந்ததை பிரெஞ்சுப் பொருளாதார வரலாற்றாசிரியர் பிராங்க் உள்ளிட்ட பல பேர் எடுத்து வைத்துள்ளனர்.  தொழில் நுட்பத்தைப் பொறுத்த வரையில் இந்தியா வெவ்வேறு துறைகளில் முன்னோடியாக இருந்ததற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. உலக அளவில் அவை ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப் படுகின்றன.

கப்பல் கட்டும் தொழிலில் ஆரம்ப காலந் தொட்டு ஆங்கிலேயர் வரும் வரை நாம் உலகின்  முன்னோடியாக இருந்தது ஏற்றுக் கொள்ளப்பட்ட விசயம். ஜவுளித் துறையில் நமது நாடு முந்தைய காலந் தொட்டு தனது தொழில் நுட்பத்தால் உலக முழுவதும் கோலோச்சி வந்தது குறித்து பொது யுகம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானிய அறிஞர் பிளினி தொடங்கி, நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் வரை தெளிவாகக் கூறியுள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டில் கொங்கு நாட்டுப்பகுதியில் உள்ள  கொடுமணல் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே உலகத்தரம் வாய்ந்த உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட எஃகு ஆலை செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.  அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளது.  

இந்தியப் பாரம்பரியத்தில் அனைவரும் நன்கு வாழ வேண்டும் என்பது அடிப்படையாக விளங்கி வந்துள்ளது. இந்திய வரலாறு பற்றித் தெரிந்த வெளிநாட்டு   அறிஞர்கள் அனைவருமே இந்தியா உலகிலேயே அதிக அளவு மனிதாபானம் நிறைந்த நாடு என்று குறிப்பிடுகின்றனர்.

அர்த்த சாஸ்திரத்தில் பல வகையான  ஊழியர்களுக்கும்  ஊதியம் குறிப்பிடப்பட்டுள்ளது. வியாபாரிகள் மிக அதிகமாக இலாபம் வைத்து பொருட்களை விற்பதை கட்டுப்படுத்த முறைகள் இருந்துள்ளன. விவசாயம் செய்பவர்களுக்கு நிதி சுலபமாகவும் வட்டி குறைந்த அளவிலும் கிடைக்க முறைகள் இருந்துள்ளன. விதவைப் பெண்களுக்கு அவர்களுக்குச் சிரமமின்றி வருமானம் ஏற்படுத்தித் தர நடைமுறைகள் இருந்துள்ளன.

முந்தைய காலத்திய நூல்கள் பல தொழிலாளர் நலன் சம்பந்தமாக இருந்த முறைகளைப்  பற்றிச் சொல்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு தொழிலாளர் நலனைக் காக்கத் தேவையான  பலவிதமான  முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  உதாரணமாக   மருத்துவ விடுப்பு உள்ளிட்ட வெவ்வேறு  விதமான விடுப்புகள்,  8.33 விழுக்காடு போனஸ், வாரிசுகளுக்கான உரிமைகள் உள்ளிட்டவை பற்றியெல்லாம்  தெளிவான குறிப்புகள் உள்ளன.

பழைய காலந் தொட்டு வெளி நாடுகள் பலவற்றிலும் அடிமை முறை, பெண்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுதல், பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல் ஆகியன தொடர்ந்து நடைமுறையில் இருந்துள்ளன.  பதினெட்டாம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து உள்ளிட்ட   ஐரோப்பிய நாடுகளில் அவர்களின்  பொருளாதார உற்பத்தியில் அடிமை வியாபாரம் கணிசமான அளவு  வருமானத்தைப் பெற்றுத் தந்துள்ளது.  

நமது நாட்டைப் பொறுத்தவரையில் கிராமங்கள் தன்னிறைவு பெற்றுச் செயல்பட அமைப்பு முறைகள் இருந்துள்ளன. அனைத்து பிரிவு மக்களுக்கும் உணவு உள்ளிட்ட தேவைகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான நடைமுறைகள் செயல்பட்டு வந்துள்ளன. நாட்டின் கிராமங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கல்விக் கூடங்கள் பரவலாகச் செயல்பட்டு வந்துள்ளன. புகழ் பெற்ற நாளந்தா உள்ளிட்ட பல்கலைக் கழகங்கள் மற்றும் பள்ளிக் கூடங்களை சமூகங்களே நடத்தி வந்துள்ளன.  

1820 களில் ஆங்கிலேயர்கள் நமது நாட்டில் நடத்திய கணக்கெடுப்புகளின் படி, சூத்திரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் தமிழகப் பகுதிகளிலேயே அதிக அளவில் படித்து வந்தது தெரிகிறது.ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னரே கீழ் நிலையில் உள்ள மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது. அதுவரை கல்வி நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாகவே கொடுக்கப் பட்டு வந்தது. அதனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட தொடக்கத்தில் உலக அளவில் நாம் அதிக அளவு கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்துள்ளோம். அதே சமயம் நம்மை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் நாட்டில் கல்வி முறை பெரும்பான்மை மக்களுக்கு மறுக்கப்பட்டு, மத போதனைகள் நிறைந்திருந்ததை அவர்களின் ஆவணங்களே சொல்லுகின்றன.

ஆங்கஸ் மாடிசன் போன்ற வரலாற்றாசிரியர்கள்  பிரிட்டிஷார் இங்கு வருவதற்கு முன்னர் சாதாரண வேலைகள் மற்றும் தொழில்களிலிருந்த  மக்களுக்கு அதிக வருமானம் கிடைத்து வந்ததைக் குறிப்பிடுகின்றனர். கிராமப் பொருளாதாரம், கைத்தொழில்கள், வியாபாரம் ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டதால், பெருமளவு மக்கள் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மெட்ராஸ் பிரசிடென்சியில் மட்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் தம் தொழிலை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஒட்டு மொத்த சமூகங்கள் நன்றாக இருந்ததற்கான அறிகுறிகள் வலுவாக உள்ளன. இது குறித்து நமது இலக்கியங்கள் தொடங்கி, யுவான் சுவாங் உள்ளிட்ட பல வெளிநாட்டு யாத்ரீகர்கள், வில் துரந்த் போன்ற வரலாற்றாசிரியர்கள், நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேய அதிகாரிகள் ஆகிய பலரும் சமுதாயம் வளமாகவும் சிறப்புடனும் விளங்கி வந்ததாகக் கூறுகின்றனர்.  மற்றபடி இப்போது உள்ள மாதிரி குறியீடுகள் அப்போது இல்லை.  மேலும் இடைவெளியில்லாமல் தொடர்ந்து எல்லாக் காலத்துக்கும், சமூகம் சம்பந்தப்பட்ட   எல்லா விபரங்களும்   நம்மிடம் இப்போது இல்லை. 

4.     பிரிட்டிஷாரின் ஆளுமைக்குட்பட்ட காலத்தில் நமது பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? 

இந்தியாவில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சி உலக வரலாற்றிலேயே மிகவும் இழிவானதும், ஒரு நாடு இன்னொரு நாட்டை கிரிமினல் தனமாக சுரண்டியதும் ஆகுமென அமெரிக்க வரலாற்றாசிரியர் வில்துரந்த் கடுமையான வார்த்தைகளில் கூறுகிறார்.  அவர்கள் இங்கு வந்த சமயத்தில் பொது யுகம் 1700 ஆம் வருடத்தில் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா சுமார் கால் பங்கினைத் தன் வசம் வைத்து, முதலிடத்தில் இருந்தது. அதுவே சுதந்திரத்தின் போது சுமார் நான்கு விழுக்காடு அளவுக்குக் குறைந்து போனது.  உலகின்  செல்வந்த நாடாக விளங்கி வந்த நமது நாடு, ஒரு இருநூற்றைம்பது வருட காலத்தில் மிகவும் ஏழை நாடாக அடுத்தவர்களைச் சார்ந்து நிற்கும் அளவுக்கு  ஆகிப் போயிருந்தது.  

விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் எனப் பலவும் கடுமையான பாதிப்புக்குள்ளாயின.  வரலாற்றில் தொடர்ந்து உலகின் முன்னணி ஏற்றுமதி நாடாகவே விளங்கி வந்த இந்தியா,  இறக்குமதி நாடாக மாறிப் போனது. கைத் தொழில்கள் சிதைந்து போயின. மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கி வேலை தேடிப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கும் போதிய வேலைகள் இல்லை. இந்திய வரலாற்றின் கடுமையான பஞ்சங்கள் ஆங்கிலேய அரசின் தவறான கொள்கைகளால் தொடர்ந்து ஏற்பட்டன.  அதனால் பல லட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து போனார்கள்.

பொது யுகத்துக்கு முந்தைய நூற்றாண்டுகளிலிருந்து உலகின் கல்வி மையமாக விளங்கி வந்த இந்தியா,   பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை வெறும் ஆறு விழுக்காடு மட்டுமே என்னும் அளவுக்குத் தள்ளப்பட்டிருந்தது.  இந்தியாவின் செல்வம், வளங்கள் ஆகியவை தொடர்ந்து கொள்ளை அடிக்கப்பட்டன. அதனால், இந்தி வார்த்தையான loot என்பது ஆங்கில வார்த்தையாகவே மாறிப் போனது.

நாட்டுக்குக் கிடத்துக் கொண்டிருந்த வருமானம் அவர்களுக்குத்  திருப்பி விடப்பட்டது. இது குறித்து அப்போது இந்தியாவின் மூத்த மனிதர் ( Grand Old Man of India) என்று அழைக்கப்பட்ட தாதாபாய் நௌரோஜி ஆய்வுகளைச் செய்து புள்ளி விபரங்களைக் கொடுத்துள்ளார். மேலும் அவர்களின் ஆட்சியில் வாழ்க்கை முறைகள், சமூக கலாசார அமைப்புகள் ஆகிய பலவும் கடும் சிதைவுக்குள்ளாயின. தன்னிறைவு பெற்று விளங்கிய கிராமங்கள் அழிக்கப்பட்டன.

அதனால் பொருளாதார நஷ்டம் மட்டுமன்றி. பிற துறைகளிலும் பெருத்த நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன.  இந்தியர்களின் பாரம்பரிய அறிவு, அனுபவம் ஆகியவை அழிக்கப்பட்டன. நமது மக்களுக்கு தம் மீதும், தமது வரலாறு, பழக்கங்கள், செயல்முறைகள், பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றின் மீதும் அவநம்பிக்கையும், வெறுப்பும் ஏற்படுத்தப்பட்டது. அதனால் தான் காந்திஜி அவர்கள், அந்நிய ஆட்சி இந்தியாவைப் பரம ஏழையாக மாற்றியது மட்டுமன்றி, அதனுடைய ஆண்மைத் தன்மையையும் நீக்கி விட்டது; அதனால் மக்களின் தன்னம்பிக்கை அற்றுப் போய் விட்டது என்று கூறினார்.  

5.     சுதந்திரத்துக்குப் பின்னர் அரசுகள் கடைப்பிடித்து வரும் கொள்கைகள் நாட்டுக்குப் பொருத்தமானதுதானா?

ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கான தனித்தன்மைகள், வரலாறு, பழக்க வழக்கங்கள், செயல்பாட்டு முறைகள், சிந்தனைகள்   என இருக்கும்.  அவற்றை ஒட்டியே வாழ்க்கை முறைகள் அமைகின்றன. நமது நாடு நீண்ட பாரம்பரியமும், தொடர்ச்சியான வரலாறும் உடையது. நமக்கென சிறப்பான பொருளாதாரம் முறைகள் இங்கு இருந்துள்ளன. அதனால் நாம் உலகின் செல்வந்த நாடாக மட்டுமன்றி, பல துறைகளிலும் முன்னோடியாகவும் விளங்கி வந்துள்ளோம்.

தொடர்ந்து அந்நியப் படையெடுப்புகள் மற்றும் ஆட்சிகளால் நாட்டில் பெரிய பாதிப்புகள் நிகழ்ந்தன. அதன் பின்னர் சுதந்திரம் பெற்ற போது மட்டுமே, நமது நாட்டுக்குப் பொருத்தமான கொள்கைகளை வகுத்துக் கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அது பல நூற்றாண்டுகளுக்கு அப்புறம் நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு.

நவீன இந்தியாவில் நமது தேசத்தின் ஆன்மாவைச் சரியாக அறிந்தவர்களில் ஒருவர் காந்திஜி. நாடு சுதந்தரம் பெற்றதும் கடைப்பிடிக்க வேண்டிய  பொருளாதார அணுகுமுறை குறித்து பரவலாக விவாதத்தை நடத்த வேண்டுமென சுதந்திரத்துக்கு முன்னரே அவர்  காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதற்கு நேரு  மறுத்து விட்டார். 

தொடர்ந்து சுதந்தரம் பெற்ற பின்,  நமது நாட்டுக்குப் பொருந்தாத சோசலிச சித்தாந்தம் இந்தியாவின் கொள்கை முடிவுகளுக்கு மையமாக அமைந்தது. அதன் பலனாக நமது முன்னேற்றம் தடைப்பட்டது. முப்பது வருடங்களுக்கு மேலாகியும் நாட்டின் அடிப்படைப் பிரச்னைகள் கூடத் தீரவில்லை.

எனவே 1990களின் ஆரம்பத்தில் உலகமயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதார கோட்பாடுகளை ஒட்டிய அணுகுமுறைகளை அரசின் கொள்கைகளுக்கு மையமாக வைக்க அப்போதைய ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர்.  ஆகையால் சுதந்தரம் பெற்ற பின் இரண்டாவது முறையாக  நாட்டில்  பெரிய விவாதங்கள் எதுவுமின்றி மற்றொரு அந்நிய சித்தாந்தம் நடைமுறைக்கு வந்தது.  

எனவே கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளாக மேற்கத்திய சித்தாந்தங்களே நாட்டின் கொள்கை முடிவுகளில்  மையமாக இருந்து வருகின்றன. அதனால் உறுதியான அடித்தளங்களையும், நிறைய வளங்களையும், பெரிய வலிமைகளையும் கொண்டுள்ள நமது தேசம் தனது முழு வீச்சுடன் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது.  

6.      ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்படிப் பட்டதாக இருக்கவேண்டும். எல்லாமே  அரசின் கட்டுப்பாட்டில் (சோஷலிஸ) இருக்கவேண்டுமா..? தனியார் தாரளமயம் இருக்கவேண்டுமா..? கலப்புப் பொருளாதாரமாக இருக்கவேண்டுமா..?

ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் மண்ணோடு, மக்களோடு கலந்ததாக இருக்க வேண்டும்.  அந்த நாட்டின் வளங்கள், திறமைகள் ஆகியவற்றை முன்  வைத்து ஒட்டு மொத்த மக்களுக்கும் நன்மை பயக்கின்ற விதத்தில் அமைய வேண்டும். அதில் தேவையில்லாத அந்நிய சித்தாந்தாங்கள் இருக்கக் கூடாது.

7.      இந்தியா போன்ற விவசாய நாட்டுக்கு தொழில் புரட்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி, கணினிப் புரட்சி போண்றவை என்ன நன்மை செய்ய முடியும்..? செய்திருக்கின்றன..?

அரசுகள் அந்தந்த சமயங்களில் சூழிநிலைகளின் அடிப்படையில் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளன. அதனால் பலன்கள் கிடைத்துள்ளன. சில பின் விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. உண்மையான புரட்சி என்பது நமது வளங்கள், மக்களின் திறமைகள்,   ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து மக்களும் பலன் பெறும் வகையில் அந்நிய நிர்ப்பந்தங்கள் இன்றி, நமக்காக நாமே திட்டங்களைத் தீட்டி முழுமையாகச் செயல்படுத்தும் போது தான் உருவாக முடியும்.

8.      இந்தியர்களின் தங்கம் மீதான மோகம் சாதகமானதா..? அசையா சொத்தில் பணத்தை முடக்குவது  தொழில் வளர்ச்சிக்கு தடையாகத்தானே இருக்கும்.

தனிப்பட்ட மக்களின் பொருளாதார நம்பிக்கைகளில்   குறிப்பிட்ட புத்தகக் கோட்பாடுகளின் புரிதல்கள் மற்றும் முன் முடிவுகளின்  அடிப்படையில் கருத்துச் சொல்வது நமது நாட்டின் படித்த வர்க்கத்துக்கு  வாடிக்கையாக இருந்து வருகிறது. தங்கத்தைப் பாரம்பரியாக மக்கள் ஒரு முக்கிய  சேமிப்பாகக் கருதி வருகின்றனர்.  அது குடும்பத்துக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பாக இருந்து கிறது. இன்று உலகில் அமெரிக்கா உள்ளிட்ட  பல பணக்கார நாடுகளின் மத்திய வங்கிகளில் பல கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள தங்கம் சேமிப்பாக வைக்கப்பட்டுள்ளது. மெத்தப் படித்த நிபுணர்களால் நடத்தப்படும் வங்கிகள் எல்லாம் எந்த வித காரணமுமில்லாமல்  தான் அவ்வளவு தங்கத்தை சேமிப்பாக முடக்கி வைத்துள்ளனவா?

9.      இன்றைய நவீன இந்தியாவுக்கு சுதேசிப் பொருளாதாரம் நல்லதா? தாராளமயமாக்கம்,  உலகமயமாக்கம் நல்லதா?

 சோசலிசம், தனியார் மயம் என்பதெல்லாம் பதினெட்டு- பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் நிலவிய சூழ்நிலைகளை வைத்து, அவர்களின் வரலாறு, கண்ணோட்டம்,, வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை. அவற்றை உலக முழுமைக்கும், இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அப்படியே பொருத்திப் பார்த்து செயல்படுத்த நினைப்பது தவறு. ஏனெனில் அவை தாம் உருவான நாடுகளிலேயே பெரும் தோல்வியைத் தழுவி விட்டன.

நமது தேசத்துக்குப் பெரிய பொருளாதார வரலாறு உள்ளது. இன்றைக்கும் மக்களின் பொருளாதார அணுகு முறைகள் மற்றும் செயல்பாடுகள் உலக அளவில் தனித்துவம் மிக்கவையாக விளங்கி வருகின்றன. அதிகப் படியான சேமிப்பு, தொழில்களை உருவாக்கி நடத்தும் முறைகள், சமூக மூலதனம் ஆகியவை நமது பொருளாதாரத்துக்குப் பெரிய சொத்துக்கள். அதற்கு ஆதாரமாக நமது குடும்ப அமைப்பு முறை, கலாசாரம், வாழ்க்கை முறை  ஆகியவை இருந்து வருகின்றன.

இந்த அடிப்படை உண்மையை நாட்டின் பல பகுதிகளில்   நாங்கள் நடத்தி வரும் ஆய்வுகள் மட்டுமன்றி, உலக அளவில் பெரிய பல்கலைக்கழகங்கள், மற்றும் நிறுவனங்கள் நடத்தும் படிப்புகளும் எடுத்து வைக்கின்றன. இந்திய சீன நாடுகளின் நிலையான பொருளாதார வரலாறு பற்றிக் குறிப்பிடும் காந்தியப் பொருளாதார நிபுணர் குமரப்பா, நமது பண்பாட்டு அடித்தளங்களே பொருளாதாரத்துக்கு ஆதாரமாக விளங்கி வந்துள்ளன என்றார்.

1960களில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவராக ஜான் கென்னத் கேல்பிரெய்த் இருந்தார். அவர் ஒரு பொருளாதார நிபுணருக் கூட. அவர் 2001 ஆம் வருடம் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அப்போது அதற்கு  முந்தைய  நாற்பது ஆண்டுகளுக்கான இந்தியாவின் முன்னேற்றம் பற்றிக் கூறும் போது, இது அரசாங்கத்தை மீறி மக்களால் முன்னெடுத்தப் படும் வளர்ச்சி என்றும், அதற்கு இந்தியர்களின் குணங்களும், கலாசாரமுமே காரணம் எனவும் எடுத்துரைத்தார்.  

2010 ஆம் வருடம் அமெரிக்காவிலுள்ள பிரபலமான கெல்லாக் பல்கலைக் கழகம் இந்தியாவில் நிலவும் தலைமைப் பண்புகள் குறித்து நூறு பெரிய நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தியது. அதன் முடிவில் இங்கு தலைமைப் பண்புகள் உலக அளவில் அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகளை விடவும் மிகவும் சிறந்து விளங்குவதாகவும், அதற்குக் காரணம் இந்தியாவின் சமூக கலாசார முறைகள் எனவும் சொல்லியது. 
பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு சிரமங்களுக்கு அப்புறமும் நமது நாடு மீண்டு எழுந்து வந்துள்ளது வரலாறு. 2008 ஆம் வருடத்தில்  பொருளாதார நெருக்கடி உலகின் பல நாடுகளையும் கடுமையாகத் தாக்கிய போது, அதில் அதிக பாதிப்புகளின்றி தொடர்ந்து நடை போட்டது நமது நாடு.

அந்த நெருக்கடிக்குப் பின்னர் தான், அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் சந்தைப் பொருளாதார முறையில் பெரும் தவறுகள் உள்ளது என ஒப்புக் கொள்கின்றனர். சர்வதேச நிதியம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளும் உலக முழுமைக்கும் ஒரே விதமான சித்தாந்தம் பொருந்தாது எனவும், ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கெனத் தனியான முறைகள் இருக்க முடியும் எனவும் வெளிப்படையாக அறிவித்தன.   எனவே நமது நாட்டுக்குப் பொருத்தமான முறைகளை மக்களின் நலனை மையமாக வைத்துச் செயல்படுத்துவது தான் சரியான முறை.


10.             அந்நிய முதலீடு என்பது நம் நாட்டுக்கு அவசியமா ? எந்த அளவுக்கு எந்தெந்தத்துறைகளில் அதை அனுமதிக்கலாம். இந்திய சந்தைப் பசுவுக்கு அந்நிய முதலீட்டுப் புல்லைப் போடுவதில் தவறில்லை. ஆனால், சந்தைப் பசு தரும் பாலை அந்நிய முதலீட்டாளர்கள் எடுத்துக்கொண்டு சென்றுவிட பசு போடும் சாணியும் கோமியமும் மாத்திரமே நமக்குக் கிடைப்பதில் என்ன லாபம் இருக்க முடியும்?

நமது மக்களுக்கு முதலீடுகளைத் திரட்டும் தன்மை அபரிமிதமாக உள்ளதைப் பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. எனவே அந்நிய நிதிகள் உதவி இல்லாமலே நம்மால் செயல் பட முடியும். சில குறிப்பிட்ட காரணங்களுக்காகத் தேவைப் படும் துறையில் சில காலம் வெளி நாட்டு உதவிகள் அவசியமாகும் போது, நாட்டு நலனை மையமாக வைத்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.  வெளி நாட்டுத் தொழில் நுட்பம், சிந்தனைகள், செயல் முறைகள் ஆகியவற்றில் நல்லனவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் முதலீடுகளில் அதிக கவனம் தேவை.


11.             மோதியின் மேக்கின் இன் இந்தியா, அயல் நாட்டு மூலதனத்துக்கு அதிக முக்கியத்துவம் போன்றவை இந்தியாவுக்கு என்ன பலன் தரமுடியும்?

இந்தியா உற்பத்தித் துறையில் அதிகப்படியான வாய்ப்புக்கள் உள்ள நாடு. அதை முந்தைய அரசுகள் கவனிக்கத் தவறி விட்டன. எனவே பிரதமர் இப்போது மேக் இன் இந்தியா திட்டத்தை முன் வைத்துள்ளார். அதன் மூலம் அதிக பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அந்நிய முதலீடுகளைப் பொறுத்த வரையில், முந்தைய அரசு தவறாக சில்லறை வர்த்தகத்தில் வெளியாருக்கு அனுமதியைக் கொடுத்தது. புதிய அரசு  பதவி ஏற்றவுடன் அதை ரத்து செய்தது நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட சரியான முடிவு. இந்தியப் பொருளாதாரத்தில்  சில்லறை வணிகம் சுமார் 15 விழுக்காடு பங்களித்து ஒரு மிக முக்கியமான இடத்தை வகுக்கிறது. அதிகமான நடுத்தர வர்க்கத்தையும், வேகமாக வளரும் பொருளாதாரத்தையும் கொண்டுள்ளதால் இந்தியாவில் சில்லறை வணிகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

12.            சில்லறைத் தொழிலில் அந்நிய முதலிடு என்ன பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் ?

நமது நாட்டின் சில்லறை வணிகத் துறையில் சாதாரண மக்களால் நடத்தப்படும் சிறிய கடைகளே பெரும்பாலும் உள்ளன.  அதனால் கோடிக்கணக்கான குடும்பங்கள் பலன் பெறுகின்றன. எனவே இந்தத் துறையில் அந்நிய முதலீடு வரும் போது, அவை நமது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து விடும். உலகின் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றிலேயே சில்லறை வணிகத்தில் பெரு நிறுவனங்கள் நுழைந்த பின்னர், அங்குள்ள சிறு கடைகள் அழிந்தது மட்டுமன்றி, விவசாயம், சிறு தொழில்கள், சுற்றுச் சூழல்  ஆகியனவும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே சில்லற வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது நமது தேசத்தின் இறையாண்மையில் அந்நிய நிறுவனங்களைத் தலையிட அனுமதிப்பதாகும். 

 ( ஆழம்,  ஏப்ரல் 2015)







No comments: